My page - topic 1, topic 2, topic 3

தென்னந்தோப்பில் இடுவதற்கு ஏற்ற ஊடு பயிர்கள் எவை?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020

தென்னந்தோப்பில் வளர்ப்பதற்கான ஊடுபயிரைத் தேர்வு செய்யும்போது, அந்தப் பகுதியின் தட்பவெப்பம், மண் மற்றும் அந்த விளைபொருளுக்கான சந்தை வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தென்னை ஓலைகளின் சுற்றளவு, இடைவெளி மற்றும் வயதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏழாண்டுத் தோப்பு

ஏழாண்டுத் தென்னை மரங்களுக்கு இடையில், ஒரு பருவப் பயிர்களான, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மரவள்ளி, மஞ்சள் ஆகியவற்றைப் பயிரிடலாம். வாழை, கரும்பு, நெல் போன்றவற்றைப் பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

7-20 ஆண்டுத் தோப்பு

இந்த வயதுள்ள தோப்புகளில் பசுந்தாள் உரம் மற்றும் கம்பு நேப்பியர் புல், கினியாப்புல் போன்ற தீவனப் பயிர்களைப் பயிரிடலாம்.

20 ஆண்டைக் கடந்த தோப்பு

இந்த வயதுள்ள தோப்புகளில், வாழை, நிலக்கடலை, வெண்டை, மஞ்சள், மரவள்ளி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சிறுகிழங்கு, சேனைக்கிழங்கு, இஞ்சி, அன்னாசி ஆகியவற்றைப் பயிரிடலாம். கோகோ, பன்னியூர் 1, பன்னியூர் 2, பன்னியூர் 5 அல்லது கரிமுண்டா ஆகிய மிளகு வகைகள், ஜாதிக்காய், கிராம்பு ஆகியவற்றைப் பயிரிடலாம். இவற்றில், கோகோ, ஜாதிக்காய், கிராம்பு ஆகியன, பொள்ளாச்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு ஏற்றவை. வனிலா சாகுபடியில், நோயற்ற நடுத்தண்டைப் பயன்படுத்த வேண்டும். மேலும், நடவுக்குப் பின் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும்.

பல பயிர்கள் சாகுபடி

தென்னை, வாழை, சிறுகிழங்கு, வெண்டை ஆகியன, கிழக்குப் பகுதிக்கு ஏற்றவை. தென்னையுடன் வாழை, மிளகு, கோகோ, ஜாதிக்காய், கிராம்பு ஆகியன மேற்குப் பகுதிக்கு ஏற்றவை.

தென்னையில் ஊடுபயிரை இடுவதால், தென்னை மகசூல் இரு மடங்காகும். அதற்கு இணையான அளவில் ஊடுபயிர் வருமானமும் கிடைக்கும். ஊடுபயிர் சாகுபடியில் சரியான அளவில் உரம் மற்றும் பாசன மேலாண்மையைக் கையாள வேண்டும். தென்னை மரத்தின் வயது, இடைவெளி ஆகியவற்றின் அடிப்படையில் ஊடுபயிர் அமைய வேண்டும். இதனால் தென்னை மரங்களின் வளர்ச்சி மற்றும் காய்ப்புத் திறன் பாதிக்காமல் தொடர் இலாபம் கிடைக்கும்.

பசுந்தாள் உரப்பயிர் வளர்ப்பு

தென்னந் தோப்புகளில் பசுந்தாள் பயிரான கிளைரிசிடியா என்னும் சீமையகத்தி, சிறந்த தழையுரமாக உள்ளது. இந்தத் தழைகளை மரத்துக்கு 25 கிலோ வீதம் வட்டப் பாத்திகளில் இட்டால், மரத்துக்குத் தேவையான தழைச்சத்தும் சாம்பல் சத்தும் கிடைக்கும். இதற்காக வேலியோரத்தில் வளர்க்கப்படுகிறது.

சணப்பையைத் தோப்பில் விதைத்து 45-60 நாட்களில் பூக்கும் போது வட்டப் பாத்திகளில் இத்துடன் தேவையான மற்ற உரங்களையும் சேர்த்து இட்டு, மண்ணால் மூடிப் பாசனம் செய்தால், விரைவில் மட்கி உரமாக மாறும். மேலும் இது வளரும் காலத்தில் இதன் வேர் முண்டுகளில் தழைச்சத்து சேர்க்கப்படுவதால், மரங்களுக்குத் தேவையான தழைச்சத்தும் ஏனைய தாதுப் பொருள்களும் கிடைக்கின்றன. இதைப்போல, டெயிஞ்சா, செஸ்பேனியா போன்ற பசுந்தாள் உரப்பயிர்கள், காட்டுச் சணப்பை, கொளுஞ்சி, மைமோசா-இன்விசா போன்ற பசுந்தாள் செடிகள் நல்ல உரமாகும்.

தீவனப்பயிர் சாகுபடி

தென்னையில் 7-20 ஆண்டுகள் வரை கம்பு, நேப்பியர், கினியாபுல், வேலிமசால், முயல் மசால் போன்ற தீவனப் பயிர்களைச் சாகுபடி செய்து, கலப்புப் பண்ணையத்தில் பயன்படுத்தி அதிக இலாபம் பெறலாம்.

பல்லடுக்குப் பயிர்கள்

தென்னையின் உச்சியில் அடுக்கடுக்காக அமைந்துள்ள நீண்ட ஓலைகள், சூரியவொளி முழுமையாகக் கிடைக்கும் வகையில் அமைந்துள்ளன. ஆகவே, சூரியவொளி அடிப்படையில் தென்னையோலைப் பரப்பை, முதலடுக்கு அல்லது முதல் மாடி என அழைக்கலாம். தென்னையின் நிழலில் வளரும் பயிர்களை, அவற்றின் அமைப்பு, உயரம், தேவைப்படும் சூரியவொளி ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டாம், மூன்றாம், நான்காம் அடுக்குப் பயிர்கள் என அழைக்கலாம்.

தோப்புக்குள் கிடைக்கும் சிறிதளவு சூரியவொளியில், தென்னை மரத்தைச் சார்ந்து 12-15 அடி உயரம் வளர்ந்து காய்க்கும் குறுமிளகு, காய்ச்சல் கிழங்கு போன்றவற்றை இரண்டாம் அடுக்குப்பயிர் என அழைக்கலாம். இதைப் போல, தென்னை மரங்களுக்கு மத்தியில் கிடைக்கும் குறைந்தளவு சூரியவொளியைப் பயன்படுத்தி, 8-12 அடி உயரம் வளர்ந்து பலனைத் தரும், கோகோ பழச்செடிகள், பட்டை, கிராம்பு போன்றவற்றை மூன்றடுக்குப் பயிர்கள் என அழைக்கலாம்.

மூன்றடுக்குப் பயிர்களின் ஊடே கிடைக்கும் மிகக் குறைந்த சூரியவொளியைக் கொண்டு செழிப்பாக மூன்றடி உயரம் வளர்ந்து, நல்ல பலனைத் தரும் அன்னாசிப்பழச் செடிகளை நான்காம் அடுக்குச் செடிகள் என அழைக்கலாம்.

செடியின் உயரம், இலைகளின் அமைப்பு மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படும் சூரியவொளி அடிப்படையில் பயிரிடப்படும் ஊடுபயிர்கள், ஒன்றுக்கொன்று உறுதுணையாக நின்று வளர்கின்றன. இத்தகைய நிலையில், தோப்பின் உள்பகுதி தட்பவெப்பம், காற்றின் ஈரப்பதம், மண்ணிலுள்ள வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றில் விரும்பத்தக்க மாறுபாடுகள் நிகழ்கின்றன. மண்ணில் பயனுள்ள கிருமிகள் பெருகி வளர்கின்றன. கோகோ போன்ற செடிகளின் உதிர்ந்த இலைகள் தென்னைக்குச் சிறந்த அங்கக உரமாகப் பயன்படுகின்றன. பல்லடுக்கு ஊடுபயிர்கள் உள்ள தோப்புகளில், தென்னை மற்றும் ஊடுபயிர்களின் மகசூல், பெருமளவில் அதிகரிக்கிறது.

தென்னை மரங்களுக்கும் ஊடுபயிர்களுக்கும் தேவையான சத்துப் பொருள்களைக் கொடுக்க வேண்டும். இதனால் மண்வளம் தொடர்ந்து காக்கப்படும். பல்லடுக்குப் பயிர்களை வளர்த்தால், குறைந்த பரப்பிலிருந்து அதிக மகசூலைப் பெறலாம்.

கலப்புப் பண்ணை அமைத்தல்

தென்னந்தோப்பில் மாடு, ஆடு, கோழி, முயல் ஆகியவற்றை வளர்ப்பது மிகுந்த இலாபத்தைத் தரும். கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர்களைத் தோப்பிலேயே வளர்ப்பதால், இது பயனுள்ளதாக அமைகிறது. ஆடு மாடுகள் விவசாயிகளுக்கு வேண்டிய பாலையும், விவசாயத்துக்கு வேண்டிய சாணம் மற்றும் கழிவுப் பொருள்களையும் கொடுத்து விடும். சாணத்தை வைத்து எரிவாயுவை உற்பத்தி செய்வதும் கலப்பு பண்ணையின் பலன்களில் ஒன்றாகும்.

