கத்தரிக்காய், சமையலில் பயன்படும் முக்கியக் காய்கறியாகும். கத்தரிச் செடியின் உயிரியல் பெயர் சொலனும் மெலோங்கெனா (Solanum melongena) என்பதாகும். இது, பூக்கும் செடி கொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே என்னும் குடும்பத்தில் அடங்கும் செடி வகை. சொலானனேசியே குடும்பத்தில், தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற பிறவும் அடங்கும். கத்தரிச்செடி 40-150 செ.மீ. உயரம் வளரும். இதன் தாயகம், தென்னிந்தியா மற்றும் இலங்கை ஆகும். ஆங்கிலேயரும் ஐரோப்பியரும் இதனை 16-17-ஆம் நூற்றாண்டில் தான் அறிந்து கொண்டனர்.
நிலத்தேர்வு
விதை உற்பத்திக்கான நிலம், தான் தோன்றிப் பயிர் அற்றதாக இருக்க வேண்டும். அதாவது, கடந்த பருவத்தில் பிற பயிரையோ அல்லது அதே இரகப் பயிரையோ சாகுபடி செய்திருக்கக் கூடாது. அப்படிச் செய்திருந்தால், சான்றளிப்புத் துறையால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருக்க வேண்டும்.
பயிர் விலகு தூரம்
விதை உற்பத்திப் பயிருள்ள நிலம், பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரகம் சாகுபடியில் உள்ள நிலத்திலிருந்து, 100 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும். விதை உற்பத்திக்குச் சிறந்த பருவம், ஜூன் – செப்டம்பர் காலமாகும். பயிர் இடைவெளி 60×45 செ.மீ. இருக்க வேண்டும்.
வளமான நாற்றுகளைப் பெறும் முறைகள்
வீரியமுள்ள நாற்றுகளை நட்டால் தான், அந்த நாற்றுகள் நிலத்தில் இட்ட உரங்களை நன்றாகப் பயன்படுத்தி, நன்றாகத் தழைத்து, பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல்களை எதிர்த்து வளரும். நடப்பட்ட நாற்றுகள் வீணாகாமல் தழைத்து வரும். எனவே, வீரியமான நாற்றுகள் கிடைக்க, நாற்றங்கால் பராமரிப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
நாற்றங்கால் அமைப்பு: தரமான விதைகளைக் கொண்டு நாற்றங்காலை அமைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நடவுக்கான நாற்றுகளைப் பெற, 150 கிராம் விதைகள் தேவைப்படும். இந்த விதைகளை விதைக்க, மூன்று சென்ட் நிலம் தேவைப்படும். இந்த நிலத்தில், சென்ட்டுக்கு 200 கிலோ மட்கிய தொழுவுரம் அல்லது கம்போஸ்ட் வீதம் இட்டு, மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும்.
அடுத்து, 10 செ.மீ. இடைவெளியில் கோடுகளைக் கிழித்து, விதைகளைப் பரவலாக விதைத்து, மணல் அல்லது நாற்றங்கால் மண் மூலம் மூடி விட வேண்டும். அதன் பிறகு, மேட்டுப் பாத்திகள் நன்கு மூழ்கும் அளவில் நீரைப் பாய்ச்ச வேண்டும். நாற்றுகள் முளைத்த பிறகு, வாரம் ஒருமுறை நீரைப் பாய்ச்ச வேண்டும்.
நாற்றங்காலுக்கு உரம்: வளரும் குழந்தைகளுக்கு ஊட்டம் எவ்வளவு அவசியமோ அதைப்போல, நாற்றங்காலுக்கும் உரம் அவசியம். எனவே, ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு இரண்டு கிலோ டி.ஏ.பி. வீதம் இட்டால், நாற்றுகள் நன்றாக வளரும். மேலும், நாற்றுகளைப் பறிக்கும் போது, வேர் அறுபடாமல் எளிதாக வரும். டி.ஏ.பி உரம் இல்லா விட்டால், 6 கிலோ யூரியா மற்றும் 12 கிலோ சூப்பர் பாஸ்பேட்டைச் சேர்த்து இடலாம். வேர் அறுபடாத நாற்றுகள் எளிதில் நிலத்தில் பிடிப்புக் கொள்ளும்.
நாற்றின் வயது
செடிகள் செழித்து வளர்வதில் நாற்றின் வயது முக்கியப் பங்கு வகிக்கிறது. வயது குறைந்த நாற்றையோ அல்லது வயது முதிர்ந்த நாற்றையோ நட்டால் மகசூல் குறைகிறது. எனவே, 30-35 நாள் வயதுள்ள கத்தரி நாற்றுகளை நட வேண்டும்.
நடவு நிலம் தயாரிப்பு
நிலத்தை, 2-3 முறை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்கு 20 வண்டி மட்கிய தொழுவுரத்தை இட வேண்டும். அதற்குப் பிறகு, 75 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும். பிறகு, பார்களின் கீழ்ப்பகுதியில், ஒரு ஏக்கருக்குத் தேவையான 44 கிலோ யூரியா, 180 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 48 கிலோ பொட்டாசைக் கலந்து அடியுரமாக இட வேண்டும். இப்படி அடியுரம் இடுவது, செடிகளின் முன்பருவ வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். செடிகள் நன்கு துளிர்த்து வளரும்.
நடவு
வீரியமான நாற்றுகளை மட்டுமே நட வேண்டும். பார்கள் முழுவதும் நன்கு நனையும் அளவில் நீரைப் பாய்ச்சி, செடிக்குச் செடி 60 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். நட்ட மூன்றாம் நாள் மறுபடியும் நீர்ப் பாய்ச்ச வேண்டும். இது உயிர்நீர் எனப்படும். இதனால், நட்ட நாற்றுகள் நன்கு வேர் விட்டுத் துளிர்க்கும்.
களைக் கட்டுப்பாடு
விதைக்காகக் கத்தரியைப் பயிரிடும் போது, தொடக்கத்தில் இருந்தே களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு, நடவு முடிந்து மூன்றாம் நாளுக்குள், ஏக்கருக்கு 400 மி.லி. பென்டிமெத்தலின் களைக்கொல்லியை, நாப்சாக் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மேலும், 35-40 நாட்களில் களையெடுப்பது அவசியம்.
மேலுரம்
விதைப்பயிர், காய்கறிப் பயிரில் இருந்து மாறுபடுவதால், விதைப் பயிருக்கு மேலுரம் இடுவது மிகவும் அவசியம். ஏக்கருக்கு 44 கிலோ யூரியாவை, பூப்பதற்கு முன் மேலுரமாக இட வேண்டும். ஏனெனில், மேலுரம் இடுவதால், செடிகள் வாளிப்பாக வளர்ந்து, நன்கு காய்த்து முதிர்ந்து, தரமான விதைகள் கிடைக்கும்.
பயிர்ப் பாதுகாப்பு
அவ்வப்போது தென்படும் பூச்சித் தாக்குதல்கள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, முறையான பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கலவன்களை நீக்குதல்
சாதாரணமாக, கத்தரி சாகுபடி நிலத்தில், சில செடிகள் உயரமாகவும், சில செடிகள் படர்ந்தும் வளர்ந்திருப்பதைக் காணலாம். அவை, ஒரே இரகத்தைச் சேர்ந்த பயிராக இருந்திருந்தால் அந்த நிலத்தில் வேறுபாடுகள் எப்படி வந்திருக்க முடியும்? இது, விதை உற்பத்திக்கான கத்தரி நிலத்தில் வேறு இனக்கலப்பு உள்ளதையே காட்டுகிறது. இதனால், உற்பத்தி செய்யும் கத்தரி இரகத்தின் இனத்தூய்மை வெகுவாகப் பாதிக்கப்படுவதால், அந்த நிலம், விதை உற்பத்திக்கே தகுதியற்றதாகி விடுகிறது.
எனவே, விதைக்காகப் பயிரிடப்பட்ட குறிப்பிட்ட கத்தரி இரகத்தின் குணங்களிலிருந்து மாறுபட்ட செடிகளையும், களைகள் மற்றும் நோயுற்ற செடிகளையும், அவை பூக்கும் முன்பே நீக்கி விட வேண்டும். இதன் மூலம், இனக்கலப்பற்ற, தரமான விதைகளைப் பெற முடியும்.
அறுவடை
காய்கள் நன்கு பழுத்து முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிய பிறகு தான் பறிக்க வேண்டும். ஏனெனில், அப்போது தான் விதைகள் நன்கு முதிர்ச்சியடைந்து நல்ல முளைப்புத் திறனுடனும் வீரியமாகவும் இருக்கும். மற்ற பயிர்களைப் போல், ஒரே அறுவடையாக இல்லாமல், கத்தரியில் பலமுறை அறுவடை செய்ய வேண்டியுள்ளது. அவற்றில், முதல் அறுவடை மற்றும் கடைசி இரண்டு அறுவடைகளில் கிடைக்கும் கத்தரிப் பழங்களைத் தவிர்த்து விட்டு, இடைப்பட்ட அறுவடைகளில் கிடைக்கும் நடுத்தரமான மற்றும் பெரிய பழங்களில் உள்ள விதைகளை மட்டுமே எடுக்க வேண்டும். சிறிய பழங்கள் மற்றும் வேற்று இரகப் பழங்களைத் தவிர்த்து விட வேண்டும்.
இரகங்கள்
கோ.1 (1978): இது, கலப்பில்லாச் சந்ததியிலிருந்து தேர்வு செய்யப்பட்டது. இதன் வயது 140-145 நாட்கள் ஆகும். பழமானது, நீளமாக, இளம் பச்சை நிறத்தில் இருக்கும். விதைகள் மென்மையாக இருக்கும். எக்டருக்கு 20-25 டன் பழங்கள் மகசூலாகக் கிடைக்கும்.
கோ.2 (1988): இது, வரிக்கத்தரி என்னும் கலப்பினச் சந்ததியிலிருந்து தேர்வு செய்யப்பட்டது. இதன் வயது 150 நாட்கள் ஆகும். பழங்கள் சிறிதளவு நீள்தன்மை மற்றும் கருநீலக் கோடுகளுடன் இருக்கும். எக்டருக்கு 35 டன் பழங்கள் மகசூலாகக் கிடைக்கும்.
