நாவல் பழங்களை வைத்து, குளிர் பானங்கள், ஜெல்லி, ஜாம், ஸ்குவாஷ், ஒயின், வினிகர், ஊறுகாய் போன்ற உணவுகளைத் தயாரிக்கலாம். கோடையில் நாவல் பழத்தை உண்டால் நல்ல புத்துணர்ச்சிக் கிடைக்கும்.
நாவல் ஸ்குவாஷை, கோடையில் உண்டால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். நாவல் சிரப் வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் நல்ல நிவாரணி. நாவல் மற்றும் மாம்பழக் கலவை, தாகத்தைத் தணிப்பதோடு, சர்க்கரை நோய்க்கு மருந்தாகவும் செயல்படுகிறது.
நாவல் வினிகர் நல்ல குளிர்ச்சியைத் தரும். நாவல் பழத்தில் உள்ள டேனின், ஆந்தோ சயனின் அசிடிட்டி (அமிலத் தன்மை) போன்றவை ஜூஸ் தயாரிப்புக்கு உகந்தவை. புரதம், மாவுச்சத்து, கால்சியம் ஆகியன நிறைந்துள்ள நாவல் கொட்டைகள், கால்நடைத் தீவனத் தயாரிப்பில் பயன்படுகின்றன.
நாவல் பழமும் விதையும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தவை. நாவல் பழத்தின் கருஞ் சதையில் சர்க்கரை நோய் எதிர்ப்பாற்றல் உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு நாவல் விதைப்பொடி அல்லது விதைச் சாற்றைக் கொடுத்தால், அவர்களின் இரத்தச் சர்க்கரை அளவு விரைவில் குறையும்.
நாவல் விதையில் அடங்கியுள்ள ஆல்கலாய்டு, ஜம்போசின் மற்றும் கிளைக்கோசைட் ஜாம்போலின் அல்லது ஆன்டிமிலின் என்னும் வேதிப் பொருள்கள், மாவுச்சத்து சர்க்கரையாக மாறுவதைத் தடுக்கும். மேலும், விதைக் கரைசல், இரத்த அழுத்தத்தை 34.6 சதம் வரை குறைக்கும்.
தொகுப்பு: பசுமை
சந்தேகமா? கேளுங்கள்!