பொதுவாக, மண்ணில் நுண் சத்துகள் போதியளவில் உள்ளன. ஆயினும், பயிர்களுக்குத் தொடர்ந்து தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை மட்டுமே உரமாக இடுவதால், நிலத்தில், நுண் சத்துகளின் அளவு மிகவும் குறைந்து விடுகிறது.
இதனால், நுண்சத்துப் பற்றாக்குறை அடையாளங்கள் தோன்றும். கரும்புப் பயிரின் வளர்ச்சிக்கு, மகசூலுக்கு மற்றும் சர்க்கரைக் கட்டுமானம் கிடைக்க, இரும்பு, துத்தநாகம், மாங்கனீஸ், செம்பு, போரான், மாலிப்டினம் ஆகிய, ஆறு நுண் சத்துகள் மிகவும் அவசியம்.
கரும்பை, ஒரே நிலத்தில் தொடர்ந்து சாகுபடி செய்வதாலும், தொடர்ந்து கட்டைப் பயிராக வளர்ப்பதாலும், கரும்புக்குத் தேவையான முக்கிய நுண் சத்துகள் மண்ணில் குறைந்து விடுகின்றன.
மேலும், மண்ணில் சுண்ணாம்புச் சத்துக் கூடுதலாக இருந்தாலும், மண்ணின் கார அமில நிலை, எட்டுக்கு மேல் உயர்ந்தாலும், பாசன நீரில் பை கார்பனேட் உப்புக் கூடுதலாக இருந்தாலும், கரும்புப் பயிரில் நுண்சத்துப் பற்றாக்குறை அறிகுறிகள் தோன்றும்.
பயிர் வளர்ச்சியில் ஒன்றுக்கும் மேற்பட்ட நுண் சத்துகள் இணைந்து இயங்குவதால், நுண்சத்துப் பற்றாக்குறை அடையாளங்கள், சில நேரங்களில் தெளிவாகத் தெரிவதில்லை. கரும்புக்குத் தேவையான ஆறு முக்கிய நுண் சத்துகளில் முக்கியமானவை இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகும். எனவே, இவற்றின் பங்கு, பற்றாக்குறை அறிகுறிகள் மற்றும் சரி செய்யும் முறைகளைத் தெரிந்து கொள்வோம்.
இரும்புச்சத்து
இரும்பு, மண்ணில் அதிகமாக இருந்தாலும், பயிருக்குக் கிடைக்கும் வடிவமான இரட்டை அயனம், அதாவது, பெரஸ் என்னும் நிலையில் இருக்க வேண்டியது அவசியம். நூறு டன் கரும்பு உற்பத்திக்கு, மண்ணில் இருந்து 20 கிலோ இரும்புச் சத்து எடுக்கப்படுகிறது.
ஒளிச்சேர்க்கை மற்றும் சுவாசித்தல் நடக்க, இரும்புச்சத்து அவசியம். தோகையில் பச்சையத்தைத் தொகுக்க, இரும்புச்சத்து அவசியம். எனவே, இரும்புச்சத்துக் குறைந்தால், கரும்பில் ஒளிச்சேர்க்கை மிகவும் பாதிக்கப்படும். வேர் வளர்ச்சியும் அதன் செயல் திறனும் பாதிக்கப்படும்.
இரும்புச்சத்துப் பற்றாக்குறை அதிகமாக இருந்தால், கரும்பு மகசூல் 74 சதம் வரையும், சர்க்கரைச் சத்து 42 சதம் வரையும் குறையலாம். நல்ல கரும்பின் தோகைகளில், இரும்புச்சத்து 100-600 பி.பி.எம். இருக்கும்.
கரும்புத் தோகைகளில் குறைந்தது 20 பி.பி.எம். அளவிலாவது இரும்புச்சத்து இருக்க வேண்டும். இதற்குக் கீழே குறைந்தால், பற்றாக்குறை அறிகுறிகள் தோன்றும். மேலும், கரும்பில் 600 பி.பி.எம்.க்கு மேல் இரும்புச்சத்து இருந்தால் நச்சுத்தன்மை தோன்ற வாய்ப்புள்ளது.
பற்றாக்குறை அறிகுறிகள்: மற்ற எந்த நுண்சத்தைக் காட்டிலும், இரும்புக் குறைபாடு, கரும்பில் அதிகமாக உள்ளது. மறுதாம்புக் கரும்பில் இரும்புப் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. இதனால், இளம் தோகைகள் மஞ்சள் நிறமாக மாறி, நாளடைவில், பச்சையம் இல்லாத தோகைகளாக வெளிரி விடும்.
முதலில், தோகை நரம்புகளின் இடைவெளி மஞ்சளாக மாறும். பிறகு, தோகை முழுவதும் பரவும். இப்படி வெளுத்த தோகைகள், நாளடைவில் வெய்யிலில் காய்ந்து விடும். கரும்புக் கணுக்களின் நீளம் பாதிப்பதுடன், விளைச்சலும் அதிகளவில் பாதிக்கப்படும். மண்ணில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக இருந்தால், இரும்புச்சத்துப் பற்றாக்குறை தோன்றும்.
சரி செய்யும் முறை: நோயுற்ற கரும்புப் பயிருக்கு, அன்னபேதி என்னும் பெரஸ் சல்பேட் உப்பை, 10 லிட்டர் நீருக்கு 25-50 கிராம் வீதம் கரைத்து, இலைகள் முழுவதும் நன்றாக நனையும் வகையில், வாரம் ஒருமுறை என, பற்றாக்குறை அறிகுறிகள் மாறும் வரை, தெளிக்க வேண்டும்.
இந்த 10 லிட்டர் கலவையில் 50 கிராம் வீதம் யூரியாவையும் சேர்த்துக் கரைத்துத் தெளித்தால், பாதிக்கப்பட்ட இளம் தோகைகள் விரைவில் பசுமைத் தன்மையை அடையும். பற்றாக்குறை அதிகமாக உள்ள நிலங்களில், தொழுவுரத்தை இடுவதுடன், எக்டருக்கு 25 கிலோ வீதம் அன்னபேதி உப்பையும் அடியுரமாக இட வேண்டும்.
துத்தநாகம்
நம் நாட்டில் கரும்பு சாகுபடி நடக்கும் எல்லா மாநிலங்களிலும், துத்தநாகப் பற்றாக்குறை உள்ளது. கரும்புப்பயிர் தனக்குத் தேவையான தழைச்சத்தை எடுத்துக் கொள்ள, துத்தநாகம் அதிகமாகத் தேவைப்படுகிறது. எனவே, நிலத்தில் துத்தநாகக் குறைபாடு ஏற்படுகிறது.
பயிர் வளர்ச்சி ஊக்கியான ஆக்ஸின் என்னும் இன்டோல் அசிட்டிக் அமிலத்தைத் தயாரிக்க, துத்தநாகம் மிகவும் அவசியம். இதைத் தவிர, கரும்பின் பல்வேறு வேதிச் செயல்களுக்குத் தேவைப்படும் நொதிகளைச் செயல்படுத்தவும் துத்தநாகம் அவசியம். எனவே, கரும்புத் தோகைகளில், 40 பி.பி.எம். அளவில் துத்தநாகம் இருக்க வேண்டும். இந்த அளவு 10 பி.பி.எம். எனக் குறைந்தால், குறைகள் தென்படும்.
பற்றாக்குறை அறிகுறிகள்: துத்தநாகப் பற்றாக்குறை அறிகுறிகள், முதலில், இளம் தோகைகளில் தென்படும். கரும்புத் தண்டின் வளர்ச்சித் தடைபட்டு, தூரிலிருந்து பக்கச் சிம்புகள் முளைக்கத் தொடங்கும். பிறகு, இந்தச் சிம்புகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். வளர்ச்சிக் குறைவதால், கரும்புகள் குட்டையாக இருக்கும்.
தோகைப் பரப்புக் குறைவதுடன், தோகைகளில் இளம் மஞ்சள் புள்ளிகள் பரவலாகத் தோன்றும். துத்தநாகப் பற்றாக்குறை முற்றி விட்டால், தோகை நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உள்ள திசுக்கள் மடிந்து, வெளிர் மஞ்சள் கோடுகள் தோன்றும்.
மேலும், கரும்புத் தண்டில் உள்ள நார்த்திசுக்கள் பாதிக்கப்பட்டு, பஞ்சுத் தன்மையை அடையும். இதனால், தண்டின் மத்தியில், குழாய் போன்ற தோற்றம் உருவாகும். மேலும், சர்க்கரைச் சத்து மிகவும் குறைந்து விடும்.
சரி செய்யும் முறை: பத்து லிட்டர் நீருக்கு 25 கிராம் துத்தநாக சல்பேட் வீதம் கலந்து, பற்றாக்குறை அறிகுறிகள் மாறும் வரை, வாரம் ஒருமுறை தெளிக்க வேண்டும். துத்தநாகப் பற்றாக்குறை உள்ள நிலங்களில், எக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட் வீதம் எடுத்து, அடியுரமாக இட வேண்டும்.
கரும்புக்குத் தேவையான நுண் சத்துகளை இட்டால், நல்ல மகசூலும் சர்க்கரைச் சத்தும் கிடைக்கும். சில சமயங்களில் நுண்சத்துக் குறைபாடு தெரியா விட்டாலும் விளைச்சல் பாதிக்கப்படும்.
இதற்குக் காரணம், நுண்சத்துத் தேவை. இதைத் தான் நாம், சத்துப்பசி என்கிறோம். எனவே, கரும்புக்குத் தேவையான நுண் சத்துகளை இடுவதன் மூலமே, நல்ல விளைச்சலைப் பெற முடியும்.
முனைவர் மு.சண்முகநாதன், இணைப் பேராசிரியர், பயிர் இனப்பெருக்கத் துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!