My page - topic 1, topic 2, topic 3

ஆப்பிள் மரமும் வளர்ப்பு முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020

குளிர்ந்த பகுதியில் விளையும் பழங்களில் ஆப்பிள் முதலிடத்தில் உள்ளது. உலக உற்பத்தியில் ஐரோப்பா 80% பழங்களை வழங்குகிறது. தென்மேற்கு ஆசியாவில் பிறந்த ஆப்பிள், இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1870 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவின் மொத்தப் பழ உற்பத்தியில் ஆப்பிள் 2.40 சதமாகும். ஜம்மு காஷ்மீர், இமாச்சலம், உத்தரகாண்ட் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் முறையே 70%, 21.5%, 6.4% மற்றும் 1.6% விளைகிறது. மிசோராம், சிக்கிம், தமிழ்நாடு, நாகாலந்திலும் ஆப்பிள் விளைகிறது. நம் நாட்டில் 2.42 இலட்சம் எக்டரில் இருந்து ஆண்டுக்கு இருபது இலட்சம் டன் பழங்கள் விளைகின்றன. 

மேலஸ் என்னும் பேரினத்தைச் சார்ந்த ஆப்பிள் 25 இனங்களைக் கொண்டது. கிராப் என்னும் கிளை இனமும் உண்டு. இந்த மரங்கள் அழகு மரங்களாக வளர்க்கப்படுகின்றன. மேலஸ் பியுமிலா இனத்தை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இமயமலையில் மேலஸ் சில்வெஸ்டிரில் மற்றும் மேலஸ் பக்கேட்டா இன மரங்கள் வன மரங்களாக உள்ளன.

தட்பவெப்பம் மற்றும் மண்

ஆப்பிள் சாகுபடிக்குக் குளிர் காலத்தில் 800-1600 மணி நேரம் 7 டிகிரி செல்சியஸ் வெப்பம் அல்லது அதற்கும் குறைவான வெப்பம் இருக்க வேண்டும். இந்நிலை, 1,600-2,300 மீட்டர் உயரமுள்ள இடங்களில் நிலவும். தென்னிந்தியாவில் 500 மணி நேரத்துக்கும் குறைவாகவே குளிரூட்டும் நேரம் இருப்பதால் இது வெப்பக்குளிர் காலநிலை எனப்படுகிறது. அதைப்போல் மிகவும் குளிராக இருந்தால் குளிர் முடக்கக் காயம் ஏற்படும்.

ஆண்டின் மழையளவு 100-125 செ.மீ. இருத்தல், ஆப்பிளின் வளர்ச்சிக்கும் காய்ப்புத் திறனுக்கும் ஏதுவாகும். அதேநேரம் பழங்கள் முதிரும் நிலையில், மிகை மழையும் பனியும் இருந்தால் பழங்களின் தரம் குறையும். பழங்களின் வண்ணம் சிறப்பாக இருக்க, சூரியவொளி அதிகமாகத் தேவை.

எல்லா வகையான மண்ணிலும் ஆப்பிள் வளர்ந்தாலும், நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் அல்லது சிவப்புச் செம்பொறை மண்ணில் சிறப்பாக வளரும். அமிலத் தன்மை 6 உள்ள மண்ணில் நன்கு வளரும். மண் கண்டம் 60 செ.மீ.க்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

இனப்பெருக்கம்

ஒட்டு மற்றும் மொட்டுப்பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். சரியான வேர்ச்செடிகளைப் பயன்படுத்த வேண்டும். வேர்ச்செடிகள் விரிவான இரு பிரிவுகளாகப் பகுக்கப்படுகின்றன. விதை மூலம் கிடைக்கும் வேர்ச்செடிகள்,  வணிக இரகங்களின் விதைகள் அல்லது கிராபு ஆப்பிள் விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

விதை வேர்ச்செடிகள் சீராக வளர்வதில்லை. மேலும் இவற்றில் கம்புளி அபிட் ஈக்களின் தாக்கமும் இருக்கும். ஆனால், தண்டுக்குச்சி மூலம் உற்பத்தி செய்யப்படும் வேர்ச்செடிகளில் இந்தப் பாதிப்புகள் இருப்பதில்லை. இவை தரைப்பதியம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் விப் அண்டு டங்க் என்னும் நாக்கு இணைவு ஒட்டுமுறையில் உருவாக்கப்படும் ஒரு வயதுக் கன்றுகள் நடப்படுகின்றன.

இரகங்கள்

இமாச்சலம்: ஸ்டார்கிங்க் டெலிசியஸ், ரிச்சா ரெட், ரெட் டெலிசியஸ், கோல்டன் டெலிசியஸ், கிரானி ஸ்மித், ஆம்பிர், கோல்டு ஸ்பர், ட்ராபிக்கல் பியூட்டி, ஸ்டார்கொம்சன் டெலிசியஸ்.

ஐம்மு காஷ்மீர்: ஐரிஸ் பீச், காஸ் ஆரஞ்சு பிப்பின், ஆம்ரி, கோல்டன் டெலிசியஸ், ரெட் டெலிசியஸ்.

உத்தரபிரதேசம்: ரெட் டெலிசியஸ், ஏர்லி ஷான்பெர்ரி, பானி, கோல்டன் டெலிசியஸ், மென்தோஷ்.

தமிழ்நாடு: தொடக்கப் பருவமான ஏப்ரல், மேயில் ஐரிஸ் பீச், குன்னூர் 3; இடைப்பருவமான ஜூன், ஜூலையில் காரிங்டன், வின்டர்ஸ்டின்; இறுதிப் பருவமான ஆகஸ்ட், செப்டம்பரில் ரோம் பியூட்டி, பார்லின் பியூட்டி, கொடைக்கானல் 1 ஆகிய இரகங்கள் பயிரிடப்படுகின்றன.

கொடைக்கானல் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து, கொடைக்கானல் பியூட்டி என்னும் இரகம் வெளியிடப்பட்டுள்ளது. இது பார்லின் பியூட்டி இரகக் குச்சி மூலம் உருவாக்கப்பட்டது. இந்த இடைப்பருவ மரத்திலிருந்து 250-300 பழங்கள் கிடைக்கும். ஒரு பழத்தின் எடை 150 கிராம் இருக்கும்.

நிலம் தயாரித்தல்

தமிழ்நாட்டில் நான்கு மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ. நீள அகல ஆழமுள்ள குழிகளில் நட வேண்டும். வட இந்தியாவில் 6.0-7.5 மீட்டர் இடைவெளியில் நடுகின்றனர். அடர் நடவு முறையில் வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்குச் செடி முறையே, 1.5 மீட்டர் அல்லது 3.0 மீட்டர் இடைவெளியில் நடலாம். தென்னகத்தில் ஜூன் ஜூலையில் நடலாம். பாசன வசதியிருந்தால் குளிர்காலம் முடிந்த பிறகும் நடலாம். வடக்கே டிசம்பர்-மார்ச் காலம் நடவுக்கு ஏற்றதாகும்.

சதுரம் அல்லது அறுகோண அமைப்பில் நடப்படுகிறது. ஒரு எக்டரில் 200-1250 கன்றுகளை நடலாம். நான்கு முறைகளில் நடலாம். அதாவது, குறைந்த அடர் நடவு முறையில் எக்டருக்கு 250 கன்றுகள், மித அடர் நடவு முறையில் 250-500 கன்றுகள், உயர் அடர் நடவு முறையில் 500-1250  கன்றுகள், அல்ட்ரா உயர் அடர் நடவு முறையில் 1250 கன்றுகள் வீதம் நடலாம்.

பாசனம்

ஆப்பிள் நன்கு வளர ஆண்டுக்கு 114 செ.மீ. நீர் தேவை. 15-20 பாசனம் செய்ய வேண்டும். கோடையில் 7-10 நாள் இடைவெளியில் பாசனம் தேவை. பனிக்காலத்தில்  3-4 வார இடைவெளியில் பாசனம் செய்தால் போதும். முக்கியக் காலமான ஏப்ரல்-ஆகஸ்ட்டில் குறைந்தது எட்டு முறை பாசனம் கொடுக்க வேண்டும். நிலத்தில் ஈரப்பதம் குறைவாக இருந்தால் நடவு செய்த ஒட்டுக் கன்றுகளுக்குத் தொடர்ந்து பாசனம் செய்ய வேண்டும். இஸ்ரேல் ஆப்பிள் தோட்டங்களில் சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் கூடுதல் மகசூல் கிடைக்கிறது.

கவாத்தும் வடிவமைப்பும்

சரியான வளர்ச்சி மற்றும் நல்ல உற்பத்தித் திறனுக்கும் கவாத்தும் வடிவமைப்பும் அவசியம். தாவர வளர்ச்சி மற்றும் பழங்களைத் தரும் ஸ்பர் தளிர்களின் வளர்ச்சியைச் சமநிலையில் வைப்பதற்குக் கவாத்து அவசியம். ஆறாண்டு ஆப்பிள் தோட்டத்தில் தேவையற்ற, பலவீனமான கிளைகளை, குச்சிகளைக் களைதல் வேண்டும்.

தமிழ்நாட்டில் 60-70 செ.மீ. உயரம் வளர்ந்த செடிகளில் பக்கக் கிளைகளை அகற்ற வேண்டும். பின்பு, திறந்த மைய அமைப்பில் வடிவமைக்க வேண்டும். இதனால் செடிகளுக்குச் சூரியவொளி நன்கு கிடைக்க, பழங்களின் நிறம் மேம்படும். மேலும், பனி மற்றும் பனி மழையால் ஏற்படும் தாக்கமும் குறையும். நடுமலைப் பகுதியில் உள்ள அடர்நடவு ஆப்பிளில் சுழல் புஷ் அமைப்பில் வடிவமைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வட இந்தியாவில் இம்முறையே நடைமுறையில் உள்ளது. மாற்றப்பட்ட லீடர் அமைப்பிலும் கவாத்து செய்யலாம். போத்துத் தண்டுகளை அகற்றுதல், காய்ந்த, நோயுற்ற, குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்த கிளைகளை அகற்ற வேண்டும்.

உர நிர்வாகம்

தமிழ்நாட்டில் காய்க்கும் மரங்களுக்கு, மரத்துக்கு 250 கிராம் தழைச்சத்து, ஒரு கிலோ மணிச்சத்து, ஒரு கிலோ சாம்பல் சத்து வீதம் இட வேண்டும். இமாச்சலத்தில் மரத்துக்கு 100 கிராம் தழைச்சத்து, 350 கிராம் மணிச்சத்து, 100 கிராம் சாம்பல் சத்து வீதம் இடப்படுகிறது. வயதான மரங்களுக்கு, மரத்திலிருந்து 30 செ.மீ. தள்ளி உரத்தை இட வேண்டும். இங்கே, அக்டோபர் நவம்பரில் உரமிடலாம். வட இந்தியாவில், மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை டிசம்பர் ஜனவரியில் இட வேண்டும். தழைச்சத்தை இரண்டாகப் பிரித்து, முதல் பகுதியை மரம் பூப்பதற்கு 2-3 வாரங்களுக்கு முன்பும், அடுத்த பகுதியை ஒரு மாதம் கழித்தும் கொடுக்க வேண்டும்.

மரங்களில் தழைச்சத்து, துத்தநாகம், போரான், மாங்கனீசு மற்றும் சுண்ணாம்புச்சத்துக் குறைகள் தென்படும். துத்தநாக சல்பேட் மூலம் துத்தநாகச் சத்துக் கிடைக்கும். இதை 0.5% அளவில் 5 நாட்கள் இடைவெளியில் ஓரிரு முறை மே, ஜூனில் தெளிக்கலாம். போரிக் அமிலம் மூலம் போரான் சத்துக் கிடைக்கும். இதை 0.1% அளவில் 5 நாட்கள் இடைவெளியில் ஓரிரு முறை ஜூன் தெளிக்கலாம். மாங்கனீசு சல்பேட் மூலம் மாங்கனீசு குறையைக் களையலாம். கால்சியம் குளோரைடு மூலம் சுண்ணாம்புச்சத்துக் கிடைக்கும். இதை, 0.5% அளவில் 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை ஜூன் ஜூலையில் தெளிக்கலாம்.

ஒரு சில இரகங்கள் அதிகமாகக் காய்ப்பதால் சிறிய, எடை குறைந்த, சந்தைக்குத் தகாத பழங்களாக இருக்கும். பழங்களைத் தாங்கும் கிளைகளும் ஒடிந்து விடும். இத்தகைய மரங்களில் அதிகளவில் பழங்களைக் களைந்தால், மரங்களின் வீரியத்தைத் தக்க வைத்து, தொடர்ந்து தரமான பழங்களைப் பெறலாம்.

பயிர் வளர்ச்சி ஊக்கிகள்

ஆப்பிள் நன்றாகப் பூக்கவும், பழங்களின் நிறம் மேம்படவும் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் அவசியம். எனவே, நாப்தலின் அசிடிக் அமிலம் என்னும் வளர்ச்சி ஊக்கியை 10-20 பிபிஎம் அளவில், பூவிதழ்கள் உதிரும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.

பயிர் சாகுபடி

குளிர்காலம் முடிந்த பின்பு மொட்டுகள் விரிந்து மலரும். தமிழ்நாட்டில் மலர் மொட்டுகள் வெடிப்பதற்குத் தேவையான தட்பவெப்பம் இருப்பதில்லை. இதற்குத் தீர்வாக, சாண்டோலின் A என்னும் டைநைட்ரோ ஆர்தோ கிரிசோலை 0.5% அளவில் 2% கனிம திரவத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

பல இரகங்களில் காய்ப்பிடிக்காமை மற்றும் பெண் மலட்டுத் தன்மையும் மிகுதியாக உள்ளன. இந்த இரகங்களின் பூக்களின் அமைப்பு, தேனீக்களால் ஏற்படும் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு வாய்ப்பாக இருப்பதில்லை. எனவே, காய்ப்பிடிப்பை அதிகரிக்க, நல்ல மகரந்தச் சேர்க்கைக்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். மகரந்தத் தானியங்களை உற்பத்தி செய்யும் மரங்களை நட வேண்டும். இம்மகரந்தத் தானியங்கள் பயனுள்ளவையாக, முக்கிய இரகங்களுக்கு இணக்கமானவையாக அமைய வேண்டும். இவற்றின் பூக்கும் காலமும் மற்ற இரகங்கள் பூக்கும் சமயத்தில் நிகழ வேண்டும்.

ஆப்பிள் தோட்டத்தில் மகரந்தச் சேர்க்கை சிறப்பாக நடப்பதற்கு, 33% மரங்கள் மகரந்தத் தானியங்களை உற்பத்தி செய்ய வேண்டும். மேலும், இம்மரங்கள் தரமான கனிகளைக் கொடுக்க வேண்டும். டைடுமேன் ஏர்லி, ரெட் கோல்டு, கோல்டன் டெலிசியஸ் இரகங்கள், சிறந்த மகரந்தத் தானியங்களை உற்பத்தி செய்யும். ஒரு எக்டரில் ஐந்து தேன்கூடுகள் இருக்க வேண்டும். மற்ற இரக மரங்களின் குறிப்பிட்ட கிளையை அகற்றி விட்டு, அதில் மகரந்தத் தானியங்களுக்கான இரகங்களை ஒட்டுக் கட்டுதல், மகரந்தத் தானிய இரகங்களின் மலர்க்கொத்தை, மகரந்தச் சேர்க்கைக்குத் தேவையான இரகங்களின் மரக்கிளையில் கட்டி வைத்தல் மூலம் மகரந்தச் சேர்க்கையைக் கூட்டலாம். டெலிசியஸ் ஆப்பிள் மரம் மகரந்தத் தானியங்களைச் சிறப்பாக உற்பத்தி செய்யும்.

தொடக்கக் காலத்தில் வளர்ச்சிக்கு வரும் இரகங்களில் 40-60% காய்கள் பிஞ்சிலேயே உதிர்ந்து விடும். இடைக்காலத்தில் முதிரும் ரெட் டெலிசியஸ், கோல்டன் டெலிசியஸ், இராயல் டெலிசியஸ் ஆகியவற்றில் 15-20% பிஞ்சுகள் உதிரும். இதைக் களைய, பிஞ்சுகள் உதிர்வதற்கு ஒரு வாரத்துக்கு முன், பிளானோபிக்ஸ் என்னும் வளர்ச்சி ஊக்கியை 10 பிபிஎம் அளவில் தெளிக்க வேண்டும்.

ஆப்பிள் குறைவாக விளையும் பகுதிகளில் காய்ப்பிடிப்பில் சிக்கல் உள்ளது. இதைச் சரிசெய்ய, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி பிரோட்டோசைம் அல்லது 0.6 மில்லி பாராஸ் அல்லது 0.75 மில்லி மிராக்குளான் வீதம் கலந்து, மொட்டு விரியும் போதும், இதழ்கள் உதிரும் போதும் தெளிக்க வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள தாழ்வான பகுதிகளில் பழங்களுக்கு நல்ல நிறம் உருவாவதில் சிக்கல் உள்ளது. இத்தகைய பழங்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான பகுதிகளில் விளையும் பழங்கள் மிகவும் தாமதமாக முதிர்வதால், சந்தைக்கு வருவதும் தாமதமாகி மிகக் குறைந்த விலையே கிடைக்கிறது.

அறுவடை

ஒட்டுக் கன்றுகளில் முதல் அறுவடை 3-5 ஆண்டுகளில் கிடைக்கும். முழு மகசூல் பத்தாம் ஆண்டிலிருந்து கிடைக்கும். பழத்தில் பச்சை நிறம் மாறும் போது அறுவடை செய்ய வேண்டும். குளிர்ப்பதனக் கிடங்கில் -1.0-2.0 டிகிரி சென்டிகிரேட் குளிர்ச்சியில், 85-100% ஈரப்பதத்தில் சேமிக்க வேண்டும். தமிழ்நாட்டில் நன்கு வளர்ந்த மரத்திலிருந்து 15-25 கிலோ பழங்கள் கிடைக்கும். வட இந்தியாவில் 100 கிலோ பழங்கள் கிடைக்கின்றன.

ஆப்பிளின் நன்மைகள்

இது, உடல் நலத்தின் அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது. தினமொரு ஆப்பிளை உண்டால் மருத்துவர் தேவையில்லை என்னும் அளவில் இதற்குப் பெருமையுண்டு. இது இதயத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. நுரையீரல், பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட்டில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கிறது. உடல் பருமனைத் தடுக்கிறது. நினைவாற்றலைக் கூட்டுகிறது. ஆப்பிளில் சர்க்கரை 10-11%, புரதம் 0.3%, பொட்டாசியம் 120 மி.கி. உள்ளன. மேலும், தயாமின், பையோடின். பி6 மற்றும் சி ஆகிய உயிர்ச்சத்துகளும் உள்ளன. ஜாம், ஜெல்லித் தயாரிப்பிலும் பதப்படுத்தலிலும் ஆப்பிள் முக்கியப் பங்கு வகிக்கிறது.


 

முனைவர் ..மணிவண்ணன்,

உதவிப் பேராசிரியர், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், 

கொடைக்கானல்-624103, திண்டுக்கல்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks