My page - topic 1, topic 2, topic 3

ஆட்டு ஊட்டக் கரைசல்!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர்.

ந்தியாவின் மொத்த உற்பத்தியில் 17.23%, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறையின் பங்காகும். நம் முன்னோர்கள் இயற்கை விவசாயம் செய்து மண்ணைத் தாயைப் போலக் காத்தனர்; தங்களையும் காத்துக் கொண்டனர். சுற்றுச்சூழலும் காக்கப்பட்டது. ஆனால், பசுமைப் புரட்சிக்குப் பிறகு, மகசூலில் மட்டுமே கவனத்தைக் கொண்டு, இரசாயன உரங்களை மிகுதியாகப் பயன்படுத்தி வருகிறோம்.

இதனால் மண்வளமும், சுற்றுச்சூழலும் பாதிப்படைவதைக் காலம் கடந்து தெரிந்து கொண்ட நாம் இப்போது, நமது பாரம்பரிய விவசாயத்தை நோக்கிச் செல்கிறோம். இயற்கை விவசாயம் பலன் தருவதற்குச் சில ஆண்டுகள் ஆனாலும், அது தரும் பலன் நிரந்தரமானது.

அத்தகைய இயற்கை விவசாயத்தின் அங்கங்களாக, பஞ்சகவ்யா, பூச்சி விரட்டிகள், ஜீவாமிர்தம், தசகவ்யா போன்றவை விளங்குகின்றன. பசுவின் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பஞ்சகவ்யாவைப் போல, ஆடுகள் தரும் பொருள்களைக் கொண்டும், சத்துள்ள ஊட்டத்தைத் தயாரித்துப் பயன்படுத்த முடியும்.

தேவையான பொருள்கள்

நாட்டு ஆட்டுப் புழுக்கை 5 கிலோ, ஆட்டுச் சிறுநீர் 3 லிட்டர், ஆட்டுப்பால் 2 லிட்டர், ஆட்டுத்தயிர் 2 லிட்டர், கடலைப் புண்ணாக்கு 2 கிலோ அல்லது கால் கிலோ பாசிப்பயறு, கால் கிலோ உளுந்தை ஊற வைத்த அரைத்த மாவு, நான்கு நாட்கள் புளித்த இளநீர் 2 லிட்டர், கரும்புச்சாறு 2 லிட்டர் அல்லது 2 லிட்டர் நீரில் ஒரு கிலோ வெல்லம் கலந்த கரைசல், வாழைப்பழம் 10.

இப்பொருள்களின் நன்மைகள்

ஆட்டுப் புழுக்கை மற்றும் கோமியத்தில் கோடிக்கணக்கில் நிறைந்துள்ள பயன்மிகு நுண்ணுயிரிகள் நிலத்தில் உள்ள நுண்ணுயிரிகளைப் பெருகச் செய்யும். தயிரிலுள்ள லேக்டோபாசில்லஸ் என்னும் பாக்டீரியா, கிருமிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்.

ஆட்டுப்பாலில் உள்ள கால்சியம், பயிருக்கு ஊட்டத்தையும் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும். கடலைப் புண்ணாக்கு 28-51 சதப் புரதத்தைப் பயிர்களுக்கு அளிப்பதுடன், வைட்டமின்கள் மற்றும் தாதுப்புகளின் அளவையும் கூட்டும்.

கரும்புச்சாறு, கரைசலில் நொதித்தலால் உருவாகும் தேவையற்ற வாசத்தைக் குறைக்கும். வாழைப்பழம் பயிருக்கான ஊட்டம் மற்றும் வளத்தைக் கூட்டும்.

இளநீரிலுள்ள சைட்டோகைனின், கைனட்டின் போன்றவை, பயிர் ஊக்கிகளாகச் செயல்படும். நாட்டு வெல்லம், கரைசல் தயாரிப்பின் காலத்தைக் குறைப்பதுடன், நுண்ணுயிரிகளின் செயல் திறனை மேம்படுத்தும்.

தயாரிக்கும் முறை

புழுக்கை, சிறுநீர், புண்ணாக்கு ஆகியவற்றை, ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு, ஆட்டுப்பால், ஆட்டுத்தயிர், இளநீர், கரும்புச்சாறு, நன்கு பழுத்த வாழைப்பழங்கள் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.

இந்தக் கலவையை, பிளாஸ்டிக் கலன் அல்லது மண் பானையில் வைத்து, ஒரு நாளைக்கு இருமுறை வீதம், வலப்புறமாக ஐம்பது முறையும், இடப்புறமாக ஐம்பது முறையும் கலக்க வேண்டும்.

கரைசலுள்ள கலனில், பூச்சி, புழுக்கள் அண்டாமலிருக்க, பருத்தித் துணியால் அதன் வாயை மூடி வைக்க வேண்டும். இப்படிச் செய்தால், இரண்டு வாரங்களில் ஆட்டூட்டம் தயாராகி விடும்.

பயன்படுத்தும் முறை

கரைசலை முறையாகப் பராமரித்தால் ஆறு மாதங்கள் வரை பயன்படும். கரைசல் அடர்த்தியாக இருந்தால், இளநீர் அல்லது நீரைச் சேர்க்கலாம். ஏக்கருக்கு இரண்டு லிட்டர் வீதம், 100 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பயன்கள்

பூச்சித் தாக்குதலைத் தவிர்க்க உதவும். பயிர்கள் பூக்கும் பருவத்தில் தெளித்தால், நிறையப் பூக்கள் பூக்கும். விளைபொருளின் எடையையும் சுவையையும் கூட்டும்; அப்பொருள்கள் பல நாட்கள் கெடாமல் இருக்க உதவும். உற்பத்திச் செலவைக் குறைத்து இலாபத்தைப் பெருக்கும்.


ஜெ.தீபா, பி.குணா, அ.அபினேஷ்வரி, இர.அகல்யா, சே.ஐஸ்வர்யா, மா.அர்ச்சனா, கி.ஆர்த்தி, ஆ.ஆர்த்தி, அ.அருள்சியா, சி.அருணபிரபா, ர.அஸ்வினி, இமயம் வேளாண்மைத் தொழில் நுட்பக் கல்லூரி, துறையூர் வட்டம், திருச்சி மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks