முள்ளுக்கீரை பூண்டு இனமாகும். முட்கள் இருப்பதால் முள்ளுக்கீரை ஆனது. இது எல்லா இடங்களிலும் தானாக வளரும். இதற்குக் குப்பைக்கீரை என்னும் பெயரும் உண்டு. இதில், பச்சை, சிவப்பு என இருவகை உண்டு. முள்ளுக் கீரையின் இலை, வேர் என, எல்லாப் பாகங்களும் மருந்தாகப் பயன்படும்.
இக்கீரை, பசியைத் தூண்டி உடலின் உள்ளழலை ஆற்றும். உடலுக்குச் சூட்டைத் தந்து நீரைப் பெருக்கும். வயிற்றுவலி, சிறுநீரக நீரடைப்பு, அழலை, வெள்ளைப் போக்கு, நீர்ப்பெருக்கு, சீழ்க்கட்டி, வீக்கம் ஆகிய பிணிகளை நீக்க உதவும்.
முள்ளுக் கீரையைத் துவரம் பருப்புடன் சேர்த்துப் பொரியலாக, பருப்புக் கடைசலாகச் சமைத்தால் சுவை மிகும்; பேதி கட்டுப்படும். இந்தக் கீரையில், நல்லெண்ணெய் சேர்த்து மசியலாகச் செய்து உண்பது, உடலுக்கு நன்மை பயக்கும்;
சிறுநீரக உறுப்புகளுக்கு வலுவைத் தரும்; நீர் இயல்பாக வெளியேறும். இந்தக் கீரையுடன் பாசிப்பயறு, கொள்ளு மற்றும் கொண்டைக் கடலையைச் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.
இலைகளையும் வேரையும் 100 கிராம் வீதம் எடுத்து, அத்துடன் 800 மில்லி நீரைச் சேர்த்து நூறு மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, 30 மில்லி வீதம், காலை, பகல், மாலை என அருந்தி வந்தால், நீரடைப்பு நீங்கும்.
முள்ளுக்கீரை வேர் 40 கிராம், ஓமம் 10 கிராம், பூண்டு 2 கிராம் எடுத்து அரைத்து வைத்துக் கொண்டு, 10 கிராம் வீதம் காலை, பகல், மாலை என உண்டால், வயிற்றுவலி குணமாகும்.
முள்ளுக்கீரை வேர்ச் சாம்பலை வடிகஞ்சியில் குழைத்துப் பற்றுப் போட்டால் கட்டிகள் பழுத்து உடையும். முள்ளுக்கீரை வேர், பிரண்டை வேர், கற்றாழை வேர், கடுக்காய், சுக்கு, பூண்டு, மிளகு ஆகியவற்றை 3 கிராம் வீதம் எடுத்து அரைத்து, புளித்த மோரில் கலந்து, பகலில் மட்டும் அருந்தினால் உள்மூலம் தீரும்.
முள்ளுக்கீரைச் சாறு மற்றும் வாழைத் தண்டுச் சாற்றைச் சமமாக எடுத்துக் குடித்தால், பாம்புக்கடி விஷம் தீரும். கீரையையும் வேரையும் இடித்துச் சாறெடுத்து, 50 மில்லி வீதம் குடித்து வந்தால், தேள்கடி, பாம்புக்கடி விஷம் அகலும். வேரைச் சுத்தம் செய்து நீரிலிட்டுக் காய்ச்சி, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், வெள்ளைப் படுதல், நீரடைப்பு ஆகியன கொஞ்சம் கொஞ்சமாகக் குணமாகும்.
மரு.ப.குமாரசுவாமி, மேனாள் அரசு சித்த மருத்துவர்.
சந்தேகமா? கேளுங்கள்!