கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020
ஆளி விதை சிறிதாக, காபி நிறத்தில் இருக்கும். இதை விதையாக அல்லது பொடியாக்கி உணவுகளில் தூவி அல்லது முளைக்கட்டிச் சாப்பிடலாம். பொடியாகவோ முளைக்கட்டியோ சாப்பிட்டால், அதன் சத்துகளை உடலால் எளிதில் உறிஞ்ச முடியும்.
ஆளியில் மஞ்சள், காவியென இரு வகைகள் உள்ளன. காவி ஆளி ஆயிரம் ஆண்டு உணவாக இருந்தாலும், கால்நடைத் தீவனம் மற்றும் சாயத்தில் உள்ளடங்குப் பொருளாகப் பயன்படுகிறது. இரண்டு ஆளிகளும் ஒத்த சத்து மதிப்புடனும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களுடனும் உள்ளன.
ஆளிவிதை நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்குகிறது. இதை அடிக்கடி உண்டு வந்தால், வயிறும் குடலும் சிறப்பாக இயங்கும். உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து இல்லாதபோது, இதை அதிகமாக உண்டால், குடல் அடைப்பு ஏற்படும். ஆளிவிதை எண்ணெய், சரும நோய்க்கு மருந்தாகும். ஆளி விதையை இரவில் ஊற வைத்துக் காலையில் தாளித்துச் சாப்பிட்டு வந்தால், இதயத்துக்கு நல்லது; மூளையின் ஆற்றல் அதிகரிக்கும்; புற்றுநோயைத் தடுக்கும்.
100 கிராம் ஆளிவிதை, 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதத்தைத் தருகிறது. மேலும், லிக்னன்ஸ், ஒமேகா-3 என்னும் கொழுப்பமிலம் என, உயிராற்றலைச் சுறுசுறுப்பாக்கும் சத்துகளும் உள்ளன. இச்சத்துகள், முதலில் இரத்தக் குழாய்களைச் சுத்தம் செய்து கெட்ட கொழுப்பை வெளியேற்றி விடும். நாம் சாப்பிடும் சில உணவுகளில் ஒமேகா-3, நார்ச்சத்து இருக்கும். ஆனால், லிக்னன்ஸ் இருக்காது. இது ஆளிவிதையில் மட்டுமே உண்டு.
இதிலுள்ள நார்ச்சத்து, பெருங்குடலில் உள்ள அனைத்தையும் இளக்கி வெளியேற்றி மலச்சிக்கலைப் போக்கும். இதைப்போல, சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படாமலும் பாதுகாக்கும். ஆளி விதை பல்வேறு உணவுத் திட்டங்களில் முக்கியப் பங்கை வகிக்கிறது. ஏனெனில், இது ஒருவரது இரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இதிலுள்ள நார்ச்சத்து, நீண்ட நேரம் பசி எடுக்காமலும், அதிகளவில் சாப்பிடுவதால் உடலில் கலோரிகள் கூடாமலும் தடுக்கும்.
ஆளிவிதையில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளைப் போலச் செயல்பட்டு, புற்றுநோய்த் தாக்குதலைத் தடுக்கும். இதிலுள்ள லிக்னன்கள், உடலில் வேதிப்பொருள்களாக மாறிச் சுரப்பிகளைச் சமநிலையில் வைத்திருக்கும். இந்த விதையிலுள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மார்பகம், புரோஸ்டேட் மற்றும் குடற்புற்றுத் தாக்கத்தைக் குறைக்க உதவும்.
ஆளி விதையில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துகள் உள்ளன. கரையும் நார்ச்சத்து இரைப்பையின் செயலைப் பராமரிப்பதிலும், கரையாத நார்ச்சத்து கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயத்தைக் காப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஆளி விதையில் ஈ, பி வைட்டமின்கள், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை உள்ளன. வைட்டமின் ஈ, சரும மற்றும் எலும்புகள் நலனுக்கு அவசியம். பொட்டாசியம் நரம்புகளைக் காக்கும். இரும்புச்சத்து சிவப்பணுக்களைப் பெருக்கி, இரத்த ஓட்டத்தைச் சிறப்பாக வைத்துக் கொள்ளும். இதில் உணவுப் புரதங்களும், அவசியமான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதைத் தினமும் கையளவு சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான புரதம் கிடைத்து விடும்.
ஆளி விதையில் சி குளுக்கோசைடுகள் நிறைய உள்ளன. இந்த பாலிபீனோலிக் பொருள்கள் லிப்பிட் பெராக்ஸிடேஷன், பிளேட்லெட் அக்ரேஜேஷன், கேப்பில்லரி ஊடுருவல், பலவீனம் ஆகியவற்றைத் தடுத்து, இதய நோய் ஆபத்தைக் குறைக்கும்.
ஆளி விதையில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உடலிலுள்ள ஒவ்வாமையை எதிர்த்துப் போராடும். ஒவ்வாமையால் இதய நோய், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் சிலவகைப் புற்று நோய்கள் வரக்கூடும். ஆளி விதையைத் தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்.
முனைவர் ஜி.கலைச்செல்வி,
முனைவர் என்.ஜெயந்தி, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை-51.
சந்தேகமா? கேளுங்கள்!