My page - topic 1, topic 2, topic 3

நிலக்கடலை ரிச்!

நிலக்கடலை ரிச்

க்கள் அனைவரும் விரும்பி உண்ணும் பயிராக நிலக்கடலை உள்ளது. இது, எண்ணெய் வித்துப் பயிர்களின் அரசன் என அழைக்கப்படுகிறது. நிலக்கடலை, கடலை, வேர்க்கடலை, மல்லாட்டை, கச்சான், கல்லக்கா போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. நிலக்கடலை, உணவுப் பொருளாக மட்டுமின்றி, எண்ணெய்த் தயாரிப்பிலும், மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது.

ஒட்டு மொத்த உலக மக்களின் உணவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிலக்கடலை, வணிக நோக்கில் எண்ணெய் உற்பத்திக்கும், நேரடி உணவுக்கும் என, அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதற்குக் காரணம், இதில் நிறைந்துள்ள பாஸ்பரஸ், வைட்டமின் மற்றும் புரதச் சத்துகள் ஆகும்.

சத்து மேலாண்மை

உரமிடுதல்: மண் பரிசோதனை அடிப்படையில், தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை இட வேண்டும். மண் பரிசோதனை செய்யா விட்டால், பொதுப் பரிந்துரைப்படி உரங்களை இட வேண்டும். இறவைப் பகுதிகளில் எக்டருக்கு 25:50:75 கிலோ, தழை, மணி மற்றும் சாம்பல் சத்துத் தேவைப்படும். அதாவது, யூரியா 54 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 312.5 கிலோ, பொட்டாஷ் 125 கிலோ தேவைப்படும்.

மேலும், இந்த உரங்களுடன் 60 கிலோ கந்தகக் கழிவை இட வேண்டும். தழைச்சத்து மற்றும் மணிச்சத்தில் பாதியை அடியுரமாகவும், மீதியை இரண்டு பிரிவாகப் பிரித்து, விதைத்த 20 மற்றும் 45 நாளில் மேலுரமாக இட வேண்டும்

ஜிப்சம் இடுதல்

நிலக்கடலை சாகுபடியில் எக்டருக்கு 400 கிலோ ஜிப்சம் தேவைப்படும். இதை, இறவைப் பயிருக்கு 40-45 நாளிலும், மானாவாரிப் பயிருக்கு 40-75 நாளிலும், நிலத்திலுள்ள ஈரத்தைப் பொறுத்து, செடிகளின் ஓரத்தில் இட்டு, மண்ணை அணைத்து விட வேண்டும்.

+ நிலக்கடலையில் ஜிப்சத்தை இட்டால், மண் இலகுவாகும். இதனால், நிலத்தில் நீர்ப்பிடிப்புத் திறன், காற்றோட்டம் மேம்பட்டு மண்வளம் பெருகும்.

+ இது, நிலக்கடலைப் பருப்பு வளர்ச்சிக்கும், நல்ல வளர்ந்த முழுப் பருப்புகளைப் பெறுவதற்கும் உதவும்.

+ கால்சியம் மற்றும் கந்தகக் குறையுள்ள நிலங்களில் ஜிப்சம் இடுதல், நல்ல பலனைத் தரும்.

தழைச்சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: தழைச்சத்து முதிர்ந்த இலைகளில் இருந்து இளம் இலைகளின் வளர்ச்சிக்கு விரைவாக இடம் பெயர்ந்து விடுவதால், முதிர்ந்த இலைகளில் பற்றாக்குறை தோன்றும்.

+ இதனால், செடிகள் வளர்ச்சிக் குன்றிக் காணப்படும். தண்டு வலுவிழந்து இருக்கும்.

+ முதிர்ந்த இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாக மாறும். இலை நுனியில் வெளிர்தல், பின்னர் இலை முழுவதும் பரவும்.

+ பற்றாக்குறை அதிகமாகும் போது, இலை நரம்பு உட்பட இலை முழுவதும் மஞ்சளாகி உதிர்ந்து விடும். இதனால், மகசூல் இழப்பு ஏற்படும்.

தீர்வு: மானாவாரியில், ஏக்கருக்கு 10 கிலோ யூரியா வீதம் எடுத்து அடியுரமாக இட வேண்டும். இறவைப் பயிருக்கு 15 கிலோ வீதம் இட வேண்டும்.

+ நிலக்கடலைச் செடி, தனக்குத் தேவையான தழைச்சத்தில் 70 சதத்தை, வேர் முடிச்சுகள் மூலம், வளிமண்டலத்தில் இருந்து நேரடியாகப் பெறும். எனவே, நிலக்கடலைக்கு குறைந்தளவு தழைச்சத்தை இட்டால் போதுமானது.

+ மேலும், குறைபாடு தென்படும் போது, ஒரு சத யூரியா கரைசலை, அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் யூரியா வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

+ விதைத்த 30 மற்றும் 70 நாட்களில், ஒரு சத யூரியா கரைசலைத் தெளித்தால், அதிக விளைச்சலைப் பெறலாம்.

மணிச்சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: செடிகள் வளர்ச்சிக் குன்றிக் காணப்படும்.

+ பற்றாக்குறை முதலில் முதிர்ந்த இலைகளில் தோன்றும். இலை ஓரங்கள் நீல நிறமாக மாறும். பிறகு, இலை முழுவதும் பரவும்.

+ சில சமயங்களில் இலைகள் கரும்பச்சை நிறமாகத் தெரியும். பற்றாக்குறை அதிகமாகும் போது, இலைக்காம்பு, இலை நரம்பு மற்றும் செடி முழுவதும் நீல நிறமாக மாறுவதால், ஒளிச்சேர்க்கைத் தடைபட்டு மகசூல் இழப்பு ஏற்படும்.

+ சுண்ணாம்பு அதிகமுள்ள நிலத்தில் மணிச்சத்துப் பற்றாக்குறை அதிகமாக ஏற்படும்.

தீர்வு: அடியுரமாக, மானாவாரியில் ஏக்கருக்கு 25 கிலோ, இறவையில் ஏக்கருக்கு 85 கிலோ வீதம் சூப்பர் பாஸ்பேட்டை இட வேண்டும்.

+ தெளிந்த ஒரு சதம் சூப்பர் பாஸ்பேட் கரைசலை, அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் சூப்பர் பாஸ்பேட் வீதம் கலந்த கரைசலை, விதைத்த 30 மற்றும் 70 நாட்களில் தெளித்தால், கூடுதல் மகசூலைப் பெறலாம்.

சாம்பல் சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: முதலில் முதிர்ந்த இலைகள் பாதிக்கப்படும்.

+ இலை நுனி மற்றும் இலை ஓரங்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாக மாறிக் கருகும். இந்தக் கருகல், இலையின் மைய நரம்பை நோக்கிப் பரவும்.

+ பற்றாக்குறை அதிகமாகும் போது, இலை முழுவதும் கருகி உதிர்ந்து விடும்.

தீர்வு: அடியுரமாக மானாவாரியில் ஏக்கருக்கு 30 கிலோ பொட்டாஷ், இறவையில் ஏக்கருக்கு 36 கிலோ பொட்டாஷ் வீதம் இட வேண்டும்.

+ தெளிந்த ஒரு சதம் பொட்டாஷ் கரைசலை, அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் பொட்டாஷ் வீதம் கலந்த கரைசலை, விதைத்த 30 மற்றும் 70 நாட்களில் தெளித்தால் கூடுதல் மகசூலைப் பெறலாம்.

சுண்ணாம்புச் சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: இலை முனை மற்றும் இலை ஓரங்கள் கிழிந்து காணப்படும்.

+ வளரும் வேர் நுனி மற்றும் நுனிக்குருத்துக் கருகிக் காணப்படும்.

+ பயிரின் ஆரம்ப வளர்ச்சிப் பருவத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால் பூக்களில் சூல்பை சிதைவு ஏற்படும்.

+ பாப்ஸ் என்னும் பொக்குக் கடலை உருவாகும்.

+ காயில் உள்ள விதைப்பருப்பு வளர்ச்சிக் குன்றி, கறுப்பாக மாறிவிடும். இது, கறுப்புக் குருணை எனப்படும்.

+ இளம் இலைகளின் அடிப்பாகத்தில், சிறுசிறு குழிகள் உருவாகி, கருகிய திட்டுகளாக மாறிக் கிழிந்து விடும். மேலும், தண்டின் அடிப்பகுதியில் வெடிப்புகள் ஏற்படும்.

தீர்வு: ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் வீதம் எடுத்து அடியுரமாக இட வேண்டும்.

+ விதைத்த 45 நாட்களில் மீண்டும் 80 கிலோ ஜிப்சத்தை எடுத்து, செடிகளுக்கு அருகில் இட்டு, மண் அணைக்க வேண்டும்.

+ சுண்ணாம்புப் பாங்கான நிலங்களில் ஜிப்சத்தை இடக்கூடாது.

கந்தகச் சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: நிலக்கடலை, புரதச்சத்தைக் கூடுதலாக உற்பத்தி செய்யும் பயிர் என்பதால், கந்தகச்சத்து மிகவும் அவசியம். இதன் பற்றாக்குறையால், வளர்ச்சிக் குறைவு, செடி முழுவதும் இளம் பச்சை நிறமாதல், தண்டு மெலிந்து, செடி செங்குத்தாகத் தோன்றுதல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.

தீர்வு: முதலில், எக்டருக்கு 200 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக இட வேண்டும். விதைத்த 45 நாட்களில் மீண்டும் 200 கிலோ ஜிப்சத்தை எடுத்து, செடிகளுக்கு அருகில் இட்டு மண் அணைக்க வேண்டும்.

போரான் பற்றாக்குறை

அறிகுறிகள்: விதைகளின் உட்பகுதி குழிந்தும், கருக்குருத்துகள் நிறமாறியும் இருக்கும்.

+ காய்களில் சில சமயம் விதைகள் சுருங்கியும், விதை இல்லாமலும் காணப்படும். இதற்கு ஹாலோ ஹார்ட் என்று பெயர்.

+ இலை ஓரங்களில் கருகிய பகுதிகள் காணப்படும்.

+ வளரும் இலை நுனிச் சிறுத்தும், உருமாறியும், தடித்தும், மொரமொரப்பாகவும் இருக்கும்.

+ வளரும் காய்களின் தோலில் கருநிறப் புள்ளிகள் தோன்றும்.

+ புதிய இலைகள் உருவாகும் பகுதியில் அழுகல் தோன்றும்.

தீர்வு: ஏக்கருக்கு 5 கிலோ போராக்ஸ் வீதம் எடுத்து அடியுரமாக இட வேண்டும்.

+ செடிகள் பூக்கும் போது, 0.3 சத போராக்ஸ் கரைசலை, அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு மூன்று கிராம் போராக்ஸ் வீதம் கலந்து தெளித்தால், நல்ல பலனைப் பெறலாம்.

தாமிரச்சத்துப் பற்றாக்குறை

அறிகுறிகள்: இளம் இலைகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்.

+ இலைகள், வடிவம் மாறியும், சிதைந்தும், மஞ்சள் கலந்த வெண் புள்ளிகளுடன் இருக்கும்.

தீர்வு: செடிகளில் இந்த அறிகுறிகள் தெரிந்தால், 0.2 சத காப்பர் சல்பேட் கரைசலை, அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் காப்பர் சல்பேட் வீதம் கலந்து, இரண்டு வார இடைவெளியில், இருமுறை தெளிக்க வேண்டும்.

துத்தநாகப் பற்றாக்குறை

அறிகுறிகள்: இளம் இலைகளின் நடுநரம்புப் பகுதியில், இளமஞ்சள் நிறப்பட்டை தோன்றும்.

+ நுனி இலைகள் மஞ்சள் நிறமாகி, முற்றிலும் வளர்ச்சிக் குறைந்து, சிற்றிலைகளாகத் தோன்றும்.

தீர்வு: எக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட் வீதம் எடுத்து, அடியுரமாக இட வேண்டும்.

+ பற்றாக்குறை அறிகுறிகள் தோன்றும் போது, 100 லிட்டர் நீரில் 500 கிராம் துத்தநாக சல்பேட்டைக் கலந்து, செடிகளில் தெளிக்க வேண்டும்.

நிலக்கடலை ரிச்

நிலக்கடலை ரிச் என்பது, நிலக்கடலைக்குத் தேவையான பேரூட்டங்கள், நுண் சத்துகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டராகும். கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின், பயிர் வினையியல் துறை வெளியிட்டுள்ள இந்த பூஸ்டரை, ஏக்கருக்கு இரண்டு கிலோ வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில், ஒட்டும் திரவத்துடன் கலந்து, செடிகள் பூக்கும் போது தெளிக்க வேண்டும். மீண்டும் இதே அளவில் எடுத்து, செடிகள் காய்கள் பிடிக்கும் போதும் தெளிக்க வேண்டும்.

பயன்கள்

+ பூக்கள் அதிகமாகப் பூக்கும்.

+ செடிகளில் வறட்சியைத் தாங்கும் திறன் அதிகரிக்கும்.

+ பொக்குக் கடலைகள் உருவாவது குறையும்.

+ இதன் மூலம் விளைச்சல் 15 சதம் வரை கூடும்.


C.RAJA BABU e1738060655504

முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!