மூக்கிரட்டைக் கீரை!

செய்தி வெளியான இதழ்: 2017 மே

மூக்கிரட்டை, தரையில் படர்ந்து சிறிய கொத்தாகப் பூக்களைப் பூக்கும். நீள்வட்ட இலைகள் மற்றும் கிழங்கைப் போன்ற வேர்களுடன் படர்ந்து வளரும் சிறு கொடியான மூக்கிரட்டைக் கீரையின் மேற்பகுதி பச்சை நிறத்திலும், கீழ்ப்பகுதி சாம்பல் நிறத்திலும் இருக்கும். பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும். இன்னொரு வகை மூக்கிரட்டைக் கீரை, வெள்ளையாகப் பூக்கும். மூக்கறட்டை, சாட்டரணை, மூக்கரச்சாணை ஆகிய பெயர்களும் மூக்கிரட்டைக்கு உண்டு.

தமிழகமெங்கும் தோட்டங்களில், தரிசு நிலங்களில் தானாக வளரும். முழுத் தாவரமும் புனர்றலின் என்னும் காரச்சத்தைக் கொண்டுள்ளது. அதனால் இதனைப் புனர்வா என்று அழைப்பதும் உண்டு. புனர் என்றால் மீண்டும் என்று பொருள். நமது உடலிலுள்ள கழிவுகளை நீக்கி, உடலுக்கு மீண்டும் புத்துணர்ச்சியைத் தருவதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது.

இலையும் வேரும் மருத்துவப் பயன்களைத் தரும். அதிகளவில் கிளைகளைக் கொண்ட மூக்கிரட்டையின் ஒவ்வொரு கணுவிலும் இரண்டு இலைகள் இருக்கும். ஒன்று மற்றதை விடப் பெரிதாக இருக்கும். மூக்கிரட்டைப் பழம் சிறிதாக இருக்கும். இது, சுரப்பிகளுடன் ஐந்து விளிம்புக் கோடுகளையும், ஒட்டுந் தன்மையிலும் இருக்கும்.

மருத்துவப் பயன்கள்

மூக்கிரட்டைக் கீரையை உணவாகவோ மருந்தாகவோ சாப்பிட்டால், வாதநோய் குணமாகும். பார்வை தெளிவாகும்; உடல் வனப்பாகும். உடலுக்குச் சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை அளித்து, உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றும். இரத்தச் சோகையால் உண்டாகும் உடல் வீக்கம், பாத வீக்கம், மூச்சிரைப்பு போன்றவற்றை இந்தக் கீரை குணப்படுத்தும். மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு, வயிற்றுப் பகுதியில் நீர்த் தேங்குவதால் வயிறு பெருத்துக் காணப்படும். மூக்கிரட்டைக் கீரையை உண்பதன் மூலம் இதைக் குணப்படுத்தலாம்.

மூக்கிரட்டை வேரை 10 கிராம் எடுத்து 100 மில்லி நீரில் கலந்து கொதிக்க வைத்துப் பருகினால் சிறுநீரகப் பாதிப்புக் குணமாகும். குறிப்பாகச் சிறுநீரகக் கற்கள் கரைய இது உதவும். மேலும், சிறுநீரக வீக்கத்தைப் போக்கும்; சிறுநீரைப் பெருக்கும். சிறுநீரகச் சிக்கல் உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். மூக்கிரட்டை இலை, வேரைக் கொண்டு தேநீரைத் தயாரிக்கலாம். இந்தத் தேநீர், காய்ச்சலைக் குணமாக்கும்; உடல் வலியைப் போக்கும்; கண்ணெரிச்சலைக் குணமாக்கும்.

இந்தக் கீரை ஈரலுக்குப் பலத்தைத் தரும். தொடக்கக்கால ஈரல் நோயைத் தடுத்து நிறுத்தும். நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கலை அகற்றும். புற்றுநோய்க்குக் காரணமான நச்சுகளை வெளியேற்றும் தன்மை மிக்கது. மூக்கிரட்டைக் கீரையைக் கொண்டு, வலி, வீக்கத்துக்கான மேல்பூச்சைத் தயாரிக்கலாம். அல்லது விளக்கெண்ணெய்யில் வதக்கி ஒத்தடம் கொடுத்து வந்தால், மூட்டுவலி, வீக்கம் குறையும். ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களைக் குணப்படுத்தும்.

மூக்கிரட்டைக் கீரைக்கூட்டு

தேவையானவை: சுத்தம் செய்யப்பட்ட மூக்கிரட்டைக் கீரை 2 கைப்பிடி, பாசிப்பருப்பு கால் கப், சீரகம் ஒரு தேக்கரண்டி, பூண்டு 4 பற்கள், சின்ன வெங்காயம் 15, எண்ணெய் ஒரு தேக்கரண்டி, கடுகு கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, தேங்காய்த் துருவல் 4 தேக்கரண்டி, மிளகாய் வற்றல் 2, உப்பு தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பைத் தனியாக வேக வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்யை ஊற்றி, கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பைப் போட்டுத் தாளித்து மிளகாயைக் கிள்ளிப் போட்டு வதக்க வேண்டும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு, கீரையை நறுக்கிப் போட்டு உப்பையும் சேர்த்து மூடி வைத்து வேகவிட வேண்டும். கீரை வெந்ததும் பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவலைச் சேர்த்து இறக்கினால் அருமையான மூக்கிரட்டைக் கீரைக்கூட்டுத் தயார். குறைந்தது மாதம் இருமுறை இந்தக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது.

மூக்கிரட்டை சூப்

தேவையானவை: மூக்கிரட்டை வேர் 10 கிராம், தக்காளி 1, வேக வைத்த துவரம் பருப்பு 2 மேசைக் கரண்டி, பூண்டு 4 பற்கள், பெருங்காயத்தூள் கால் தேக்கரண்டி, சீரகத்தூள் அரைத் தேக்கரண்டி, மிளகுத்தூள் கால் தேக்கரண்டி, வெண்ணெய் ஒரு தேக்கரண்டி, கொத்தமல்லித் தழை சிறிதளவு, உப்பு தேவையான அளவு.

செய்முறை: தக்காளியைப் பசையைப் போல அரைக்க வேண்டும். இதில், 250 மில்லி நீரைச் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். இத்துடன் மூக்கிரட்டை வேர், உப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய்யைச் சூடுபடுத்த வேண்டும். இதில், பூண்டைப் பொடியாக நறுக்கி, சீரகம், பெருங்காயத் தூளைச் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு, ஏற்கெனவே கொதிக்க வைத்துள்ள கலவையை இத்துடன் சேர்த்து இறக்கி, மிளகுத் தூள், கொத்தமல்லித் தழையைத் தூவினால், அருமையான மூக்கிரட்டை சூப் தயார். இதைச் சூடாகப் பருக வேண்டும். ஆஸ்துமா, நெஞ்சு சளி, மூச்சடைப்பு, மூட்டுவலி, உடல்வலி போன்ற நோய்கள் இதனால் குணமாகும்.


முனைவர் மா.விமலாராணி, முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!