கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020
பரபரப்பான உலகத்தில் மாறிவரும் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால், உடல் கேடுகளும் மன அழுத்தமும் பெருகி வருகின்றன. இவற்றுக்குத் தீர்வு தருவதில் மூலிகை மருத்துவமும் முக்கியப் பங்காற்றுகிறது. அவ்வகையில், முக்கிய மூலிகையான, கற்பூரவல்லியின் மருத்துவக் குணங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
பெயர்க் காரணம்
கற்பூரம் என்பது வாசத்தின் அடையாளம். வள்ளி என்பது படைப்பைக் குறிப்பது. அதனால், வாசமுள்ள படைப்பு என்னும் பொருளில், கற்பூரவள்ளி என்று சொல்லலாம். வல்லி என்பது விரைவைக் குறிப்பது. எனவே, நோயை விரைவாகத் தீர்ப்பதால், கற்பூரவல்லி என்றும் சொல்லலாம். நமது சித்தர்கள் இதைக் கற்பக விருட்சத்துடன் ஒப்பிடுவதால் கற்பூரவல்லி என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது. இதில் ஓமத்தின் மணம் இருப்பதால், ஓமவல்லி என்றும் அழைக்கப்படுகிறது.
வளரியல்பு
உலகளவில், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும், இந்தியாவில் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகத்திலும் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் சேலம் ஆத்தூர், சத்தியமங்கலம், திண்டுக்கல் மாவட்டங்களில் 2,000 ஏக்கரில் பயிரிடப்படுகிறது. வடிகால் வசதியுள்ள வண்டல் மண், செம்மண், களி கலந்த மணற்பாங்கான நிலத்தில் சிறப்பாக வளரும். தட்ப வெப்பம் 25-35 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும்.
தாவர அமைப்பு
இச்செடியின் தண்டு முள்ளைப் போன்ற மயிர்த் தூவிகளுடன் இருக்கும். இலைகள் தடித்து, மென்மையாக, கசப்புச்சுவை, காரச்சுவை மற்றும் வாசத்துடன் இருக்கும். மலர்கள் நீலநிறத்தில் இருக்கும். நான்கு இலைகள் மற்றும் நான்கு அங்குலத் தண்டுக்குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம்.
மருத்துவக் குணங்கள்
கற்பூரவல்லி சிறந்த கிருமி நாசினி. இதன் வாசத்தால் விஷப் பூச்சிகள் அண்டாது என்பதால், இதை வீட்டில் வளர்க்கலாம். தென்னை மரங்களைச் சுற்றி வளர்த்தால், அங்கே எவ்விதப் பூச்சியும் அண்டாது. கற்பூரவல்லிச் சாற்றுடன் பனங்கற்கண்டு அல்லது தேனைக் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மார்புச்சளி, இருமல் குணமாகும்.
இந்தச் சாறு தலைவலியைப் போக்கும். வலியுள்ள இடத்தில் சாற்றைத் தடவ வேண்டும். அரிப்பு மற்றும் எரிச்சல் அகல, கற்பூரவல்லியை விழுதாக அரைத்துத் தடவ வேண்டும். இந்தச் சாற்றைத் தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகுகள் அகலும். விஷக்கடியால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வலி நீங்கும். பாம்புக்கடி மருந்தாகவும் பயன்படுகிறது.
இதிலுள்ள வைட்டமின் ஏ, பார்வையை மேம்படுத்தும். முகப்பரு வீக்கத்தை நீக்க, கற்பூரவல்லி இலையை அரைத்துப் பூசலாம். சாற்றைக் காதுக்குள் விட்டால் காதுவலி சரியாகும். உதடு வெடிப்பு, வாயோரப் பிளவைக் குணமாக்கும்; புற்றுநோய்ச் செல்கள் பரவலைக் கட்டுப்படுத்தும். இலைகளை நீரில் கொதிக்க விட்டு வாயைக் கொப்பளித்தால் பல்வலி, வாய்ப்புண் அகலும். குடித்து வந்தால், ஆஸ்துமா, இருமல், தொண்டைப்புண், மூக்கடைப்பு, மலச்சிக்கல், முதுகுவலி, மன உளைச்சல், தோல் நோய்கள், அரிப்பு, எரிச்சல், தோல் ஒவ்வாமை குணமாகும்.
இலைச்சாற்றைச் சுண்டக்காய்ச்சி, வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நுரையீரல் பாதிப்புச் சரியாகும். இலைப்பொடியைத் தேனில் கலந்து உண்டு வந்தால் வியர்வைச் சுரப்பிகள் நன்கு இயங்கும். உடல் எடையைக் குறைக்க, கற்பூரவல்லி விதைகளைத் தினமும் உண்ண வேண்டும்.
உடலில் கூடுதலாக உள்ள உப்பு, கொழுப்பு, மற்றும் நீரை வெளியேற்றி, சிறுநீரகம் மற்றும் நிணநீர் அமைப்புச் சீராக இயங்க உதவும். செரிப்பைச் சீராக்கிக் குடல் எரிச்சலைத் தடுக்கும். மாதவிடாய் வலி, பிரசவ வலியைக் குறைக்கும். இதிலுள்ள ஒமேகா 6 கொழுப்பு அமிலம், மூட்டுவலியைக் குறைக்கும்.
எச்சரிக்கை
இதிலுள்ள மயிர்த் தூவிகள், உணர்ச்சி மிகுந்த தோலில் எரிச்சல் அல்லது அரிப்பை ஏற்படுத்தும். கர்ப்பிணிகள் இதைப் பயன்படுத்தக் கூடாது. பாலூட்டும் தாய்மார்கள், பால் சுரப்பைப் பெருக்க, மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.
லோ.சௌந்தர்யா,
வேளாண்மை நான்காம் ஆண்டு மாணவி,
ஜே.எஸ்.ஏ.வேளாண்மைக் கல்லூரி, பொடையூர், கடலூர் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!