My page - topic 1, topic 2, topic 3

கரும்பு பூஸ்டர்!

கரும்பு பூஸ்டர்

மிழ்நாட்டில் 1.6 இலட்சம் எக்டர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் சராசரியாக 176.58 இலட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கரும்பானது அதிக நீர்த்தேவை உள்ள பயிராக இருப்பதால், நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் மகசூல் குறைகிறது.

மேலும், கரும்பு மகசூல் இழப்புக்கு, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல், வறட்சி, நீர்த்தேக்கம் மற்றும் சத்துப் பற்றாக்குறை ஆகியன முக்கியக் காரணிகளாக உள்ளன. இவற்றில், கரும்புக்குத் தேவையான சத்துகளை இடுவதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.

உர மேலாண்மை

மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப, உரங்களை வேண்டும். அல்லது பொதுப் பரிந்துரைப்படி, உரங்களை இட வேண்டும். இவ்வகையில், எக்டருக்கு, 650 கிலோ யூரியா, 625 கிலோ சூப்பர் பாஸ்பேட், 335 கிலோ பொட்டாஷ் தேவைப்படும். இவற்றில் சூப்பர் பாஸ்பேட் முழுவதையும் அடியுரமாக இட வேண்டும். யூரியா மற்றும் பொட்டாசை, மூன்று சமப் பாகங்களாகப் பிரித்து, கரும்பு நடவு செய்த 30, 60, 90 ஆகிய நாட்களில் இட வேண்டும்.

தழைச்சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: கரும்பின் எல்லா இலைகளிலும் மஞ்சள் பச்சை நிறம் தோன்றும்.

+ கரும்பின் வளர்ச்சித் தடைபடும்.

+ கரும்புத் தண்டின் சுற்றளவு சிறுத்து விடும்.

+ வயதான இலைகள் முதிரும் முன்பே காய்ந்து விடும்.

+ வேர்கள் மிக நீளமாக வளரும். ஆனால், அதன் விட்டம் சிறிதாக இருக்கும்.

தீர்வு: தழைச்சத்து உரத்தை மண்ணில் கலந்து விட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் யூரியா வீதம் கலந்து, ஒருவார இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

மணிச்சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: வேர் வளர்ச்சி நன்றாக இருக்காது.

+ துார் விடுதல் குறைகிறது.

+ தண்டு மற்றும் வேர் விகிதம் குறைவதுடன், வேர் வளர்ச்சியும் தடைபடுகிறது.

தீர்வு: எக்டருக்கு ஒரு டன் வரை ராக் பாஸ்பேட் உரத்தை இடலாம். இரண்டு சதம் டிஏபி கரைசலைத் தயாரித்து, 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். நூறு லிட்டர் நீரில் 2 கிலோ டிஏபி வீதம் கலந்து ஊற வைத்து, இந்தக் கரைசலைத் தயாரிக்க வேண்டும்.

சாம்பல் சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: பயிரின் வளர்ச்சி மந்தமாக இருக்கும்.

+ கீழ்த்தட்டு இலைகளில், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம் தோன்றும். பிறகு, அவை பழுப்பாகிக் காய்ந்து, இலைகள் தீப்பிடித்ததைப் போலத் தெரியும்.

+ இலைகளின் நடுவில் மற்றும் நடுநரம்பின் மேற்புறச் செல்லின் மேற்பகுதி சிவப்பாக மாறும். நுனி, கொத்தாகத் தெரியும்.

+ வயதான இலைகள் மஞ்சளாக மாறுவதுடன், ஓரங்கள் காய்ந்து விடும்.

+ கரும்பு ஒல்லியாக வளரும்.

தீர்வு: ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் பொட்டாசிய குளோரைடு வீதம் எடுத்துக் கலந்து, 15 நாட்கள் இடைவெளியில் இலைகளில் தெளிக்க வேண்டும்.

சுண்ணாம்புச் சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: கரும்புத் தோகைகளின் நடுப்பகுதியில், சிறிய பசுமைச் சோகைப் புள்ளிகள் தோன்றும்.

+ பிறகு அவை, கருஞ்சிவப்புக் கலந்த பழுப்பு நிறமாக மாறும்.

+ கரும்பு மெலிந்தும், வலுவிழந்தும் காணப்படும். கரும்பு வளர்ச்சி மந்தமாக இருக்கும்.

தீர்வு: எக்டருக்கு 100 கிலோ ஜிப்சம் வீதம் எடுத்து, நிலத்தில் இட வேண்டும்.

மெக்னீசியப் பற்றாக்குறை

அறிகுறிகள்: இளம் தோகைகளின் நரம்பிடைப் பகுதியில் மஞ்சள் நிறத்தில் மணி வடிவப் புள்ளிகள் சீராகக் காணப்படும். பிறகு, அப்புள்ளிகள் இளஞ்சிவப்பு மற்றும் பழுப்பு நிறமாக மாறி விடும்.

தீர்வு: பற்றாக்குறை சரியாகும் வரை, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் மெக்னீசிய சல்பேட் வீதம் கலந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை தோகைகளில் தெளிக்க வேண்டும்.

கந்தகச்சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: கரும்புகள் பச்சையாக இல்லாமல், மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும்.

+ இது, தழைச்சத்துப் பற்றாக்குறையில் ஏற்படுவதைப் போல, இளம் தோகைகளில் பசுமைச்சோகை அதிகமாகக் காணப்படும்.

+ தண்டுகள் சிறியதாகவும், மெலிந்தும் இருக்கும், தோகைப்பகுதி குறைந்து விடும்.

தீர்வு: ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் பொட்டாசிய சல்பேட் வீதம் கலந்து, இரண்டு வார இடைவெளியில் இருமுறை தோகைகளில் தெளிக்க வேண்டும்.

போரான் பற்றாக்குறை

அறிகுறிகள்: இலை நுனியிலிருந்து 2-3 செ.மீ. அகலத்தில், அழுகிய பழுப்புநிறப் புள்ளிகள் காணப்படும். இத்தகைய அறிகுறிகள், கரும்புத் தோகைகளின் இருபுறமும் தோன்றும்.

தீர்வு: ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் போராக்ஸ் வீதம் கலந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை தோகைகளில் தெளிக்க வேண்டும்.

இரும்புச்சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: இளம் தோகைகளில் வெளிர் கோடுகள் தோன்றும். தோகையின் இணை கோடுகளுக்கு இடையில் பச்சையம் குறைந்து காணப்படும்.

+ தோகை நரம்புகள் மற்றும் நடுநரம்புகள் முழுவதும் வெள்ளையாக மாறும்.

+ கணுவிடைப்பகுதி சுருங்கி, கரும்பு வளர்ச்சியின்றிக் குட்டையாக இருக்கும்.

+ வேர்களின் வளர்ச்சித் தடைபட்டு விடும்.

தீர்வு: எக்டருக்கு 100 கிலோ பெர்ரஸ் சல்பேட் வீதம் எடுத்து, 12.5 டன் தொழுவுரத்தில் கலந்து அடியுரமாக இடலாம்.

+ அல்லது, எக்டருக்கு 5 கிலோ பெர்ரஸ் சல்பேட், 2.5 கிலோ யூரியா வீதம் எடுத்து, 500 லிட்டர் நீரில் கலந்து தோகைகளில் தெளிக்கலாம்.

+ குறைபாடு அதிகளவில் இருந்தால், இந்தத் தெளிப்பை, 7-10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் செய்யலாம்.

+ எக்டருக்கு 25 கிலோ பெர்ரஸ் சல்பேட் வீதம் எடுத்து நிலத்தில் இடலாம். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் பெர்ரஸ் சல்பேட் வீதம் கலந்து, கரும்பின் 90, 105, 120 நாட்கள் வயதில் தோகைகளில் தெளிக்கலாம்.

மாங்கனீசு பற்றாக்குறை

அறிகுறிகள்: இலை நரம்பின் இடைப்பகுதியில், பழுப்புநிறத் திட்டுகள் காணப்படும். இவை, நாளடைவில் கருஞ்சிவப்பு நிறமாக மாறிக் கருகி விடும்.

தீர்வு: எக்டருக்கு 5 கிலோ மாங்கனீசு சல்பேட் வீதம் எடுத்து, நிலத்தில் அடியுரமாக இட வேண்டும்.

+ கரும்பு நடவுக் கரணைகளை, ஒரு சத மாங்கனீசு சல்பேட் கரைசலில், அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் மாங்கனீசு சல்பேட் வீதம் கலந்த கரைசலில் முக்கியெடுத்து நட வேண்டும்.

+ ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் மாங்கனீசு சல்பேட் வீதம் கலந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை தோகைகளில் தெளிக்க வேண்டும்.

மாலிப்டினப் பற்றாக்குறை

அறிகுறிகள்: கந்தகச் சத்துப் பற்றாக்குறையைப் போலவே இதிலும் காணப்படும்.

தீர்வு: ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.கி. சோடியம் மாலிப்டேட் வீதம் கலந்து, தோகைகளில் தெளிக்க வேண்டும்.

துத்தநாகப் பற்றாக்குறை

அறிகுறிகள்: வளர்ச்சிக் குன்றிக் காணப்படும். இலை நடுவில் பெரிய காய்ந்த கோடுகளும் மற்றும் இலை நடுநரம்பின் வலப்புறம் காய்ந்த புள்ளிகளும் தோன்றும்.

தீர்வு: எக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட் வீதம் எடுத்து அடியுரமாக இட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் துத்தநாக சல்பேட் வீதம் கலந்து, 10 நாட்கள் இடைவெளியில் தோகைகளில் தெளிக்க வேண்டும்.

கரும்பு பூஸ்டர்

கரும்பில் வறட்சியைத் தாங்கும் தன்மை மற்றும் விளைச்சலை அதிகரிக்க, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின், பயிர் வினையியல் துறை, கரும்பு பூஸ்டரை வெளியிட்டு உள்ளது. இது, கரும்புக்குத் தேவையான சத்துகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த இடுபொருளாகும்.

இதை, ஏக்கருக்கு 1 கிலோ, 1.5 கிலோ மற்றும் 2 கிலோ வீதம் எடுத்து, கரும்பை நட்ட 45, 60 மற்றும் 70 நாட்களில், 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதனால், இடைக்கணுக்களின் நீளம் கூடும். கரும்பின் வளர்ச்சி மற்றும் எடை கூடும். பயிர்களில் வறட்சியைத் தாங்கும் தன்மை கூடும். மேலும், சர்க்கரைக் கட்டுமானமும் கூடும். கரும்பு மகசூல் 20 சதம் வரை அதிகமாகும்.

திரவநிலை பூஸ்டர்

தற்போது அதிகரித்து வரும் வேலையாட்கள் தட்டுப்பாடு மற்றும் அதிகரிக்கும் சாகுபடிச் செலவைக் குறைக்க, ட்ரோன் மூலம் தெளிக்க ஏதுவாக, திரவநிலை கரும்பு பூஸ்டரை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின், பயிர் வினையியல் துறை வெளியிட்டு உள்ளது. இதை, ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம் எடுத்து, 19 லிட்டர் நீரில், தேவையான ஒட்டும் திரவத்துடன் கலந்து, கரும்பை நட்ட 45, 60, 70 நாட்களில், மூன்று முறை ட்ரோன் மூலம் தெளிக்க வேண்டும்.

பயன்கள்

+ இடைக்கணுக்களின் நீளம் கூடும்.

+ கரும்பின் வளர்ச்சி மற்றும் எடை அதிகமாகும்.

+ விளைச்சல் 20 சதம் வரை அதிகமாகும்.

+ சர்க்கரைக் கட்டுமானம் கூடும்.

+ பயிரில் வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகமாகும்.


C.RAJA BABU e1738060655504

முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!