கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019
நீரியம் நீரியம் ஒலியாண்டர் என்னும் தாவரப் பெயரால் அழைக்கப்படுவது அரளி. இது அபோசைனேசியே குடும்பத்தைச் சார்ந்த பயிர். இதன் தாயகம் மத்திய தரைக்கடல் பகுதி. உலகளவிலான வணிகத்தில் அரளி, ஒலியாண்டர் எனப்படுகிறது. இதில், நெட்டை, குட்டை இரகங்கள் உள்ளன. குட்டை இரகம் மூன்றடி வரையும், நெட்டை இரகம் இருபதடி வரையும் வளரும். அரளியின் அனைத்துப் பகுதிகளிலும் விசத்தன்மை மிகுந்திருக்கும்.
அரளிப்பூ உதிரிப் பூக்களாக, தொடுக்கப்பட்ட சரங்களாகப் பயன்படுகிறது. குட்டை அரளியைத் தொட்டியில் வைத்து அழகுச் செடியாக வளர்க்கலாம். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிக வெப்பமுள்ள பகுதிகளில் சுமார் 1,800 எக்டரில் அரளி சாகுபடியில் உள்ளது. அரளிச் செடிகள் நான்கு வழிச்சாலைகளில் அதிகளவில் நடப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் விளையும் அரளிப் பூக்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்கின்றனர். திருச்சி மாவட்டத்திலும் அதிகப் பரப்பில் சாகுபடியில் உள்ளது. இது வறட்சியைத் தாங்கி வளரும் பயிராகும். இதில், தனி ரோஸ், தனி வெள்ளை மற்றும் தனிச்சிவப்பில் பூக்கள் உள்ளன.
மண் மற்றும் தட்பவெப்ப நிலை
வடிகால் வசதியுள்ள கரிசல் அல்லது மணல் கலந்த செம்மண் கலந்த நிலம் ஏற்றது. கார அமிலத் தன்மை 7.0-8.0 இருக்க வேண்டும். நீர்வளம் மற்றும் அதிக வெப்ப நிலையில் நன்கு வளரும். அதிகக் குளிரையும் தாங்கி வளரும். சூரியவொளி நன்கு படும் நிலத்தில் நட வேண்டும். ஏனெனில், நிழலில் இதன் வளர்ச்சிக் குறைவாக இருக்கும்.
இனவிருத்தி மற்றும் நடவு
விதைகள், வேர்விட்ட குச்சிகள், விண் பதியன்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். இரண்டடி நீளமுள்ள கடினமான அல்லது மிதக் கடினமான குச்சிகளை மண்ணில் வளைவாகப் பதித்துப் பயிர்ப் பெருக்கம் செய்யலாம். வேர் வந்த குச்சிகளை ஜுன் ஜுலையில் நடலாம்.
நடவு
பண்படுத்திய நிலத்தில் 15 செ.மீ நீள, அகல, ஆழமுள்ள குழிகளை 2×2 மீட்டர் இடைவெளியில் எடுத்து, மேல்மண்ணுடன் 10 கிலோ தொழுவுரத்தைக் கலந்து இட்டு நட வேண்டும். ஒரு எக்டரில் 2,500 செடிகளை நடலாம்.
பின்செய் நேர்த்தி
தேவையறிந்து பாசனம் செய்ய வேண்டும். இதற்கு இரசாயன உரங்கள் தேவையில்லை. ஜனவரி மற்றும் ஆகஸ்ட்டில் எக்டருக்கு 10 டன் தொழுவுரத்தை இட்டால் போதும். புதிய தளிர்களில் மட்டுமே அரளி பூக்கும். எனவே, கவாத்து செய்தால் பூக்கள் அதிகமாக உற்பத்தியாகும். காய்ந்த, நோயுற்ற பகுதிகளை நீக்கிவிட வேண்டும்.
பூக்கும் காலம்
ஆண்டு முழுதும் பூக்கும். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அதிகமாகப் பூக்கும். அதிகளவில் பூக்களைப் பெற, ஜி.ஏ. (100 பி.பி.எம்), டிபா (10 பி.பி.எம்) மற்றும் 2, 4, டி (1பி.பி.எம்) ஆகிய வளர்ச்சி ஊக்கிகளைக் கலந்து தெளிக்க வேண்டும்.
பூச்சி, நோய் மேலாண்மை
அசுவினி: இது நல்ல மஞ்சள் நிறத்தில் கறுப்பு அடையாளத்தில் இருக்கும். கூட்டங் கூட்டமாக இருந்து இளந்தண்டுகளில் சேதத்தை ஏற்படுத்தும். குளிர் காலத்தில் அதிகமாகவும், வெய்யில் காலத்தில் குறைவாகவும் இருக்கும். இதைப் பொறிவண்டுகளைக் கொண்டு கட்டுப்படுத்தலாம். வேப்பெண்ணெய் 3% அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 1.5 மில்லி டைமெத்தயேட் வீதம் கலந்து தெளிக்கலாம்.
செதில் பூச்சி: வட்டமாகவும் வெள்ளையாகவும் மிகச் சிறிதாக, இலைகளின் அடியில் அல்லது மேலே ஒட்டிக் கொண்டிருக்கும். இதை மூன்று சத வேப்பெண்ணெய்க் கரைசலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
கம்பளிப் புழு: ஆரஞ்சு நிறக் கம்பளிப் புழுக்கள் அரளிப்பூ இலைகளைச் சேதப்படுத்தி உதிரச் செய்யும். இது, சிறியளவில் இருக்கும் போது அல்லது பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்த இயலாத போது, பேசில்லஸ் துரிஞ்சியன்ஸ் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இலைக்கருகல் நோய்: நோயுற்ற இலைகள் மஞ்சளாக, ஓரங்கள் மற்றும் நுனியில் கருகியிருக்கும். இறுதியில் செடிகள் காய்ந்து விடும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் டைத்தேன் எம்.45 பூசணக்கொல்லி வீதம் கலந்து தெளிக்கலாம். முற்றிலும் பாதித்த செடிகளை பிடுங்கி அகற்ற வேண்டும்.
அறுவடை
நட்ட நான்கு மாதத்தில் பூக்கும். ஒரு நாளைக்கு ஒரு எக்டரிலிருந்து 100-120 கிலோ பூக்கள் கிடைக்கும். இவற்றை, செய்தித்தாளால் உறையிடப்பட்ட அட்டைப் பெட்டிகளில் வைத்து, மலேசியா, துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு அனுப்புகின்றனர். தனி ரோஸ் வகை மலர்களே அதிகமாக ஏற்றுமதியாகின்றன. உள்ளூரில் இம்மலர், துளசி, மரு போன்ற வாசனை இலைகளுடன் சேர்த்துச் சரங்களாகத் தொடுக்கப்பட்டு இறை வழிபாட்டில் பயன்படுகிறது.
முனைவர் சி.இராஜமாணிக்கம்,
உதவிப் பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி, மதுரை-625104.
சந்தேகமா? கேளுங்கள்!