My page - topic 1, topic 2, topic 3

கழிவுகள் மூலம் கிடைக்கும் மருத்துவக் காளான்கள்!

காளான்

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019

வேளாண்மையில் தரமான சத்துகள் மிகுந்த உணவு உற்பத்தி என்பது, தற்போது உலகளவில் பேசுபொருளாக உள்ளது. இதில், புரதம் நிறைந்த உணவுக் காளான் சாகுபடியும் அடங்கும். சீனா, இந்தியா, போலந்து போன்ற நாடுகளில் உணவுக் காளான் உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. உலகளவில் காளான் விற்பனை சுமார் 40 மில்லியன் டாலராக உள்ளது. காளான்களை உணவுக் காளான், மருத்துவக் காளான் எனப் பிரிக்கலாம். உலகிலுள்ள 14,000 வகைக் காளான்களில், 700 வகைக் காளான்கள் மருத்துவக் குணம் கொண்டவை. மருத்துவக் காளான்கள் இயற்கையிலேயே கிடைத்தாலும் கூட, இவற்றை வளர்க்கும் உத்திகள் இப்போது பரவலாக்கப்பட்டு வருகிறது. இவ்வகைக் காளான்களைக் குறித்த ஆராய்ச்சிகள் சீனா, கொரியா, தைவான், ஜப்பான் போன்ற நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் இந்த ஆராய்ச்சி இப்போது நடைபெற்று வருகிறது.

இந்தியாவில், தேசியக் காளான் ஆராய்ச்சிக் கழகத்தைத் தொடங்குவதற்கு முன்பு வரையில், மருத்துவக் காளான்களைப் பற்றிய தொழில் நுட்பம் ஏட்டளவில் தான் இருந்தது. தமிழ்நாட்டில் லென்டினுல்லா எடோடஸ், கேனோடெர்மா லுசிடம், ஃப்ளாமுல்லினா வெலுடைப்ஸ், ஆரிகுலேரியா போன்ற மருத்துவக் காளான்களைப் பற்றிய அறிவும், வளர்ப்பு முறைகளும் நமக்குத் தேவை.

மருத்துவக் காளான்களின் அவசியம்

இந்தக் காளான்கள் மருத்துவத் துறையில் பல நூற்றாண்டுகளாகச் சத்துப் பொருள்களாகப் பயன்பட்டு வருகின்றன. இவை, புற்றுநோய், வயிற்றுப்புண், கொலஸ்ட்ரால், இரத்தழுத்தம், அறுவை சிகிச்சைப் புண்கள், நீரிழிவு நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும். இவற்றில் நுண்ணுயிர்களை எதிர்க்கும் பல்சர்க்கரை மூலக்கூறுகளும், புரதமும் இருப்பதை அமெரிக்க தேசியப் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 270 மருத்துவக் காளான் வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பழங்கால மருத்துவத்தில் இவ்வகைக் காளான்கள் பயன்பட்டுள்ளன. இவை, ஆன்ட்டிபயாடிக், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட், ஆன்ட்டி ஹைபர் டென்சன், கொழுப்புக் குறைப்பு, கல்லீரல் பாதுகாப்பு, கட்டிகள் கரைப்பு போன்றவற்றில் பங்கு பெறுகின்றன.

சீனாவில் ஆரிகுலேரியா காளான், கண், காது, மூக்கு நோய் மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டு வருகிறது. பொலிடஸ் காளான், மரத்துப் போன கால்களைக் குணமாக்கவும், ஒரு வகையான மன அழுத்தத்தைக் குணமாக்கவும் உதவுகிறது. லென்டினுல்லா எடோடஸ் காளான், புற்றுநோய், நுரையீரல் நோய்கள், மஞ்சள் காமாலை ஆகியவற்றைக் குணமாக்கும். கேனோடெர்மா காளான், படபடப்பு, ஆஸ்த்மா, பக்கவாதம், குடல்புண் போன்றவற்றைக் குணமாக்கும். மொத்தத்தில் மருத்துவக் காளான்கள் 20 விதமான நோய்களைக் குணப்படுத்தும். இவற்றில், கார்டியோ வேஸ்குலார், கேன்சர், லுகேமியா, லுகோபினியா, ஹெபடைடிஸ், நெப்ரிடிஸ், கேஸ்ட்ரைடிஸ், இன்சோமினியா, ஆஸ்த்மா, பிரான்கைடிஸ் போன்ற முக்கிய நோய்களும் அடங்கும்.

வளர்ப்பு

வெள்ளைப் பலதுளைக் காளான்கள் பலவகையான காய்ச்சல்களையும், காது சார்ந்த நோய்களையும் குணப்படுத்தி வருகின்றன. மருத்துவக் காளான்கள், மரத்தூள், மரப்பட்டை, கோதுமைத் தவிடு, வைக்கோல் போன்றவற்றைக் கொண்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பொருள்கள் இங்கே அதிகளவில் கிடைக்கக் கூடியவை. மருத்துவக் காளான்கள் வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. தகுந்த உத்திகளைப் பயன்படுத்தினால் காளான் உற்பத்தியைக் கூட்ட முடியும். காலத்துக்கு ஏற்ற காளான்களை வளர்த்துப் பயனடையலாம்.

கேனோடெர்மா லுசிடம் காளானுக்கு இந்தியாவில் நல்ல கிராக்கி உள்ளது. இதை, மரத்தூள், கோதுமைத்தவிடு, வைக்கோல் மூலம் வளர்க்கலாம். இதைப்போல், சிடேக் காளான், மரக்கட்டை, மரத்தூள் மற்றும் கோதுமை வைக்கோலில் வளர்க்கப்படுகிறது. மேலும் இதை, மரத்தூள், அரிசித்தவிடு, கால்சியம் கார்பனேட் மூலமும் வளர்க்கலாம். இந்தக் காளான்களைத் தவிர, ஃப்ளாமுல்லினா வெலுடைப்ஸ், ஆரிகுலேரியா பாலிரைகா, ட்ரமீடஸ் வெர்சிகலர், பிக்னோபோரஸ் சின்னபாரினஸ் போன்றவற்றையும் எளிதாக வளர்க்கலாம்.

காளான் வளர்ப்பு, பண்ணைத் தொழிலாளர்களையும், கால நிலையையும் பொறுத்து அமைவது. இந்தியாவில் இந்தக் காளான்கள் நல்ல இலாபத்தைக் கொடுக்கும். மேலும் தற்போது நாம் இந்தக் காளான்களை மலேசியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். 2000-2001 நிலவரப்படி அதன் சந்தை மதிப்பு 20 மில்லியன் டாலர்கள். எனவே. இவற்றை இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்தால் அந்நியச் செலாவணியை அதிகப்படுத்தலாம்.

இந்தக் காளான்களை எளிதாக வளர்க்கலாம். எடுத்துக்காட்டாக, லென்டடினுல்லா எடோடஸ் காளான்களை மரத்தூள், அரிசித்தவிடு 20%, கால்சியம் கார்பனேட் 3% கொண்டு குளிர்ந்த அறைகளில் வளர்க்கலாம். கேனோடெர்மா காளான்களை மரத்தூள், வைக்கோல் 90%, அரிசித்தவிடு 10% கொண்டு வளர்க்கலாம்.

எனவே, தமிழ்நாட்டில் மருத்துவக் காளான்கள் வளர்ப்பு, அதிக இலாபத்தைத் தரக்கூடிய தோட்டக்கலைத் தொழிலாகும். இவற்றை அதிகளவில் வளர்த்தால், சிறந்த மருத்துவக் குணமுள்ள மூலக்கூறுகளை, மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் பெற முடியும். மேலும், இவை பலதரப்பட்ட பண்ணைத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பையும் தரும். மேலும் இந்தக் காளான்கள் மனித சமூகத்தின் சுகாதாரத்துக்குப் பயன்படும்.


இரா.இராதாஜெயலட்சுமி,

எஸ்.இலட்சுமி நாராயணன், ந.மா.அறிவுடைநம்பி, ப.துக்கையண்ணன்,

மா.அமானுல்லா, மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம், வாகரை, திண்டுக்கல்-624613.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks