செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில், அகஸ்டினோ பாஸி என்பவர் மஸ்கார்டைன் என்னும் சுண்ணாம்புக்கட்டி நோய், பூசணத்தால் உண்டாகிறது என்பதைக் கண்டறிந்தார். இது, கால்சினோ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோயைப் பற்றி இங்கே காணலாம்.
நோய்க்காரணி
இந்நோயானது, பிவேரியா பேசியானா, மெட்டாரைசியம் அனிசோபிலியே, அஸ்பர்ஜிலாஸ் ஆகிய பூசணங்களால் உண்டாகிறது. இந்நோய், 22 டிகிரி செல்சியசுக்கும் குறைவான வெப்பநிலை மற்றும் 80%க்கும் அதிகமாக ஈரப்பதம் நிலவும் மழை மற்றும் குளிர் காலத்தில் பரவலாகக் காணப்படும்.
புழு வளர்ப்பறையில் காற்று வெளியேறாத நிலையில் கிருமிகள் பெருகும். இந்நோயால் இறந்த புழுக்களின் இறுகிய உடலிலிருந்து 1.5 கோடி பூசண வித்துகள் உற்பத்தியாகி, காற்றின் மூலம் நல்ல புழுக்களுக்கும் பரவும். அஸ்பர்ஜிலாஸ் பூசணத்தால் உண்டாகும் நோயானது, இளம் புழுக்களை மட்டுமே தாக்கும்.
நோயின் அறிகுறிகள்
தொடக்க நிலையில் இந்நோய்த் தாக்குதலின் அறிகுறிகள் தெரிவதில்லை. ஆனால், நோய் முற்றிய நிலையில் பாதிக்கப்பட்ட புழுவின் உடலில், திட்டுத் திட்டாக, எண்ணெய்க் கறையைப் போன்ற மினுமினுப்பான அல்லது ஈரப்பதமான கரும் புள்ளிகள் தோன்றும். புழுக்கள் உணவு உண்பதை நிறுத்தி விடும்.
உடல் மென்மையாகி, தோல் நீட்சித் தன்மையை இழந்து, நகர்ந்து செல்ல முடியாமல் புழுக்கள் இருக்கும். இளம் புழுக்கள் 2-3 நாட்களிலும், வளர்ந்த புழுக்கள் 5-7 நாட்களிலும் இறந்து விடும். இறந்த புழுக்களின் உடல் கெட்டியாகி, வெள்ளை நிறமாக (வெள்ளைச் சுண்ணக்கட்டி நோய்) அல்லது பச்சை நிறமாக (பச்சைச் சுண்ணக்கட்டி நோய்) மாறிவிடும். இதனை எடுத்து உடைத்தால் பிளவுபடும் நிலையில் இருக்கும். பட்டுப்புழுவின் 4, 5-ஆம் பருவங்களில் இந்நோய்த் தாக்குதலின் அறிகுறிகள் தெளிவாகத் தெரிய வரும்.
மேலாண்மை
குளிர் காலமாக இருந்தாலும் புழு வளர்ப்பு மனையில் நல்ல காற்றோட்ட வசதி இருக்க வேண்டும். வெப்பநிலை 25 டிகிரி செல்சியசுக்குக் குறையாமலும், ஈரப்பதம் 80%க்குக் கூடாமலும் இருக்க வேண்டும். புழு வளர்ப்பு மனையைச் சுற்றி நீர்த் தேங்கக் கூடாது. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால், இளம்புழு வளர்ப்புத் தட்டில் மெழுகுத்தாள், நனைத்த நுரை ரப்பர் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
சுகாதாரமான வளர்ப்பு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். புழுப்படுக்கை மென்மையாக இருக்க வேண்டும். நேரம் தவறாமல் புழுக்களுக்கு உணவளிக்க வேண்டும். புழு வளர்ப்பு மனையின் உள்ளேயும், சுற்றிலும் நீர்த்த சுண்ணாம்புத் தூளைத் தூவி, அதிகமான ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். புழுப்படுக்கையில் சதுரடிக்கு 3 கிராம் வீதம் சுண்ணாம்புத் தூளைத் தூவி, ஈரப்பதத்தைக் குறைக்க வேண்டும்.
மழைக் காலத்தில் ஈரமான இலைகளை உணவாகக் கொடுக்கக் கூடாது. நோய் தாக்கிய புழுக்களைத் தீயிட்டு எரிக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் படுக்கைக் கிருமிநாசினிகளான அங்குஸ், சுரக்ஷா, விஜேதா ஆகியவற்றில் ஒன்றை, இளம்புழுப் படுக்கையில் சதுரடிக்கு 3 கிராம் வீதமும், முதிர்ந்த புழுப் படுக்கையில் சதுரடிக்கு 5 கிராம் வீதமும் பயன்படுத்தி இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
வெப்ப நிலையை ஒரே சீராகப் பராமரிக்க, சுழலும் ஹீட்டர்களைப் பயன்படுத்தலாம். அல்லது குறைந்த செலவில் எளிய முறையான மண்பானை அல்லது தகர டப்பாக்களில் சிறு துளைகளை இட்டு, தீக்கங்குகளை நிரப்பி, 4, 5 இடங்களில் வைக்கலாம்.
முனைவர் இராஜா.ரமேஷ், உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர் – 614 404.