கட்டுரை வெளியான இதழ்: 2018 ஏப்ரல்
முடக்கத்தான் எனப்படும் முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum) மருத்துவ மூலிகைக் கொடியாகும். வேலிகள், பெரிய செடிகள், மரங்கள் மீது பற்றி, உயரப் படரும் ஏறுகொடி ஆகும். முடக்கத்தான் கீரைக்கு, முடக்கற்றான், முடக்கறுத்தான், முடர்க்குற்றான், மோதிக்கொட்டன் என்னும் பெயர்களும் உண்டு. இது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளான, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் ஏராளமாகக் காணப்படும். மழைக் காலத்தில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். தமிழ்நாட்டுக் கிராமங்களில் ஏறத்தாழ அனைத்து வீட்டுக் கொல்லைகளிலும் படர்ந்து கிடக்கும். இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய மற்றும் வெள்ளை இதழ்களைக் கொண்டிருக்கும். இக்கொடியின் வேர், இலை, விதை ஆகியன மருத்துவப் பயனுடையவை. ஹோமியோபதி மருத்துவத்தில் அதிகமாகப் பயன்படுகிறது.
மருத்துவப் பயன்கள்
கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலி மற்றும் இதன் காரணமாக ஏற்படும் முடக்கத்தைக் குணப்படுத்தும் என்பதாலேயே, இதற்கு முடக்கறுத்தான் எனப் பெயர் வந்தது. முடக்கத்தானைச் சீராக உணவில் சேர்த்து வந்தால், வாத நோய்கள் நீங்கும்; உடல் பலமடையும்; மலம் இளகும்; நன்கு பசியெடுக்கும்; கரப்பான் முதலான தோல் நோய்கள் நீங்கும். முடக்கத்தான் கீரையைப் பச்சையாக எடுத்து இரசமாகச் செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால், கை கால் குடைச்சல், மூட்டுவலி நீங்கும். இந்தக் கீரையை விளக்கெண்ணெய்யில் வதக்கி, மூட்டுகளில் ஏற்படும் கீல்வாதம், வீக்கம், வலி இருக்கும் இடத்தில் கட்டுப்போட்டு வந்தால், வலி, வீக்கம் குணமாகும்.
முடக்கத்தான் இலைச்சாற்றைக் காதில் விட்டால், காதுவலி, சீழ் வடிதல் உடனடியாகச் சரியாகும். இந்த இலைகளைப் பொடி செய்து, அதனுடன் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும், சித்திரமூல வேர்ப் பட்டைப்பொடி, கரிய போளம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மாதவிலக்குக் காலத்தில் ஏற்படும் சூதக்கட்டு நீங்கும். முடக்கத்தான் இலைகளை வதக்கி அடிவயிற்றில் வைத்துக் கட்டினால், உதிரப்போக்கு ஒழுங்காகும். முடக்கத்தான் கீரையைத் தனியாகவோ, வேருடன் சேர்த்தோ, நீரில் கலந்து குடித்து வந்தால், மூலநோய், நாள்பட்ட இருமல் நீங்கும். முடக்கத்தான் கீரையைத் தோசையாக, அடையாக, துவையலாகச் செய்து சாப்பிடலாம்.
பச்சைக்கீரை சிறிது கசக்கும். சமைத்த கீரை அவ்வளவாகக் கசக்காது. இக்கீரையைப் பொடியாக்கிச் சிறிது தேன் கலந்து உண்டால் இதன் கசப்புத் தன்மை தெரியாது. தமிழ்நாட்டில் இந்தக் கீரையை அரைத்து, தோசை மாவுடன் கலந்து தோசையாகச் செய்வார்கள். இதைத் தொடர்ந்து உண்டு வந்தால், முடக்குவாதம், நரம்புத் தளர்ச்சி போன்றவை நம்மை அண்டாது. குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால் நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
முடக்கத்தான் கீரையின் சிறப்புக் குணமானது, நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்துச் சிறுநீராக வெளியேற்றி விடும். இப்படிச் சிறுநீராக வெளியேற்றும் போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியத்தை நம் உடலிலே விட்டு விடுகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. இக்கீரையானது வைட்டமின்களும் தாதுப்புகளும் நிறைந்தது. கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. கொதிக்க வைத்தால் அதிலுள்ள மருத்துவச் சத்துகள் அழிந்து விடும். இக்கீரைக்கு முடி உதிர்தலை முற்றிலும் தடுக்கும் வல்லமை உண்டு. மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.
மிக எளிதாகக் கிடைக்கும் இத்தாவரத்தின் பயன்கள் நிறையப் பேர்க்குத் தெரியவில்லை. ஆகவே, இனியேனும் நமது உணவில் இக்கீரையைச் சேர்த்துப் பயன் பெறுவோம்.
ரா.கல்பனா தேவி,
முனைவர் சு.வசந்தா, வீரய்யா வாண்டையார் நினைவு திருபுட்பம் கல்லூரி,
பூண்டி, தஞ்சாவூர்-613503.
சந்தேகமா? கேளுங்கள்!