உலகளவில், அதிகமாகப் பயிரிடப்படும் தானியப் பயிர்களில் ஒன்றாக மக்காச்சோளம் விளங்குகிறது. இது, தானியப் பயிர்களின் அரசி எனப்படுகிறது. மக்காச்சோளம், உணவுப் பொருளாக மட்டுமின்றி, கால்நடைத் தீவனப் பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் முக்கிய உணவுப் பொருளாக விளங்கும் மக்காச்சோளம், கால நிலைகளைத் தாங்கி வளரும் தன்மை மிக்கது.
தமிழ்நாட்டில், காரிப் மற்றும் ரபி பருவத்தில் ஒரு இலட்சம் எக்டர் பரப்பில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. இதற்கு, வறட்சியிலும் வளரும் தன்மை இருப்பதால், அண்மைக் காலத்தில், இதன் சாகுபடிப் பரப்பளவு அதிகரித்துள்ளது. எனினும், இதன் சராசரி உற்பத்திக் குறைந்து வருகிறது. மக்காச்சோளப் பயிர் நிலத்திலுள்ள சத்துகளை முழுமையாக எடுத்துக் கொள்வதால், சத்துக்குறை ஏற்படுகிறது. இதனால், பூக்கும் திறன் குறைந்து மகசூல் பாதிக்கப்படுகிறது. எனவே, மக்காச்சோள மகசூலைக் கூட்டுவதற்கான முறைகளைக் கையாள வேண்டும்.
உரமிடுதல்
மண் பரிசோதனைக்கு ஏற்ப, தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இட வேண்டும். இல்லையெனில், பொதுப் பரிந்துரைப்படி, சாதா இரகங்களுக்கு, எக்டருக்கு 135: 62.50: 50 கிலோ வீதம், தழை, மணி மற்றும் சாம்பல் சத்து தேவைப்படும். அதாவது, எக்டருக்கு 286 கிலோ யூரியா, 390 கிலோ சூப்பர் பாஸ்பேட், 83.5 கிலோ பொட்டாசு தேவைப்படும்.
வீரிய ஒட்டு இரகங்களுக்கு, எக்டருக்கு 250: 75: 75 கிலோ வீதம், தழை, மணி மற்றும் சாம்பல் சத்து தேவைப்படும். அதாவது, எக்டருக்கு 542 கிலோ யூரியா, 470 கிலோ சூப்பர் பாஸ்பேட், 125 கிலோ பொட்டாசு தேவைப்படும்.
+ இவற்றில், கால் பகுதி யூரியாவையும், சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் முழுவதையும் அடியுரமாக இட வேண்டும்.
+ அடுத்து, அரைப்பகுதி யூரியாவை, விதைத்த 25-ஆம் நாளிலும், மீதியுள்ள கால்பகுதி யூரியாவை 45-ஆம் நாளிலும் மேலுரமாக இட வேண்டும்.
+ உரக்கலவையைப் பார்களின் ஓரத்தில், 4 செ.மீ. ஆழத்தில் இட்டு, மண்ணால் மூட வேண்டும்.
+ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் உரத்தை இடுவதாக இருந்தால், 100 கிலோ தழைச்சத்து, அதாவது, 220 கிலோ யூரியாவை இட்டால் போதும்.
தழைச்சத்துப் பற்றாக்குறை
அறிகுறிகள்: அடியிலைகள் பொன்மஞ்சள் நிறத்தில் இருக்கும். மஞ்சள் நிறமானது, இலை நுனியிலிருந்து அடிப்பாகம் நோக்கி, நரம்புப் பகுதியின் இருபுறமும் தோன்றும்.
தீர்வு: ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் யூரியா வீதம் கலந்து, பத்து நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
மணிச்சத்துப் பற்றாக்குறை
அறிகுறிகள்: பயிர்கள் வளர்ச்சிக் குன்றியிருக்கும். முதிர்ந்த இலைகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
தீர்வு: பயிர்களில் இரண்டு சதவீத டிஏபி கரைசலை, அதாவது, நூறு லிட்டர் நீரில் 2 கிலோ டிஏபி-யைக் கரைத்துத் தெளிக்க வேண்டும்.
சாம்பல் சத்துப் பற்றாக்குறை
அறிகுறிகள்: முதிர்ந்த இலைகளில் பற்றாக்குறை காணப்படும்.
+ சீரற்ற, காய்ந்த இலைகள், சிவப்பு நிறம் கலந்து காணப்படும்.
+ இலைகளின் நுனியில் உள்ள நரம்பிடைத் திசுக்களில் கீற்றுகள் தோன்றும். இவை, படிப்படியாக நுனியில் இருந்து அடிவரை செல்வதால், இலைகள் காய்ந்து விடும்.
தீர்வு: ஒரு சத பொட்டாசிய குளோரைடு கரைசலை, அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் பொட்டாசியம் குளோரைடு வீதம் கலந்து, பயிர்களில் தெளிக்க வேண்டும்.
மெக்னீசியப் பற்றாக்குறை
அறிகுறிகள்: இலைகளில் மஞ்சள் கலந்த வெள்ளை வரிகள் தோன்றும். நரம்பிடைப் பகுதிகள் பழுப்பு நிறமாக மாறி விடும்.
தீர்வு: ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் மெக்னீசிய சல்பேட் வீதம் கலந்து, பயிர்கள் பூக்கும் போதும், மணிகள் பிடிக்கும் போதும் என, இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
போரான் பற்றாக்குறை
அறிகுறிகள்: இலைகளின் நுனி வளர்ச்சித் தடைபடும், இலைகள் ஒடிந்து, ஒழுங்கற்ற பச்சை நிறத்தில் இருக்கும்.
தீர்வு: பயிர்களில், 0.5 சதவீத போராக்ஸ் கலவையை, அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் போராக்ஸ் வீதம் கலந்து, இரண்டு வார இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
இரும்புச் சத்துப் பற்றாக்குறை
அறிகுறிகள்: இதன் பற்றாக்குறை, முதலில், புதிய இலைகளில் தான் தோன்றும்.
+ நரம்பிடைத் திசுக்கள், மங்கலான மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும். அத்துடன், இலை நரம்பின் பசுமைச் சோகையால், இலைகள் ஒரே மாதிரி மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக மாறி விடும்.
+ புதிதாகத் தோன்றும் இலைகளில் பசுமைச்சோகை அறிகுறிகள் தென்படும்.
+ பிறகு, முழுப்பயிரும் வெளிரிப் போய் விடும்.
தீர்வு: எக்டருக்கு, 20-25 கிலோ ஃபெர்ரஸ் சல்பேட் வீதம் எடுத்து, நிலத்தில் இட வேண்டும்.
+ அல்லது ஒரு சதவீத ஃபெர்ரஸ் சல்பேட் கரைசலை, அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் ஃபெரஸ் சல்பேட் வீதம் கலந்து, ஒருவார இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
தாமிரச்சத்துப் பற்றாக்குறை
அறிகுறிகள்: இளம் இலைகளின் நுனிகள் பழுப்பு நிறமாக மாறி, ஒன்றுடன் ஒன்று சுருண்டு ஒடிந்து விடும்.
தீர்வு: பயிர்களில், 0.2 சதவீத காப்பர் சல்பேட் கரைசலை, அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் காப்பர் சல்பேட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
துத்தநாகப் பற்றாக்குறை
அறிகுறிகள்: புதிய இலைகள் இளம் பச்சை நிறத்தில் தோன்றும்.
+ அடிப்பகுதியில் தோன்றும் பசுமைச்சோகை, நுனி வரை பரவும்.
+ விளிம்புகளில் சிவப்புக் கோடுகள் தெளிவாகத் தென்படும்.
+ இலையில் வெளிர் வெண் திட்டுகள் தோன்றும்.
+ முதிர்ந்த இலைகளில் மஞ்சள் நிறக் கீற்றுகள் தோன்றும். அல்லது இலை நரம்புகளின் இடையில் பசுமைச்சோகைக் கீற்றுகள் காணப்படும்.
தீர்வு: எக்டருக்கு 20-25 கிலோ துத்தநாக சல்பேட் வீதம் எடுத்து, நிலத்தில் இட வேண்டும்.
+ அல்லது 0.5 சதவீத துத்தநாக சல்பேட் கரைசலை, அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் துத்தநாக சல்பேட் வீதம் கலந்து, பயிர்களில் தெளிக்க வேண்டும்.
மக்காச்சோள மேக்சிம்
மக்காச்சோள மகசூலைப் பெருக்கும் நோக்கில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பயிர் வினையியல் துறை, மக்காச்சோள மேக்சிம் என்னும் பூஸ்டரை வெளியிட்டு உள்ளது.
இது, மக்காச்சோளத்துக்குத் தேவையான பேரூட்டங்கள், நுண்ணூட்டங்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த இடுபொருளாகும். இதை, ஏக்கருக்கு 3 கிலோ வீதம் எடுத்து 200 லிட்டர் நீரில், ஒட்டும் திரவத்துடன் கலந்து, ஆண் மஞ்சரி உருவாகும் போது தெளிக்க வேண்டும். மீண்டும் இதேயளவில் கரசலைத் தயாரித்து, மணிகள் உருவாகும் பருவத்தில் தெளிக்க வேண்டும். இப்படி இருமுறை தெளிக்க, ஏக்கருக்கு 6 கிலோ மக்காச்சோள மேக்சிம் தேவைப்படும்.
நன்மைகள்
+மக்காச்சோள மேக்சிம்மால், பயிர்களில் மணிப்பிடிப்புத் திறன் கூடும்.
+ பயிர்களில் வறட்சியைத் தாங்கும் தன்மை மிகும்.
+ எனவே, விளைச்சலும் 20 சதவீதம் வரை கூடுதலாகக் கிடைக்கும்.
திரவநிலை மக்காச்சோள மேக்சிம்
தற்போது அதிகரித்து வரும் வேலையாட்கள் தட்டுப்பாடு மற்றும் அதிகரிக்கும் சாகுபடிச் செலவைக் குறைக்க, ட்ரோன் மூலம் தெளிக்க ஏதுவாக, திரவ மக்காச்சோள மேக்சிம்மை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின், பயிர் வினையியல் துறை வெளியிட்டு உள்ளது. இதை ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம் எடுத்து, 19 லிட்டர் நீரில், ஒட்டும் திரவத்துடன் கலந்து, ஆண் மஞ்சரி உருவாகும் போது தெளிக்க வேண்டும். இதைப்போல, மணிகள் உருவாகும் பருவத்திலும் தெளிக்க வேண்டும்.
பயன்கள்
+ மணிப்பிடிப்புத் திறன் அதிகரிக்கும்.
+ விளைச்சல் 20 சதம் வரை கூடும்.
+ வறட்சியைத் தாங்கும் திறன் அதிகரிக்கும்.
முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!