நிலக்கடலை, நம் நாட்டின் முக்கிய எண்ணெய்ப் பயிர்களுள் ஒன்றாகும். நிலக்கடலை சாகுபடிக்கு, செம்மண் அல்லது மணல் கலந்த கருமண் மிகவும் உகந்ததாகும்.
உழவு முறை
மண் புழுதியாகும் வரை நிலத்தை, 3-4 முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன், எக்டருக்கு 12.5 டன் தொழுயெரு அல்லது கம்போஸ்ட் மற்றும் 5 டன் கோழியெருவை இட வேண்டும். தக்கைப்பூண்டு, மணிலா அகத்தி, சித்தகத்தி, சணப்பு, கொளுஞ்சி போன்றவற்றை, 45 நாட்களில் மடக்கி உழுது நன்கு மட்கச் செய்வதன் மூலமும் நமக்குத் தேவையான சத்துகளைப் பெறலாம். புங்கம், வேம்பு, எருக்கு, கிளைரிசிடியா, சவுண்டல் தழைகளை, எக்டருக்கு 6.25 டன் இட்டு உழவு செய்யலாம்.
இப்படி, இயற்கை உரங்களை இடுவதன் மூலம், மண்ணின் அங்ககச் சத்து, மண்ணின் கட்டமைப்பு மற்றும் நீரைத் தேக்கும் தன்மை அதிகமாகும். தாவரக் கழிவுகளையும் கரும்புத் தோகையையும் மட்கச் செய்து, இயற்கை உரமாக இட்டு, தேவையான சத்துப் பொருள்களைப் பெறலாம்.
ஆமணக்கு, புங்கம், வேம்பு போன்ற, கால்நடை உணவாகப் பயன்படாத புண்ணாக்கு வகைகளையும், எக்டருக்கு 1.25 டன் வீதம் இடலாம். ஒரு லிட்டர் மாட்டுக் கோமியம், 1 கிலோ மாட்டுச்சாணம் மற்றும் 250 கிராம் பனை வெல்லம் கலந்த கலவையில், 10 லிட்டர் நீரைச் சேர்த்து, 24 மணி நேரம் வைத்திருந்தால், அமிர்தக் கரைசல் தயாராகி விடும். இதை, ஒரு லிட்டர் கரைசலுக்குப் பத்து லிட்டர் நீர் வீதம் பாசன நீரில் கலந்து விடலாம்.
பாசனம் செய்யும் போதெல்லாம் இம்முறையைப் பின்பற்றலாம். இதன் மூலம் பயிருக்குத் தேவையான தழைச்சத்தும் பூச்சிக் கட்டுப்பாடும் கிடைக்கும். மேலும், 3 சதவீதப் பஞ்சகவ்யா கரைசலில் விதை நேர்த்தி செய்து விதைத்தால் அல்லது பயிர்கள் பூக்கும் போதும், அடுத்து 15 நாட்கள் கழித்தும், பயிர்களில் நன்கு படும்படி தெளித்தால், பயிருக்குத் தேவையான சத்துகளைப் பெற முடியும். எக்டருக்கு 15 டன் தென்னை நார்க்கழிவு அல்லது சர்க்கரை ஆலைக்கழிவு அல்லது 5 டன் மண்புழு உரத்தை இடலாம்.
விதைக்கும் பருவம்
ஏப்ரல் – மே அல்லது ஜூலை – ஆகஸ்ட் அல்லது டிசம்பர் – ஜனவரிக் காலத்தில் விதைக்கலாம். எக்டருக்கு 120 கிலோ விதைகள் தேவைப்படும். வரிசைக்கு வரிசை 30 செ.மீ. மற்றும் செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.
விதை நேர்த்தி
நிலக்கடலையில் ஏற்படும் பூசண நோய்களைக் கட்டுப்படுத்த, விதை நேர்த்தி செய்வது அவசியம். ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் உயிரி பூசணக்கொல்லி வீதம் எடுத்து, விதைகளைக் கலந்து நேர்த்தி செய்யலாம்.
நுண்ணுயிர் உரமிடுதல்
நிலக்கடலை விதைகளை நேர்த்தி செய்த சிறிது நேரம் கழித்து 3 பொட்டலம் அசோஸ்பயிரில்லம் மற்றும் 3 பொட்டலம் ரைசோபியம் மற்றும் 3 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா அல்லது 6 பொட்டலம் அசோபாசில் கலந்து அரைமணி நேரம் கழித்து விதைக்கலாம். மேலும், விதைகளை விதைப்பதற்கு முன், 10 பொட்டலம் அசோஸ்பயிரில்லம், 10 பொட்டலம் ரைசோபியம், 10 பொட்டலம் பாஸ்போபாக்டீரியாவை எடுத்து, 25 கிலோ மணல் மற்றும் 25 கிலோ தொழுவுரத்தில் கலந்து, நிலத்தில் சீராகத் தூவலாம்.