தென்னந்தோப்பில் பசுமாடுகள், குறுமிளகு, வாழை, காய்கறி, ஒட்டுப்புல், முயல்கள் ஆகியன இருந்தால், இவற்றின் மூலம் ஒரு எக்டரில் இருந்து ஆண்டு வருமானமாக ரூபாய் ஒரு இலட்சம் வரையில் பெற முடியும். இந்த வேலைகளுக்கு வேலையாட்களை விடாமல் சொந்த ஆட்களே செய்தால், இந்த வருமானம் 1.5 இலட்ச ரூபாயாக உயரும்.

கலப்புப் பண்ணையில் கிடைத்த அங்ககப் பொருள்களையே தென்னைக்கு உரமாக இட்டதில் மகசூல் 18 சதம் உயர்ந்தது. தேங்காய், புல், எரிவாயு, அங்கக உரம், பால் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றைக் கணக்கிட்டால், தோப்புக்குள் கலப்புப் பண்ணை அமைப்பது மிகவும் பயனுள்ளது.

புதிய கன்றுகளை நடுதல்

தொடக்கத்தில் குறைந்தளவில் காய்க்கும் மரங்கள், 8-12 ஆண்டுக்குப் பிறகு, அதிகளவில் காய்ப்பதுடன், காய்ப்புத் தன்மையும் சீராக இருக்கும். இந்நிலை, 35-45 ஆண்டுகள் வரை தொடரும். 45-50 ஆண்டுகளுக்குப் பிறகு, குலைகளில் காய்கள் சற்றுக் குறைவாக இருக்கும். 60 வயது மரங்களில் மேலும் காய்ப்புத் தன்மை குறையும். இயல்பாக நிகழும் இந்த நிலைக்குப் பல காரணங்கள் உள்ளன. முதிர்ந்த பழைய வேர்கள் மற்றும் மரத்தின் அடி, இலை மட்டை ஆகியவற்றின் திசுக்களில் ஏற்படும் மாற்றங்களே இதற்கான முக்கியக் காரணங்களாகும்.

இப்படி மகசூல் குறையத் தொடங்கினால், பழைய மரங்களின் இடைவெளியில் தரமான கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். பழைய மரங்கள் ஓங்கி வளர்ந்துள்ள நிலையில், புதிய கன்றுகளுக்குத் தேவையான சூரியவொளி கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது. மண்ணுக்கடியில் வேர்களின் அடர்த்தியும், போட்டியும் குறைவாகவே இருக்கும். ஆகவே ஒரு கன மீட்டர் அளவில் குழிகளை எடுத்துப் புதிய கன்றுகளை நடலாம்.

இப்படி, நன்கு வளர்ந்த மரங்களுக்கு மத்தியில் நடப்பட்ட கன்றுகளின் எண்ணிக்கையும் பெரிய மரங்களின் எண்ணிக்கையும் சமமாக அமையும். எடுத்துக்காட்டாக நானூறு பெரிய மரங்கள் உள்ள தோப்பில் நானூறு கன்றுகளை நடலாம். இவை வளரும் போது வரிசை மாறாத இளந்தோப்பு உருவாகும். இந்தப் கன்றுகளுக்கும் உரம், பாசனம், நோய்க் கட்டுப்பாடு போன்ற சீரான பராமரிப்பு முறைகள் அவசியமாகும்.

இந்தக் கன்றுகள் சற்றுத் தாமதமாக 6-7 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும். சுமார் 52 வயதுள்ள தோப்பில் இளங் கன்றுகளை நட்டு வளர்ப்பதால், நான்கு ஆண்டுகளுக்குப் பின்பும் பெரிய மரங்களின் மகசூல் பாதிக்கவில்லை. பெரிய மரங்களின் காய்ப்புத்திறன் குறைந்தால், அவற்றை வெட்டி விடுவதன் மூலம் இளமரங்கள் நன்றாகக் காய்த்துப் பலன் கொடுக்கும். இப்படி, முதிர்ந்த தோப்புக்குள் புதிய கன்றுகளை நட்டு வளர்ப்பதால், கால இடைவெளி இல்லாத புதிய தோப்பை உருவாக்கி, தொடர்ந்து சீரான மகசூல் மற்றும் வருமானத்தைப் பெறலாம்.


முனைவர் .செ.விஜய் செல்வராஜ்,

முனைவர் ஆ.கார்த்திகேயன், தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம்,

முனைவர் அ.பாரதி, வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பட்டுக்கோட்டை.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks