கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019
உயிரினங்களுக்குக் கிடைத்த அரிய உறுப்பான கண், ஒளியை உணரவும், தடங்கலின்றி இயங்கவும் உதவுகிறது. அதைப்போல, மகிழ்ச்சி மற்றும் கவலையை வெளிப்படுத்தும் உறுப்பாகவும் விளங்குகிறது. மௌனமாகப் பேசும்; அன்பைப் பொழியும்; சினத்தை உமிழும் கண், அகத்திலுள்ள நிலைகள் அனைத்தையும் தன் மூலம் வெளிப்படுத்தும். முகக்களையின் முக்கிய அடையாளம் ஒளிமிக்க கண். அதனால் தான், ஒளி படைத்த கண்ணினாய் வா வா என்றார் மகாகவி பாரதி. இந்தக் கண்ணைக் கவனமாகப் பாதுகாத்து வந்தால், உயிருள்ள வரையில் மகிழ்ச்சியாக வாழலாம்.
வில்வத் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுத்தால், கண்வலி, கண்ணரிப்பு, கண் சிவப்பு ஆகியன குணமாகும். முசுமுசுக்கைச் சாறு மற்றும் நல்லெண்ணெய்யைச் சம அளவில் எடுத்துக் காய்ச்சி, வாரம் ஒருமுறை தலைமுழுகி வந்தால் கண்ணெரிச்சல் தீரும். முருங்கைக் கீரையை அடிக்கடி உண்டு வந்தால் கண் நோய் தீரும். முருங்கைப் பூவைப் பருப்புடன் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல் அகலும்.
ஒன்றிரண்டு துளியளவில் வெற்றிலைச் சாற்றை எடுத்து, இருநேரம் கண்ணில் விட்டு வந்தால், கண்வலி, மாலைக்கண் குணமாகும். ஈச்சம் பழ விதைகளை உரைத்து, கண்ணிமைகளில் பற்றுப் போட்டு வந்தால், கண் மங்கலாக இருக்கும் நிலை மாறும். சிறுகீரைத் தைலத்தில் தலைமுழுகி வந்தால், கண் நோய்கள் அனைத்தும் குணமாகும்.
நான்கு நாட்களுக்கு ஒருமுறை பொன்னாங்கண்ணித் தைலத்தைத் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் கண்ணெரிச்சல் போய்விடும். வாரம் இருமுறை நெல்லிக்காய்த் தைலத்தில் தலைமுழுகி வந்தால், காமாலை, கண் காசம், மாலைக்கண் ஆகியன குணமாகும். ஒரு பிடியளவில் கோவை இலைகளை எடுத்து 200 மில்லி நீரிலிட்டு, 100 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி, காலை மாலையில் குடித்து வந்தால் கண்ணெரிச்சல் குணமாகும்.
இந்த எளிய முறைகளை அவரவர் சூழ்நிலைக்குத் தகுந்து பயன்படுத்தி வந்தால், நோய்களில் இருந்து கண்ணைப் பாதுகாத்து ஒளிமயமாக வாழலாம்.
மரு.சு.சத்தியவாணி எம்.டி.,
வளசரவாக்கம், சென்னை-600087.
சந்தேகமா? கேளுங்கள்!