பன்றி வளர்ப்பில் தீவன மேலாண்மை!

வெண்பன்றி உற்பத்தியைப் பெருக்கி, அதிக இலாபம் ஈட்டுவதில் தீவன மேலாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. வெண்பன்றி இறைச்சி, உள்ளுறுப்புகள், உரோமம் போன்றவை தரமாக இருக்க வேண்டுமாயின், பன்றிகளுக்குத் தரமான சமச்சீர் உணவைக் கொடுக்க வேண்டும். வெண்பன்றி வளர்ப்பிலாகும் மொத்தச் செலவில் 70-75 சதம் தீவனச் செலவாகும். தீவனமே இறைச்சியாக மாற்றப்படுவதால், பன்றிகளுக்கு நாம் வழங்கும் தீவனம் வீண் போகாது.

புரதம், எரிசக்தி

பன்றிகளுக்கு அளிக்கும் தீவனப் பொருள்கள், அவற்றின் புரதத் தேவைக்கும், எரிசக்தித் தேவைக்கும் பயன்படும். புரதத் தேவையைச் சரி செய்வதற்கு, எள்ளு, கடலை, சோயா, மீன் தூள், இறைச்சித் தூள் ஆகியன உதவும். எரிசக்தித் தேவையைச் சரி செய்ய, கம்பு, சோளம், மக்காச்சோளம், அரிசித் தவிடு, கோதுமைத் தவிடு, சர்க்கரைப் பாகு போன்றவை பயன்படும். பன்றித் தீவனப் பொருள்கள் தரமாக, பூஞ்சைக் காளான் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.

கொழுப்பு, உயிர்ச்சத்து

பன்றிகளுக்கு கொழுப்புச்சத்து, தாதுப்புகள், உயிர்ச் சத்துகள் ஆகியனவும் அவசியம். தீவனத்தில் உள்ள கொழுப்புச்சத்து, கால்நடைகளில் எரிசக்தியாகப் பயன்படும். முழுக்கடலை, சோயா போன்றவற்றில் கொழுப்புச்சத்து அதிகமாக உள்ளது. பன்றிகளுக்கு உயிர்ச் சத்துகளும் அவசியம். நீரில் கரையும் பி, சி, கொழுப்பில் கரையும் ஏ, டி, இ, கே என இருவகை உயிர்ச் சத்துகள் உள்ளன.

தாதுப்புகள்

வெண் பன்றிகளின் உற்பத்தித் திறன், உடல் வளர்ச்சி மற்றும் இன விருத்திக்குத் தாதுப்புகள் மிகவும் அவசியம். கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், குளோரின், சல்பர், மக்னீசியம் போன்றவை அதிகமாகத் தேவைப்படும் தாதுப்புகள் ஆகும். இரும்பு, துத்தநாகம், அயோடின், தாமிரம், மாங்கனீசு, கோபால்ட், செலினியம் போன்றவை, குறைவாகத் தேவைப்படும் தாதுப்புகள்.

தீவனம்

பன்றித் தீவனத்தில் பெரும்பகுதி அடர் தீவனமாகும். இதில், மக்காச்சோளம், தவிடு, புண்ணாக்கு, மீன் தூள், தாதுப்புக் கலவை போன்றவை அடங்கும். தீவனச் செலவைக் குறைக்கும் நோக்கில் பல பண்ணையாளர்கள், மலிவாக, எளிதாகக் கிடைக்கும் தீவனத்தையே அளிக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, சமையல் கழிவு, விடுதி மற்றும் உணவகக் கழிவு, காய்கறிக் கழிவு போன்றவற்றை இடுகின்றனர். இதனால் தீவனச் செலவு குறையும். ஆனால், பன்றிகளுக்குத் தாதுப்பு மற்றும் பிற சத்துகள் பற்றாக்குறை ஏற்படக் கூடும்.

கழிவுகளை நன்கு பதப்படுத்தி, சுத்தம் செய்து அளிக்க வேண்டும். மேலும், தீவனக் கலவையுடன் தாதுப்புக் கலவையைப் பன்றிகளுக்கு அளிப்பது அவசியம். இந்தக் கழிவுகளுடன் 50 சதம் அடர் தீவனத்தைக் கட்டாயம் தர வேண்டும். கால்நடை மருந்துக் கடைகளில் தாதுப்புக் கலவையை வாங்கலாம்.

பெரிய பண்ணையாளர்கள் தாதுப்புக் கலவையைச் சொந்தமாகவே தயாரித்துக் கொள்ளலாம். எலும்புத்தூள் 35 பாகம், சுண்ணாம்புத் தூள் 40 பாகம், நுண் தாதுப்புக் கலவை 5 பாகம், சாதா உப்பு 20 பாகம் வீதம் சேர்த்து, தாதுப்புக் கலவையைத் தயாரித்துக் கொள்ளலாம்.

சரிவிகிதத் தீவனம்

பன்றிகளுக்கான அடர் தீவனத்தைக் கடைகளில் வாங்கலாம். அல்லது சொந்தமாகத் தயாரித்துக் கொள்ளலாம். அடர் தீவன மூலப்பொருள்களைச் சந்தையில் அல்லது பெரிய கடைகளில் வாங்கிக் குருணையாக அரைக்க வேண்டும்.

பிறகு, இந்தக் குருணையில் வைட்டமின்கள், தாதுப்புகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளைச் சேர்த்துப் பன்றிகளுக்கு அளிக்க வேண்டும். அரைத்த மூலப்பொருள்களைச் சரியாகக் கலப்பதற்கு இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். அரவை இயந்திரம், கலவை இயந்திரத்தை வாங்கி வைத்துக் கொண்டு, பண்ணையாளர்கள் சொந்தமாகத் தீவனத்தைத் தயாரித்துக் கொள்ளலாம்.

குச்சித் தீவனம்

இப்போது பெரும்பாலும் பன்றிகளுக்குக் குச்சி வடிவத் தீவனம் தரப்படுகிறது. இத்தீவனத்தை எளிதாகக் கையாளலாம். இதனால், அடர் தீவனம் கீழே கொட்டி வீணாதல் தவிர்க்கப்படும். எனவே, அரவை இயந்திரம், கலவை இயந்திரத்துடன், குச்சி வடிவத் தீவனத் தயாரிப்பு இயந்திரத்தை வாங்கி வைத்துக் கொண்டு, சொந்தமாக இந்தத் தீவனத்தைத் தயாரிக்கலாம். ஒரு மணி நேரத்தில் 2-5 டன் குச்சித் தீவனத்தைத் தயாரிக்கும் இயந்திரங்கள் சந்தையில் கிடைக்கும். இதன் விலை 5-10 இலட்ச ரூபாய் இருக்கும்.

அடர் தீவன மாதிரிகள்

14-56 நாள் குட்டிகளுக்கான தீவனம்: மக்காச்சோளம் 50 சதம், கடலைப் புண்ணாக்கு 25 சதம், கோதுமைத் தவிடு 12.5 சதம், மீன் தூள் 10 சதம், தாதுப்புக் கலவை 2 சதம், உப்பு 0.5 சதம் வீதம் இருக்க வேண்டும். லாக்டிக் அமிலத்தால் நொதிக்கப்பட்ட திரவ உணவைக் குட்டிகளுக்கு அளித்தால், அவற்றை, குடல் நுண்ணுயிர்களான சால்மனெல்லா மற்றும் ஈகோலி தாக்கத்தில் இருந்து பாதுகாக்கலாம்.

மேலும், பன்றிக் குட்டிகளின் முதல் ஏழு நாள் வளர்ச்சி பாதிக்காமல் இருக்க, தானியவகைத் தீவனத்தை, நீராவியில் சூடேற்றி வழங்க வேண்டும். இதனால், குட்டிகள் நலமாக இருப்பதுடன், அவற்றின் வளர்ச்சி தினமும் 40 சதம் அதிகமாகும்.

10-60 கிலோ எடையுள்ள பன்றிகளுக்கான தீவனம்: மாதிரி1: மக்காச்சோளம் 50 சதம், கடலைப் புண்ணாக்கு 18 சதம், வெல்லப்பாகு 5 சதம், கோதுமைத் தவிடு 20 சதம், மீன் தூள் 5 சதம், தாதுப்புக் கலவை 1.5 சதம், உப்பு 0.5 சதம் வீதம் சேர்க்க வேண்டும்.

மாதிரி2: மக்காச்சோளம் 25 சதம், கடலைப் புண்ணாக்கு 17 சதம், கோதுமைத் தவிடு 10 சதம், மீன் தூள் 10 சதம், தாதுப்புக் கலவை 1.5 சதம், உப்பு 0.5 சதம், கிழங்குத் தவிடு 15 சதம், அரிசித் தவிடு 16 சதம் வீதம் சேர்க்க வேண்டும். வளரும் மற்றும் வளர்ந்த பன்றிகளின் தீவனத்தில் 18 சதம் புரதம் இருக்க வேண்டும்.

வளரும் பன்றிகளின் தீவன மாற்றுத் திறனைக் கூட்ட, தீவனத்துடன் கரும்புச்சாற்றைக் கலந்து இடலாம். இதனால், கருவுறவும் கருவுற்றும் இருக்கும் பன்றிகளின் கருவுறும் திறனும், பிறக்கும் குட்டிகளின் எடையும் கூடும்.

புரதம் மற்றும் எரிபொருள் நிறைந்த சோயா உணவை வேக வைத்துக் கொடுத்தால், வளரும் பன்றிகளின் உடல் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இவ்வுணவில் 8.5 சதம் லினோலிக் அமிலம் என்னும் கொழுப்பு இருப்பது, பன்றிகளின் உணவில் அவசியமானது. சோயா உணவை வேக வைப்பது, காய வைப்பது அல்லது வறுப்பதன் மூலம், இதிலுள்ள பல்வேறு சத்து எதிர்க் காரணிகள் அழிக்கப்படும். எனவே, பன்றிகளுக்குச் சோயா உணவு அவசியமாகும்.

50 கிலோ முதல் விற்பனை வயது வரையிலான பன்றித் தீவனம்: மக்காச்சோளம் 45 சதம், கடலைப் புண்ணாக்கு 20 சதம், வெல்லப்பாகு 5 சதம், கோதுமைத் தவிடு 25 சதம், மீன் தூள் 3 சதம், தாதுப்புக் கலவை 1.5 சதம், உப்பு 0.5 சதம் வீதம் கலக்க வேண்டும். ஒவ்வொரு 100 கிலோ தீவனக் கலவைக்கும் 20 கிராம் வைட்டமின் பொடியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். தீவனம் வீணாகாமல் இருக்க, ஒருநாள் தீவனத்தை 2-3 முறை பிரித்துத் தர வேண்டும்.

பன்றிகளின் வயதும் அடர் தீவன அளவும்

முதல் நான்கு வாரங்கள் தாய்ப்பாலை மட்டுமே தர வேண்டும். அடுத்து, எட்டாம் வாரம் வரை, 10-15 கிலோ எடையுள்ள பன்றிக்கு, தினமும் 0.5 கிலோ அடர் தீவனம் தரப்பட வேண்டும்.

அடுத்து, 12 ஆம் வாரம் வரை, 15-25 கிலோ எடையுள்ள பன்றிக்கு, தினமும் 1 கிலோ அடர் தீவனம் தரப்பட வேண்டும்.

அடுத்து, 16 வாரம் வரை, 30-40 கிலோ எடையுள்ள பன்றிக்கு, 1.5 கிலோ அடர் தீவனம் தரப்பட வேண்டும்.

அடுத்து, 20 வாரம் வரை, 40-50 கிலோ எடையுள்ள பன்றிக்கு, 2 கிலோ அடர் தீவனம் தரப்பட வேண்டும்.

அடுத்து, 24 வாரம் வரை, 50-65 கிலோ எடையுள்ள பன்றிக்கு, 2.5 கிலோ அடர் தீவனம் தரப்பட வேண்டும்.

அடுத்து, 32 வாரம் வரை, 65-80 கிலோ உடல் எடையுள்ள பன்றிக்கு, 3 கிலோ அடர் தீவனம் தரப்பட வேண்டும்.

கிடாப்பன்றி, சினைப்பன்றி மற்றும் தாய்ப்பன்றிக்கு, தினமும் 3-4 கிலோ தீவனம் தரப்பட வேண்டும்.

இனப்பெருக்கக் காலத் தீவனம்

பெண் பன்றிகள் நன்கு கருத்தரித்துக் குட்டிகளை ஈன வேண்டுமாயின், அவற்றுக்குத் தரமான தீவனத்தை அளிக்க வேண்டும். பன்றிகள் பருவத்துக்கு வருதல், சினை முட்டைகள் வெளிவருதல் மற்றும் நன்கு கருத்தரித்தலில் அடர் தீவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

எனவே, பெண் பன்றிகளில் இனப்பெருக்கக் காலம் தொடங்குவதற்கு 15 நாட்கள் முன்பாகவே அவற்றுக்கு, புரதம், தாதுப்பு, உயிர்ச் சத்துகள் நிறைந்த தீவனத்தை அளிக்க வேண்டும். இந்தத் தீவனத்தை, பெண் பன்றியின் உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 20-25 கிராம் வீதம் தினமும் அளிக்க வேண்டும்.

ஈற்றுக்கால மற்றும் ஈன்ற பன்றிகளுக்கான தீவனம்

பன்றி ஈனும் காலத்தில் அதன் தீவனத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ஈற்றுக்கு ஐந்து நாட்கள் இருக்கும் போதே, அளிக்கும் தீவனத்தைப் பாதியாகக் குறைக்க வேண்டும். தாய்ப்பன்றி கழிவுப் பொருளை எளிதாக வெளியேற்ற, வெதுவெதுப்பான நீரில் கலந்த கோதுமைத் தவிட்டைத் தீவனத்தில் கலந்து கொடுக்க வேண்டும்.

இந்த நேரத்தில் சுத்தமான குடிநீரைத் தர வேண்டும். ஈனும் நாளில் தீவனம் வழங்கத் தேவையில்லை. பிறகு, தினமும் 200-300 கிராம் அடர் தீவனத்தைத் தர வேண்டும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் பங்கு

பன்றிகள் நலமாக வாழ, அவற்றின் தீவனத்தில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் தூள், லின்சீட் எண்ணெய்யைச் சேர்த்து அளிக்க வேண்டும். பன்றிகளின் முடிவுக்கால மற்றும் வளரும் காலத் தீவனத்தில், மீன் தூளை அளித்தால், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பன்றி இறைச்சியில் அதிகமாக இருக்கும். ஒரு கிலோ தீவனத்தில் 60 கிராம் லின்சீட் விதைகள் வீதம் கலந்து கொடுக்கலாம்.

குடிநீர்

தீவனத்தைப் போலவே, வெண் பன்றிகளுக்குக் குடிநீரும் அவசியமாகும். பன்றிகள் இயங்கவும், உடல் வெப்பநிலை சீராக இருக்கவும் குடிநீர் மிகவும் தேவை. பன்றிகளின் எடை, தட்பவெப்ப நிலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப, குடிநீரின் தேவை மாறுபடும். 8 வாரம் வரை 3 லிட்டர், 20 வாரம் வரை 7 லிட்டர், 28 வாரம் வரை 8 லிட்டர், சினைப் பன்றிக்கு 12-15 லிட்டர், தாய்ப்பன்றிக்கு 25-30 லிட்டர், கிடாய்ப் பன்றிக்கு 20 லிட்டர் நீர் தினமும் தேவைப்படும்.

உணவகக் கழிவுகள்

உணவகக் கழிவு, மனிதர்கள் மிச்சம் வைத்த உணவு, காய்கறிகள், இறைச்சி, மீன் துண்டுகள் போன்றவையே, பெரும்பாலான பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்குத் தரப்படுகின்றன. இந்தக் கழிவுகள் மூலம், தீவனச் செலவைப் பெருமளவில் கட்டுப்படுத்தலாம்.

இறைச்சிக்காக வளர்க்கப்படும் பன்றிகளுக்கு இவற்றை அளிக்கலாம். இப்படி வளர்க்கப்படும் பன்றிகளில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும். எனவே, இனப்பெருக்கப் பன்றிகளுக்கு இந்தக் கழிவுகளை அதிகமாக இட்டால், உடல் பெருத்து இனவிருத்திச் சிக்கல்கள் ஏற்படலாம்.

இந்தக் கழிவுகளை அன்றாடம் பெற்றுச் சுத்தம் செய்து வழங்க வேண்டும். சில நாட்கள் வைத்திருந்து வழங்கினால், நுண் கிருமிகள் பெருகிக் கெட்ட வாடை வீசுவதுடன், நோய்கள் உண்டாகும் வாய்ப்பும் ஏற்படும். ஒரு பன்றிக்கு ஒருநாளில் 4 கிலோ உணவகக் கழிவை வழங்கலாம்.

மேலும், காய்கறிக் கடைகளில் கிடைக்கும், முட்டைக்கோசு, முள்ளங்கி, கேரட் மற்றும் தழைகளைச் சேகரித்து நீரில் கொதிக்க வைத்துப் பன்றிகளுக்கு இடலாம். இது, கழிவுகள் மூலம் பன்றிகளுக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்க உதவும்.

வழக்கத்தில் இல்லாத தீவனங்கள்

அடர் தீவனச் செலவைக் குறப்பதற்காக, வழக்கத்தில் இல்லாத பொருள்களை வாங்கிப் பன்றிகளுக்கு இடலாம். புண்ணாக்கு, பால் நீக்கப்பட்ட கொழுப்புப் பொருள்கள் கால்நடை இறைச்சிக் கழிவுகள் போன்றவற்றை, வழக்கமான தீவனத்தில் 30-40 சதம் சேர்த்து அளிக்கலாம். மக்காச் சோளத்துக்குப் பதிலாக, மரவள்ளிக் கிழங்கு மாவை 40-50 சதம் வரையில் சேர்த்து அளிக்கலாம்.

மரவள்ளித் திப்பி, மாங்கொட்டை, இலவம் பஞ்சு விதைப் புண்ணாக்குப் போன்றவற்றையும் தீவனத்தில் கலந்து தரலாம். மரவள்ளிக் கிழங்குத் திப்பி 15-20 சதம், ரப்பர் விதைப் புண்ணாக்கு 15 சதம், வறுத்த புளியவிதை 20 சதம், தேயிலைக்கழிவு 20 சதம், இறைச்சிக் கழிவு 20 சதம் வீதம் பன்றியின் உணவில் சேர்க்கலாம்.

தீவன ஊக்கிகள்

இறைச்சிக்காக வளர்க்கப்படும் பன்றிகளில், தீவன ஊக்கிகளின் பங்கு முக்கியமானது. இறைச்சிப் பன்றித் தீவனத்தில் ஒரு டன்னுக்கு 1-2 கிலோ பீடாபின் என்னும் தீவன ஊக்கியைக் கலந்து கொடுத்தால், பன்றிகளின் முதுகில் கொழுப்புப் படிவதைத் தவிர்க்கலாம். இது, தீவன மாற்றுத் திறனிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

பன்றிகளை நோய்கள் தாக்காமல் இருக்க, ஆக்சிடெட்ரா சைக்ளின், சல்பனமைடு, விர்ஜினியாமைசின், நைட்ரோசின் போன்ற எதிர் உயிர் மருந்துகளை அளிக்கலாம். மேலும், பன்றிகளின் உற்பத்தியைப் பெருக்க, நுண்ணுயிரி நொதிகள் பன்றித் தீவனத்தில் அவசியம் இருக்க வேண்டும். இந்த நொதிகள் பன்றிகளில், செரிமான ஆற்றலையும், தீவன மாற்றுத் திறனையும் அதிகமாக்கும்.

காய்ந்த நொதிப் பொடிகளைத் தீவனத்தில் கலந்து அல்லது தீவன மூலப்பொருள்களில் ஊட்டமேற்றி வழங்கலாம். சிறிய மற்றும் வளரும் பன்றிகளில் ஏற்படும் சத்துக் குறையைத் தவிர்க்க, அமினோ அமிலங்களைத் தீவனத்தில் கலந்து தரலாம்.


முனைவர் பா.குமாரவேல், முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!