எம்.டி.யூ.1 (1979): இது, கல்லம்பட்டி நாட்டு இரகத்தின் கலப்பிலாச் சந்ததியிலிருந்து தெரிவு செய்யப்பட்டது. இதன் வயது 140 நாட்கள். இந்த இரகம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. பழங்கள், வட்டமாக, பெரியளவில் 200-250 கிராம் இருக்கும். விதைகள் குறைவாக இருக்கும். எக்டருக்கு 30 டன் பழங்கள் மகசூலாகக் கிடைக்கும்.
பி.கே.எம்.1 (1984): இது, புழுதிக் கத்தரி நாட்டு இரகத்தின் தூண்டப்பட்ட சடுதி மாற்ற இரகமாகும். வயது 150-155 நாட்கள். மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது. சிறிய பழங்கள் பச்சை கோடுகளுடன் இருக்கும். எக்டருக்கு 3.5 டன் பழங்கள் மகசூலாகக் கிடைக்கும்.
பி.எல்.ஆர்.1 (1990): இது, நாக்பூர் வகையிலிருந்து மறுதேர்வு செய்யப்பட்டது. இதன் வயது 135-140 நாட்கள். பழங்கள் சிறிதாக, ஊதா நிறத்தில், முட்டை வடிவத்தில், பளபளப்பாக இருக்கும். எக்டருக்கு 25 டன் பழங்கள் மகசூலாகக் கிடைக்கும்.
கே.கே.எம்.1 (1995): இது, குளத்தூர் நாட்டு இரகத்தின் சந்ததியாகும். இதன் வயது 130-135 நாட்கள். பழங்கள் கொத்தாக, முட்டை வடிவத்தில், வெள்ளை நிறத்தில் இருக்கும். ஒரு கொத்தில் 2-4 பழங்கள் இருக்கும். எக்டருக்கு 37 டன் பழங்கள் மகசூலாகக் கிடைக்கும்.
பி.பி.ஐ.1(பி): இது, கருங்கல் நாட்டு இரகத்தின் ஒற்றைச் சந்ததியிலிருந்து தெரிவு செய்யப்பட்டது. இதன் வயது 185 நாட்கள். பழமானது நீளமாக, இளம் பச்சை நிறத்தில், குறைவான விதைகள் மற்றும் கசப்புத்தன்மை கொண்டது. எக்டருக்கு 50 டன் பழங்கள் மகசூலாகக் கிடைக்கும்.
பி.எல்.ஆர்.(பி.ஆர்)2: இது, செவந்தம்பட்டி நாட்டு இரகத்தின் ஒற்றைச் சந்ததியில் இருந்து தேர்வு செய்யப்பட்டது. பழமானது, முட்டை வடிவில், ஊதா நிறத்தில் பளபளப்பாக இருக்கும். எக்டருக்கு 30 டன் பழங்கள் மகசூலாகக் கிடைக்கும்.
த.வே.ப.க.கத்தரி வி.ஆர்.எம்.1: இது, வேலூர் மாவட்டம் எலவம்பாடி கிராமத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சந்ததிக் கலப்பில்லா இரகமாகும். இதன் வயது 140-145 நாட்கள். பழம், முட்டை வடிவத்தில் பளபளப்பான ஊதா நிறத்தில் இருக்கும். நுனியில் பச்சைச் சாயம் போலக் காணப்படும். இலைப்புள்ளி நோய், வாடல் நோய் மற்றும் வண்டுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டது. கொத்தாகக் காய்க்கும். எக்டருக்கு 40-45 டன் பழங்கள் மகசூலாகக் கிடைக்கும்.
கோ.பி.எச்.1 (2001): இது, EP 45xகோ.2-இன் வீரிய இனக்கலப்பு இரகமாகும். இதன் வயது 120-130 நாட்கள். பழமானது, அடர் ஊதா நிறத்தில் இருக்கும். நூறு கிராம் பழத்தில் 16.65 மி.கி. அஸ்கார்பிக் அமிலம் இருக்கும். எக்டருக்கு 56 டன் பழங்கள் மகசூலாகக் கிடைக்கும்.
கோ.பி.எச்.2 (2002): இது, EP 45xபூசா உத்தம் இரகங்களின் வீரிய இனக்கலப்பு ஆகும். இதன் வயது 120-130 நாட்கள். இது, பழத்துளைப்பானுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. பழமானது, மிதமான அளவில் சிறிது நீண்டு, பளபளப்பான ஊதா நிறத்தில் இருக்கும். இதில், 16.5 மி.கி. அஸ்கார்பிக் அமிலம் உள்ளது. இந்த இரகத்தை இறவையில், டிசம்பர் – ஜூலை வரை பயிரிடலாம். எக்டருக்கு 50 டன் பழங்கள் மகசூலாகக் கிடைக்கும்.
முனைவர் க.செ.விஜய் செல்வராஜ், காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர். முனைவர் அ.பாரதி, டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர் – 614 902.
சந்தேகமா? கேளுங்கள்!