My page - topic 1, topic 2, topic 3

கிவிப்பழ சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020

சீனாவின் அதிசயப் பழம், சீன நெல்லி என்றும் கிவிப்பழம் அழைக்கப்படும். 1960 வரை இப்பழம் பெரியளவில் வெளியே தெரியவில்லை. தாயகம் சீனமாக இருந்தாலும், இப்பழம் நியூசிலாந்தில் தான் அதிகமாக விளைகிறது. நியூசிலாந்தின் தேசியச் சின்னமும் கிவிப்பழம் தான். மிகவும் மங்கிய பழுப்புநிறத் தூவியைப் போன்ற மேற்பரப்புடன், கிவிப் பறவையைப் போல இருப்பதால் இது, கிவிப்பழம் எனப்படுகிறது.

திராட்சைக் கொடியைப் போன்ற கொடியில் வளரும் இப்பழம், சப்போட்டவைப் போலப் பழுப்பாகவும், பழுப்பு நிறத் தூவிகளை ஒத்த ரோமங்களையும் பெற்றிருக்கும். உட்புறச் சதை இளம் பச்சையாகவும், மெல்லிய கரும் விதைகளுடனும் அமைந்திருக்கும். இதன் வாசம் ஸ்ட்ராபெர்ரி மற்றும் நெல்லிக்காய் வாசத்தை ஒத்திருக்கும்.

பயன்கள்

தோலை நீக்கிவிட்டு விதையுடன் இப்பழத்தை உண்ணலாம். சீனத்தில் கிவிக்கொடியின் அனைத்துப் பாகங்களையும் பயன்படுத்துகின்றனர். கிவிப்பூ வாசனைத் திரவியம் தயாரிக்கவும்; மாவுச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் சி நிறைந்த இலைகள் பன்றி உணவாகவும் பயன்படுகின்றன. கிவிவேர், சிலவகைப் புழுக்கள், அசுவினி மற்றும் பயிர்த் துளைப்பானைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. இக்கொடி மூலம் கிடைக்கும் பிசின், கட்டுமானத் தொழில், மெழுகுத்தாள், அச்சு மை, மற்றும் வண்ணக் கலவைத் தயாரிப்பில் பயன்படுகிறது.

சாகுபடி நாடுகள்

ஜப்பான், அமெரிக்கா, இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரான்சு, இங்கிலாந்து, பெல்ஜியம், ஈரான், சிலி, ஸ்பெயின் மற்றும் இந்தியாவில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில், உத்தரகாண்டு, இமாச்சலம், உத்திரப்பிரதேசம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், மேற்கு வங்கம், நாகாலாந்து, மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், டார்ஜிலிங் மற்றும் தமிழ்நாட்டில் கொடைக்கானல், நீலகிரியில் பயிரிடப்படுகிறது.

1960 இல் முதன்முதலில் பெங்களூரில் உள்ள லால்பாஹ் பூங்காவில் நடப்பட்டது. ஆனால், அங்கிருந்த தட்பவெப்ப நிலை கிவி சாகுபடிக்கு ஏதுவாக இல்லை. பின்னர் 1963 இல் சிம்லா மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் பயிரிடப்பட்டு, 1969 இல் முதன் முதலாகப் பழ அறுவடை நடந்தது. தமிழ்நாட்டில், நீலகிரி மற்றும் கொடைக்கானலில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு, வணிக நோக்கில் பயிரிடப்படுகிறது.

உலகளவில் சுமார் 5,0604 எக்டர் கிவி சாகுபடி மூலம் 8,41,307 டன் பழங்கள் கிடைக்கின்றன. இந்தியாவில் சுமார் 4,000 எக்டர் மூலம் 11,000 டன் பழங்கள் விளைகின்றன. பழ உற்பத்தித் திறன் உலகளவில் எக்டருக்கு 16.62 டன் எனவும், இந்தியாவில் 2.27 டன் எனவும் உள்ளது.

கிவிக்கொடியின் பண்புகள்

இது, ஆக்டினிடியேசியே என்னும் குடும்பப் பெயரையும், ஆக்டினிடியா சைனென்சிஸ் என்னும் தாவரப் பெயரையும் கொண்டுள்ளது. இக்கொடியின் சூல்முடி சம அளவில் பிரிவதால், கிரேக்க மொழியில் ஆக்டினிடியா என்னும் பேரினப் பெயரையும், பிறப்பிடம் சீனம் என்பதால் சைனென்சிஸ் என்னும் இனப் பெயரையும் பெற்றுள்ளது. இதில், ஆ.சைனென்சிஸ் வகை டெலிசியோசா, ஆ.சைனென்சினஸ் வகை செட்டோசா, ஆ.சைனென்சிஸ் வகை ஹிஸ்பிடா என மூன்று கலப்பினங்கள் உள்ளன.

கிவிக்கொடி, இருபாலின மற்றும் பல பருவப் பயிராகும். எனவே, ஆண், பெண் மலர்கள் இருவேறு கொடிகளில் தனித்தனியாக இருக்கும். ஆகவே, கொடிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் போது, ஆண் மற்றும் பெண் கொடிகளை அறிந்து, இளந்தளிர்க் குச்சிகள் மற்றும் முற்றிய குச்சிகளை வேர்விடச் செய்து நட வேண்டும்.

இரகங்கள்

பெண்பால் இரகங்கள்: புருனோ: இது, இந்தியாவில் உள்ள இரகங்களில் மிகவும் நீளமான பழங்களைக் கொண்டதாகும். இந்தப் பழம் காம்புடன் இணையும் இடம் நோக்கிச் சற்றுச் சரிவாக இருக்கும். அஸ்கார்பிக் அமிலம் நிறைந்துள்ள இந்த இரகம், குறைந்த குளிர்ச்சிக் காலத்திலும் அதிக மகசூலைக் கொடுக்கும்.

அலிசான்: இந்தப் பழம் அபாட் இரகத்தை ஒத்திருக்கும். ஆனால், பழத்தின் அகலம் நீளத்தை விட அதிகமாக இருக்கும். நடுத்தரமாகவும் இருபுறமும் கூராகவும், மற்ற இரகங்களைவிட இனிப்பாகவும் இருக்கும். அதிக மகசூலைத் தரும் இந்த இரகத்தை, அளவான உயரமுள்ள மலைப்பகுதி மற்றும் மலை அடிவாரத்தில் நடலாம். இப்பழத்தில் அஸ்கார்பிக் அமிலம் மற்றும் அமிலச் சுவை குறைவாக இருக்கும்.

மோண்டி: இது பின்பருவ இரகமாகும். ஆனால், பழம் பழுக்கும் காலம் குறைவாக இருக்கும். பழம், நடுத்தரமாகவும், இருபுறமும் சற்றுக் கூராகவும், தட்டையாகவும் அலிசான் மற்றும் அபாட் பழங்களை ஒத்திருக்கும். இனிப்பு அளவாகவும், புளிப்பு அதிகமாகவும் இருக்கும். காய்கள் அதிகமாக இருக்கும் போது சிலவற்றை நீக்கினால், பெரிய பழங்கள் கிடைக்கும்.

ஹேவார்டு: இது அதிகளவில் பயிரிடப்படும் இரகமாகும். பழம் பெரிதாகவும், நீள்வட்டத்தில் கவர்ச்சியாகவும், நெடுநாட்கள் வரை கெடாமலும் இருக்கும். இதில், அதிக இனிப்புச் சுவையும், அஸ்கார்பிக் அமிலமும் இருக்கும். நல்ல வாசமுள்ள இப்பழங்கள், கணுவில் தனித்தனியாக இருக்கும். இந்த இரகம் பின்பருவத்தில் பழுக்கும் என்பதால், பின்பருவத்தில் மலரும் ஆண் பூக்களைக் கொண்ட இரகங்களைக் குறுகிய இடைவெளியில் பயிரிடலாம். இதற்கு அதிகமான குளிர் தேவைப்படுவதால், உயரமான மலைப்பகுதியில் நடலாம்.

அபாட்: நடுத்தரமாக மற்றும் அடர்ந்த தூவிகளுடன் இப்பழம் இருக்கும். முன் பருவத்தில் பூத்துக் காய்க்கும். இப்பழம், குறைந்தளவு அஸ்கார்பிக் அமிலம், அளவான புளிப்புச்சுவை மற்றும் மிகவும் இனிப்புடன் இருக்கும். குளிர்காலம் குறைந்தளவே போதும் என்பதால், நடுத்தர உயரமுள்ள மலைப்பகுதிகள் மற்றும் மலையடிவாரங்களில் பயிரிடலாம்.

ஆண்பால் இரகங்கள்: டொமூரி: பூக்காம்பில் நீளமுள்ள தூவிகளையும்,  சராசரியாக 5 பூக்களுள்ள பூங்கொத்துகளையும் கொண்டு பின் பருவத்தில் காய்க்கும். இது, ஹேவார்டு இரகத்தில் ஆண் கொடியாக நடுவதற்கு மிகவும் ஏற்றது.

மட்டுவா: சராசரியாக மூன்று பூக்களுள்ள பூங்கொத்துகளுடன் குட்டையான தூவிகளைப் பூக்காம்பில் பெற்றுள்ள இந்த இரகம், முன் பருவத்திலேயே விளைந்து விடும். இது, முன்பருவ மற்றும் நடுப்பருவப் பெண்பால் இரகங்களில் கலந்து நடுவதற்கு ஏற்ற ஆண்பால் இரகமாகும்.

பயிரிட ஏற்ற காலநிலை

கிவிக்கொடி பல்வேறு தட்பவெப்ப நிலைகளைத் தாங்கி வளரும். உறக்கக் காலத்தில் இலைகளை உதிர்த்து விடுவதுடன், பனி உறை நிலையையும் தாங்கி வளரும். ஆனால், வசந்த காலத்திலும் இலையுதிர்க் காலத்திலும் பெய்யும் கூடுதல் பனியால், இளந்தளிர்களும், பூ மொட்டுகளும் காய்ந்து விடுவதுடன், கொடியின் அடிப்பகுதிப் பட்டையும் உரிந்து விடும். உயரமான மலைப்பகுதிகளில் ஏற்படும் பனியால், இலைகள் உதிர்வதுடன், சீரான காய்ப்பும் தடுக்கப்படும்.

புருனோ, மோண்டி இரகங்களைக் காட்டிலும், அபாட், ஹேவார்டு இரகங்கள் அதிகப் பனியால் பாதிக்கப்படும். ஆக்டினிடியா டெலிசியோசா கொடிகள், 18 டிகிரி செல்சியஸ் குளிரில் 4 மணி நேரம்  இருந்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும். ஆனால், ஆக்டினிடியா ஆர்குட்டா, ஆக்டினிடியா கோவோமிக்டா, ஆக்டினியா பாலிகேமா ஆகிய இரகங்கள் குளிரைத் தாங்கி வளரும். நெடும் பகலும், கடும் வெப்பமும் கொடியின் உலர் எடையைக் கூட்டும்.

பொதுவாக, கிவிக்கொடியில் பூக்கள் வெடிப்பதற்கு, 600 மணி நேரக் குளிர்காலமும், பூக்கள் அதிகமாக உருவாக, 850 மணி நேரக் குளிர்காலமும் தேவை. தழை வளர்ச்சி மற்றும் அதிக உலர் எடைக்கு, நெடும் பகலும், 20 டிகிரி செல்சியஸ் வெப்பமும் அவசியம்.

மண்வளம்

கொடியின் வளர்ச்சிக்கும், அதிக மகசூலுக்கும், வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான, ஆழமான மற்றும் வளமான மண் தேவை. இவ்வகை மண்ணில் வேர்கள் நன்கு வளர்வதால், நீரையும் சத்துகளையும் அதிகமாக உறிஞ்சி நிறைய மகசூலைக் கொடுக்கும். மண்ணின் அமில காரத்தன்மை 6.0க்குக் குறைவாக இருப்பின் மகசூல் அதிகமாகும். 7.3க்கு அதிகமாக இருப்பின் மாங்கனீசு மற்றும் ஏனைய சத்துகள் பற்றாக்குறை ஏற்பட்டு மகசூல் குறையும்.

பயிர்ப் பெருக்கம்

கிவிக்கொடியை, விதை மற்றும் விதையில்லா முறையில் இனப்பெருக்கம் செய்யலாம். விதையில்லா முறையில் வேர்விட்ட குச்சிகள், ஒட்டுக்கட்டுதல், மொட்டுக்கட்டுதல் மற்றும் திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யலாம்.

