My page - topic 1, topic 2, topic 3

பண்ணைகளில் கோழி எச்சத்தை உரமாக்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015

கோழிப் பண்ணைத் தொழில், உலகில் மிகவும் வேகமாகவும் விரைவாகவும் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலுள்ள பல மாநிலங்களின் கிராமியப் பொருளாதாரத்துக்குக் கோழிப்பண்ணைகள் காரணமாக இருக்கின்றன.

நம் நாட்டில் கோழிப்பண்ணைகள் மூலம் ஓராண்டில் 3.30 மில்லியன் டன் கழிவு உற்பத்தியாகிறது. இந்தக் கழிவு சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது.

கோழிக் கழிவிலிருந்து வெளியாகும் நைட்ரேட் நைட்ரஜன் நிலத்தடி நீரை மாசடையச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கோழிக்கழிவை முறையற்ற வகையில் சேமித்து வைக்கும் போது அதிலிருந்து வெளியாகும் கனிம உலோகங்கள் நீர் நிலைகளைப் பாதிக்கின்றன.

கோழிப்பண்ணைக் கழிவில் அதிகச் சத்துகள் உள்ளன. இதில், தழைச்சத்து 4.55-5.46%, மணிச்சத்து 2.45-2.82%, சாம்பல் சத்து 2.02-2.23%, கால்சியம் 4.54-8.15%, மக்னீசியம் 0.52-0.73% மற்றும் குறைந்தளவில் தாமிரம், துத்தநாகம், இரும்பு, மாங்கனீஸ் போன்ற நுண் சத்துகளும் உள்ளன.

இவை மட்டுமன்றி, செல்லுலோஸ் 2.26-2.62%, ஹெமி செல்லுலோஸ் 1.89-2.77%, லிக்னின் 1.07-2.16% ஆகியனவும் அடங்கியுள்ளன. இந்தச் சத்துகள் அனைத்தும் நுண்ணுயிர்களின் செயல்பாட்டினால் அதிகச் சத்துகளைக் கொண்ட எருவாக மாற்றப்படுகின்றன.

கோழியெரு மட்கும் போது வெளியாகும் அம்மோனியா சுற்றுச்சூழல் மாசை அதிகரிப்பதுடன், எருவின் உர மதிப்பையும் குறைக்கிறது. ஏனெனில், கோழிக்கழிவில் 60% தழைச்சத்தானது யூரிக் அமிலம் மற்றும் யூரியாவாக உள்ளது.

இது நீரால் பகுத்தல் மூலம் அம்மோனியா வாயுவாக வெளியாவதால் தழைச்சத்து இழப்பு உண்டாகிறது. இப்படி அம்மோனியா ஆவியாதலைப் பல்வேறு வழிகளில் குறைக்கலாம்.

கோழிக்கழிவை அதிகக் கரிமப் பொருள் கலந்த அங்ககக் கழிவுப் பொருள்களுடன் மட்கச் செய்வதால், அம்மோனியா ஆவியாவதைத் தற்காலிகமாக நிலைப்படுத்த முடியும். மேம்படுத்தப்பட்ட இந்தத் தொழில் நுட்பமானது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக அமையும்.

கோழிக்கழிவை உரமாக்கும் முறை

ஒரு டன் கோழிக் கழிவுடன் 2 செ.மீ.க்கும் குறைவான துண்டுகளாக நறுக்கப்பட்ட 200 கிலோ வைக்கோல், 250 கிராம் எடையுள்ள 5 பொட்டலச் சிப்பிக் காளான் விதைகள் ஆகியவற்றைக் கலந்து நிழலில் குவித்து வைக்க வேண்டும்.

குவியலின் ஈரப்பதம் 40-50% இருக்க, 15 நாட்களுக்கு ஒருமுறை நீரைத் தெளிப்பதுடன் 21, 35, 42 ஆம் நாட்களில் நன்றாகக் கிளறி விட வேண்டும். இப்படிச் செய்யும் போது 50 நாட்களில் இந்தக் கலவை மட்கி அருமையான உரமாக மாறுகிறது.

இதில், தழைச்சத்து 1.89%, மணிச்சத்து 1.83%, சாம்பல்சத்து 1.34%, கரிமத் தழைச்சத்து 12.20% உள்ளன.

நார்க்கழிவு மூலம் கோழிக்கழிவை உரமாக்கல்

நார்க்கழிவையும் கோழிக்கழிவையும் 1:15 என்னும் அளவில் ஒரு டன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில், 2 பொட்டலச் சிப்பிக்காளான் விதைகளைக் கலந்து நிழலில் குவியலாக்கி வைக்க வேண்டும்.

குவியலின் ஈரப்பதம் 40-50% இருக்க, 21, 28, 35 ஆம் நாட்களில் நன்கு கிளறி விட வேண்டும். 28 ஆம் நாளில் கிளறி விடும் போது மீண்டும் 2 பொட்டலச் சிப்பிக்காளான் விதைகளைக் கலக்க வேண்டும்.

இப்படிச் செய்யும்போது 45 நாட்களில் இந்தக் கலவை நன்கு மட்கி அருமையான உரமாகி விடும். இந்த உரத்தில், தழைச்சத்து 2.08%, மணிச்சத்து 2.61%, சாம்பல்சத்து 0.94%, கரிமத் தழைச்சத்து 13.54% அடங்கியுள்ளன.