களைக் கட்டுப்பாடு
களை விதைக் கலப்பில்லாத தூய விதைகளை விதைக்க வேண்டும். நன்கு மட்கிய சாண எருவை அல்லது சாண எரிவாயுத் தயாரிப்பில் பயன்படுத்திய சாணத்தை எருவாக இட்டால், சாணத்தில் உள்ள களை விதைகளின் முளைப்புத் திறனைக் குறைக்கலாம். கோடையுழவு செய்தால், களைகள் முளைப்பதையும், அவற்றில் இருந்து விதைகள் உருவாவதையும் தடுக்கலாம்.
மேலும், அறுகு, கோரை மற்றும் இதர களைகளின் மேல்பாகம் மீண்டும் மீண்டும் வெட்டப்படுவதாலும், தண்டுகள், கிழங்குகள் போன்றவை மண்ணுக்கு மேலே கொண்டு வரப்படுவதாலும், வெய்யிலில் காய்ந்து அழியும். போதிய பயிர் எண்ணிக்கையைப் பராமரித்தும் களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். நிலப்போர்வை மூலமும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். களைகள் வளர்வதைக் குறைக்க, தட்டைப்பயறு மற்றும் சோயாபீன்சை ஊடுபயிராக இடலாம். அறுவடை செய்த சீரகச் செடிகளை நிலத்தில் பரப்பி மட்கச் செய்தால், அறுகம்புல் கட்டுப்படும்.
போட்டிச் செடிகளை நிலத்தில் வளர்ப்பதன் மூலமும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். பயிர்ச்சுழற்சி செய்வதும், களைகளைக் குறைக்க உதவும். உயிரியல் முறைகளான உயிர்த்தாவரம், உயிர்க் கொல்லிகள் மற்றும் களைகளைச் சாப்பிடும் பூச்சிகள் மூலமும் களை வளர்ச்சியைத் தடுக்கலாம். பாசன வாய்க்கால்களைச் சுத்தமாக வைப்பதன் மூலம், பெரும்பாலான களை விதைகள் நிலத்துக்குள் வருவதைத் தடுக்கலாம். விதைத்த 20 மற்றும் 40 நாட்களில் களைக்கொத்து மூலம் களையெடுக்க வேண்டும்.
ஜிப்சம் இடுதல்
சுண்ணாம்புச் சத்தும் கந்தகச்சத்தும் குறைவாக உள்ள நிலத்தில், விதைத்த 45 நாட்களுக்குப் பிறகு, 400 கிலோ ஜிப்சத்தை இட்டு, மண்ணை அணைத்து விட வேண்டும்.
பாசனம்
நிலத்தின் ஈரத்தன்மை மற்றும் பெறப்படும் மழையைப் பொறுத்துப் பாசனம் செய்ய வேண்டும். செடியின் வளர்ச்சிப் பருவத்தில் இரண்டு முறை, பூக்கும் பருவத்தில் இரண்டு முறை, வேர் முளைவிடும் பருவத்தில் இரண்டு முறை மற்றும் காய்ப் பிடிக்கும் பருவத்தில் 5 முறை என மொத்தம், பதினொரு முறை பாசனம் செய்ய வேண்டும்.
பூச்சி நிர்வாகம்
கோடையுழவு செய்தால், நிலக்கடலையைத் தாக்கும் சிவப்புக் கம்பளிப் புழுக்கள் வேர்ப் புழுக்கள், வெள்ளைப் புழுக்கள் மற்றும் சுருள் பூச்சிகளின் முட்டைகள் மற்றும் கூட்டுப் புழுக்களை மண்ணுக்கு மேலே கொண்டு வந்து, வெய்யில் மற்றும் பறவைகள் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம். விதைப்புப் பருவத்துக்கு முன்பே விதைத்தால், முக்கியமாக, கோடைப் பருவத்தில் விதைத்தால், வெள்ளைப் புழுக்களின் தாக்குதலைக் குறைக்கலாம்.
கடைசி உழவுக்கு முன், எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை நிலத்தில் இடுவதன் மூலம், பெரும்பாலான பூச்சிகளின் முட்டைகள், புழுக்கள் மற்றும் கூட்டுப் புழுக்களின் பூச்சிகளை அழிக்கலாம். பூச்சித் தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறனுள்ள இரகங்களைப் பயிரிடலாம். சற்று நேரம் தேங்கி நிற்கும் வகையில் பாசனம் செய்வதன் மூலம், சுருள் பூச்சி மற்றும் சிவப்புக் கம்பளிப் புழுக்களின் தாக்குதலைக் குறைக்கலாம்.
நிலக்கடலையில் ஊடுபயிராகக் கம்பைப் பயிரிட்டால், சுருள் பூச்சி, இலைப்பேன் மற்றும் தத்துப் பூச்சிகள் குறையும். எக்டருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறிகள் வீதம் எடுத்து, நிலத்தில் ஆங்காங்கே வைத்து, சுருள்பூச்சி, பச்சைக்காய்ப்புழு மற்றும் சிவப்புக் கம்பளிப் பூச்சிகளின் ஆண் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
மஞ்சள் ஒட்டுப்பொறியை வைத்துச் சாறு உறிஞ்சும் பூச்சிகளை அழிக்கலாம். மூன்று சத வேப்ப எண்ணெய்க் கரைசல் அல்லது 5 சத வேப்பங் கொட்டைக் கரைசலைத் தெளித்து இளம் புழுக்களை அழிக்கலாம். எக்டருக்கு 4 கிலோ பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் பாக்டீரியாவைத் தெளித்து, அனைத்து வகை இளம் புழுக்களையும் கட்டுப்படுத்தலாம்.
நிலக்கடலைக் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு ஒரு இலட்சம் டிரைக்கோ கிரம்மா கைலோனிஸ் ஒட்டுண்ணிகள் அல்லது 50,000 கிரைசோபெர்லா கார்னியா ஒட்டுண்ணிகள் வீதம், விதைத்த 40 மற்றும் 50 நாட்களில் வெளியிடலாம். துவரை, உளுந்து மற்றும் சோயா மொச்சையை ஊடுபயிராக இட்டு, பொறிவண்டு மற்றும் சிலந்திகளைப் பெருக்கி, தத்துப்பூச்சி, அசுவினி போன்ற, சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
ஊடுபயிராகக் கம்பைப் பயிரிட்டு, சுருள் பூச்சியைத் தாக்கும் கோனியோலாஸ் ஒட்டுண்ணிகளைப் பெருக்கலாம். வெள்ளரியை ஊடுபயிராக 4:1 வீதமும், சோயா மொச்சையை 1:1 வீதமும் பொறிப்பயிராக வளர்க்கலாம். மேலும், எக்டருக்கு 12 விளக்குப் பொறிகள் வீதம் எடுத்து, இரவு 8 முதல் 11 மணி வரை வைத்து, சுருள் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
நிலக்கடலையுடன் பயறு வகையற்ற பயிர்களைப் பயிரிடலாம். டி.எம்.வி.10 நிலக்கடலை இரகத்தை விதைப்பதன் மூலமும், சுருள்பூச்சியின் தாக்குதலைக் குறைக்கலாம். விதைத்த 10 நாட்களில் எக்டருக்கு 10,000 கிலோ வைக்கோல் வீதம் பரப்பி, ஒட்டுண்ணிகளைப் பெருக்கலாம். தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த, அவரையை, நிலக்கடலையில் 1:4 வீதம் ஊடுபயிராக இடலாம்.
மானாவாரி நிலக்கடலையில் சிவப்புக் கம்பளிப் புழுக்களைக் கட்டுப்படுத்த, விளக்குப்பொறி அல்லது தீப்பந்தம் வைத்து, அவற்றின் தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். மேலும், துவரை மற்றும் தட்டைப்பயறை ஊடுபயிராக இட்டு, இளம் புழுக்கள் உள்ள இலைகள் மற்றும் முட்டைகளைச் சேகரித்து அழிக்கலாம். எக்டருக்கு 600 மி.லி. என்.பி.வி. என்னும் நியூக்ளியர் பாலிஹெட்டிரோசிஸ் வைரஸ் கரைசலைத் தெளிக்கலாம்.
படைப்புழு அல்லது வெட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த, நிலக்கடலைப் பயிரைச் சுற்றி, வரப்புப் பயிராக அல்லது ஊடுபயிராக ஆமணக்கைப் பயிரிட்டு, இப்புழுக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம். விளக்குப்பொறி அல்லது இனக்கவர்ச்சிப் பொறிகள் மூலம், தாய் அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம். எக்டருக்கு 50,000 டெலினோமஸ் ரீமஸ் முட்டை ஒட்டுண்ணிகள் மற்றும் 5,000 அபன்டிலெஸ் ஆப்ரிகானஸ் புழு ஒட்டுண்ணிகளை, மூன்று முறை வெளியிட்டு, வெட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
நோய் நிர்வாகம்
கோடையுழவு செய்து, மண் மூலம் பரவும், வேரழுகல் மற்றும் தண்டழுகல் நோயை உருவாக்கும் கிருமிகளை அழிக்கலாம். நோயெதிர்ப்புத் திறனுள்ள இரகங்களைப் பயிரிடலாம். சற்று நேரம் தேங்கி நிற்கும் அளவில் பாசனம் செய்வதன் மூலம், நோய்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். எக்டருக்கு 500 கிலோ வீதம் ஆமணக்கு அல்லது கடுகு அல்லது வேப்பம் புண்ணாக்கை எடுத்து நிலத்தில் இட்டு, தண்டழுகல் மற்றும் வேரழுகலைக் கட்டுப்படுத்தலாம். தொழுயெரு, தழையெருவை இட்டு, நோயை உண்டாக்கும் பூசணத்தைக் குறைத்து, மண் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
பயிர்ச்சுழற்சி செய்வதன் மூலம், ஒரு பயிரில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வரக்கூடிய வேரழுகல் போன்ற நோய்களைக் குறைக்கலாம். கடலைப் புண்ணாக்கு மற்றும் கிளயோக்னேடியம் வைரன்ஸ் என்னும் பூசணத்தை நிலத்தில் இட்டு, கடலையில் ஸ்கிலிரோசியம் ரால்ஸை என்னும் பூசணத்தால் ஏற்படும் தண்டழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம். ஏ.எல்.ஆர்.1 நிலக்கடலை இரகத்தைப் பயிரிட்டு, டிக்கா இலைப்புள்ளி மற்றும் துரு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
நிலக்கடலையை விதைத்து 10 மற்றும் 20 நாட்களில், 10 சதவீதத் தென்னை அல்லது சோளயிலைச் சாற்றைத் தெளித்தால், மொட்டுக்கருகல் நோயைக் குறைக்கலாம். ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் வீதம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது டிரைக்கோ டெர்மா ஹாரிசானம் பூசணத்தைக் கலந்து விதைத்தால், தண்டழுகல் மற்றும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம். மேலும், விதைத்த 30 நாட்களில், எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் புளோரசன்சை, 30 கிலோ தொழுவுரம் அல்லது மணலில் கலந்து மண்ணில் இட வேண்டும்.
இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, நோயின் தொடக்க நிலையிலேயே ப்யூசோரியம் க்ளேமிடஸ்போரியம் என்னும் நுண்ணுயிரிச் சாறு அல்லது அதன் விதை மிதப்பை, இலைகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும். பத்து சதவீத எருக்கிலைச் சாற்றை எடுத்து, இலைகளில் தெளித்து, இலைப்புள்ளி மற்றும் துரு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
மொக்கு அழிவு வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த, 15×15 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். பத்து சதவீத அளவில், தென்னை அல்லது சோளயிலைச் சாற்றை, விதைத்த 15 மற்றும் 30 நாட்களில் தெளிக்க வேண்டும். விதைத்த ஆறு வாரங்களுக்குப் பிறகு, நோயால் பாதிக்கப்படும் செடிகளை அகற்றி விட வேண்டும். நிலக்கடலை சாகுபடிக்கு அருகில், சோயா பீன்ஸ், தக்காளி, கத்தரி மற்றும் மிளகாய் சாகுபடியைத் தவிர்க்க வேண்டும்.
நூற்புழுக் கட்டுப்பாடு
கரும்பாலைக் கழிவு, தேயிலைக்கழிவு, தக்கைப்பூண்டு, சணப்பு, கொளுஞ்சி மற்றும் வேம்பு மற்றும் ஆமணக்குப் புண்ணாக்கை இட்டால், நூற்புழுக்கள் பெருமளவில் கட்டுப்படும். விதைப்பதற்கு முன் எக்டருக்கு 2.5 கிலோ வீதம் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடியை நிலத்தில் இடலாம். மேலும், மைக்கோரைசா பூசணத்தையும் நிலத்தில் இடலாம்.
அறுவடை
சரியான நேரத்தில், போதிய ஈரப்பதம் நிலத்தில் இருக்கும் போது, அறுவடை செய்ய வேண்டும். கடும் வெய்யிலில் நிலக்கடலைச் செடிகளைக் காய வைக்கக் கூடாது. எக்டருக்கு 1,800-2,000 கிலோ நிலக்கடலை கிடைக்கும்.
முனைவர் ந.சதீஷ்குமார், முனைவர் ப.துக்கையண்ணன், முனைவர் ஆ.அழகேசன், முனைவர் இரா.ஜெயஸ்ரீனிவாஸ்.
சந்தேகமா? கேளுங்கள்!