இலாபம் தரும் ஜப்பானிய காடை வளர்ப்பு!

காடை japanese quail scaled

மிழ்நாட்டில் பண்ணையாளர்கள் தற்போது பல்வேறு கோழியினங்களை வளர்த்து வருகின்றனர். அவற்றில், ஜப்பானிய காடை வளர்ப்பு மிகவும் முக்கியமானது. ஜப்பானிய காடைகளை, முட்டை மற்றும் இறைச்சிக்காக வேளாண் பெருமக்கள் வளர்த்து வருகின்றனர்.

மேலும், குறைந்த முதலீட்டில் நிறைந்த இலாபம் பெறுவதற்காகக் காடை வளர்ப்பைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஏனெனில், மிகக் குறைந்த இடத்தில் அதிகளவில் காடைகளை வளர்க்கலாம். குறுகிய காலத்தில் பணமாக்கல் காடை வளர்ப்பில் மட்டுமே சாத்தியமாகும்.

ஜப்பானிய காடைகள் இறைச்சிக்காக மிக அதிகமாக வளர்க்கப்படுகின்றன. அதாவது, 5-6 வாரங்களில் காடைகள் விற்பனைக்கான வளர்ச்சியை அடைந்து விடும். ஆகவே, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஜப்பானிய காடை வளர்ப்புப் பரவலாக நடந்து வருகிறது.

அதாவது, கறிக்கோழி வளர்ப்பைக் காட்டிலும் காடை வளர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. மிகக் குறைந்தளவு தீவனமே காடைகளுக்குப் போதும். கறிக்கோழியில் இருப்பதை விட, காடைகளில் கொழுப்புச் சத்துக் குறைவாக உள்ளது.

காடை இறைச்சியில், 22 சதவீதப் புரதமும், 5 சதவீதக் கொழுப்பும் இருப்பதால், இது, குழந்தைகளும், பெரியவர்களும் சாப்பிடும் வகையில் அமைந்துள்ளது. காடை முட்டையும் சத்துகள் மிக்கதாக இருப்பதால், பெரும்பாலான மக்கள் விரும்பி உண்கின்றனர்.

காடை இனங்கள்

காடையில் பல்வேறு இனங்கள் உள்ளன. அவற்றில், நியூசிலாந்து, சைனா, வெள்ளை மடகாஸ்கர், கலிபோர்னியா, நியூ கினியா, ஜப்பானிய காடை ஆகியன முக்கியமானவை. இவையனைத்தும் முட்டை மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப் படுகின்றன.

தமிழ்நாட்டில், ஜப்பானிய காடை வளர்ப்புக்கு உகந்த தட்ப வெப்பநிலை உள்ளது. ஒரு காடையை ஆணா பெண்ணா என்றறிய மூன்று வாரங்களாகும். காடைகளின் மார்பு நிறத்தை வைத்து இதை அறியலாம்.

ஆண் காடைகளின் மார்பு குறுகலாக, பழுப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் இருக்கும். பெண் காடைகளின் மார்பு விரிந்து, பழுப்பு நிறத்தில், கறுப்பு மற்றும் சாம்பல் நிறப் புள்ளிகளுடன் இருக்கும்.

இறைச்சிக் காடை வளர்ப்பு

ஜப்பானிய காடைகளை, மிகக் குறைந்த இடத்தில் அதிகளவில் வளர்க்கலாம். கோழி வளர்ப்புக்குத் தேவைப்படுவதைப் போல, இதற்கு அதிக முதலீடு தேவையில்லை. மிகக் குறைவான மூலதனமும், குறைவான பயிற்சியும் பெற்ற அனைவரும் காடை வளர்ப்பில் ஈடுபடலாம்.

மேலும், இவற்றை அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் வளர்க்கலாம். கோழிகளைப் போல், ஜப்பானிய காடைகளுக்குத் தடுப்பூசிகளை அளிக்கத் தேவையில்லை. ஜப்பானிய காடைகள் ஆறு வாரங்களில் விற்பனைக்குத் தயாராகி விடுவதால், குறைந்த காலத்திலேயே வருவாயைப் பெற முடியும்.

ஒரு காடை ஆறு வாரங்களில், 500 கிராம் தீவனத்தை மட்டுமே உண்பதால், தீவனச்செலவு அதிகமின்றி, காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகிறது.

கொட்டகை அமைப்பு

இறைச்சிக்கான காடைகளைக் கூண்டு அல்லது ஆழ்கூள முறையில் வளர்க்கலாம். இந்த முறையில், ஒரு சதுரடியில் ஆறு காடைகள் வரை வளர்க்கலாம். உமி, தேங்காய் நார் அல்லது மரத்தூளை ஆழ்கூளமாக இடலாம்.

முதல் இரண்டு வாரங்கள் ஆழ்கூளத்திலும், அதற்கு மேல் கூண்டிலும் இட்டு வளர்த்தால், காடைகள் அலைவதால் ஏற்படும் உடல் எடைக் குறைதல் இராது.

நூறு காடைகளை, கூண்டு முறையில் முதல் இரண்டு வாரங்களுக்கு வளர்க்க, 3 அடி நீளம், 2.5 அடி அகலம், 1.5 அடி உயரமுள்ள கூண்டுத் தேவைப்படும். அதன் பிறகு, மீதமுள்ள நான்கு வாரங்களுக்கு வளர்க்க, 4 அடி நீளம், 2.5 அடி அகலம், 1.5 அடி உயரமுள்ள கூண்டுத் தேவைப்படும்.

கூண்டின் கம்பிவலை, அடிப்பகுதியும் பக்கவாட்டும் 1.5 செ.மீ. அளவில் அமைக்கப்பட வேண்டும். காடைக்கழிவை எளிதாக அகற்ற ஏதுவாக, கூண்டுக்குக் கீழே ஒரு தகட்டை அமைக்க வேண்டும். காடைக் கூண்டுகளை 4-5 அடுக்குகளாக அமைக்கலாம்.

தீவனம் அளித்தல்

கோழித் தீவனத்தில் பயன்படும் பொருள்களை வைத்தே ஜப்பானிய காடைத் தீவனத்தைத் தயாரிக்கலாம். அதாவது, காடைக்குஞ்சுத் தீவனத்தில், 26-28 சதவீதப் புரதமும், 2,700 கிலோ கலோரி எரிசக்தியும் இருக்க வேண்டும். இவ்வகைத் தீவனத்தை முதல் 3 வாரம் வரை பயன்படுத்தலாம்.

அடுத்த மூன்று வாரங்களுக்கான தீவனத்தில், 24 சதவீதப் புரதமும், 2,800 கிலோ கலோரி எரிசக்தியும் இருக்க வேண்டும். ஒரு காடையானது தனது ஐந்து வார வயது வரையில் 500 கிராம் தீவனத்தை எடுத்துக் கொள்ளும். காடைத் தீவனம், மிகச்சிறிய துகள்களாக இருத்தல் அவசியமாகும்.

ஜப்பானிய காடை இறைச்சி

நன்கு வளர்ந்த ஆண் காடை 125-150 கிராம், பெண் காடை 175-200 கிராம் இருக்கும். உயிருள்ள காடையின் எடையில், 65-70 சதவீத இறைச்சி இருக்கும். சுமார் 140 கிராம் எடையுள்ள காடையைச் சுத்தம் செய்தால் 100 கிராம் இறைச்சிக் கிடைக்கும்.

காடை இறைச்சி சுவையாக இருக்கும். இதில், புரதம் நிறைந்தும், கொழுப்புக் குறைந்தும் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.

முட்டைக்காடை வளர்ப்பு

முட்டை உற்பத்திக் காடைகளை ஆழ்கூளத்தில் அல்லது கூண்டுகளில் வளர்க்கலாம். கூண்டுகளில் வளர்த்தால் முட்டைகள் சுத்தமாக இருக்கும். காடைகள் ஆறு வாரக் கடைசியில் முட்டையிடத் தொடங்கி விடும்.

எட்டு வார இறுதியில் 50 சதவீத முட்டைகளையும், பதின்மூன்று வார இறுதியில் 95 சத முட்டைகளையும் இட்டு விடும். ஒரு காடை ஓராண்டில் 90-120 முட்டைகளை இடும். பெரும்பாலான காடைகள் பிற்பகல் 3 மணிக்குப் பிறகு தான் முட்டைகளை இடும். இப்படி, 22 வார வயது வரை முட்டைகளை இடும்.

காடை முட்டை 9-12 கிராம் இருக்கும். காடை முட்டை சிறியதாக இருந்தாலும், அதிலுள்ள மஞ்சள் கருவானது, கோழி முட்டையில் இருப்பதை விட அதிகமாகும். அதனால் தான் காடை முட்டை மிகவும் சுவையாக இருக்கிறது. முட்டையிடும் காடைகளுக்கு ஒரு நாளில் 16 மணி நேர வெளிச்சம் தேவைப்படும்.

முட்டை உற்பத்திக் காடைகளுக்கு, 22 சதவீதப் புரதமும், 27,00 கிலோ கலோரி எரிசக்தியும் உள்ள தீவனத்தை அளிக்க வேண்டும். இந்தத் தீவனம் கிடைக்காத நிலையில், முட்டைக்கோழித் தீவனத்தை வாங்கி, 75 கிலோவுக்கு 6 கிலோ கடலை அல்லது சோயாப் புண்ணாக்கு வீதம் சேர்த்து அளிக்க வேண்டும்.

ஆறு வாரங்களுக்கு மேலான காடைகளுக்கு, தினமும் 30-35 கிராம் தீவனத்தை, அவற்றின் முட்டை உற்பத்திற்கு ஏற்ப அளிக்க வேண்டும். ஒரு கிலோ முட்டைகளை இடுவதற்கு, ஒரு காடையானது 4.5 கிலோ தீவனத்தை உணவாகக் கொள்ளும்.

நான்கு வார வயதில், ஆண் காடைகளையும், பெண் காடைகளையும் தனித் தனியாகப் பிரித்து வைக்க வேண்டும். மேலும், 8-10 வாரங்களில், ஆண் காடைகளுடன் பெண் காடைகளைச் சேர்த்தால் கருவுள்ள முட்டைகளைப் பெறலாம்.

ஒரு ஆண் காடைக்கு ஐந்து பெண் காடைகள் வீதம் சேர்க்க வேண்டும். அடை வைத்து 18 நாட்களில் காடைக்குஞ்சு வெளியே வரும். ஆயிரம் பெண் காடைகளை வைத்து, மூவாயிரம் குஞ்சுகளை உற்பத்தி செய்ய இயலும்.

காடைக்குஞ்சுப் பொரிப்பகத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், அதிகளவில் குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். வெளிச்சமும் அதன் மூலம் கிடைக்கும் வெப்பமும் காடைக் குஞ்சுகளுக்கு மிகவும் அவசியம்.

கோழிக் குஞ்சுகளைக் காட்டிலும் காடைக் குஞ்சுகளுக்கு, வெப்பமும் வெளிச்சமும் அதிகமாகத் தேவை. இந்த வெப்பம் போதிய அளவில் கிடைக்கா விட்டால், குஞ்சுகள் இறப்பு அதிகமாக இருக்கும்.

அதனல் தான், சில காடை வளர்ப்புப் பண்ணைகளில், மின்சாரம் தடைபட்டாலும், தொடர்ந்து வெளிச்சம் கிடைக்க வசதியாக, பேட்டரிகளை அமைத்திருக்கிறார்கள். இது சிறந்த முறையாகும். முட்டையிலிருந்து வெளிவரும் ஒரு காடைக் குஞ்சின் எடை 8-10 கிராம் இருக்கும்.

காடைகளைத் தாக்கும் நோய்கள்

காடைகளில் கால் வலுவிழந்த குஞ்சுகளும், நோஞ்சான் குஞ்சுகளும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. இதற்குக் காரணம், இந்தக் குஞ்சுகளுக்குப் போதியளவில், தாதுப்புகளும், வைட்டமின் ஈ-யும் கிடைக்காதது தான்.

ஆகவே இனப்பெருக்கக் காடைகளுக்கு, தாதுப்புகள் மற்றும் வைட்டமின்கள் போதியளவில் கிடைக்கச் செய்ய வேண்டும்.

மேலும், நுண்ணுயிரி மற்றும் நச்சுயிரிகளால் ஏற்படும், தொப்புள் அழற்சி, காளான் நோய், நுரையீரல் அழற்சி, பூசண நச்சு, வாதநோய், இராணிக்கட் போன்ற நோய்கள் காடைகளைத் தாக்கும்.

காக்ஸிடியாசிஸ் என்னும் இரத்தக் கழிச்சலும் காடைகளைத் தாக்கலாம். இருப்பினும், கோழிகளை விடக் காடைகளுக்கு நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருப்பதால், இவ்வகை நோய்களுக்கு எதிராகத் தடுப்பு நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை.

ஆகவே, பண்ணையை முறையாகக் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து, காடைகளுக்கு நல்ல குடிநீர், சரிவிகித உணவைக் கொடுத்து, சரியான பராமரிப்பு முறையை மேற்கொண்டால், காடை வளர்ப்பில் நிறைவான இலாபத்தைப் பெறலாம்.


காடை BHARATHIDASAN scaled e1709283881871

முனைவர் .பாரதிதாசன், இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், முயல் இனப்பெருக்கப் பிரிவு,

கால்நடை முதுகலை அறிவியல் ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading