My page - topic 1, topic 2, topic 3

தென்னை டானிக்!

தென்னை டானிக்

ற்பகத்தரு என்று அழைக்கப்படும் தென்னை, உலகளவில் 92 நாடுகளில் அதிகளவில் பயிரிடப்பட்டு, 59 பில்லியன் காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகளவில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா, ஆண்டுக்கு 15.84 பில்லியன் காய்களை உற்பத்தி செய்து வருகிறது. இது, உலக உற்பத்தியில் 27 சதமாகும்.

உற்பத்தித் திறனிலும் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது. அதாவது, எக்டருக்கு 8,165 காய்களை மகசூலாக எடுக்கிறது. இந்தியாவில் தென்னை சாகுபடி செய்யும் மாநிலங்களில், தமிழ்நாடு, சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

தமிழ்நாட்டில், 3.75 இலட்சம் எக்டரில் நடைபெறும் தென்னை சாகுபடி மூலம், 5,430 மில்லியன் காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வகையில் ஒரு எக்டருக்கான சராசரி மகசூல் 14,495 காய்கள் ஆகும்.

தென்னை மரம், சொர்க்க மரம் என்றும் கற்பக விருட்சம் என்றும் அழைக்கப்படுகிறது. தென்னை, உலகளவிலான சமுதாயப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சங்க நூல்கள் தென்னை மரத்தை, தெங்கு என்று கூறும். இதற்குத் தாழை என்னும் பெயரும் உண்டு.

தென்னை சாகுபடிக்கு ஏற்ற மண் வகை

மணல் கலந்த செம்மண், வண்டல் மண், செம்பொறை மண் ஆகியன, தென்னை சாகுபடிக்கு உகந்தவை. 1.2 மீட்டர் ஆழமுள்ள, நல்ல நீர்த்தேக்கத் தன்மையுள்ள மண், தென்னைக்கு ஏற்றதாகும். எனினும், மணல் மற்றும் களிமண் அடுக்கடுக்காக இடப்பட்ட நிலங்களில் தென்னை நன்கு வளர்கிறது.

மண்ணின் கார அமிலத்தன்மை 5.2-8.6 இருக்க வேண்டும். மணற்பாங்கான நிலத்தில் வளரும் தென்னை, உப்பு நீரையும் தாங்கி வளரும். நல்ல மழையும், சூரிய ஒளியும் கிடைக்கும் இடங்களில் நன்றாக வளரும்.

உர நிர்வாகம்

நடவு செய்து ஐந்து வயதான தென்னை மரம் ஒன்றுக்கு, ஓராண்டில் இட வேண்டிய உரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றை இரண்டாகப் பிரித்து, முதல் பாதியை, ஏப்ரல் மே மாதங்களில், மரத்திலிருந்து ஆறடி தள்ளி, அரைவட்டக் குழியெடுத்து இட வேண்டும். அடுத்த பாதியை, அக்டோபர் நவம்பர் மாதங்களில், ஏற்கெனவே இட்ட அரைவட்டக் குழிக்கு எதிரில், அரைவட்டக் குழியை எடுத்து இட வேண்டும்.

உர அளவு: கம்போஸ்ட் அல்லது தொழுவுரம் அல்லது பசுந்தாள் உரம் 50 கிலோ, யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 2.5-3 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ. இவற்றை, மேலே கூறியுள்ள முறையில் இருபாகமாகப் பிரித்து இட வேண்டும்.

வறட்சி, பூச்சி, நோய்த் தாக்குதல், சத்துக்குறைகள் ஆகியன, தென்னையில் மகசூல் குறைவதற்கான முக்கியக் காரணங்கள் ஆகும். தென்னை விவசாயிகள் பூச்சி மற்றும் நோய்களைத் தீர்ப்பதில் காட்டும் அக்கறையை, சத்துக் குறைகளைக் களைவதில் காட்டுவதில்லை. இதற்கு முக்கியக் காரணம், பூச்சி, நோய்த் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பு கண் முன்னே தெரிகிறது.

ஆனால், சத்துக் குறைகளால் மகசூல் குறைவது தெரியாமல் இருப்பது, விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாமையே ஆகும். எந்த ஒரு பயிருக்கும் 17 வகையான சத்துகள் மிகவும் முக்கியமாகும். இவற்றில், ஒரு சத்துப் பற்றாக்குறை இருந்தாலும், 10-15 சதவீத மகசூல் குறைய வாய்ப்புள்ளது.

இதனால், இத்தகைய சத்துக் குறைகளைச் சரி செய்து மகசூலைப் பெருக்க, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகமானது, 2002-ஆம் ஆண்டில் TNAU தென்னை டானிக் என்னும் புதிய இடுபொருளை வெளியிட்டது.

இது, சத்துக் குறைகளைக் குறைத்து, தேங்காய் உற்பத்தியைக் கூட்டுவதுடன், பூச்சி, நோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரங்கள், மீண்டும் வளம் பெற்று எதிர்ப்பு சக்தியைப் பெறவும் உதவுகிறது.

தென்னையில் ஏற்படும் முக்கியச் சத்துக் குறைகள்

இலை சிவத்தல். இளம் மரங்களில் இலை பிரியாமல் இருத்தல். காய்கள் வெடித்தல். குரும்பைகள் கொட்டுதல். தரமான தேங்காய்ப் பருப்பு உருவாகாமல் போதல் ஆகியன. தென்னை மரம், ஆண்டு முழுவதும் தொடர்ந்து பாளைகளை விடுவதால், சத்துகளின் தேவை மிக அதிகமாக உள்ளது.

போரான், துத்தநாகம் ஆகிய சத்துகள், பூக்கள் உருவாவதில், முக்கியப் பங்கு வகிக்கின்றன. நுண் சத்துகளும், வளர்ச்சி ஊக்கிகளும், தென்னை இனப்பெருக்கக் காலத்தில், மிகவும் அவசியமாகும். மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதலில் எவ்விதக் குறையும் ஏற்படாமல் இருக்க, இந்த நுண் சத்துகள் மிகவும் அவசியம்.

தழைச்சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: முதிர்ந்த இலைகள் முற்றிலும் மஞ்சள் நிறமாக மாறி விடும். பச்சையம் முழுவதும் குறைந்து விடும். வளர்ச்சிக் குன்றி விடும்.

தீர்வு: ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, மரத்துக்கு 500 கிராம் யூரியா வீதம் எடுத்து, மரத்திலிருந்து மூன்றடி தள்ளி, அரைவட்டக் குழியைப் பறித்து, அதில் இட வேண்டும்.

மணிச்சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: இதன் அறிகுறிகள் முதிர்ந்த இலைகளில் தோன்றும். இலைகள் சிறியதாக, ஊதா அல்லது வெண்கல நிறத்தில் காணப்படும்.

+ இலைகள் காய்ந்தும், காய்ந்த பகுதிகள் உதிர்ந்தும் விடும். ஆனால், பல ஆண்டுகள் மணிச்சத்து இடப்படாத நிலங்களில் கூட, தென்னை மகசூல் பாதிப்பதில்லை.

+ ஏனெனில், ஒரு மரம் ஓராண்டில் 70 கிராம் மணிச்சத்தை மட்டுமே எடுத்துக் கொள்கிறது. எனவே, மணிச்சத்துப் பற்றாக்குறை, தென்னையில் ஏற்படுவதில்லை.

தீர்வு: ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, மரத்துக்கு ஒரு கிலோ சூப்பர் பாஸ்பேட் வீதம் எடுத்து, மரத்தில் இருந்து மூன்றடி தள்ளி, அரைவட்டக் குழியைப் பறித்து, அதில் இட வேண்டும்.

சாம்பல் சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: இலையின் ஓரம் மஞ்சள் நிறமாக மாறும். இலையின் நுனியும் ஓரமும் கருகியிருக்கும்.

+ இலையின் அடிப்பாகம் பச்சை நிறத்தில் இருக்கும். சிறிய இலைகள் பின்னோக்கிக் காய்ந்து விடும். இலை முனை கருகி விடும்.

+ இலைகளில் பழுப்பு நிறப் பிசினைப் போன்ற சிறு புள்ளிகள் தோன்றும். இலையில் சிறிய சுருக்கக் கோடுள்ள புள்ளிகள் தோன்றும். காய்கள் சிறுத்து விடும்.

+ இலைகள் மஞ்சள் மற்றும் வெண்கல நிறத்திலும், திருகியும், சுருங்கியும், கொம்புகள் வளைந்தும் காணப்படும்.

தீர்வு: ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, மரத்துக்கு 1.5 கிலோ பொட்டாஷ் வீதம் எடுத்து, மரத்திலிருந்து மூன்றடி தள்ளி, அரைவட்டக் குழியைப் பறித்து, அதில் இட வேண்டும்.

மெக்னீசியப் பற்றாக்குறை

அறிகுறிகள்: இலைகளின் நடுநரம்பின் இரு பக்கங்களும் மஞ்சள் நிறமாக மாறி விடும். இலை நுனியிலிருந்து மஞ்சள் நிறம் தோன்றும். அடிப்பகுதி இலைகள் பச்சை நிறத்தில் இருக்கும்.

தீர்வு: ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, மரத்துக்கு 125 கிராம் மெக்னீசிய சல்பேட் வீதம் எடுத்து, மரத்திலிருந்து மூன்றடி தள்ளி, அரைவட்டக் குழியைப் பறித்து, அதில் இட வேண்டும்.

போரான் பற்றாக்குறை

அறிகுறிகள்: புதிதாக உருவாகும் இலைகள் சிறியதாக இருக்கும். சிற்றிலைகள் வடிவம் மாறிக் காணப்படும். இனப்பெருக்க மண்டலம் உருமாற்றம் அடையும். காய்கள் உதிர்தல் அதிகமாக இருக்கும். குறைவான மற்றும் இயற்கைக்கு மாறான காய்கள் உருவாகும்.

தீர்வு: ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, மரத்துக்கு 125 கிராம் போராக்ஸ் வீதம் எடுத்து, மரத்திலிருந்து மூன்றடி தள்ளி, அரைவட்டக் குழியைப் பறித்து, அதில் இட வேண்டும்.

தென்னையில் ஒல்லிக் காய்கள்

தென்னையில் சராசரியாக மூன்று முதல் பத்து சதவீதம் வரை, ஒல்லிக் காய்கள் ஏற்படும். இது, சிறுத்து, நீண்டு, பருப்பற்று, கொட்டாங்குச்சி அல்லது உரி மட்டையுடன் காணப்படும். இதை, வைப்பாளைத் தேரைக்காய் என்கின்றனர்.

பாரம்பரியக் குணம், சத்துப் பற்றாக்குறை, மகரந்தச் சேர்க்கைக் குறைபாடு ஆகியன, இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. சரிவரப் பராமரிக்காத தோப்பு மற்றும் மானாவாரி தோப்பில், ஒல்லிக் காய்கள் அதிகமாக இருக்கும்.

பாரம்பரிய ஒல்லிக்காய் ஏற்படுவதைத் தவிர்க்க, 15 முதல் 45 வயதுள்ள, தரமான தாய் மரத்திலிருந்து ஓராண்டு விதை நெற்றுகளை எடுத்து நாற்றுகளைத் தயாரிக்க வேண்டும். அதாவது, தாய்மரத்தில் குறைந்தது 35 மட்டைகள் இருக்க வேண்டும். ஆண்டுக்கு நூறு காய்களைக் காய்க்க வேண்டும். பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இல்லாமல் இருக்க வேண்டும்.

நடவு நாற்றுகளின் வயது 9 முதல் 12 மாதம் இருக்க வேண்டும். வேர்கள் அதிகமாக இருக்க வேண்டும். நாற்றுகளின் கழுத்துப்பகுதி 13 செ.மீ. தடிமனில் இருக்க வேண்டும். மேலும், 5-7 இலைகளுடன், பூச்சி மற்றும் நோய்த் தாக்காத கன்றுகளாக இருக்க வேண்டும்.

மட்கிய சாணம், கம்போஸ்ட், கோழியெரு, மட்கிய இலை, தென்னைநார்க் கழிவு ஆகிய இயற்கை உரங்களை இடலாம். பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பு, கொளுஞ்சி போன்றவற்றை, தோப்புக்குள் விதைத்து, பூக்கும் பருவத்தில் மடக்கி உழ வேண்டும். இதனால், ஒல்லிக் காய்களின் எண்ணிக்கை குறையும்.

தேங்காய்ப் பருப்பு உற்பத்திக்கு, அதன் வளர்ச்சிக்கு, சாம்பல் சத்தும் போரான் சத்தும் தேவை. சத்துக்குறை ஏற்பட்டால், காய்களில் வெடிப்பு ஏற்பட்டு, பருப்பு வளர்ச்சித் தடைபடும்.

தென்னை டானிக்

தென்னை டானிக்கில், நைட்ரஜன், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, போரான், மாலிப்டினம் உள்ளிட்ட, மரங்களுக்குத் தேவையான சத்துகள், சரியான விகிதத்தில் கலந்துள்ளன. மேலும், ஆக்சின், அஸ்கார்பிக் அமிலம் ஆகிய வளர்ச்சி ஊக்கிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

எனவே, தென்னை விவசாயிகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் தயாரிப்பான, தென்னை டானிக்கை மரங்களுக்குக் கொடுத்தால், குறைந்த செலவில் அதிக மகசூலைப் பெறலாம். தென்னை டானிக் ஊட்டப்பட்ட மரங்களில் குரும்பை உதிர்வது குறைந்து, காய்களின் எண்ணிக்கை கூடும். மேலும், காய்களின் தரமும் பருமனும் அதிகமாகும்.

சரியான விகிதத்தில் நேரடியாக மரங்களில் செலுத்தப்படும் நுண் சத்துகள்; நோய், பூச்சித் தாக்குதல், வறட்சியைத் தாங்கும் திறன் ஆகிய இயற்கையான எதிர்ப்பு சக்தியை, அந்த மரங்களில் அதிகரிக்கச் செய்கின்றன.

வேர் மூலம் தென்னை டானிக்கை அளிக்கும் முறை:

மரத்தின் தூரிலிருந்து மூன்றடி தள்ளி, பென்சில் கனத்திலுள்ள இளஞ்சிவப்பு நிற வேரைத் தேர்வு செய்ய வேண்டும்.

+ அடுத்து, அந்த வேரின் நுனிப்பகுதியைச் சாய்வாகச் சீவ வேண்டும். அடுத்து, தென்னை டானிக் அடைக்கப்பட்ட நெகிழிப் பையின் ஒரு மூலையில் வெட்டி, சீவிய வேரை பையின் அடிப்பகுதி வரை நுழைத்து இறுகக் கட்ட வேண்டும்.

+ இப்படிச் செய்து 24 மணி நேரத்தில், அந்த வேரால் டானிக் முழுதும் உறிஞ்சப்பட வேண்டும். இல்லையெனில், மற்றொரு வேருக்கு மாற்றிக் கட்ட வேண்டும்.

+ ஒரு லிட்டர் தென்னை டானிக்கை 4 லிட்டர் நீரில் கலந்து, மரத்துக்கு 200 மி.லி. வீதம் 25 மரங்களில் செலுத்தலாம்.

பயன்கள்

+ ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இப்படிச் செய்து வந்தால், பச்சையம் அதிகமாகும்.

+ ஒளிச்சேர்க்கைத் திறன் கூடும். பாளைகளின் எண்ணிக்கை கூடும். குரும்பைகள் கொட்டுதல் குறையும்.

+ காய்கள் பெரிதாகிப் பருப்பு எடை கூடும். அதனால், மகசூல் 20 சதம் வரை கூடும். மரங்களில், பூச்சி, நோயெதிர்ப்பு சக்தி கூடும்.

கவனிக்க வேண்டியவை

டானிக்கை உறிஞ்சத் தேர்ந்தெடுக்கும் வேர், சேதம் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும்.

+ வாங்கி வரும் டானிக்கை ஒரு மாதத்துக்குள் மரங்களில் செலுத்தி விட்டால், சிறந்த பலன் கிடைக்கும்.

+ இந்த டானிக்கில், பூச்சி மருந்துகளில் இருப்பதைப் போல விஷத்தன்மை கிடையாது என்பதால், காய்களை அறுவடை செய்வதில், காலக் காத்திருப்பைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை.

+ டானிக்குடன் எவ்விதப் பூச்சி மற்றும் பூசண மருந்தையும் கலக்கக் கூடாது.


C.RAJA BABU e1738060655504

முனைவர் சி.இராஜா பாபு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி – 639 115.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!