புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையத்தில், மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்புக் கருத்தரங்கம், 23.12.2024 மற்றும் 24.12.2024 ஆகிய நாட்களில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கின் தொடக்க விழாவில், வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஆ.யுவராஜா வரவேற்புரை ஆற்றினார். பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இராஜா.ரமேஷ், கருத்தரங்கின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.
திருவரங்குளம் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் சி.க.குமார், தேனீ வளர்ப்புத் தொழில் நுட்பங்கள் குறித்த கையேட்டை வெளியிட்டுத் தலைமையுரை ஆற்றினார். கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய, விற்பனை மற்றும் வேளாண் வணிக, வேளாண்மைத் துணை இயக்குநர் இரா.ஜெகதீஸ்வரி, தேனீ வளர்ப்பு மற்றும் விற்பனையில், வேளாண்மைத் துறையின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். திருவரங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் க.வெற்றிவேல் வாழ்த்துரை வழங்கினார்.
பல்வேறு தேனீ இனங்கள் மற்றும் தேனீ வளர்ப்பு முறைகள் குறித்து, மதுரை வேளாண்மை அறிவியல் நிலையப் பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் சி.சுரேஷ், விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார். தேனீ வளர்ப்பில் நீங்களும் தொழில் முனைவோர் ஆகலாம் என்னும் தலைப்பில், அரியலூர் விஸ்வஜித் தேனீப் பண்ணை நிறுவனர் முனைவர் க.பாரதிதாசன், தேனீ வளர்ப்புக் குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இயற்கை விவசாயம் மீதான ஈடுபாட்டால், கடந்த பத்து ஆண்டுகளாக, மெல்ல மெல்ல விவசாயத்தை அறிந்து கொண்டவர், திருவரங்குளம் நிஷா மைதீன். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், இயற்கை முறையில் அதிக மகசூலைப் பெறுவதற்கு உதவும், தென்னந் தோப்பில் தேனீ வளர்ப்பு என்னும் பயிற்சியைப் பெற்ற இவர், அதைத் தனது தென்னந் தோப்பில் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்.
தேனீ வளர்ப்பில் உள்ள சவால்களும் அவற்றுக்கான தீர்வுகளும் என்னும் தலைப்பில், தனது தேனீ வளர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட இவர், விவசாயிகள் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டால், பயிர் மகசூல் கூடும் என்றும், தேனீ வளர்ப்பு மூலம் வருவாயும் கிடைக்கும் என்றும் எடுத்துக் கூறினார்.
உணவு தானிய உற்பத்தியில் தேனீக்களின் பங்கு குறித்து, வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஆ.யுவராஜா விளக்கினார். தேனீ வளர்ப்பை ஊக்கப்படுத்தும், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து, உழவியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் சுப.மாரிமுத்து எடுத்துரைத்தார்.
தேனீயைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் குறித்து, பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இராஜா.ரமேஷ், மதுரம், மகரந்தம் தரும் பயிர்கள் குறித்து, மரபியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கி.தியாகு, தேனில் கிடைக்கும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் குறித்து, உணவு மற்றும் ஊட்டச்சத்தியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் செ.ஜேசுப்பிரியா பூர்ணகலா ஆகியோர் விளக்கிக் கூறினர்.
இரண்டாம் நாள் நிகழ்வாக, திருவரங்குளம் அருகேயுள்ள வேப்பங்குடி நிஷா இயற்கை வேளாண்மைப் பண்ணையில், தேனீக்களின் செயல்கள் மற்றும் தேனீப் பெட்டிகள் பராமரிப்புக் குறித்த களப்பயிற்சி, விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. நிறைவாக, கருத்தரங்கில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தக் கருத்தரங்கில், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றுப் பயனடைந்தனர்.
பேராசிரியர் மற்றும் தலைவர், தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம், வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!