My page - topic 1, topic 2, topic 3

நீடித்த நவீனக் கரும்பு சாகுபடி உத்திகள்!

கரும்பு சாகுபடி 1

ந்தியாவில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளில் இரண்டாம் இடத்தில் இருப்பது கரும்புத் தொழிற்சாலை. எனவே, கரும்பு உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம். கரும்பு உற்பத்திக் குறைவால் உற்பத்திச் செலவு அதிகரித்து, நிகர இலாபம் வெகுவாகக் குறைந்து விடுகிறது. எனவே, செலவைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்கவும், நீர் நிர்வாகத்தைக் கையாளவும், நீடித்த நவீனக் கரும்பு சாகுபடி சிறந்த முறையாகும்.

நீடித்த நவீனக் கரும்பு சாகுபடி முறை, நிலம், நீர் மற்றும் வேலையாட்களின் திறனைக் கூட்டி, அதிக மகசூலைத் தரக்கூடிய வழிமுறைகளைக் கற்றுத் தருவதாக அமைந்துள்ளது. இந்த சாகுபடி முறை, நீராதாரங்களின் பயன்பாடு சார்ந்த நெருக்கடியைக் குறைத்து, சுற்றுச்சூழல் மேம்படவும் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நீடித்த நவீனக் கரும்பு சாகுபடி, குறைவான நாற்றுகள் மற்றும் குறைந்தளவு நீரைப் பயன்படுத்தி, சரியான அளவில் சத்துப் பராமரிப்பு மற்றும் பயிர்ப் பராமரிப்பின் மூலம், அதிக மகசூலைப் பெற, வகை செய்யும் முறையாகும்.

ஒரு விதைப்பரு நாற்றங்கால் அமைத்தல்

ஒரு விதைப்பருவை மட்டும் அரை வட்டமாக வெட்டியெடுத்து நாற்றங்கால் அமைக்க வேண்டும். தரமான விதைப் பருக்களை, தென்னை நார்க்கழிவுள்ள குழித்தட்டுகளில் இட்டு வளர்க்க வேண்டும். இந்த நாற்றங்கால் மூலம், அதிகளவு முளைப்புத் திறனை, குறைந்த நாட்களிலேயே அடைவது சாத்தியமாகும்.

இளம் நாற்று நடவு

இப்படி, 25-35 நாட்கள் வளர்க்கப்பட்ட நாற்றுகளை, அவற்றின் வேரிலுள்ள தென்னைநார்க் கழிவுடன் சேர்த்து எடுத்து நட வேண்டும். இந்த வயது நாற்றுகள் 5-6 தோகைகளுடன் இருக்கும். சாதாரண முறையில் இரண்டு மாதங்களில் அடையக்கூடிய இந்த வளர்ச்சியை, இந்த முறையில் ஒரே மாதத்தில் எட்ட முடிகிறது.

அதிக இடைவெளியில் நடவு செய்தல்

இந்த முறையில், குறைந்தது ஐந்தடி இடைவெளி இருக்கும் நிலையில், ஏக்கருக்கு வெறும் 5,000 நாற்றுகளே போதுமானது. இதைத் தவிர, அதிக இடைவெளியால், காற்றும், சூரிய ஒளியும், பயிர்களின் இடையே போதியளவில் ஊடுருவ ஏதுவாகும்.

பாசனம்

கரும்பு சாகுபடியில் நீர்ப் பராமரிப்பு மிக முக்கியமானது. போதுமான ஈரப்பதம் நிலவும் வகையில் பாசனம் செய்வதே பயிருக்கு நல்லது. இம்முறையில், நாற்றங்கால் பராமரிப்பு, மூடாக்குப் போன்ற உத்திகள் மூலம், பார் விட்டுப் பார் பாசனம் செய்வதால், 40 சதம் நீரானது சேமிக்கப்படுகிறது. அதிகளவு இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் களைக்கொல்லி மருந்துகள் பயன்பாடு முடிந்தளவு தவிர்க்கப்படுகிறது. இயற்கை விவசாயம் நீண்ட கால நன்மைக்கு வழிவகுக்கும்.

ஊடுபயிர் சாகுபடி

இம்முறையில், ஊடுபயிர் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இடைவெளி அதிகமிருக்கும் நிலையில், கோதுமை, உருளை, தட்டை, அவரை, கடலை, தர்ப்பூசணி, கத்தரி மற்றும் பாசிப்பயறு. உளுந்து போன்றவற்றை, முதல் 3-4 மாதங்களுக்குப் பயிரிடலாம். பயிர் இடைவெளி சிறப்பான முறையில் பயன்படுவதோடு, களைக்கட்டுப்பாடு மற்றும் இரட்டை வருமானமும் சாத்தியமாகும்.

கரும்பு பூஸ்டர்

கரும்பு மகசூலை அதிகரிக்க, கரும்பு நடவு முடிந்த, 45, 60 மற்றும் 75 நாட்களில் ஏக்கருக்கு, முறையே 2, 3 மற்றும் 4 கிலோ கரும்பு பூஸ்டர் வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில், ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும்.

நீடித்த நவீனக் கரும்பு சாகுபடியின் பயன்கள்

+ விதைக்கரணைச் செலவு 75 சதம் வரை குறைகிறது.

+ சீவல்களை வெட்டியெடுத்த பிறகுள்ள கரும்புகளை அரவைக்குப் பயன்படுத்தலாம்.

+ விதைகளின் முளைப்புத்திறன் அதிகமாகும்.

+ நாற்றுகளை நெடுந்தொலைவு எடுத்துச் செல்வது எளிது.

+ பயிர்களுக்கு இடையில் பராமரிப்பு வேலைகளைச் செய்வது எளிது.

+ கரும்பின் நீளமும் எடையும் கூடுதலாக இருக்கும்.

+ பாசனப் பயன்பாடு அதிகம்.

+ சரியான அளவில் உரங்களை இடுவதால், பயிர்களுக்கான சத்துப் பராமரிப்பு சிறப்பாக அமைகிறது.

+ காற்றும் சூரிய ஒளியும் அதிகளவில் பயிர்களுக்குக் கிடைப்பதால், சர்க்கரைக் கட்டுமானம் கூடும்.

+ சாகுபடிக் காலம் குறைகிறது.

சாதரண மற்றும் நீடித்த கரும்பு சாகுபடி – ஓர் ஒப்பு நோக்கம்

+ சாதாரண முறையில், ஏக்கருக்கு 30 ஆயிரம் இருபருக் கரணைகள், அதாவது, 4 டன் கரும்பு தேவைப்படும். ஆனால், நவீன முறையில், 5,000 ஒருபருச் சீவல்கள், அதாவது, 50 கிலோ கரும்பு மட்டுமே தேவைப்படும்.

+ சாதாரண முறையில் நாற்றங்கால் இல்லை. ஆனால், நவீன முறையில் நாற்றங்கால் உண்டு.

+ சாதாரண முறையில், சீரான வளர்ச்சிக்கு ஏற்ற தரம் பிரிப்பு ஏதுமில்லை. ஆனால், நவீன முறையில், வளர்ச்சிக்கு ஏற்ற தரம் பிரித்தல் உண்டு.

+ சாதாரண முறையில், விதைக் கரணைகள் நடப்படும். ஆனால், நவீன முறையில், 25-35 நாட்கள் வயதுள்ள நாற்றுகள் நடப்படும்.

+ சாதாரண முறையில், 2-3 அடி இடைவெளி விடப்படும். ஆனால், நவீன முறையில், ஐந்தடி இடைவெளி விடப்படும்.

+ சாதாரண முறையில், தேவைக்கும் மேல் நீர் விடப்படும். ஆனால், நவீன முறையில், தேவையான அளவில் மட்டுமே நீர் விடப்படும்.

+ சாதாரண முறையில், முளைப்புத் திறன் குறைவு. ஆனால், நவீன முறையில், முளைப்புத் திறன் அதிகம்.

+ சாதாரண முறையில், ஒரு தூரிலிருந்து 10-15 கிளைப்புகள் வரும். ஆனால், நவீன முறையில், 15-20 கிளைப்புகள் உருவாகும்.

+ சாதாரண முறையில், பயிர்களுக்கு ஊடே காற்றும் வெய்யிலும் புகுதல் குறைவு. ஆனால், நவீன முறையில், காற்றும் வெய்யிலும் புகுதல் அதிகம்.

+ சாதாரண முறையில், ஊடுபயிர் பராமரிப்பு வாய்ப்புக் குறைவு. ஆனால், நவீன முறையில், ஊடுபயிர் பராமரிப்பு வாய்ப்பு அதிகம்.


N.SATHISH KUMAR 1 e1738044337193

முனைவர் ந.சதீஷ்குமார், முனைவர் இரா.நாகேஸ்வரி, முனைவர் இரா.ஜெயஸ்ரீனிவாஸ், முனைவர் ப.துக்கையண்ணன்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!