My page - topic 1, topic 2, topic 3

இயற்கை வேளாண்மை முறையில் எள் சாகுபடி!

எள் சாகுபடி

ண்ணெய் வித்துப் பயிரான எள்ளைப் பயிரிடுவதற்கு, நல்ல வடிகால் வசதியுள்ள, செம்மண் அல்லது கருமண் மிகவும் ஏற்றதாகும். ஜூன் ஜூலை, அக்டோபர் நவம்பர், பிப்ரவரி மார்ச் ஆகிய காலங்கள், எள் சாகுபடிக்கு ஏற்றவை.

உழவு

நிலத்தை, 3-4 முறை இரும்புக் கலப்பை அல்லது ஐந்து முறை நாட்டுக் கலப்பை மூலம் புழுதியாக உழ வேண்டும். நிலம் சமமாக இருக்க வேண்டும். இல்லையெனில், நீர்த்தேங்கி விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்கப்படும்.

உரமிடுதல்

தொழுயெரு அல்லது கம்போஸ்ட்டை, எக்டருக்கு 12.5 டன் மற்றும் கோழியெரு 5 டன் அளவில் எடுத்து, கடைசி உழவுக்கு இட வேண்டும். ஆட்டுக்கிடை அமைத்தும், தக்கைப் பூண்டு, மணிலா அகத்தி, சித்தகத்தி, சணப்பு, கொளுஞ்சி போன்றவற்றைப் பயிரிட்டு, 45 நாட்களில் மடக்கி உழுது நன்கு மட்கச் செய்வதன் மூலமும், நிலத்துக்குத் தேவையான சத்துகளைப் பெறலாம். புங்கம், வேம்பு, எருக்கு, கிளைரிசிடியா, சவுண்டல் தழைகளை, எக்டருக்கு 6.25 டன் இட்டு உழவு செய்யலாம்.

இப்படி, இயற்கை உரங்களை இடுவதன் மூலம், மண்ணின் அங்ககச் சத்து, மண்ணின் கட்டமைப்பு மற்றும் நீரைத் தேக்கும் தன்மை அதிகரிக்கும். தாவரக் கழிவு, கரும்புத் தோகையை மட்கச் செய்து, தேவையான சத்துகளைப் பெறலாம். ஆமணக்கு, புங்கம், வேம்பு போன்ற, கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படாத புண்ணாக்கு வகைகளையும் எக்டருக்கு 1.5 டன் வீதம் இடலாம்.

ஒரு லிட்டர் மாட்டுக் கோமியம், 1 கிலோ மாட்டுச்சாணம், 250 கிராம் பனை வெல்லம் ஆகியவற்றை, 10 லிட்டர் நீரில் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்தால், அமுதக் கரைசல் தயாராகி விடும். இதை, பத்து லிட்டர் நீருக்கு ஒரு லிட்டர் வீதம் கலந்து, பாசனநீரில் சேர்த்து விடலாம். ஒவ்வொரு பாசனத்தின் போதும் இம்முறையைப் பின்பற்றலாம்.

மேலும், மூன்று சதவீதப் பஞ்சகவ்யா கரைசலில், விதைகளை நேர்த்தி செய்து விதைக்கலாம். அல்லது செடிகள் பூக்கும் போதும், அடுத்து, 15 நாட்கள் கழித்துத் தெளித்தும், பயிருக்குத் தேவையான சத்துகளைப் பெறலாம். எக்டருக்கு, 15 டன் தென்னை நார்க்கழிவு அல்லது சர்க்கரை ஆலைக்கழிவு அல்லது 5 டன் மண்புழு உரம் வீதம் இட்டு, மண்ணுக்கு வளம் சேர்க்கலாம். எக்டருக்கு 750 கிலோ வீதம் ஊட்டமேற்றிய தொழுவுரத்தை இடலாம்.

நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பயிரில்லம், அசட்டோபேக்டர், ரைசோபியம், அசோலா, நீலப்பச்சைப்பாசி போன்ற, தழைச்சத்தைத் தரும் நுண்ணுயிரிகளை, பாஸ்போபாக்டீரியா, மைக்கோரைசா போன்ற நுண்ணுயிர்களை, எக்டருக்கு 600 கிராம் வீதம் எடுத்து, விதையுடன் கலந்து நேர்த்தி செய்து விதைக்கலாம். அல்லது இவற்றை எக்டருக்கு 2 கிலோ வீதம் எடுத்து மண்ணில் இடலாம். இப்படிச் செய்தால், தழை, மணி மற்றும் துத்தநாகச்சத்துப் பயிருக்குக் கிடைக்கும்.

விதையளவும் விதை நேர்த்தியும்

எக்டருக்கு 5 கிலோ விதைகள் தேவைப்படும். இவற்றை விதைக்கு முன், ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்னும் உயிரி பூசணக்கொல்லி வீதம் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும். பிறகு, 3 பொட்டலம் அசோஸ்பயிரில்லம், 3 பொட்டலம் பாஸ்போபாக்டீரியா அல்லது 6 பொட்டலம் அசோபாஸ் நுண்ணுயிர் உரத்தில் கலந்து அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி, விதைக்க வேண்டும். பயிர் வரிசை மற்றும் பயிர் இடைவெளி 30×30 செ.மீ. இருக்க வேண்டும்.

மேலும், 10 பொட்டலம் அசோஸ்பயிரில்லம் மற்றும் 10 பொட்டலம் பாஸ்போபாக்டீரியா அல்லது 20 பொட்டலம் அசோபாசை, 25 கிலோ தொழுவுரம் அல்லது மணலில் நிலத்தில் இட வேண்டும். இதன் மூலம், எள் பயிருக்குத் தேவையான 25 சதவீதத் தழைச்சத்தைப் பெறலாம்.

களைக் கட்டுப்பாடு

களை விதைகள் கலப்பில்லாத, தூய விதைகளை விதைக்க வேண்டும். நன்கு மட்கிய சாண எரு அல்லது சாண எரிவாயுவில் பயன்படுத்திய எருவை இட்டால், சாணத்தில் உள்ள களை விதைகளின் முளைப்புத் திறனைக் குறைக்கலாம். கோடையுழவு மூலம், களைகள் பூத்து விதைகள் உருவாகாமல் தடுக்கலாம். மேலும், அறுகு, கோரை மற்றும் இதர களைகளின் மேல்பாகம் மீண்டும் மீண்டும் சிதைக்கப்படுவதால், தண்டுகள், கிழங்குகள் போன்றவை மண்ணுக்கு மேலே கொண்டு வரப்படுவதால், அவை வெய்யிலில் காய்ந்து அழியும்.

அறுவடை செய்த சீரகச் செடிகளை நிலத்தில் பரப்பி மட்கச் செய்வதன் மூலம் அறுகம்புல்லைக் கட்டுப்படுத்தலாம். போதிய பயிர் எண்ணிக்கையைப் பராமரித்து, களைச் செடிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். நிலப்போர்வை மூலமும் களைகளைக் கட்டுக்குள் வைக்கலாம். களை வளர்ச்சியைக் குறைக்கும் வகையில், தட்டைப்பயறு, சோயாபீன்ஸ் போன்ற பயிர்களை ஊடுபயிராக இடலாம்.

போட்டிச் செடிகளை வயலில் வளர்ப்பதன் மூலமும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். பயிர்ச் சுழற்சி முறையும் களைகளைக் குறைக்க உதவும். உயிரியல் முறைகளான உயிர்த் தாவரம், உயிர்க் கொல்லிகள் மற்றும் களைகளை உண்ணும் பூச்சிகள் மூலமும் களை வளர்ச்சியைத் தடுக்கலாம். பாசன வாய்க்கால்கள் சுத்தமாக இருந்தால், பெரும்பாலான களை விதைகள் வயலுக்கு வராமல் தடுக்கலாம். விதைத்து 15 மற்றும் 35 நாட்களில் கைக்களை எடுக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

எள் செடிகள் பூக்கும் போது, நீர்ப் பாய்ச்சுவது மிகவும் அவசியம். பூப்பதற்கு முன் மூன்று முறை, பூக்கும் போது ஒருமுறை, காய்கள் காய்க்கும் போது இருமுறை என, மொத்தம் ஆறு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். விதைத்த 65 நாளில், பாசனத்தை நிறுத்தி விட வேண்டும்.

பூச்சிக் கட்டுப்பாடு

இலை மற்றும் தண்டுப் பிணைப்பான், காய்த்துளைப்பான் மற்றும் எள் காய் ஈக்களைக் கட்டுப்படுத்த, 0.03 சத வேம்பு சார்ந்த மருந்துகளை இருமுறை தெளிக்க வேண்டும். மேலும், 5 சத வேப்பம் பருப்புச் சாறு கரைசல் மற்றும் 2 சத வேப்ப எண்ணெய்க் கரைசலை, இருமுறை தெளிக்க வேண்டும். சேமிப்பின் போது தாக்கும், அரிசிக் கூன்வண்டு மற்றும் அரிசி அந்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த, நூறு கிலோ விதைகளுக்கு ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் வீதம் கலந்து வைக்க வேண்டும்.

காரிப் பருவத்தில் விதைத்தால், தண்டுப் பிணைப்பான் மற்றும் காய்த்துளைப்பானின் தாக்குதலைக் குறைக்கலாம். எள்ளுக்குள், உளுந்து, பச்சைப்பயறு, கடலை, கம்பு, மாத்பீன்ஸ் போன்றவற்றை ஊடுபயிராக இட்டால், இலைப் பூச்சிகளின் தாக்குதல் குறைவதுடன், இயற்கை எதிரிகளின் எண்ணிக்கை கூடும்.

பிரக்கான் ஹெபேடர், பிரகான் பிரிவிகார்னீஸ் டிராதலா பிளேவூர்பிடாலிஸ் போன்ற ஒட்டுண்ணிகளை வெளியிடுதல், சிலந்தி போன்ற உயிர் விழுங்கிகளைப் பெருக்குதல் மூலம், எள் பயிரைத் தாக்கும் தண்டு மற்றும் காய்த்துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம். ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் வீதம் கலந்து தெளிப்பதன் மூலமும் கட்டுப்படுத்தலாம்.

நோய் மேலாண்மை

கோடையுழவு செய்தால், மண் மூலம் பரவும் வேரழுகல் மற்றும் தண்டழுகல் நோயை உருவாக்கும் கிருமிகளை அழிக்கலாம். நோயெதிர்ப்புத் திறனுள்ள இரகங்களைப் பயிரிட வேண்டும். நிலத்தில் நீர் சற்றுத் தேங்கி நிற்கும் வகையில் பாசனம் செய்வதன் மூலமும், நோய்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

ஆமணக்கு அல்லது கடுகு அல்லது வேப்பம் புண்ணாக்கை, எக்டருக்கு 500 கிலோ வீதம் நிலத்தில் இட்டு, தண்டழுகல் மற்றும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம். நிலத்தில் தொழுயெரு, தழையெருவை இட்டால், நோய்க் காரணியான பூசணத்தைக் குறைத்து, மண் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம். பயிர்ச் சுழற்சி முறையைக் கையாண்டால், ஒரு பயிரில் ஆண்டுதோறும் வரக்கூடிய வேரழுகல் போன்ற நோய்களைக் குறைக்கலாம்.

எள் பயிரில் ஏற்படும் வாடல் நோய் மற்றும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி பூசணம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். வேரழுகலைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் அல்லது 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி உயிரி பூசணக்கொல்லியை, 50 கிலோ மட்கிய தொழுவுரம் அல்லது மணலில் கலந்து, விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு நிலத்தில் இடலாம்.

பில்லோடி என்னும் இலை நோயைக் கட்டுப்படுத்த, நோயுற்ற செடிகளை அகற்றி அழித்து விட வேண்டும். மேலும், எள்ளுடன் துவரையை 6:1 வீதம் ஊடுபயிராக இட வேண்டும்.

நூற்புழுக் கட்டுப்பாடு

கரும்பாலைக் கழிவு, தேயிலைக்கழிவு, தக்கைப்பூண்டு, சணப்பு, கொளுஞ்சி, பசுந்தழை உரங்கள், வேம்பு, ஆமணக்குப் புண்ணாக்குப் போன்றவற்றை இட்டால், நூற்புழுக்கள் பெருமளவில் கட்டுப்படும். விதைக்குமுன், எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் மற்றும் 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து மண்ணில் இடலாம். மேலும், மைக்கோரைசா பூசணத்தை நிலத்தில் இட்டும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

செடியில் 75-80 சதம் காய்கள் மஞ்சள் நிறமாக மாறி, அடிக்காய்கள் வெடிக்கத் தொடங்கும் போது, அறுவடை செய்ய வேண்டும். பிறகு, செடிகளைத் தலைகீழாக 3-4 நாட்களுக்குப் பட்டறையில் வைக்க வேண்டும். அதன் பிறகு செடிகளில் இருந்து எள்ளைப் பிரித்தெடுக்க வேண்டும். எக்டருக்கு, 700-900 கிலோ எள் மகசூலாகக் கிடைக்கும்.


N.SATHISH KUMAR 1 e1738044337193

முனைவர் ந.சதீஷ்குமார், இணைப் பேராசிரியர், உழவியல் துறை, மக்காச்சோள ஆராய்ச்சி மையம், வாகரை, திண்டுக்கல் – 624 613.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!