வேர்விட்ட குச்சிகள்

கிவிக்கொடியில் முற்றிய, சற்றே முற்றிய மற்றும் இளந்தளிர்க் குச்சிகளை வேர்விடச் செய்து நடலாம். சற்றே முற்றிய மற்றும் முற்றிய குச்சிகள் நன்கு வேர் விடும். இதற்கு, 0.5-1 செ.மீ. விட்டம், 10-15 செ.மீ. நீளம், 4-5 மொட்டுகள் உள்ள குச்சிகள் தேவை. புதுக்கிளையில் இருந்து எடுக்கப்படும் சற்றே முற்றிய குச்சிகள் ஜுலையில் நன்கு வேர்விடும். ஓராண்டு முற்றிய கிளையிலிருந்து எடுக்கப்படும் குச்சிகள், ஜனவரி, பிப்ரவரியில் நன்கு வேர் விடும். நன்கு வேர்கள் உண்டாக, குச்சிகளை 500 பிபிஎம் இன்டோல் பியூட்ரிக் அமிலக் கரைசலில் 15-20 விநாடிகள் நனைத்து நட வேண்டும்.

நடும் முறை

கிவிக்கொடி நடவுக்கு வடிகால் வசதியுள்ள நிலமும், முன்பனி குறைந்த நிலையும் தேவை. தொழுவுரத்தை இட்டுக் கட்டி இல்லாமல் உழ வேண்டும். செப்டம்பர் அக்டோபரில் 60x60x60 செ.மீ. அளவில் குழிகளை எடுத்து, குழிக்கு 20 கிலோ தொழுவுரம் மற்றும் மேல்மண்ணைக் கலந்து நிரப்ப வேண்டும். கொடிக்குப் பந்தல் அமைக்கும் முறையைப் பொறுத்து, வரிசைக்கு வரிசை 4.8 முதல் 5 மீட்டர் இடைவெளியும், கொடிக்குக் கொடி 5.5 முதல் 6 மீட்டர் இடைவெளியும் விட்டு, டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நடலாம். கிவிக்கொடி இருபாலினத் தன்மையுள்ளது என்பதால், 9 பெண் கொடிக்கு ஒரு ஆண் கொடி வீதம் நட்டால் நல்ல மகசூல் கிடைக்கும்.

கொடிகளை வடிவமைத்தல்

கம்பி முறை: T வடிவக் கம்பிகளை ஊன்றி, ஜிஐ இழுவைக் கம்பிகள் மூலம் அவற்றை 45 செ.மீ. இடைவெளியில் 4 வரிசைகளில் இணைத்துக் கொடிகளைப் படர விடலாம். நடவு செய்த முதலாண்டில் நன்கு வளரும் முக்கியக் கிளையை மட்டும் நிறுத்தி விட்டு, மற்ற கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும். கம்பியின் மட்டத்தைக் கொடி அடைந்ததும் இரண்டு கிளைக்கொடிகளை T கம்பியின் இருபுறமும் செல்லுமாறு ஜிஐ கம்பியால் கட்ட வேண்டும்.

பந்தல் முறை: பந்தல் அமைப்பதற்கு அதிகச் செலவாகும் என்றாலும் அதிக மகசூல் கிடைக்கும். பந்தலின் உயரத்தைக் கொடி தொட்டதும், நான்கு புறமும் நான்கு கிளைகளைப் படர விட்டுப் பராமரிக்க வேண்டும்.

கவாத்து

அதிக மகசூல், தரமான மற்றும் அதிக எடையுள்ள பழங்களைப் பெறுவதற்குக் கவாத்து அவசியம். முதலாண்டில் அடர்ந்துள்ள பக்கக் கிளைகளைக் குறைத்துவிட வேண்டும். இதனால், நல்ல காற்றோட்டம், அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு அதிக மகசூல் கிடைக்கும். பூச்சி மற்றும் பூசணத் தாக்கமும் குறையும். ஓராண்டுக் கொடியில் கிளையின் அடியிலுள்ள 4-5 மொட்டுகளே காய்க்கும். குளிர் மற்றும் கோடையில் கவாத்து செய்யலாம்.

குளிர் காலத்தில் காய்த்துள்ள மொட்டுகளில் இரண்டு மொட்டுகளைக் கவாத்து செய்தால் இரண்டாம் ஆண்டில் பழங்கள் உருவாகும். கோடையில் கவாத்து செய்யும் போது, கடைசியாகப் பழம் உருவான மொட்டுக்கு மேல் 4-5 மொட்டுகளை விட்டுவிட வேண்டும். காய்க்காத, பூச்சி மற்றும் நோயுற்ற குச்சிகளை நீக்கிவிட வேண்டும்.

மகசூல் காலம்

நடவு செய்த மூன்று ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஆனால், ஐந்து ஆண்டுக்குப் பிறகு தான் அதிக மகசூல் கிடைக்கும். அலிசான், புருனோ, மோண்டி போன்ற இரகங்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் பூக்கத் தொடங்கி, மூன்றாம் வாரம் வரை நீடிக்கும். ஹேவார்டு இரகம் மே முதல் வாரத்தில் தொடங்கி இரண்டாம் வாரத்தில் முடிவடையும். தரமான பழங்கள் கிடைக்க, ஒவ்வொரு கிளையிலும் 4-6 பூக்கள் இருந்தால் போதும்.

பாசனம்

நன்கு காய்க்கும் கிவிக்கொடிக்கு 5-6 நாட்களுக்கு ஒருமுறை நீர் அவசியம். கோடையில் தினமும் 145-180 லிட்டர் நீர் தேவைப்படும். கோடையில் பாசனக்குறை ஏற்பட்டால், பழங்களின் அளவு குறைந்து மகசூல் பாதிக்கும்.

உரம்

ஓராண்டுக் கொடிகளுக்கு 10 கிலோ தொழுவுரம், 500 கிராம் தழை, மணி, சாம்பல் சத்துகள் தேவை. முதலில் தொழுவுரத்துடன் தழைச்சத்தைக் கலந்து இட வேண்டும். மணிச்சத்தையும் சாம்பல் சத்தையும் இரண்டு பாகமாகப் பிரித்து, பூப்பதற்கு முன்பும், காய்கள் வந்த பின்பும் இட வேண்டும்.

களை

இயற்கையாக வளரும் களைகள் மண்ணையும் மண்ணிலுள்ள கரிமப்  பொருளையும் பாதுகாக்கும். நியூசிலாந்தில் தீவனப்புல்லைக் களைப்படர்வாகப் பயன்படுத்துகின்றனர். இதை இந்தியாவிலும் செய்யலாம். எனினும், ஆண்டு முழுவதும் களத்தில் இருந்தால் இதைச் செதுக்க வேண்டும். கிவி பூக்கும் போது தீவனப்புல் பூப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது கிவி மலர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு அவசியமான தேனீக்களின் வருகையைப் பாதிக்கும். கிவியின் முக்கியத் தண்டு பாதிக்காத வகையில் புல்லைச் செதுக்க வேண்டும்.

கோடையில் செதுக்கிய புல்லைப் பாத்தியில் போட்டுக் காயவைத்து நிழல் மூடாக்காக இடலாம். களைக்கொல்லியைக் கொடியில் படாமல் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், இதன் எஞ்சிய நச்சுகளான பிரோமோசில், டெர்பாசில், குளோர்தையாமிடு, டைகுளோபெனில் ஆகியன கொடியின் வளர்ச்சியைப் பாதிக்கும். பயிரிட்டு 3-5 ஆண்டுகளில் பசுந்தாள் பயிர்களையும் ஊடுபயிர்களையும் விதைக்கலாம். காய்கறிப் பயிர்களும் பயறுவகைப் பயிர்களும் ஊடுபயிருக்கு ஏற்றவை. எனினும், ஊடுபயிருக்குத் தேவையான உரங்களைக் கூடுதலாக இட வேண்டும்.

பூப்பும் மகரந்தச் சேர்க்கையும்

இருபால் இனத்தைச் சேர்ந்த கிவி மலர்களில், மகரந்தச் சேர்க்கையும், காய்ப்பும் சிறப்பாக அமைய, சரியான அளவில் பெண்பால் இரகங்களை நட வேண்டும். பூக்கள் 7-9 நாட்களில் காய்க்கும். பகலில் 24 டிகிரி செல்சியஸ், இரவில் 8 டிகிரி செல்சியஸ் இருக்கும் போது, மகரந்தம் முளைத்து 7 மணி நேரத்தில் மகரந்தச் சேர்க்கை நிறைவடையும். இந்நிகழ்வில் மகரந்தக் குழாய் வளர்ந்து பெண் கருவை அடைய 74 மணி நேரம் கூட ஆகும்.

பழ வளர்ச்சி

பெண் பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடந்ததும் பழங்கள் வளரத் தொடங்கும். கருவுற்று ஏழு வாரத்தில் பழ வளர்ச்சி வேகமாக இருக்கும். அடுத்த ஐந்து வாரங்களுக்கு வளர்ச்சிக் குறைவாகவே இருக்கும். மீண்டும் 13 முதல் 31 வாரம் வரை வளர்ச்சி சீராக இருக்கும். பழத்தின் வளர்ச்சி அளவை, 3, 4, 5 ஆம் வாரங்களில் வரையறுக்க இயலாது. சரியாக மகரந்தச் சேர்க்கை நடக்காத போது, ஆக்ஸின், ஜிப்ரலின், சைட்டோகைனின் போன்ற வளர்ச்சி ஊக்கிகள் மூலம் பழங்களில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தலாம்.

பழங்கள் வளரும் போது, பழத்தோலின் நிறத்திலோ, சதைப்பற்றின் நிறத்திலோ மாற்றம் தெரிவதில்லை. பழங்களில் கரையும் திடப்பொருள்களின் அளவு 6.2% இருக்கும் போது அறுவடை செய்யலாம். இந்தியாவில், அக்டோபர் மூன்றாம் வாரத்திலிருந்து டிசம்பர் இறுதி வரை அறுவடை செய்யலாம். இந்தியச் சூழலில் ஒரு கொடியிலிருந்து 60-120 கிலோ பழங்கள் கிடைக்கும்.

தரம் பிரித்தல், சிப்பம் கட்டுதல், பதப்படுத்துதல்

அறுவடை செய்த பழங்களைச் சிப்பம் கட்டுவதற்கு முன், எடை அல்லது அளவு வாரியாகத் தரம் பிரிக்க வேண்டும். எழுபது கிராம் எடையிலிருந்து கூடும் பழங்கள் முதல் தரத்திலும், 50-69 கிராம் எடையுள்ள பழங்கள் இரண்டாம் தரத்திலும், 49 கிராமுக்குக் கீழுள்ள பழங்கள் மூன்றாம் தரத்திலும் அடங்கும். வெளிநாடுகளுக்கு உயர் தரமான பழங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். ஒழுங்கற்ற, காயமுடைய, கறையுள்ள, நோயுற்ற பழங்களை அகற்றிவிட வேண்டும். கிவிப்பழம் மூலம், பழச்சாறு, தேன், மிட்டாய், மது, ஜாம், புரோடேசுகள், தோல் ஆகிய பொருள்களைப் பெறலாம்.

பழச் சேமிப்பு

தட்பவெப்பம், ஈரப்பதம், வாயுச்செறிவு ஆகியவற்றை எத்திலின் உறிஞ்சியுடன் பயன்படுத்தி நெகிழிப் பைகளில் பழங்களைச் சிறப்பாகச் சேமிக்கலாம். சேமிக்கும் கால அளவை, வெப்பநிலை, ஈரப்பதம், இரகங்கள், முதிர்ச்சி, அறுவடைக்கு முன் குளிரூட்டுதல், எத்திலின் செறிவு, நெகிழியின் தடிமன் ஆகிய காரணிகள் தீர்மானிக்கும். இவற்றுள் இரகத்துக்கு முக்கியப் பங்குண்டு. முதிராத பழங்களைச் சேமித்தால் ஆல்டர்நேரியா போன்ற பூசணங்கள் தாக்கும். கொடைக்கானல் சூழலில் பூச்சி மற்றும் நோய்கள் கிவிக்கொடியைத் தாக்குவதில்லை.


முனைவர் .முத்துவேல்,

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்,

கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks