My page - topic 1, topic 2, topic 3

வேம்பு சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!

சூழல் மாசைத் தவிர்க்க, குறைந்த செலவில் பயிர்கள் மற்றும் விளைபொருள்களைப் பாதுகாக்க, வேம்பு சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த வேண்டுமென்று, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அதனால் வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் அழிக்கப்படுகின்றன. மேலும், சுற்றுச்சூழலும் மாசடைகிறது. இதனைத் தவிர்க்க, தாவரப் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி, பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

வேம்பின் அனைத்துப் பாகங்களும் வேளாண்மைக்குப் பயன்படுகின்றன. தழையை உரமாக, கால்நடைகளுக்குத் தீவனமாக, பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்தலாம். வேப்பம் புண்ணாக்கை உரமாக, யூரியாவின் பயனை அதிகரிக்க, வேப்ப எண்ணெய்யைக் கலந்து பயன்படுத்தலாம். மேலும், இந்த எண்ணெய்யைத் தனியாகவும், இதர பூச்சி மருந்துகளுடன் கலந்தும் பூச்சிநாசினியாகப் பயன்படுத்தலாம்.

வேப்பந்தழை இட்ட நிலத்தில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுவின் தாக்குதல் வெகுவாகக் குறைந்து விடும். நெல், சோளம் போன்ற தானியங்களுடன் வேப்பிலைகளைக் கலந்து வைத்து, அந்துப்பூச்சி, தானியத் துளைப்பான்கள், வண்டுகள் போன்றவற்றைத் தடுத்து, தானியங்களைப் பாதுகாக்கலாம்.

வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளித்து, பயிர்களில் தோன்றும் கம்பளிப்புழு, அசுவினி, தத்துப்பூச்சி, புகையான், இலைச் சுருட்டுப்புழு, ஆனைக்கொம்பன், கதிர்நாவாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். பயிர்களைத் தாக்கும் சாம்பல் நோய், மஞ்சள் வைரஸ் நோய் முதலியவற்றைக் கட்டுப்படுத்த, வேப்பெண்ணெய்க் கரைசல் பயன்படும்.

வேப்பம் புண்ணாக்கை யூரியாவுடன் 1:5 என்னும் விகிதத்தில், அதாவது, ஒரு பங்கு வேப்பம் புண்ணாக்குடன் ஐந்து பங்கு யூரியாவைக் கலந்து இட்டால், யூரியாவின் சத்து, பயிருக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிடைத்துக் கொண்டே இருக்கும். தழைச்சத்து வீணாவதும் குறையும்.

நொச்சி, வேப்பந்தழைக் கரைசல், நெற்பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டுப் புழு, குருத்துப்புழு மற்றும் கதிர்நாவாய்ப் பூச்சியைக் கட்டுப்படுத்தும். வேம்பில் உள்ள அசாடிரக்டின், நிம்பிசிடின் போன்ற இரசாயனப் பொருள்கள், பூச்சிகளையும் நோய்களையும் தடுப்பதற்கு உதவும்.

எனவே, தேவைக்கேற்ப, வேம்பின் அனைத்துப் பாகங்களையும் பயன்படுத்தினால், எவ்விதப் பாதிப்பும் இல்லாமல், சிக்கனமாக, பயிர்களையும், விளை பொருள்களையும்; பூச்சி மற்றும் நோய்களில் இருந்து காப்பாற்றலாம் என, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks