எண்ணெய் வித்துப் பயிர்களில் குறிப்பிடத்தக்கது சூரியகாந்தி. இது, பெரும்பகுதி மக்களின் சமையல் எண்ணெய்த் தேவையைச் சரி செய்கிறது. இதன் சாகுபடி உத்திகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
மண்வகை
சூரியகாந்தியை, நல்ல வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளிலும் பயிர் செய்யலாம். ஆயினும், கரிசல் மண்ணில் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்.
விதைக்கும் பருவம்
சூரியகாந்தியை, மானாவாரியில் பயிரிட, ஜூன் ஜூலை மற்றும் அக்டோபர் நவம்பர் மாதங்கள் ஏற்றவை. இறவையில் பயிரிட, டிசம்பர் ஜனவரி மற்றும் ஏப்ரல் மே மாதங்கள் ஏற்றவை.
நிலம் தயாரித்தல்
நிலம் புழுதியாகும் வரையில், இரும்புக் கலப்பை அல்லது நாட்டுக் கலப்பையால் உழவு செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன், எக்டருக்கு 12.5 டன் தொழுயெரு அல்லது கம்போஸ்ட் மற்றும் 5 டன் கோழியெருவை இட வேண்டும். ஆடுகளைப் பட்டி போட்டு அடைத்து, அவற்றின் கழிவுகளை உரமாகப் பெறலாம்.
தக்கைப்பூண்டு, மணிலா அகத்தி, சித்தகத்தி, சணப்பு மற்றும் கொளுஞ்சியைப் பயிரிட்டு, 45 நாட்களில் மடக்கி உழுது நன்கு மட்கச் செய்து, நிலத்துக்கு உரமாக ஆக்கலாம். புங்கம், வேம்பு, எருக்கு, கிளைரிசிடியா, சவுண்டல் தழைகளை எக்டருக்கு 6.2.5 டன் வீதம் இட்டு உழவு செய்யலாம். இப்படி, இயற்கை உரங்களை இடுவதன் மூலம், மண்ணின் அங்ககச் சத்து, மண்ணின் கட்டமைப்பு மற்றும் நீரைத் தேக்கும் தன்மை கூடும்.
தாவரக் கழிவுகள் மற்றும் கரும்புத் தோகையை மட்கச் செய்து இயற்கை உரமாக இட்டு, நிலத்தை வளமாக்கலாம். ஒரு லிட்டர் மாட்டுக் கோமியம், 1 கிலோ மாட்டுச்சாணம் மற்றும் 250 கிராம் பனை வெல்லம் கலந்த கலவையில், 10 லிட்டர் நீரைச் சேர்த்து, 24 மணி நேரம் வைத்திருந்தால், அமிர்தக் கரைசல் தயாராகி விடும். இதை, ஒரு லிட்டர் கரைசலுக்குப் பத்து லிட்டர் நீர் வீதம் பாசன நீரில் கலந்து விடலாம். பாசனம் செய்யும் போதெல்லாம் இம்முறையைப் பின்பற்றலாம். இதன் மூலம், பயிருக்குத் தேவையான தழைச்சத்தும் பூச்சிக் கட்டுப்பாடும் பெறலாம்.
ஆமணக்கு, புங்கம், வேம்பு போன்ற, கால்நடை உணவாகப் பயன்படாத புண்ணாக்கு வகைகளையும், எக்டருக்கு 1.25 டன் வீதம் இடலாம். மேலும், 3 சதவீதப் பஞ்சகவ்யா கரைசலில் விதை நேர்த்தி செய்து விதைத்தால் அல்லது பயிர்கள் பூக்கும் போதும், அடுத்து 15 நாட்கள் கழித்தும், பயிர்களில் நன்கு படும்படி தெளித்தால், பயிருக்குத் தேவையான சத்துகளைப் பெற முடியும்.
மேலும், விதைகளை விதைப்பதற்கு முன், 10 பொட்டலம் அசோஸ்பயிரில்லம், 10 பொட்டலம் ரைசோபியம், 10 பொட்டலம் பாஸ்போபாக்டீரியாவை எடுத்து, 25 கிலோ மணல் மற்றும் 25 கிலோ தொழுவுரத்தில் கலந்து, நிலத்தில் சீராகத் தூவலாம்.
விதை அளவு
சாதா இரகங்கள் எனில், எக்டருக்கு 6-7 கிலோ விதைகளும், ஒட்டு இரகங்கள் எனில், எக்டருக்கு 4-5 கிலோ விதைகளும் தேவைப்படும். சாதா இரகங்களை 45×30 செ.மீ. இடைவெளியிலும், ஒட்டு இரகங்களை 60×30 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும்.
விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் உயிரி பூசணக்கொல்லி வீதம் எடுத்து, விதைகளைக் கலந்து நேர்த்தி செய்யலாம். விதைகளை நேர்த்தி செய்த சிறிது நேரம் கழித்து, 3 பொட்டலம் அசோஸ்பயிரில்லம் மற்றும் 3 பொட்டலம் ரைசோபியம் மற்றும் 3 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா அல்லது 6 பொட்டலம் அசோபாசில் கலந்து, அரைமணி நேரம் கழித்து விதைக்கலாம்.
களைக் கட்டுப்பாடு
களை விதைக் கலப்பில்லாத தூய விதைகளை விதைக்க வேண்டும். நன்கு மட்கிய சாண எருவை அல்லது சாண எரிவாயுத் தயாரிப்பில் பயன்படுத்திய சாணத்தை எருவாக இட்டால், சாணத்தில் உள்ள களை விதைகளின் முளைப்புத் திறனைக் குறைக்கலாம். கோடையுழவு செய்தால், களைகள் முளைப்பதையும், அவற்றில் இருந்து விதைகள் உருவாவதையும் தடுக்கலாம்.
மேலும், அறுகு, கோரை மற்றும் இதர களைகளின் மேல்பாகம் மீண்டும் மீண்டும் வெட்டப்படுவதாலும், தண்டுகள், கிழங்குகள் போன்றவை மண்ணுக்கு மேலே கொண்டு வரப்படுவதாலும், வெய்யிலில் காய்ந்து அழியும். போதிய எண்ணிக்கையில் பயிர்களைப் பராமரித்தும், களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
நிலப்போர்வை மூலமும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். களைகள் வளர்வதைக் குறைக்க, தட்டைப்பயறு மற்றும் சோயாபீன்சை ஊடுபயிராக இடலாம். அறுவடை செய்த சீரகச் செடிகளை நிலத்தில் பரப்பி மட்கச் செய்தால், அறுகம்புல் கட்டுப்படும். போட்டிச் செடிகளை நிலத்தில் வளர்ப்பதன் மூலமும் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
பயிர்ச்சுழற்சி செய்வதும், களைகளைக் குறைக்க உதவும். உயிரியல் முறைகளான உயிர்த்தாவரம், உயிர்க் கொல்லிகள் மற்றும் களைகளைச் சாப்பிடும் பூச்சிகள் மூலமும் களை வளர்ச்சியைத் தடுக்கலாம். பாசன வாய்க்கால்களைச் சுத்தமாக வைப்பதன் மூலம், பெரும்பாலான களை விதைகள் நிலத்துக்குள் வருவதைத் தடுக்கலாம். விதைத்த 15 மற்றும் 30 நாட்களில் களைக்கொத்து மூலம் களையெடுக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்
மண்ணின் தன்மை மற்றும் பெறப்படும் மழையைப் பொறுத்து நீர்ப் பாய்ச்ச வேண்டும். மொட்டுகள் பிடிக்கும் போது 4 முறை, பூக்கள் உருவாகும் போது இரண்டு முறை, விதைகள் உருவாகும் போது இரண்டு முறையென, மொத்தம் 7-8 முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
மணிகள் அதிகரித்தல்
சூரியகாந்தி பூக்கும் போது, எக்டருக்கு மூன்று தேனீப் பெட்டிகள் வீதம் வைத்துத் தேனீக்களை வளர்த்தால், மகரந்தச் சேர்க்கை அதிகரித்து, பூக்களில் நிறைய மணிகள் உருவாகும்.
பூச்சி நிர்வாகம்
சூரியகாந்திச் செடிகளைத் தாக்கும், தத்துப்பூச்சி, இலைப்பேன், அசுவினி, வெள்ளை ஈ போன்ற சாறு உறிஞ்சிகளைக் கட்டுப்படுத்த, பொறி வண்டுகள், மான்டின்டுகள் ஆகிய இயற்கை எதிரிகளைப் பெருக்கலாம். காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த, புழுக்களைக் கைகளால் சேகரித்து அழிக்கலாம். வெட்டுப்புழு மற்றும் பூத்துளைப்பானைக் கட்டுப்படுத்த, கிரைசோபிஸ் கார்னியா, மெனோசிலஸ் செக்மாகுலேடா போன்ற இயற்கை எதிரிகள் மற்றும் பிரக்கான் டிரைக்கோ கிராம்மா போன்ற ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தலாம்.
ஹீலியாத்திஸ் என்.பி.வி நச்சுயிரியை எக்டருக்கு 250 எல்.ஈ, அளவில் பயன்படுத்தலாம். ஐந்து சதவீத வேப்பங்கொட்டைச் சாற்றைத் தெளிக்கலாம். ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் பி.டி. வீதம் எடுத்துத் தெளிக்கலாம்.
கோடையுழவு செய்வதன் மூலம், பூச்சிகளின் கூட்டுப் புழுக்களை வெளியேற்றி, வெய்யில் மற்றும் பறவைகள் மூலம் அழிக்கலாம். இளம் புழுக்கள் மற்றும் முட்டைகளைக் கையால் சேகரித்து அழிக்கலாம். சூரியகாந்தியில் ஊடுபயிராகப் பருத்தியை விதைத்தால், தத்துப்பூச்சி மற்றும் இலைப்பேன்களைக் குறைக்கலாம். துவரையை ஊடுபயிராக இட்டால், வெட்டுப்புழு மற்றும் பூத்துளைப்பான் கட்டுப்படும்.
நோய் நிர்வாகம்
கோடையுழவு செய்து, மண் மூலம் பரவும், வேரழுகல் மற்றும் தண்டழுகல் நோயை உருவாக்கும் கிருமிகளை அழிக்கலாம். நோயெதிர்ப்புத் திறனுள்ள இரகங்களைப் பயிரிடலாம். சற்று நேரம் தேங்கி நிற்கும் அளவில் பாசனம் செய்வதன் மூலம், நோய்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். எக்டருக்கு 500 கிலோ வீதம், ஆமணக்கு அல்லது கடுகு அல்லது வேப்பம் புண்ணாக்கை எடுத்து நிலத்தில் இட்டு, தண்டழுகல் மற்றும் வேரழுகலைக் கட்டுப்படுத்தலாம். தொழுயெரு, தழையெருவை இட்டால், நோய்க்காரணி பூசணத்தைக் குறைத்து, மண் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
டிரைக்கோடெர்மா உயிர்ப் பூசணக்கொல்லியை ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் வீதம் கலந்து நேர்த்தி செய்து விதைத்தால், பெரும்பாலான நோய்களிலிருந்து சூரியகாந்திப் பயிரைக் காக்கலாம். கரியழுகல் நோயைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ் வீதம் எடுத்து, மட்கிய 50 கிலோ தொழுவுரம் அல்லது மணலில் கலந்து, விதைத்த 30 நாட்களுக்குப் பின் மண்ணில் இடலாம்.
நெக்ரோசிஸ் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த, சூரியகாந்தியை விதைப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன், சோளப்பயிரை ஓரப்பயிராக வளர்க்கலாம். சூரியகாந்திப் பயிரைத் தாக்கும் ஸ்கிளிரோசியம் என்னும் உறையழுகல் நோயைக் கட்டுப்படுத்த, டிரைக்கோ டெர்மா ஹார்சியானம் என்னும் பூசணத்தை, இராகி அல்லது வைக்கோலில் வளர்த்து நிலத்தில் கலக்கலாம். மேலும், ஓட்ஸ் வைக்கோல் மற்றும் ஆமணக்குப் புண்ணாக்கு அல்லது வேப்பம் புண்ணாக்கை நிலத்தில் இடுவதன் மூலம், இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
ஸ்கிளிரோட்டினியா ஸ்கிளிரோடியோரம் என்னும் பூசணத்தால் ஏற்படும் வேரழுகல், தண்டழுகல், பூ அழுகல் மற்றும் வாடல் நோய்களைக் கட்டுப்படுத்த, கோனியோதைரியம் மினிடன்ஸ் மற்றும் டிரைக்கோடெர்மாவை, விதைகளில் கலந்தோ அல்லது மண்ணிலோ இடலாம். விதைகளை சூடோமோனாஸ் ப்ளோரசன்சில் நேர்த்தி செய்து விதைத்தால், சூரியகாந்திப் பயிரின் இளம் பருவத்தில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
நூற்புழுக் கட்டுப்பாடு
கரும்பாலைக்கழிவு, தேயிலைக்கழிவு, தக்கைப்பூண்டு, சணப்பு, கொளுஞ்சி மற்றும் வேம்பு, ஆமணக்குப் புண்ணாக்கை இட்டால், நூற்புழுக்கள் பெருமளவில் கட்டுப்படும். விதைப்பதற்கு முன் எக்டருக்கு 2.5 கிலோ வீதம், சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடியை நிலத்தில் இடலாம். மேலும், மைக்கோரைசா பூசணத்தையும் நிலத்தில் இடலாம்.
அறுவடை
பூவின் அடிப்பகுதி இதழ்கள் மற்றும் பின்புறம் மஞ்சளாக மாறுவதும், விதைகள் கடினத் தன்மையில் இருப்பதும் அறுவடைக்கான அறிகுறிகள் ஆகும். மானாவாரி சாகுபடியில் எக்டருக்கு 900-1,500 கிலோ, இறவை சாகுபடியில் எக்டருக்கு 1,500-2,500 கிலோ சூரியகாந்தி விதைகள் மகசூலாகக் கிடைக்கும்.
முனைவர் ந.சதீஷ்குமார், முனைவர் ப.துக்கையண்ணன், முனைவர் இரா.நாகேஸ்வரி, முனைவர் ஆ.அழகேசன்.
சந்தேகமா? கேளுங்கள்!