கூண்டுமுறைக் கோழி வளர்ப்பில் எச்சத்தை உரமாக்கல்

கூண்டு முறைக் கோழி வளர்ப்பில், கூண்டுக்குக் கீழே குழியைத் தோண்டி அதில் 5 செ.மீ. உயரத்துக்கு மணலையும், 10 செ.மீ. உயரத்துக்கு நார்க்கழிவையும் நன்றாகப் பரப்பி, இதில் கோழி எச்சத்தைச் சேகரிக்க வேண்டும்.

மூன்று மாதங்களுக்குப் பின், ஓரளவுக்குச் சிதைவடைந்த நார்க்கழிவு மற்றும் கோழியெச்சத்தை நிழலில் குவித்து வைக்க வேண்டும்.

குவியலின் ஈரப்பதம் 40-50% வரை இருக்க, 15 நாட்களுக்கு ஒருமுறை கிளறி விட வேண்டும். இப்படிச் செய்யும் போது, 30 நாட்களில் மட்கி, சத்துள்ள உரமாகி விடும். இதில், தழைச்சத்து 2.08%, மணிச்சத்து 1.93%, சாம்பல் சத்து 1.41%, கரிமத் தழைச்சத்து 10.16% உள்ளன.

ஆழ்கூளக் கோழி வளர்ப்பில் எச்சத்தை உரமாக்கல்

கோழிப் பண்ணையின் தரையில் 5-10 செ.மீ. உயரத்துக்கு உலர்ந்த நார்க்கழிவைப் பரப்பி, அதன் மேல் கோழிகளை வளர்த்து அவற்றின் எச்சத்தைச் சேகரிக்க வேண்டும்.

மூன்று மாதங்கள் இப்படிச் சேமிக்கப்படும் எச்சத்தையும் நார்க்கழிவையும் நிழலான இடத்தில் குவித்து வைக்க வேண்டும்.

குவியலின் ஈரப்பதம் 40-50% இருக்க, 15 நாட்களுக்கு ஒருமுறை குவியலைக் கிளறி விட வேண்டும். இப்படிச் செய்தால் ஒரு மாதத்தில் மட்கி, சத்துள்ள உரமாகி விடும்.

இந்த உரத்தில், தழைச்சத்து 2.13%, மணிச்சத்து 2.40%, தழைச்சத்து 2.03%, கரிமத் தழைச்சத்து 14.02% உள்ளன.

முக்கியக் குறிப்புகள்

குவியலின் வெப்பநிலை 10 முதல் 15 நாட்களுக்கு அதிகமாக இருக்க வேண்டும். வெப்பநிலை 50 டிகிரிக்கும் குறையுமானால், குவியலின் ஈரப்பதம் 60% இருக்க, நீரைத் தெளிக்க வேண்டும்.

மட்கிய எருவின் நிறம் பழுப்பு நிறத்திலிருந்து கறுப்பு நிறமாக மாறும். மட்கிய எரு வாசமில்லாமல் இருக்கும். எருக்குவியல் நன்கு மட்கி விட்டால், அளவு முக்கால் பாகமாகக் குறையும், உரக்குவியல் கெட்டியாக இருக்கும்.

மட்கிய எருக்குவியலில் சூடு இருக்காது. எரு கனமில்லாமலும் நயமாகவும் இருக்கும். எருவை மட்க வைக்கும் இடம் நிழலாகவும் மேடாகவும் இருக்க வேண்டும்.

கையளவு உரத்தை எடுத்து நசிக்கும் போது, நீர் அதிகமாகக் கசிந்தால் குவியலின் ஈரப்பதம் 60% மேலாக உள்ளதென்று கொள்ளலாம். சொட்டாகக் கசிந்தால் போதுமான ஈரப்பதம், அதாவது 60% உள்ளதென்று கொள்ளலாம்.

எரு சரியாக மட்கத் தேவையான வெப்பத்தைப் பெற, ஒவ்வொரு குவியலும் குறைந்தது ஒரு டன், அதாவது ஆயிரம் கிலோ கழிவை உடையதாக இருக்க வேண்டும். நுண் சத்துகளைக் கலந்து மட்கிய எருவை ஊட்டமேற்றலாம்.

கோழியெருவின் நன்மைகள்

கோழிக்கழிவில் மற்ற கால்நடைக் கழிவுகளில் உள்ளதைக் காட்டிலும் தழைச்சத்து, மணிச்சத்து, கால்சியம் அதிகமாக உள்ளன. தென்னைநார்க் கழிவுடன் சேர்த்து மட்க வைக்கும் போது தழைச்சத்தின் இழப்புக் கட்டுப்படுத்தப்பட்டு கோழிக்கழிவு நல்ல இயற்கை உரமாக மாறுகிறது.

கோழிக் கழிவிலுள்ள அங்ககச் சத்துகள் பயிர்களுக்கு முழுமையாகக் கிடைக்க, இக்கழிவிலுள்ள அம்மோனியா ஆவியாகி விடாத வகையில் மட்கச் செய்ய வேண்டும். எக்டருக்கு 6 டன் கோழியெரு வீதம் நிலத்தில் இட்டுப் பயன் பெறலாம்.


முனைவர் பெ.முருகன்,

பா.குமாரவேல், வேளாண் அறிவியல் நிலையம்,

காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks