My page - topic 1, topic 2, topic 3

மருந்துத் தெளிப்பின் போது கவனிக்க வேண்டியவை!

மருந்து

யிர்களில் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்கும் போது, தெளிப்பானின் நாசில்களில் இருந்து வெளிவரும் மருந்துத் துகள்கள் காற்று வீசும் திசையை நோக்கிச் செல்வதால், பயிர்களை அடைவதில்லை. இதனால், பணம் வீணாவதுடன், பயிர்ப் பாதுகாப்பும் நடப்பதில்லை. இப்படி, பூச்சி மருந்து வீணாகாமல் தடுக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

அதிகாலை நேரம் மருந்துத் தெளிப்புக்கு மிகவும் ஏற்றது. ஏனெனில், அந்த நேரத்தில் காற்று வீசுதல் குறைவாக இருக்கும். மேலும், இலைகளில் பனித்துளிகளும் இருப்பதால், பயிர்களுக்கு மருந்து கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகும். மேலும், பயிர்களுக்கு மிக அருகில் நாசில்களைப் பிடிப்பதன் மூலமும், மருந்துத் துகள்கள் திசைமாறிச் செல்வதைக் குறைக்க முடியும்.

நாசில்களில் இருந்து வெளிவரும் மருந்துத் துகள்களின் பருமனைக் கூட்டுவதன் மூலம், அவற்றின் இடமாற்றத்தைக் கட்டுப்படுத்தலாம். இதற்கு, விசைத் தெளிப்பான் எந்திரத்தின் வேகத்தைச் சிறிது குறைத்தால், மருந்துத் துகள்களின் பருமன் அதிகமாகி விடும். மருந்துக் குருணைகளைப் பயன்படுத்தினால், மருந்து இடமாறுதலைக் கட்டுப்படுத்தலாம்.

மருந்துத் தெளிப்பின் போதான எச்சரிக்கை நடவடிக்கைகள்

எப்போதும், காற்று வீசும் திசையில் திரவ மருந்துத் தெளிப்பையோ, தூள் மருந்து தூவுவதையோ செய்யக் கூடாது. அருகில், அறுவடைக்கு ஏற்ற பயிர்கள், நீர் நிலைகள், மேய்ச்சல் நிலங்கள் இருந்தால், மிகவும் கவனத்துடன் மருந்தைத் தெளிக்க வேண்டும். சிபாரிசு செய்யப்பட்ட அளவிலேயே மருந்தைத் தெளிக்க வேண்டும். அடைபட்ட நாசில்களை வாயால் ஊதிச் சுத்தம் செய்யக் கூடாது. இதற்குச் சிறு குச்சியைப் பயன்படுத்தலாம்.

தெளிப்பாளர், தன் உடலில் காயமோ, புண்ணோ இல்லாதவராக இருக்க வேண்டும். மருந்தடிக்கும் போது, உண்ணல், குடித்தல், புகைத்தல், புகையிலையை மெல்லுதல் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். எதையும் உண்பதற்கு அல்லது குடிப்பதற்கு முன், முகம் மற்றும் கைகளைச் சுத்தமாகக் கழுவி விட வேண்டும். ஒருவர் ஒருநாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் மருந்தடிப்பு வேலையைச் செய்யக் கூடாது.

துணையாள் இல்லாமல் மருந்தடிக்கும் வேலையில் ஈடுபடக் கூடாது. உடன் ஒருவர் இருப்பது நல்லது. மருந்தடிப்பின் போது இதற்கென உள்ள ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். வேலை முடிந்ததும் நன்றாகக் குளித்து விட்டு ஆடையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒருமுறை மருந்தடிப்பில் பயன்படுத்திய ஆடையைச் சுத்தம் செய்யாமல் அணியக் கூடாது. களைக்கொல்லித் தெளிப்பில் பயன்படுத்திய தெளிப்பானை நன்கு சுத்தம் செய்த பிறகு தான், பூச்சிக்கொல்லி மருந்துத் தெளிப்புக்குப் பயன்படுத்த வேண்டும்.

மருந்தைக் கையாளும் போதான எச்சரிக்கை நடவடிக்கைகள்

மருந்தை வாங்கியதும் அதிலுள்ள எச்சரிக்கை விவரங்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகளைக் கவனமாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். கருவுற்ற பெண்கள், பால் கொடுக்கும் பெண்கள், நோயாளிகள், குழந்தைகள் போன்றோர், மருந்துகளைக் கையாளக் கூடாது. மருந்தையோ, பயிர்ப் பாதுகாப்புக் கருவியையோ கையாளுவதற்கு முன், சுத்தமான நீர் மற்றும் துண்டைக் கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். இது, தற்செயலாகக் கைகளில், உடலில் மருந்து பட்டு விட்டால், உடனே சுத்தம் செய்து கொள்ள உதவும்.

திரவ மருந்தையோ, தூள் மருந்தையோ பயன்படுத்தலாம் எனப் பரிந்துரை இருந்தால், திரவ மருந்தையே தெளிக்கலாம். இதனால், மருந்துத் துகள்களின் இடப்பெயர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். இயன்ற வரை, ஒரு மருந்துப் புட்டியைத் திறந்து விட்டால் அதிலுள்ள மருந்து முழுவதையும் பயன்படுத்தி விடுவது சிறந்தது.

மருந்துகளை, அவற்றுக்குரிய புட்டிகள் அல்லது கலன்களில் தான் வைக்க வேண்டும். வேறு கலன்களுக்கு மாற்றக் கூடாது. வீட்டில், குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் பூச்சி மருந்துகளைப் பாதுகாப்பாகப் பூட்டி வைக்க வேண்டும். பூச்சி மருந்துகள் உள்ள அறையில் தூங்கக் கூடாது. காலியான பூச்சி மருந்துப் புட்டிகளை, நீர் நிலைகளில், வயலில் தூக்கியெறியக் கூடாது. அவற்றை பூமியில் புதைத்து விட வேண்டும்.

தெளிப்பான்கள் நெடுநாட்கள் உழைப்பதற்கான நடவடிக்கைகள்

மருந்தடிப்பு வேலை முடிந்ததும், மருந்துக் கலனில் உள்ள மருந்தைக் காலி செய்து விட்டு, சுத்தம் செய்து வைக்க வேண்டும். மருந்தடிப்பு இல்லாத நேரத்தில், விசைத் தெளிப்பானைத் தவிர, பிற பயிர்ப் பாதுகாப்புக் கருவிகளைக் தலைகீழாகக் கவிழ்த்தி வைக்க வேண்டும். அவற்றின் மூடி மற்றும் குழாய்களைத் திறந்து வைத்து ஈரத்தை உலர்த்த வேண்டும்.

விசைத் தெளிப்பானைப் பயன்படுத்தாத நிலையில், எரிபொருள் கலனிலுள்ள பெட்ரோல் முழுவதையும் வடித்துவிட வேண்டும். கார்பரேட்டரிலும் பெட்ரோல் குழாயிலும் பெட்ரோல் இருக்கக் கூடாது. மருந்தடிப்பு இல்லாத போது, வாஷர்கள், பேரிங்குகள் போன்ற பாகங்களுக்கு உயவு எண்ணெய்யை இட வேண்டும். கிரீசை இடக்கூடாது. நீளமான பிளாஸ்டிக் குழாய்களைச் சுற்றி, படுக்கை வசத்தில் இருட்டில் வைக்க வேண்டும். இதன் மூலம், குழாயின் பயன்படு காலம் கூடும்.

தெளிப்பான் எந்திரம் நெடுநாட்கள் உழைப்பதற்கான நடவடிக்கைகள்

பெட்ரோலில் சரியான அளவில் உயவு எண்ணெய்யைக் கலந்து ஊற்றித் தெளிப்பானை இயக்க வேண்டும். காற்று வடிப்பானை நன்கு சுத்தம் செய்து மாட்ட வேண்டும். சிலிண்டரின் உடல் பகுதி மற்றும் தலைப் பகுதியின் மேற்புறமுள்ள குளிர்விக்கும் தகடுகள், மேக்னடோ விசிறித் தகடுகள், அழுக்கில்லாமல் இருக்க வேண்டும்.

இருபது மணி நேரம் ஓடிய விசைத் தெளிப்பானில் செய்ய வேண்டியவை

எந்திரத்தில் உள்ள திருகுகள், போல்ட், நட்டுகள் ஆகியன சரியாகப் பொருந்தி உள்ளனவா என்பதைச் சோதிக்க வேண்டும். மின்பொறிப் பித்தான் மற்றும் தொடு துண்டிப்பு முனை இடைவெளிகளைச் சோதித்துச் சுத்தம் செய்ய வேண்டும். இதைப் போல, ஐம்பது மணி நேர ஓட்டத்துக்குப் பிறகு, புகைக்கூண்டு மற்றும் புகைப்போக்கிக் குழாயில் உள்ள கரிப்படிவங்களை நீக்க வேண்டும்.

நூறு மணி நேர ஓட்டத்துக்குப் பிறகு செய்ய வேண்டியவை

கார்பரேட்டர் பாகங்களைக் கழற்றிச் சுத்தம் செய்து பொருத்த வேண்டும். பெட்ரோல் கலன் மற்றும் பெட்ரோல் குழாய்களைச் சுத்தம் செய்ய வேண்டும். பிஸ்டன், சிலிண்டர் உடல் பாகம் ஆகியவற்றைக் கழற்றி, கரிப்படிவங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். இதைப் போல, இருநூறு மணி நேரம் ஓடிய விசைத் தெளிப்பானின் கேம் கிரீஸ் பேடைக் கழற்றிச் சுத்தம் செய்து கிரீஸைத் தடவிப் பொருத்த வேண்டும்.

பூச்சி மருந்தால் பாதிக்கப்பட்டவருக்குச் செய்ய வேண்டிய முதலுதவி

பூச்சி மருந்தைக் கையாளும் போது, தவறுதலாக மருந்து தோலில் பட்டு விடுதல், மருந்தை நுகர்தல், விழுங்குதல் போன்ற செயல்களால், தலைவலி, வாந்தி, நடுக்கம், மூச்சுத் திணறல், வலிப்பு, மயக்கம் முதலான விளைவுகள் ஏற்படலாம். இத்தகைய நேரங்களில், பாதிக்கப்பட்டவரை மருத்துவரிடம் காட்டுவதற்கு முன், முதலுதவி செய்ய வேண்டியது அவசியம்.

அதாவது, பூச்சி மருந்து வயிற்றுக்குள் சென்று விட்டால், 3-5 தேக்கரண்டி சாப்பாட்டு உப்பை, வெந்நீரில் கலந்து குடிக்கச் செய்து வாந்தியெடுக்க வைக்க வேண்டும். வாந்தி எடுப்பவரை எக்காரணம் கொண்டும் மல்லாந்து படுக்க வைக்கக் கூடாது. தெளிவான திரவமாக வாந்தி வரும் வரையில் இதைச் செய்ய வேண்டும்.

கார்பன்-டை-சல்பைடு, ம.எண்ணெய், பெட்ரோல், அமிலங்கள், காரங்கள் போன்றவற்றை விழுங்கியவரை, வாந்தியெடுக்கச் செய்யக் கூடாது. இவருக்கு, பால், நீரில் அடித்த முட்டை வெள்ளைக்கரு போன்றவற்றை அதிகமாகக் கொடுக்க வேண்டும். பாதரச வட்டு மருந்துகளால் பாதிக்கப்பட்டவருக்கு, முட்டை வெண்கரு அல்லது பாலைக் கொடுத்த பின் வாந்தியெடுக்க வைக்க வேண்டும். பூச்சி மருந்தால் பாதிக்கப்பட்ட தோல் பகுதியை, சோப்பைக் கொண்டு நன்கு கழுவ வேண்டும்.

மருந்து நுகர்வால் பாதிக்கப்பட்டவரை, உடனே சுத்தமான காற்று வீசும் இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அவருடைய ஆடைகளை இளக்கி விட வேண்டும். போர்வையால் அவரைச் சுற்றி வைக்க வேண்டும். மூச்சு விட்டு விட்டு வந்தாலோ அல்லது தற்காலிகமாக நின்று விட்டாலோ, செயற்கைச் சுவாச முறையில் மூச்சுவிடச் செய்ய வேண்டும்.

செயற்கைச் சுவாச முறையின் போது, பாதிக்கப்பட்டவரின் நெஞ்சில் அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. பாதிக்கப்பட்டவரது வாயில் புகையிலை போன்ற பொருள் ஏதேனும் இருந்தால், அதை உடனே துணியைச் சுற்றிய விரல்களால் வெளியேற்றி விட வேண்டும். கையாளப்பட்ட பூச்சி மருந்தைப் பற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். பயன்படுத்திய காலி மருந்துக் குப்பி அல்லது கலனை எடுத்துச் சென்று மருத்துவரிடம் காட்டுவது இன்னும் சிறந்தது. இது, மருத்துவர் சரியான சிகிச்சையை மேற்கொள்வதற்கு உதவும்.


PB_Kamaraj

முனைவர் ப.காமராஜ், இணைப் பேராசிரியர், மு.லிம்னா ஜெசிக்கா பானு, முதுகலை ஆராய்ச்சியாளர், பண்ணை இயந்திரவியல் துறை, வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுளூர் – 621 712.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!