My page - topic 1, topic 2, topic 3

நெல் ப்ளூம், நெல் ரீப்!

நெல் ரீப் e1738296521343

ந்தியாவின் முன்னணி விவசாய மாநிலமாகத் தமிழகம் விளங்கி வருகிறது. தமிழகத்தில் பயிரிடப்படும் முக்கியத் தானியப் பயிர்களில் நெல் முதன்மைப் பங்கு வகிக்கிறது. நெல் மகசூல் இழப்புக்கு, சரியான நேரத்தில் உரமிடாமை, சத்துப் பற்றாக்குறை, காலநிலை மாற்றம் ஆகியன முக்கியக் காரணிகள் ஆகும். இவற்றால், சீரான நெல் விளைச்சலில் பாதிப்பு ஏற்படுகிறது.

உர மேலாண்மை

மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரங்களை இட வேண்டும். அல்லது பொதுப் பரிந்துரைப்படி உரங்களை இட வேண்டும். நெல்லுக்குப் பொது உரப் பரிந்துரைப்படி, எக்டருக்கு 325 கிலோ யூரியா, 312 கிலோ சூப்பர் பாஸ்பேட், 83.5 கிலோ பொட்டாஷ் தேவைப்படும். சூப்பர் பாஸ்பேட் முழுவதையும் 750 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரத்தில் கலந்து அடியுரமாக இட வேண்டும்.

தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தை, நடவு முடிந்த 20-25 நாட்களிலும், அடுத்து 40-45 நாட்களிலும் இட வேண்டும். தூர்க்கட்டும் பருவத்தில், தழைச்சத்தும், சாம்பல் சத்தும் இடுதல் அதிக மகசூலைத் தரும்.

மூன்றாம் முறை உரமிடும் போது, அடுத்த இரு வாரங்களுக்குப் போதுமான நீர், பயிருக்குக் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இரும்புச்சத்துக் குறையுள்ள மண்ணில், எக்டருக்கு 50 கிலோ இரும்பு சல்பேட் வீதம் எடுத்து அடியுரமாக இடலாம். அல்லது 12.5 கிலோ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நெல் நுண்ணூட்டக் கலவையை, 1:10 வீதம் ஊட்டமேற்றிய தொழுவுரமாக ஆக்கி, தகுந்த ஈரப்பதத்தில் இட வேண்டும்.

இலைவழி நுண்ணூட்டம் அளித்தல்

நிலத்தில் துத்தநாகக் குறைபாடு இருந்தால், கைரா என்னும் நோய் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்படும். இதைத் தவிர்க்க, 0.5 சதம் துத்தநாக சல்பேட் மற்றும் 1 சத யூரியா கரைசலை, 15 நாட்கள் இடைவெளியில், குறைபாடு சரியாகும் வரை, இலை வழியாகத் தெளிக்க வேண்டும்.

ஒரு சதவீத யூரியா கரைசல், 2 சதவீத டி.ஏ.பி. கரைசல் மற்றும் ஒரு சதவீத பொட்டாசிய குளோரைடு கரைசலை, கதிர்கள் தோன்றும் போது ஒருமுறையும், அடுத்து, பத்து நாட்கள் கழித்து ஒருமுறையும் தெளிக்க வேண்டும்.

தழைச்சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: பயிர்கள் வளர்ச்சிக் குன்றியிருக்கும்.

+ அடியிலைகள் மஞ்சள் நிறமாக மாறும்.

+ வயல் முழுவதும் மஞ்சள் கலந்த பச்சை நிறமாகக் காட்சியளிக்கும்.

+ தூர்க்கட்டுதல் குறைந்து காணப்படும்.

+ கதிரில் மணிகள் பிடித்தல் குறைந்து விடும்.

தீர்வு: எக்டருக்கு 330 கிலோ யூரியா வீதம் எடுத்து, மூன்று முறை மண்ணில் இட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் யூரியா வீதம் கலந்து, பத்து நாட்கள் இடைவெளியில், அறிகுறிகள் மறையும் வரை தெளிக்க வேண்டும்.

மணிச்சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: பயிர்கள் வளர்ச்சிக் குன்றியிருக்கும்.

+ தூர்க்கட்டுதல் குறைந்து விடும்.

