My page - topic 1, topic 2, topic 3

குதிரைவாலி சாகுபடியைப் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020

குதிரைவாலி, புன்செய் மற்றும் நன்செய் நிலங்களில் வளரும் சொரசொரப்புத் தன்மையுள்ள ஓராண்டுப் புல்லினப் பயிராகும். இத்தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியன உள்ளன. குதிரைவாலியை மானாவாரியில் புன்செய்ப் பயிராகப் பயிரிட்டு 90 நாட்களில் அறுவடை செய்யலாம். இதன் கதிர்கள் குதிரையின் வாலைப் போல இருப்பதால் இது குதிரைவாலி எனப் பழந்தமிழர்களால் அழைக்கப்பட்டது. 

இப்பயிர் மிகச்சிறந்த கால்நடைத் தீவனமாகும். சில நேரங்களில் கால்நடைத் தீவனத்துக்காகவே சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக, பச்சையாகவே இது கால்நடைகளுக்குக் கொடுக்கப்படுகிறது. இதைப் பதப்படுத்திய பச்சைத் தீவனமாகவும் மாற்றிக் கொடுக்கலாம். நெல் வைக்கோலைப் போலக் காய வைத்தும் தீவனமாகப் பயன்படுத்தலாம்.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், பருவமழைக்கு ஏற்ப, மானாவாரிப் பயிராக, ஆடிப்பட்டத்தில் அதாவது, ஜூன் ஜூலையிலும், புரட்டாசிப் பட்டத்தில், அதாவது, செப்டம்பர் அக்டோபரிலும் விதைக்கலாம். பாசன வசதியுள்ள இடங்களில் அனைத்துப் பட்டங்களிலும் பயிரிடலாம். வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவமழையை ஒட்டி விதைக்கலாம். ஆண்டின் சராசரி மழையளவு 450-500 மி.மீ. உள்ள இடங்களில் குதிரைவாலி நன்கு விளையும்.

பருவங்களுக்கு ஏற்ற இரங்கள்

தமிழ்நாட்டில் ஆடிப்பட்டத்திலும், புரட்டாசிப் பட்டத்திலும், மானாவாரியில் பயிரிட, கோ. 2, மதுரை 1 ஆகிய இரகங்கள் ஏற்றவை. தைப்பட்டத்தில் இறவையிலும் இந்த இரகங்களையே பயிரிடலாம். வரிசையில் விதைக்க, எக்டருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும். சாதா விதைப்புக்கு 12.5 கிலோ விதைகள் தேவைப்படும். வரிசை விதைப்புக்கு 25×10 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும்.

விதை நேர்த்தி 

விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த, விதைகளை நேர்த்தி செய்வது மிகவும் அவசியமாகும். உயிரியல் விதை நேர்த்திக்கு, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ்  மற்றும் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் நன்கு கலந்து 24 மணிநேரம் வைத்திருந்து பின்பு விதைக்க வேண்டும்.

நுண்ணுயிர் உர விதை நேர்த்திக்கு, 600 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் 600 கிராம் பாஸ்போபாக்டீரியா தேவை. இரசாயன விதை நேர்த்திக்கு, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டசிம் அல்லது 4 கிராம் திரம் வீதம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உர நிர்வாகம்

பொதுவாக மண்ணாய்வின்படி உரமிட வேண்டும். மண்ணாய்வைச் செய்யாத நிலையில், பொதுப் பரிந்துரைப்படி, அதாவது, எக்டருக்கு, 48 கிலோ யூரியா, 138 கிலோ சூப்பர் பாஸ்பேட் தேவை. இவற்றில், சூப்பர் பாஸ்பேட் முழுவதையும், யூரியாவில் பாதியையும் அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள பாதி யூரியாவை, 30-45 நாட்களில் களையெடுத்த பிறகு, மண்ணில் ஈரம் இருக்கும் போது மேலுரமாக இட வேண்டும்.

மேலும், நுண்சத்துக் குறைகளைத் தவிர்க்க, எக்டருக்கு 12.5 கிலோ சிறுதானிய நுண்ணூட்டக் கலவையை 50 கிலோ மணலுடன் கலந்து அடியுரமாக நிலத்தில் மேலாகத் தூவ வேண்டும். இந்த உரத்தை மண்ணுடன் கலக்கக் கூடாது.

மண்ணில் ஈரத்தைக் காத்தல்

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் குதிரைவாலி, மானாவாரிப் பயிராக பருவமழையின் போது அதிகளவில் பயிரிடப்படுகிரது. ஆகையால், சிறந்த மகசூலைப் பெற, மண்ணின் ஈரப்பதம் போதிய அளவில் இருக்க வேண்டும். சிறந்த சில உழவியல் முறைகளான கோடையுழவு, உளிக்கலப்பை மூலம் 3-5 மீட்டர் இடைவெளியில் உழுதல், நிலப்போர்வை அமைத்தல், நிலத்தின் நடுவே பண்ணைக் குட்டை அமைத்தல், நிலச்சரிவின் குறுக்கே உழுது மழைநீரைச் சேமித்தல், நிலச்சரிவுக்கு இடையில் குறுக்கு வரப்புகள் அமைத்தல் போன்றவற்றைக் கையாண்டு, மண்ணின் ஈரப்பதத்தைத் தக்க வைத்தால் அதிக மகசூல் கிடைக்கும்.

பயிர்களைக் களைதல்

விதைத்த 12-15 நாட்களில் நல்ல ஈரம் இருக்கும்போது நெருக்கமாக உள்ள பயிர்களைக் களைத்து, பயிர்கள் இல்லாத இடங்களில் நடவு செய்து, பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.

களை நிர்வாகம்

விதைத்த 15 மற்றும் 30-35 நாட்களில் இருமுறை கைக்களை எடுக்க வேண்டும். வரிசையில் விதைத்திருந்தால், களைக்கருவி மூலம் இரண்டு முறை களையெடுக்க வேண்டும்.

அறுவடை

நன்கு விளைந்த கதிர்களை, காய்ந்த பிறகு அறுவடை செய்ய வேண்டும். பின்பு அவற்றைக் களத்தில் காய வைத்து அடித்து விதைகளைத் தனியாகப் பிரித்தெடுத்துச் சுத்தம் செய்து சணல் அல்லது துணிப்பைகளில் சேமித்து வைக்க வேண்டும்.

குதிரைவாலியில் உயர் விளைச்சல் இரகங்களைப் பயன்படுத்தி, சீரிய சாகுபடி முறையைக் கடைப்பிடிப்பதால், தமிழகத்தில் தோராயமாக எக்டருக்கு 488 கிலோ தானியமும் 1,742 கிலோ தட்டையும் கிடைக்கின்றன.

சேமிப்பு

அறுவடை செய்த குதிரைவாலியை உணவாகப் பயன்படுத்த, அதன் ஈரப்பதம் 10% இருக்கும் வகையில் நன்கு காய வைத்துச் சாக்குப் பைகளில் சேமிக்கலாம். இதையே விதைக்காகச் சேமிக்க, சுமார் 100 கிலோ விதைக்கு ஒரு கிலோ ஆக்டிவேட்டடு கயோலினைக் கலந்து சேமித்து வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல், திருவண்ணாமலை மாவட்டம்.


முனைவர் கி.ஆனந்தி,

முனைவர் ப.பரசுராமன், முனைவர் அ.நிர்மலாகுமாரி, முனைவர் க.சிவகாமி,

முனைவர் இராஜேஷ், சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல், திருவண்ணாமலை.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks