My page - topic 1, topic 2, topic 3

வரகு சாகுபடி முறை!

Row cultivation

ரகு, இந்தியாவில் சுமார் 3000 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகிறது. குறுந்தானியப் பயிர்களில் இது நீண்ட வயதுள்ள, அதாவது 125-130 நாட்கள் பயிராகும். இப்பயிர் கடும் வறட்சியைத் தாங்கி, அனைத்து நிலங்களிலும் வளரும். வரகை நீண்ட காலத்துக்குச் சேமித்து வைக்கலாம். இது, இரத்தச் சர்க்கரை மற்றும் மூட்டு வலியைக் குறைக்கும். கல்லீரல் இயக்கத்தைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும்.

விதைக்கும் பருவம்

மானாவாரிப் பயிராக, தென்மேற்குப் பருவமழை பெய்யும் மாவட்டங்களில் ஆடிப் பட்டத்திலும், வடகிழக்குப் பருவமழை பெய்யும் மாவட்டங்களில் புரட்டாசிப் பட்டத்திலும் விதைக்கலாம்.

ஊடுபயிர்

பெரும்பாலும் வரகு தனிப் பயிராகவே பயிரிடப்படுகிறது. சில சமயங்களில் இதனுடன் இராகி, பச்சைப்பயறு, உளுந்து, துவரை, எள், மக்காச்சோளம், கடலை போன்றவை, 2:1 அல்லது 1:1 வீதம் பயிரிடப்படுகின்றன. ஆனால், வரகுடன், துவரை அல்லது அவரை போன்ற பயறுவகைப் பயிரை 8:2 வரிசையில் ஊடுபயிராக இட்டால், மண் வளத்தைக் காத்து, அதிக இலாபமும் பெறலாம்.

நிலம் தயாரித்தல்

முந்தைய பயிர் அறுவடைக்குப் பின் நிலத்தை உழவு செய்தால் மண்ணின் ஈரத்தைக் காக்கலாம். சித்திரை, வைகாசியில் இறக்கைக் கலப்பை அல்லது மரக்கலப்பை மூலம் இருமுறை ஆழமாக உழ வேண்டும். விதைப்புக்கு முன் மறுபடியும் உழுது நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். சிறிய விதையாக இருப்பதால் முளைத்து வெளிவர 5-7 நாட்கள் ஆகும்.

விதை மற்றும் நிலத்தை நல்ல முறையில் தயார் செய்தால் தான் களைகளின் பாதிப்புக் குறையும். மேலும், 2-3 இடையுழவு செய்தால் களைகள் கட்டுப்படும். நிலம் காற்றோட்டமாக, பயிர் செழித்து வளர்வதற்கு ஏற்ற பதத்திலிருக்கும்.

விதை நேர்த்தி

எளிமையான விதை நேர்த்தி முறையைக் கையாள்வதால் முளைப்புத் திறன் கூடும். நாற்றுகள் வறட்சியைத் தாங்கி வீரியமாக வளரும். எனவே, 600 கிராம் அசோஸ் பயிரில்லம் மற்றும் 600 கிராம் பாஸ்போ பாக்டீரியாவை எடுத்து, ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளில் கலந்து விதைக்க வேண்டும். நோய்களைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 10 கிராம் சூடோமோனாசைக் கலந்து விதைக்க வேண்டும்.

முதலில், இரசாயனப் பொருள்களைக் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். அடுத்து, விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைப்பு

கை விதைப்பாக விதைக்க, எக்டருக்கு 15 கிலோ விதை தேவைப்படும். ஆனால், பயிர்களின் வளர்ச்சி ஒரே சீராக இருக்காது. கொர்ரு அல்லது விதைப்பான் மூலம் வரிசையாக விதைக்க, 10 கிலோ விதைகள் போதும். மேலும், மண் ஈரம் காயுமுன் அதிகப் பரப்பில் விதைக்கலாம். வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ., பயிருக்குப் பயிர் 10 செ.மீ. இடைவெளியில், 2.5 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும்.

உர நிர்வாகம்

கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 12.5 டன் மட்கிய தொழு உரத்தை இட வேண்டும். மேலும், பத்துப் பொட்டலம் அசோஸ்பைரில்லம் மற்றும் பத்துப் பொட்டலம் பாஸ்போ பாக்டீரியாவையும் இடலாம். மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உரமிட வேண்டும். இல்லையெனில், பொதுப் பரிந்துரை அளவில் இட வேண்டும். தழைச்சத்தில் பாதியை அடியுரமாகவும், மீதியை, விதைத்த 35-40 நாளில் முதல் களையை எடுத்த பிறகு மேலுரமாகவும் இடலாம்.

களை மற்றும் பயிர்களைக் களைதல்

வரிசை விதைப்பில் 2-3 முறை இடையுழவு செய்தும், அடுத்து கைகள் மூலமும் களைகளை நீக்க வேண்டும். கைத்தெளிப்பு விதைப்பில் இடையுழவு செய்ய இயலாது. எனவே, விதைத்த 15 மற்றும் 40 நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.

களை எடுத்ததும், வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ. மற்றும் பயிருக்குப் பயிர் 10 செ.மீ. இடைவெளியில் பயிர்களைக் களைக்க வேண்டும். களைத்த பயிர்களை, பயிர் இல்லாத இடங்களில் நடலாம். இதனால், சரியான பயிர் எண்ணிக்கை கிடைக்கும்.

ஈரப்பதத்தைப் பாதுகாத்தல்

வரகு மானாவாரியில் பயிரிடப்படுகிறது. இதில் நல்ல விளைச்சல் கிடைக்க, மண்ணின் ஈரப்பதத்தைக் காக்க வேண்டும். இதற்கு, முந்தைய பயிர் அறுவடை முடிந்ததும் நிலத்தை உழு வேண்டும். கோடையுழவு செய்ய வேண்டும். நிலச்சரிவுக்குக் குறுக்கில் உழ வேண்டும். நிலச்சரிவுக்கு ஏற்ப, 10-12 மீட்டர் இடைவெளியில் தடுப்பு வரப்புகளைப் போட வேண்டும். மேலும், 3.3-4.0 மீட்டர் இடைவெளியில் ஆழச்சால்களை அமைக்க வேண்டும்.

போதிய ஈரப்பதம் மண்ணில் இல்லையெனில், பண்ணைக் குட்டைகளில் உள்ள நீரை எடுத்து, தெளிப்பான் மூலம் பயிர்கள் நன்கு நனையும் வகையில் தெளிக்க வேண்டும். விதைப்பின் போது, முளைப்பின் போது, பூக்கும் போது, கதிர்கள் பால் பிடிக்கும் போது, நிலத்தில் போதிய ஈரம் இருக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

நோய்கள்: சில சமயங்களில் மணிக்கரிப்பூட்டை நோய், கதிர்களைத் தாக்கும். இந்நோய் விதை மூலம் பரவுவதால், ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் மேன்கோசப் அல்லது குளோரோதலோனில் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். மேலும், இந்நோயைத் தாங்கி வளரும் கோ.3 இரகத்தைப் பயிரிடலாம். நோயுற்ற நிலத்தில் விளைந்த தானியத்தை விதைக்கக் கூடாது.

பூச்சிகள்: விதைத்துப் பத்து நாட்களுக்குப் பிறகு குருத்து ஈக்கள் தாக்கி, சேதத்தை ஏற்படுத்தும். இதனால் நடுக்குருத்துக் காய்ந்து விடும். தாக்குதல் கடுமையாக இருந்தால், மகசூலும் பாதிக்கப்படும். விதைப்பைத் தள்ளிப் போடுவதால் இப்பூச்சியின் தாக்குதல் அதிகமாகும். எனவே, பருவமழை தொடங்கியதும் விதைத்து விட வேண்டும். தாக்குதல் அதிகமாக உள்ள பகுதிகளில் விதைகளைக் கூடுதலாக விதைக்க வேண்டும். தேவைப்படின் பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கலாம்.

அறுவடையும் சேமிப்பும்

கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்து களத்தில் காய வைத்து அடித்து, தானியங்களைப் பிரித்தெடுக்க வேண்டும். பிறகு, நன்றாகக் காய வைத்து, சுத்தம் செய்து சேமிக்க வேண்டும். உயர் விளைச்சல் இரகங்கள் மற்றும் சீரிய சாகுபடிக் குறிப்புகளைக் கடைப்பிடித்தால், எக்டருக்கு 2,000-2,500 கிலோ தானியம், 4,500-6,500 கிலோ தட்டை கிடைக்கும்.

தானியப் பயன்பாடு

உமி நீக்கப்பட்ட அரிசி, வெள்ளை மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதற்குச் சில மருத்துவக் குணங்கள் உண்டு. அதாவது, உடலில் ஏற்படும் வீக்கம், நுரையீரல் நோய்கள், வயிற்றுப்போக்கு ஆகியவற்றைக் குணமாக்கும். இதனை உண்டால் உடல் சீராக இருக்கும். வரகில் மற்ற தானியங்களில் உள்ளதைப் போலவே சத்துகள் அதிகமாக உள்ளன.

நூறு கிராம் வரகரிசியில், 8.3 கிராம் புரதம், 65.0 கிராம் மாவுச்சத்து, 1.4 கிராம் கொழுப்பு, 9.0 கிராம் நார்ச்சத்து, 2.6 கிராம் தாதுகள், 27 கிராம் சுண்ணாம்பு, 188 மி.கிராம் பாஸ்பரஸ், 12.0 கிராம் இரும்புச்சத்து ஆகியன உள்ளன. இப்படிச் சத்துகள் மிகுந்த வரகிலிருந்து, சாதம், இட்லி, தோசை, உப்புமா, கூழ், பக்கோடா போன்ற உணவுப் பொருள்களைத் தயாரித்து உண்ணலாம்.


SOWNDARARAJAN AO e1738060469141

மா.சௌந்தர்ராஜன், வேளாண்மை உதவி இயக்குநர், தொட்டியம், திருச்சி மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!