கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019
இன்றைய அங்கக வேளாண்மையில் மண்புழுக் குளியல் நீர் முக்கியப் பொருளாக உள்ளது. ஏனெனில் இது ஒருங்கிணைந்த ஊட்ட மேலாண்மையில் சிறந்த தெளிப்பு உயிர் உரமாகப் பயன்படுகிறது. மண்புழு உரமும், குளியல் நீரும் பயிரின் வளர்ச்சி, அதிக உற்பத்தி, மண்வளம் காத்தல் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றிலுள்ள அனைத்துச் சத்துகளும், வேர்களால் எளிதில் உறிஞ்சவும், பயிரின் எல்லாப் பாகங்களுக்கும் கிடைக்கவும் ஏதுவாக உள்ளன.
மண்புழுக் குளியல் நீர் என்பது, மண்புழு உடலின் மேற்புறத்தில் உள்ள நுண் துளைகளில் இருந்து சுரக்கும் மியூகஸ் என்னும் திரவமாகும். இது எப்போதும் சுரப்பதால் தான், மண்புழு ஈரமாகவே இருக்கிறது. இத்துளைகள் புழுக்கள் சுவாசிக்கவும் உதவும்.
இந்தத் துளைகள் எப்போதும் திறந்தே இருக்கும். சிறிய தூண்டுதலால், அதாவது, மண்புழுக்களைக் குளிர்ந்த நிலைக்கோ அல்லது வெதுவெதுப்பான நிலைக்கோ கொண்டுவரும் போது, இத்துளைகள் மூலம் மியூகஸ் திரவம் அதிகளவில் சுரக்கும். இதைச் சேகரித்து, சரியான அளவில் நீருடன் அல்லது கோமியத்துடன் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
தயாரித்தல்
மண் பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் பேரலின் அடியில் துளையிட்டு, அதன் வழியே அரையடி நீளமுள்ள பிவிசி குழாயுடன் இணைந்த குழாயை இணைக்க வேண்டும். பேரலின் அடிப்பகுதியில் மணல், சிறு கூழாங்கற்கள், சிறு செங்கற்களால் 5-15 செ.மீ. உயரம் வரை நிரப்ப வேண்டும். இதன் மேல் இரண்டாம் அடுக்கில், மண் அல்லது மணல், கம்போஸ்ட்டை 15 செ.மீ.க்கு இட வேண்டும். மூன்றாம் அடுக்கில், மட்கிய கழிவு மற்றும் எருவை 15 செ.மீ.க்கு நிரப்ப வேண்டும்.
நான்காம் அடுக்கில் 250-300 மண்புழுக்களை விட்டு, இவற்றின் மேல் மீண்டும் மட்கிய கழிவு மற்றும் எருவை 15 செ.மீ.க்கு நிரப்ப வேண்டும். கடைசி அடுக்கில் மணல் மற்றும் கம்போஸ்ட்டை 15 செ.மீ. இட வேண்டும். பேரலின் வாய்வழியாக வெதுவெதுப்பான நீரைச் சொட்டுச் சொட்டாக விட வேண்டும். இதற்கு 5-10 லிட்டர் பாத்திரத்தின் அடியில் சிறிய துளையிட்டு நீரை நிரப்பி, பேரலின் வாய்ப்பகுதிக்கு மேலே கட்டித் தொங்கவிட வேண்டும்.
சொட்டுச் சொட்டாக பேரலில் விழும் நீர் மண்புழுக்களின் உடலில் படும்போது, அந்தச் சுரப்பிகள் சுரக்கும் திரவம் நீருடன் கலந்து பேரலின் அடியில் வந்து, குழாய் வழியே வெளியேறும். இதுதான் மண்புழுக் குளியல் நீர். இது வெளிர் பழுப்பு நிறத்திலிருக்கும். இதுவரை நடந்து முடிய 1-2 நாட்களாகும்.
குளியல் நீரிலுள்ள சத்துகள்
பேரூட்டங்கள், நுண்ணூட்டங்கள், பயிர் வளர்ச்சி ஊக்கிகள் உள்ளன. எளிதில் கரையும் தழை, மணி, சாம்பல் சத்து மற்றும் கால்சியம், மக்னீசியம், துத்தநாகம் போன்ற நுண்சத்துகள் உள்ளன. வைட்டமின்கள், பயிர் வளர்ச்சியைத் தூண்டும் ஆக்ஸின், சைட்டோகைனின், ஜிப்ரலிக் அமிலம் ஆகியனவும் உள்ளன.
வளிமண்டலத் தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசிட்டோபேக்டர், ரைசோபியம், பாஸ்பரசைக் கரைக்கும் பாக்டீரியாக்கள் அடங்கியுள்ளன. என்சைம்கள், பீனால், அமினோ அமிலம், ஹியூமிக் அமிலம் போன்றவையும் உள்ளன.
பயன்கள்
இது பயிர் வளர்ச்சியைத் தூண்டி, பூக்கள் மற்றும் காய்ப்புத் திறனைக் கூட்டும். நோய், பூச்சித் தாக்குதலை எதிர்க்கும். ஒரு லிட்டர் மண்புழுக் குளியல் நீர், ஒரு லிட்டர் கோமியம், 10 லிட்டர் நீரைக் கலந்து தெளித்தால் சிறந்த உயிர் பூச்சிக்கொல்லியாகப் பயன்படும். பயறுவகை விதைகளைக் குளியல் நீரில் நேர்த்தி செய்து விதைத்தால், வேர்முடிச்சுகள் உற்பத்தி தூண்டப்படும்.
முனைவர் மா.டெய்சி,
முனைவர் பெ.முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், நாமக்கல்.
முனைவர் ந.அகிலா, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்.
சந்தேகமா? கேளுங்கள்!