My page - topic 1, topic 2, topic 3

பயறு ஒண்டர்!

பயறு ஒண்டர்

யறுவகைப் பயிர்கள், புரதங்கள் நிறைந்தவை. இவை, இந்திய ஏழை மக்களின் முக்கியப் புரத ஆதாரமாக விளங்குகின்றன. இவை, தானியப் பயிர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள முக்கியப் பயிர்களாகும். தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மானாவாரியாகவும், நெல் தரிசுப் பயிராகவும், பயறுவகைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 8.17 இலட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப்படும் பயறுவகைப் பயிர்கள் மூலம், 5.22 இலட்சம் டன் பயறு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அண்மைக் காலங்களில், பயறுவகைப் பயிர்களின் உற்பத்தித் திறன் குறைந்தே காணப்படுகிறது.

அதே வேளையில், பயறு வகைகளின் தேவை, மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்குத் தீர்வு வேண்டுமெனில், குறைவான சாகுபடிப் பரப்பில், அதிக மகசூலைப் பெறுவதற்கான, தொழில் நுட்பங்களைக் கையாள வேண்டும்.

உர மேலாண்மை

மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரங்களை இட வேண்டும். அல்லது பொதுவான பரிந்துரைப்படி உரங்களைப் பயன்படுத்த வேண்டும். அதாவது, எக்டருக்கு 54 கிலோ யூரியா, 312 கிலோ சூப்பர் பாஸ்பேட், 42 கிலோ பொட்டாசை இட வேண்டும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தயாரிப்பான நுண்ணூட்டக் கலவையை 5 கிலோ வீதம் இட வேண்டும்.

தழைச்சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: முதிர்ந்த இலைகளில் அறிகுறிகள் தென்படும்.

+ இலைகள் மஞ்சள் நிறமாக இருக்கும்.

+ செடிகளில் இலைகள் வளர்வது குறைந்து விடும்.

+ தண்டுகள் மெலிந்து, நோயுற்றதைப் போல இருக்கும். கிளைகள் குறைந்து காணப்படும்.

+ முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும். மற்றும் முதிராத நிலையில் இறந்து விடும்.

தீர்வு: இரண்டு சதவீத யூரியா கரைசலை, அதாவது, நூறு லிட்டர் நீருக்கு 2 கிலோ யூரியா வீதம் கலந்து, ஒருவார இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

மணிச்சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: செடிகள் சிறுத்தும், வளர்ச்சிக் குன்றியும் காணப்படும். இலைகள் ஆழ்ந்த பச்சை நிறத்தில் இருக்கும்.

தீர்வு: இரண்டு சதவீத டிஏபி கரைசலை, அதாவது, நூறு லிட்டர் நீருக்கு 2 கிலோ டிஏபி வீதம் கலந்து, இரண்டு வார இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

சாம்பல் சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: இலைகளின் விளிம்புகளில் மஞ்சள் நிறத் திட்டுகள் தென்படும்.

+ பிறகு, இந்தத் திட்டுகள் ஒன்று சேர்ந்து, இலைகளை மஞ்சள் நிறமாக மாற்றி விடும். பாதிக்கப்பட்ட இடங்களில் கரும்புள்ளிகள் தோன்றும்.

+ இலைகள் சுருண்டு காணப்படும்.

+ இலையின் அடிப்பாகத்தில் தான் அறிகுறிகள் தோன்றும்.

+ மஞ்சள் நிறமாற்றம் இலையின் அடியில் காணப்படும். மேல் இலைகள் பச்சை நிறத்திலேயே இருக்கும்.

+ விளிம்புகள் மற்றும் இலை நரம்பின் இடையில், மங்கலான மஞ்சள் நிறத்தில் அறிகுறிகள் தோன்றும்.

தீர்வு: செடிகள் பூக்கும் பருவத்தில் ஒரு சதவீத பொட்டாசிய கரைசலை, அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் பொட்டாஷ் வீதம் கலந்து, பயிர்களில் தெளிக்க வேண்டும்.

மாங்கனீசு பற்றாக்குறை

அறிகுறிகள்: இலையின் நரம்பிடைப் பகுதிகள், வெளிர் மஞ்சள் நிறமாக அல்லது வெள்ளை நிறமாக மாறி விடும். நரம்புப் பகுதிகள் வலைப் பின்னலைப் போல, பச்சை நிறமாக இருக்கும்.

தீர்வு: எக்டருக்கு 5 கிலோ மாங்கனீசு சல்பேட் வீதம் எடுத்து நிலத்தில் இட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் மாங்கனீஸ் சல்பேட் வீதம் கலந்து, பத்து நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

போரான் பற்றாக்குறை

அறிகுறிகள்: தண்டின் மேல் கணுவிடைப்பகுதி, சிறுத்துக் காணப்படும். இது, செடிகளுக்கு ரோஜாப்பூ இதழ் போன்ற தோற்றத்தை அளிக்கும்.

+ வளர் முனைக்கு அருகில் இருக்கும் மேல் இலைகள் மஞ்சள் நிறமாகவும், சில சமயங்களில் சிவப்பு நிறமாகவும் காணப்படும்.

+ இலை முனையில் அறிகுறிகள் அதிகமாகத் தோன்றும். அடியிலைகள் பச்சையாகவே இருக்கும்.

தீர்வு: பயிர்களில் 0.2 சதவீத போராக்ஸ் கரைசலைத் தயாரித்து, இரண்டு வார இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும். அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் போராக்ஸ் வீதம் கலவையைத் தயாரிக்க வேண்டும்.

இலைவழி ஊட்டத்தின் பயன்கள்

+ பயறுவகைப் பயிர்களில் புரதம் அதிகமாக இருப்பதால், இந்தப் புரத மாற்றத்துக்கு மணிச்சத்து மிகவும் அவசியம்.

+ இது, நிலத்திலிருந்து கிடைப்பதை விட, இலை மூலம் எளிதில் கிடைக்கிறது.

+ பூத்த பிறகு இலைகளில் உற்பத்தியாகும் மாவுச்சத்தே விதைகளில் சேமிக்கப்படுகிறது.

+ மேலும், பயிர்கள் பூத்த பிறகு, வேர்கள் மூலம் சத்துகளை எடுக்கும் தன்மையும், நிலத்திலிருந்து சத்துகள் கிடைப்பதும் குறைந்து விடும். எனவே, இலை மூலம் தரப்படும் நுண்ணூட்டம் நல்ல பயனை அளிக்கிறது.

பயறு ஒண்டர்

பயறுவகைப் பயிர்களில் மகசூலை அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின், பயிர் வினையியல் துறை, பயறு ஒண்டர் என்னும், பூஸ்டரை வெளியிட்டு உள்ளது. இந்த நுண்ணூட்டத்தை, ஏக்கருக்கு 2 கிலோ வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் ஒட்டும் திரவத்துடன் கலந்து, செடிகள் பூக்கும் போது, இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.

திரவநிலை பயறு ஒண்டர்

தற்போது அதிகரித்து வரும் வேலையாட்கள் தட்டுப்பாடு மற்றும் அதிகரிக்கும் சாகுபடிச் செலவைக் குறைக்க, ட்ரோன் மூலம் தெளிக்க ஏற்ற வகையில், திரவநிலைப் பயறு ஒண்டரை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின், பயிர் வினையியல் துறை வெளியிட்டு உள்ளது. இதை ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம் எடுத்து, 19 லிட்டர் நீரில், ஒட்டும் திரவத்துடன் கலந்து, பயிர்கள் பூக்கும் பருவத்தில், ட்ரோன் மூலம் தெளிக்க வேண்டும்.

பயன்கள்

+ பயறு ஒண்டர், பயறுவகைப் பயிர்களுக்குத் தேவையான நுண் சத்துகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த இடுபொருளாகும்.

+ இதை, பயிர்கள் பூக்கும் பருவத்தில், இலைகளில் தெளித்தால், பூக்கள் உதிர்வது குறையும்.

+ மானாவாரி சாகுபடியில் வறட்சியைத் தாங்கும் தன்மை செடிகளில் அதிகரிக்கும்.

+ பயிரில், பூச்சி, நோயெதிர்ப்பு சக்திக் கூடுவதுடன், மணியின் எடையும் கூடும்.

+ எனவே, பயறுவகைப் பயிர்களின் விளைச்சல் 20 சதம் வரை கூடும்.


C.RAJA BABU e1738060655504

முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!