+ இலைகள் கரும்பச்சை நிறமாக மாறி, நெட்டுக்குத்தாக இருக்கும்.

+ மணிப்பிடிப்புக் குன்றி விடும்.

தீர்வு: ஏக்கருக்கு இரண்டு கிலோ டிஏபி வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் நன்கு கலக்கி வடித்து, டேங்குக்குப் பத்து லிட்டர் வீதம், இருபது டேங்க் கரைசலை, பயிர்களில் நன்கு படுமாறு, 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

சாம்பல் சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: பயிர்கள், மஞ்சள் கலந்த கரும்பச்சை நிறத்தில் இருக்கும்.

+ புதிய இலை விளிம்புகள் பழுப்பு நிறத்திலும், பழைய இலைகளின் நுனிகளில் பழுப்பு நிறப் புள்ளிகளும் இருக்கும்.

+ கதிரில் துருப்பிடித்த பழுப்புப் புள்ளிகள் இருக்கும். மற்றும் தரமான தானியம் உருவாகாது.

தீர்வு: ஒரு சதவீத பொட்டாசிய குளோரைடு கரைசலைத் தயாரித்து இலைகளில் தெளித்தால், கூடுதல் மகசூலைப் பெறலாம். இந்தக் கரைசலை, ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் பொட்டாசிய குளோரைடு வீதம் கலந்து தயாரிக்க வேண்டும்.

மெக்னீசியப் பற்றாக்குறை

அறிகுறிகள்: பீட்டை இலையில், இளம் மஞ்சள் நிறத்தில் நேர்கோடுகள் காணப்படும்.

+ இலையின் அடிப்பாகம் பச்சையாக இருக்கும்.

+ கதிரில் மணிப்பிடித்தல் குறைவாக இருக்கும்.

தீர்வு: பயிர்கள் பூக்கும் போதும், கதிர்களில் மணிகள் உருவாகும் போதும், ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் மெக்னீசிய சல்பேட் வீதம் கலந்து, பற்றாக்குறை அறிகுறிகள் மறையும் வரை தெளிக்க வேண்டும்.

துத்தநாகப் பற்றாக்குறை

அறிகுறிகள்: இலையின் அடிப்பாகத்தில், நடுநரம்பின் இருபுறமும், பட்டையான மஞ்சள் நிறக் கோடுகள் தோன்றும்.

+ கீழேயுள்ள இலைகளில் சிவப்புக் கலந்த பழுப்பு நிறம் காணப்படும்.

+ இலையின் பரப்புக் குறைந்து விடும்.

+ கதிர்களில் மணிகள் பிடிக்கக் காலதாமதம் ஆகும். வளர்ச்சி சீராக இருக்காது.

தீர்வு: நிலத்தில் அடியுரமாக, எக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட்டை இட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் துத்தநாக சல்பேட் வீதம் கலந்து, 15 நாட்கள் இடைவெளியில், இருமுறை தெளிக்க வேண்டும்.

போரான் பற்றாக்குறை

அறிகுறிகள்: பயிர்கள் வளர்ச்சிக் குன்றிக் காணப்படும்.

+ புதிதாக வெளிவரும் துளிர் இலைகளின் நுனிகள், வெளுத்து உள்நோக்கி சுருண்டு காணப்படும்.

+ பயிரின் முக்கியத் தூர் வளராமல், பக்கத் தூர்கள் வளரும்.

தீர்வு: எக்டருக்கு 10 கிலோ போராக்ஸ் வீதம் எடுத்து, அடியுரமாக இட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் போராக்ஸ் வீதம் கலந்து, 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

நெல் ப்ளூம்

அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான சம்பா பருவக் காலத்தில் நிலவும் குளிர்ச்சியான வானிலையால், வெய்யில் சற்றுக் குறைவாகவே இருக்கும். இந்நிலை, நெற்பயிருக்கு உகந்தது அல்ல. நெற்பயிருக்குத் தேவையான சூரியவொளி கிடைக்காமல் போவதால், ஒளிச்சேர்க்கை நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

எனவே, நெற்பயிர், தன் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துகளை, நிலத்திலிருந்து எடுப்பதில் பின்னடைவு ஏற்படுகிறது. இதனால், நெற்கதிர்களில் பதர்கள் அதிகளவில் உருவாகி, மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

இதைத் தடுக்க, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின், பயிர் வினையியல் துறை, நெல் ப்ளூம் என்னும் பூஸ்டரை வெளியிட்டு உள்ளது. இதை, ஏக்கருக்கு 2 கிலோ வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில், ஒட்டும் திரவத்துடன் கலந்து, பயிர்கள் பூக்குமுன் ஒருமுறை தெளிக்க வேண்டும். அடுத்து, இதேயளவில், கதிர்களில் பால் பிடிக்கும் போது ஒருமுறை தெளிக்க வேண்டும். இப்படி இருமுறை தெளிக்க, 4 கிலோ பூஸ்டர் தேவைப்படும்.

இந்த பூஸ்டர் மூலம், நெல்லில் ஏற்படும் பதர்களைக் குறைத்து, நிறைவான மகசூலைப் பெறலாம். இந்த பூஸ்டர், பயிர்களில் மலட்டுத் தன்மையைப் போக்கி, திரட்சியான மணிகள் நிறைந்த, தரமான கதிர்களைக் கிடைக்கச் செய்கிறது. அதனால், 15 சதம் வரை மகசூல் கூடுகிறது.

திரவநிலை நெல் ப்ளூம்

தற்போது அதிகரித்து வரும் வேலையாட்கள் தட்டுப்பாடு மற்றும் அதிகரிக்கும் சாகுபடிச் செலவைக் குறைக்க, ட்ரோன் மூலம் தெளிக்க ஏதுவாக, திரவநிலை நெல் ப்ளூமை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின், பயிர் வினையியல் துறை வெளியிட்டு உள்ளது. இதை, ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம் எடுத்து, ஒட்டும் திரவத்துடன் 19 லிட்டர் நீரில் கலந்து, பயிர்கள் பூக்குமுன் தெளிக்க வேண்டும். இதைப்போல, கதிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில், மீண்டும் ஒருமுறை ட்ரோன் மூலம் தெளிக்க வேண்டும்.

நெல் ரீப்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பயிர் வினையியல் துறை, குறுவை நெல் சாகுபடிக்கு ஏற்ற நெல் ரீப் என்னும் பூஸ்டரை வெளியிட்டு உள்ளது. இது, நெல்லுக்குத் தேவையான பேரூட்டங்கள், நுண்ணூட்டங்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த இடுபொருளாகும்.

இதைப் பயிருக்குத் தருவதன் மூலம், சத்துக்குறை மற்றும் ஹார்மோன் குறை போன்ற வினையியல் சார்ந்த பிரச்சனைகள் சரியாவதுடன், பயிருக்கு வேண்டிய சத்துகளும் கிடைக்கின்றன. இதை, ஏக்கருக்கு 2 கிலோ வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் ஒட்டும் திரவத்துடன் கலந்து, நெற்பயிரின் பீட்டைப் பருவத்தில் ஒருமுறை தெளிக்க வேண்டும்.

இந்தத் தெளிப்பிலிருந்து பத்து நாட்கள் கழித்து, இதேயளவில் மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும். இப்படி இரண்டு முறை தெளிக்க 4 கிலோ பூஸ்டர் தேவைப்படும். இதைத் தெளிப்பதன் மூலம், நெற்பயிரில் ஏற்படும் மலட்டுத் தன்மை குறைந்து, மணிப்பிடிப்புத் திறன் அதிகமாகும்.

மேலும், பயிர்களில் வறட்சி மற்றும் உயர் வெப்பத்தைத் தாங்கும் திறன் கூடும். இது, வறட்சிக் காலத்தில் தாவரத் தண்டில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருள்களை, பயிரின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த உதவுகிறது. இதனால், 15-20 சதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கும்.

பயன்கள்

+ மலட்டுத் தன்மை நீங்கி, திரட்சியான கதிர்கள் உருவாகும்.

+ நெல்லில் ஏற்படும் பதர்கள் குறைந்து, மணிப்பிடிப்புத் தன்மை அதிகரிக்கும்.

+ மகசூல் 15 சதம் வரை அதிகரிக்கும்.


C.RAJA BABU e1738060655504

முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!