My page - topic 1, topic 2, topic 3

நிலத்தை வளமாக்கும் நுண்ணுயிரிகள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020

யற்கை விவசாயத்தில் பயன்படும் நுண்ணுயிர் உரங்கள், திரவ உயிர் உரங்கள், ஊட்டமேற்றிய தொழுவுரம், மண்புழு உரம், பசுந்தாள் உரம், செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள், புண்ணாக்கு ஆகியன; நுண்ணுயிர்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மண்ணிலுள்ள சிறு உயிரினங்களின் உதவி மற்றும் அவற்றின் கழிவுகளிலிருந்து கிடைக்கும் சத்துகள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. குறைந்த சத்துகளை உடைய இயற்கை உரங்களில் உள்ள எச்சப்பயன் அதிகம். செயற்கை உரங்களைவிட மண்ணின் இயல் குணங்களை மேம்படுத்தும்.

இயற்கை விவசாயிகள், தங்களுக்குத் தேவையான உரங்களை அவர்களே தயாரித்துக் கொள்கின்றனர். இவற்றில் முக்கியமான ஒன்று திறன்மிகு நுண்ணுயிரி. இது, ஆங்கிலத்தில் Effective micro organism (EM) எனப்படும்.

நம் முன்னோர்கள் மண்வளத்தை மேம்படுத்த, எரு, இலைதழை, கண்மாய் வண்டல், சணப்பை, தக்கைப்பூண்டு, பலதானிய விதைப்பு, அமுதக் கரைசல், ஜீவாமிர்தம் போன்றவற்றைப் பயன்படுத்தினர். இந்த அனைத்திலும் நுண்ணுயிர்களின் பங்கு மிகப் பெரிதாகும்.

திறன்மிகு நுண்ணுயிர்கள் என்பது, நன்மைகளைத் தரும் எழுபது நுண்ணுயிர்களின் கூட்டுக் கலவையாகும். இவற்றில் முக்கியமானவை, லாக்டிக் ஆசிட் பாக்டீரியா, ஈஸ்ட் மற்றும் ஒளிச்சேர்க்கை பாக்டீரியா. இவற்றை ஒன்றாகக் கலந்து 12 மாதம் வரை கெடாமல் வைத்திருக்கலாம். இந்த உத்தி 150 நாடுகளில் பயனில் உள்ளது. கடைகளில் கிடைக்கும் திறன்மிகு நுண்ணுயிரி இ.எம்.1  எனப்படுகிறது. இதிலுள்ள நுண்ணுயிர்கள் இயங்குவதில்லை. இவற்றை இயங்க வைக்க, சில பொருள்களைச் சரியான அளவில் கலக்க வேண்டும்.

இயங்க வைத்தல்

இதை இயங்க வைக்க, சர்க்கரை ஒரு பங்கு,  இ.எம்.1 கரைசல் ஒரு பங்கு மற்றும் 18-20 பங்கு நீரை எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரையை இளஞ்சூடான நீரில் கரைத்து, அதனுடன் இ.எம்.1 கரைசலைச் சேர்த்து பிளாஸ்டிக் கலனில் ஒரு வாரத்துக்குக் காற்றுப் புகாமல் மூடி வைத்தால், பெருக்கப்பட்ட இ.எம். கரைசல் தயாராகி விடும். இனிப்பும் புளிப்புமுள்ள இதன் அமில காரத்தன்மை 4க்குக் குறைவாக இருக்க வேண்டும்.

தயாரிப்பு முறை

இதில், பழங்கள், பூசணிக்காய், வாழைத்தண்டு போன்றவற்றைக் கொண்டு தயாரிப்பது எனப் பல முறைகள் உள்ளன. இவற்றில், பச்சரிசி, வெல்லம் மூலம் தயாரிக்கும் முறை எளிதாக இருக்கும்.

ஒரு கிலோ பச்சரிசியை நன்கு வேக விட்டு ஆற வைத்து, காற்றுப் புகாத பாத்திரத்தில் பத்து நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும். பதினோராம் நாளில் ஒரு கிலோ பனை வெல்லத்தைக் கரைத்து இதில் ஊற்றி நன்கு கலந்து மறுபடியும் காற்றுப் புகாமல் ஒருநாள் வைக்க வேண்டும். அடுத்த நாளிலிருந்து தினமும் ஒருமுறை பாத்திரத்தைத் திறந்து இரண்டு நிமிடம் வைத்திருந்து நன்கு கலக்கித் திரும்பவும் மூடி வைக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால், இருபதாம் நாளில் இ.எம். நுண்ணுயிரிக் கலவை தயாராகி விடும்.

இதைப் பத்து லிட்டர் நீருக்கு அரை லிட்டர் வீதம் பாசனத்தில் கலந்து நிலத்தில் விடலாம். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 300 மில்லி வீதம் கலந்து பயிர்களில் தெளிக்கலாம்.

பயன்கள்

இது எளிமையான, பாதுகாப்பான, செலவு குறைந்த உத்தி. 30% வரை ஒளிச்சேர்க்கை மிகும். மண்ணிலும் பயிரிலும் இருந்து கொண்டு நோய்களைத் தரும் பூசணம் மற்றும் வைரஸ்களை அழிக்கும். பூச்சி, நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தும். மிக விரைவில் பயிர்க்கழிவை மட்க வைக்கும். இலைகள் பெரிதாக, பயிர்கள் வேகமாக வளர்வதால் மகசூல் அதிகமாகும்.


முனைவர் இரா.பூர்ணியம்மாள்,

இ.த.ஜானகி, சோ.பிரபு, ஜெ.கண்ணன், 

தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம்-625604.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks