My page - topic 1, topic 2, topic 3

அங்கக முறையில் கரும்பு சாகுபடி!

கரும்பு சாகுபடி

மிழகத்தில் மூன்று இலட்சம் எக்டரில் நடைபெறும் சாகுபடி மூலம், 35.2 மில்லியன் டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சராசரி மகசூல் எக்டருக்கு 110 டன்னாகும். நவீன சாகுபடி முறைக்கும், அங்கக சாகுபடி முறைக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இவை, உர நிர்வாகம், களை நிர்வாகம் மற்றும் பூச்சி, நோய்க்கட்டுப்பாடு போன்ற, விவசாய சாகுபடி உத்திகளில் மாறுபடுகின்றன.

உர நிர்வாகம்

கரும்பில் ஊடுபயிராக, பயறுவகை அல்லது பசுந்தாள் உரப்பயிர்களை வளர்த்து, பூக்கும் பருவத்தில் மடக்கி விடுதல் மூலம், பயிர்ச் சத்துகள் மற்றும் கரும்பு மகசூலைக் கூட்டலாம். மேலும், 2 டன் மண்புழு உரத்தை அடியுரமாக இட்டு மகசூலைப் பெருக்கலாம். அடுத்து, 5 மற்றும் 7 மாதங்களில், உரிக்கப்படும் தோகைகளை, ஒரு பார் விட்டு ஒரு பாரில் போட்டு, மண்ணை அணைத்து விட வேண்டும். இதனால், கரும்புக்கு அங்கக உரம் கிடைப்பதுடன், மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறனும் கூடும். இது, வெப்பத்தில் இருந்து கரும்பைப் பாதுகாக்க உதவும்.

கரணைகளை, 2 கிலோ அசட்டோபாக்டர் மற்றும் பாஸ்போபாக்டீரியா கலவையில் முக்கி நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 5 பொட்டலம் அசோஸ்பயிரில்லம், 5 பொட்டலம் பாஸ்போபாக்டீரியா வீதம் எடுத்து, தொழுவுரத்தில் கலந்து, கரும்பை நட்ட 30 நாளில், தூர்களுக்கு அருகே இட வேண்டும். பயிர்க் கழிவுகளை மட்க வைத்து இயற்கை உரமாக இடலாம்.

கால்நடைகள் உண்ணாத, வேப்பம் புண்ணாக்கு, ஆமணக்கு, காட்டாமணக்கு, புங்கம், இலுப்பைப் புண்ணாக்கு வகைகளை, எக்டருக்கு 500 கிலோ வீதம் இடலாம். எக்டருக்கு மாதம் 50 லிட்டர் வீதம், மூன்று சதவீதப் பஞ்சகவ்யா கரைசலை எடுத்து, நான்கு மாதங்கள், பாசனநீரில் கலந்து அல்லது தெளிப்பின் மூலம் கொடுக்கலாம்.

அங்கக முறையில் களைக்கட்டுப்பாடு

+ கோடைக்காலத்தில் உழவு செய்தல்.

+ கரும்பு நடவுக்கு முன், நிலத்தில் நீரைப் பாய்ச்சி, களைகளை முளைக்க வைத்து உழுது அழித்தல்.

+ ஜூனியர் கலப்பை, விக்டரி கலப்பை போன்ற பண்ணைக் கருவிகள் மூலம், 25, 55 மற்றும் 85 நாட்களில் களைகளை அழித்தல்.

+ கரும்புத் தோகைகளைப் பரப்பி விடுவதன் மூலம், களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

+ ஊடுபயிராகக் காராமணி, பச்சைப்பயறு மற்றும் உளுந்தைப் பயிரிடலாம்.

+ பயிர்ச் சுழற்சி முறையைக் கையாளலாம்.

பூச்சி நிர்வாகம்

கரும்பைப் பாதுகாக்க, இயற்கை வழிகளைப் பின்பற்றிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதிக்காத வகையில், தாவரப் பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தி, கூடுதல் மகசூலைப் பெறலாம். வளர்ந்த புழுக்களைக் கைகளால் பொறுக்கி அழிக்கலாம். அதிக இடைவெளியில் கரும்பை நடுவதன் மூலம், நீரை அதிகமாகப் பாய்ச்சுவதன் மூலம், சரியான நேரத்தில் தோகைகளை உரிப்பதன் மூலம், கரும்பைத் தாக்கும் மூன்று வகையான துளைப்பான்களைக் கட்டுப்படுத்தலாம்.

இளங்குருத்துப் புழு: நடவு செய்த ஒரு வாரத்தில், 10 செ.மீ. உயரத்தில் கரும்புத் தோகைகளைப் பரப்பி விடலாம். கரும்பின் இளம் பருவத்தில், மே ஜூனில் இலேசாக மண்ணை அணைத்து விடலாம். எக்டருக்கு 1,25,000 வீதம் டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஒட்டுண்ணிகளை வெளியிடலாம். எக்டருக்கு 125 சினை ஈக்கள் வீதம், ஸ்டர்மியாட்சிஸ் இன்பரன்ஸ் ஒட்டுண்ணியை, நடவு முடிந்த 30 மற்றும் 45 நாட்களில் விடலாம்.

கிரைசோப்பா ஊண் விழுங்கிகளைப் பயன்படுத்தலாம். ஏக்கருக்கு 100 புழு சமன் அளவில், கிரானுலோசிஸ் நச்சுயிரியை, நடவு முடிந்து 35 மற்றும் 50 நாட்களில் தெளிக்கலாம். உளுந்து, பச்சைப்பயறு மற்றும் தக்கைப்பூண்டை ஊடுபயிராக இடலாம்.

இடைக்கணுப் புழு: சரியான நேரத்தில் மற்றும் ஒரே நேரத்தில், குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் கரும்பை நடுவதன் மூலம், இடைக்கணுப் புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். எக்டருக்கு 2.5 சி.சி. அளவில், டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணியை, நடவு முடிந்த 50, 70, 80, 90, 100, 110 ஆகிய நாட்களில் நிலத்தில் விட வேண்டும். கரும்பை நட்ட 150 மற்றும் 210 நாட்களில் காய்ந்த தோகைகளை நீக்கி, பயிரைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

நுனிக்குருத்துப் புழு: இதைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 100 ஆண், 100 பெண் இசோடிமா ஜாவன்சிஸ் ஒட்டுண்ணி வீதம் வெளியிடலாம். நுனிக்குருத்துப் புழு, பைரில்லா பூச்சி மற்றும் செதில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, பொறிவண்டு மற்றும் ஐசோடியா, எபிகார்னியா ஒட்டுண்ணிகளைப் பெருக்கி, நிலத்தில் விட வேண்டும்.

விளக்குப்பொறியை வைத்து, வேர்ப்புழு மற்றும் வெள்ளைப் புழுவின் தாக்குதலைக் குறைக்கலாம். வெந்நீரில் அல்லது நீராவியில் விதைக் கரணைகளை முக்கி எடுப்பதன் மூலம், செதில் பூச்சிகளை அழிக்கலாம். காய்ந்த தோகைகளைச் சரியான நேரத்தில் உரிப்பதன் மூலம், பைரில்லாக் கருவண்டு மற்றும் செதில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். சரியான அளவில் பாசனம் செய்தால், பைரில்லா, வேர்ப்புழு மற்றும் வெள்ளை ஈக்களின் சேதத்தைக் குறைக்கலாம்.

வேர்ப்புழு: இதைக் கட்டுப்படுத்த, கோடையில் நிலத்தை ஆழமாக உழ வேண்டும். பயிர்ச் சுழற்சி முறையைக் கையாள வேண்டும். வேர்ப்புழுத் தாக்கமுள்ள நிலத்தில் மறுதாம்புக் கரும்பு சாகுபடியைத் தவிர்க்க வேண்டும். கரையான் தாக்குதலைக் குறைக்க, கரணைகளை நடும் போது, சாலில் நன்கு நீர்க்கட்ட வேண்டும். மாவுப்பூச்சித் தாக்குதலைக் குறைக்க, காய்ந்த தோகைகளை நீக்க வேண்டும். அதிகப்படியான நீரை வடிக்க வேண்டும்.

நோய் நிர்வாகம்

செவ்வழுகல் நோய்: சுழற்சி முறையில் நெல்லைப் பயிரிடுவதன் மூலம், கரும்பைத் தாக்கும் செவ்வழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம். நோயெதிர்ப்பு இரகங்களைப் பயிர் செய்யலாம். விதைக் கரணைகளை 6-7 மாதக் கரும்புகளில் இருந்து எடுக்க வேண்டும். நோயுள்ள நிலத்தில் கிளைப்புப் பருவம் மற்றும் வளர்ச்சிப் பருவத்தில், 15 நாட்களுக்கு ஒருமுறையும், முதிர்ச்சிப் பருவத்தில் 25 நாட்களுக்கு ஒருமுறையும், நீரைக் குறைத்துக் கட்ட வேண்டும்.

கரணை அழுகல் நோய்: வடிகால் வசதி நன்றாக இருக்க வேண்டும். கரணைகளை 1-2 செ.மீ. அளவுக்கு மேலாக நட வேண்டும்.

கரிப்பூட்டை நோய்: நோயெதிர்ப்பு மிக்க இரகங்களைப் பயிரிடலாம். கரணைகளை, 50 டிகிரி செல்சியஸ் நீராவிக் காற்றில் ஒரு மணிநேரம் பதப்படுத்தி நட வேண்டும். நடவுப் பயிரில் நோயின் தாக்குதல் பத்து சதத்துக்கு மேல் இருந்தால், மறுதாம்புக்கு விடுவதைத் தவிர்க்க வேண்டும்.

புல் தண்டு நோய்: இந்நோயுள்ள நாற்றுகளைத் தூருடன் அகற்றி எரிக்க வேண்டும். கரணைகளை, 50 டிகிரி செல்சியஸ் நீராவிக் காற்றில் ஒரு மணிநேரம் பதப்படுத்தி நட வேண்டும். நோயெதிர்ப்பு மிக்க இரகங்களில், நோயின் தாக்கம் 15 சதத்துக்கு மேல் இருந்தால், மறுதாம்பு சாகுபடியைத் தவிர்க்க வேண்டும். கரும்பு அறுவடைக்குப் பிறகு, தோகைகளைத் தீ வைத்து அழிப்பதன் மூலம், பூசண நோய்களைக் கட்டுப்படுத்தலாம். நோயற்ற விதைக் கரணைகளைத் தேர்வு செய்து நட வேண்டும்.

நூற்புழுக் கட்டுப்பாடு

வேர் முடிச்சு நூற்புழு: நன்செய் நிலங்களில் சணப்பு அல்லது செண்டுமல்லி அல்லது கொளுஞ்சியை ஊடுபயிராக இடுவதன் மூலம், கரும்பு ஆலைக்கழிவு 25 டன் அல்லது 2 டன் வேப்பம் புண்ணாக்கை இடுவதன் மூலம், இந்த நூற்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

கிரிட் நூற்புழு: கடைசி உழவுக்கு முன், 5 டன் கரும்பாலைக் கழிவு அல்லது ஒரு டன் கோழியெரு அல்லது 2 டன் வேப்பம் புண்ணாக்கை இட்டால், இந்த நூற்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.


N.SATHISH KUMAR 1 e1738044337193

முனைவர் ந.சதீஷ்குமார், முனைவர் இரா.நாகேஸ்வரி, முனைவர் ப.துக்கையண்ணன், முனைவர் ஆ.அழகேசன்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!