My page - topic 1, topic 2, topic 3

வறட்சியில் வருமானம் தரும் சீமை இலந்தை சாகுபடி!

சீமை இலந்தை

சீமை இலந்தை ஆயுர்வேத மருத்துவத்தில் மிகவும் பயன்படுகிறது. நூறு கிராம் பழத்தில் 5.66 கிராம் மாவுச்சத்து, 0.34 கிராம் புரதச்சத்து, 0.06 சதம் கொழுப்புச் சத்து, 30.6 மி.கி. பொட்டாசியம், 6.0 மி.கி. கால்சியம், 3.0 மி.கி. மக்னீசியம், 6 மி.கி. பாஸ்பரஸ், 0.13 மி.கி. இரும்புச்சத்து, 19.3 மி.கி. வைட்டமின் சி, 0.01 மி.கி. துத்தநாகம், 0.3 மி.கி. நியாசின், 22 கி.கலோரி ஆற்றல் ஆகியன உள்ளன.

இரகங்கள்

பனாரசி, உம்ரான், கோலா, கைத்திளி, கோமா கீர்த்தி போன்றவை, முக்கியச் சீமை இலந்தை இரகங்களாகும். இந்த இரகங்களின் பண்புகளைப் பார்ப்போம்.

கைத்திளி: இதன் மரத் தண்டுகளில், நேரான முட்கள் காணப்படும். ஆனால், தெளிவாகத் தெரியாது. இலைகள் முட்டை வடிவில் சிறிய ரம்ப விளிம்புடன் இருக்கும். பழங்கள், முட்டை வடிவில், நீள்சதுர வடிவில், 3.37 செ.மீ. நீளம், 1.9 செ.மீ. தடிமன், 6.22 கிராம் எடையில் கூர்மையான நுனியுடன் இருக்கும். கொட்டை, நீள்வட்டமாக, கூர்மையான நுனியுடன் இருக்கும்.

உம்ரான்: இந்த மரங்கள், நடுத்தரமாக, தரையைத் தொடும் கிளைகளுடன், புதர் போன்ற அமைப்பில் இருக்கும். முட்கள் வளைவாக இருக்கும். முட்டை வடிவ நீள்வட்ட இலைகள், ரம்ப வடிவ விளிம்புடன் இருக்கும். பழங்கள், நீள்வட்ட வடிவில் 4.2 செ.மீ. நீளம், 3.2 செ.மீ. தடிமனில் இருக்கும்.

கோலா: இந்த மரங்கள், பரந்து விரிந்த அமைப்பில் இருக்கும். பழங்கள் தட்டையாக, கூர்மையான நுனியுடன் இருக்கும். பழத்தோல் பளபளப்பான மஞ்சள் நிறத்தில், மென்மையாக இருக்கும். இந்த இரகம், ஜனவரி மாதத்தில் அறுவடைக்கு வரும். ஒவ்வொரு பழமும் 14-25 கிராம் எடையில் இருக்கும். ஒரு மரம் ஆண்டுக்கு 100-0120 கிலோ பழங்களை மகசூலாகத் தரும்.

பனாரசி: இது, ஒரு இடைப்பருவ இரகம். மரங்கள் 8-12 மீட்டர் உயரம் வளரும். பழங்கள் கோள வடிவ நீள்வட்டமாக அல்லது நீளமான குறுகலான முனையுடன் இருக்கும். பழுக்காத காய்கள் பச்சை நிறத்தில் இருக்கும். பழுத்த பிறகு, பழங்கள் தங்க மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது, தமிழ்நாட்டுக்கு ஏற்ற இரகமாகும். ஒரு மரம் ஆண்டுக்கு 100-110 கிலோ பழங்களை மகசூலாகத் தரும்.

மண்

சீமை இலந்தை சாகுபடிக்கு, இருமண் செம்மண் நிலங்கள் மிகவும் ஏற்றவை. இப்பயிரை, உவர் நிலத்திலும், வறட்சிப் பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம். மண்ணின் கார அமிலத் தன்மை 5 முதல் 9 வரை உள்ள நிலங்களில் சாகுபடி செய்யலாம்.

தட்பவெப்ப நிலை

சீமை இலந்தையை, வெப்ப மண்டலப் பகுதிகளிலும், வறண்ட வானிலை நிலவும் பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம். அதிக வெப்பநிலை நிலவும் காலத்திலும், வறட்சிக் காலத்திலும் இலைகளை உதிர்த்து, வளர்ச்சியை நிறுத்தி, உறக்க நிலைக்குச் செல்லும்.

பயிர்ப் பெருக்கம்

சீமை இலந்தையை, மொட்டுக் கட்டிய செடி முறையில் இனப்பெருக்கம் செய்யலாம்.

நடவு முறை

சீமை இலந்தையை, வரிசைக்கு வரிசை 8 மீட்டர், செடிக்குச் செடி 8 மீட்டர் இடைவெளியில் பயிரிட வேண்டும். இதற்கான குழிகளை, 1 மீட்டர் ஆழ, அகல நீளத்தில் எடுக்க வேண்டும். குழிகளை ஆறவிட்டு, நன்கு மட்கிய தொழுவுரம் 25 கிலோ மற்றும் மேல் மண்ணால் குழிகளை நிரப்பி நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

இலந்தையில் ஆணிவேர் விரைவாகத் தோன்றுவதால், வேர்ச்செடி விதைகளை, குழிக்கு 2-3 வீதம் 3 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். விதைத்த 90 நாட்களில் நாற்றுகள் மொட்டுக் கட்டுவதற்குத் தயாராகி விடும். விருப்பமான இரகங்களில், ஓராண்டு முதிர்ச்சியுள்ள குச்சியிலிருந்து திரட்சியான மொக்குகளைத் தேர்வு செய்து, வேர்ச் செடிகளில் மூடி, மொட்டுக்கட்ட வேண்டும்.

இப்படி மொட்டுக் கட்டிய செடிகளில், ஒரு வாரத்தில் முளைகள் தோன்றத் தொடங்கும். இப்படி இல்லாமல் நாற்றங்காலிலேயே மொட்டுக்கட்டி, அந்தச் செடிகளை நன்கு தயாரித்த குழிகளில் நடவு செய்யலாம். செடிகளை, பருவமழைக் காலமான ஜூன் – ஜூலை, அக்டோபர் – நவம்பரில் நடவு செய்யலாம்.

உரமிடுதல்

நடவு செய்யும் போது, குழிக்கு 20 கிலோ தொழுவுரம், 435 யூரியா, 625 கிராம் சூப்பர் பாஸ்பேட், 335 கிராம் பொட்டாஷ் ஆகியவற்றை இட வேண்டும். அதைப்போல, இரண்டாம் ஆண்டில், கவாத்து செய்த பிறகு, 30 கிலோ தொழுவுரம், 1,085 கிராம் யூரியா, 1,250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 830 கிராம் பொட்டாஷ் ஆகியவற்றை இட வேண்டும்.

நீர் நிர்வாகம்

இளம் மரங்களுக்கு வாரம் ஒருமுறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். மானாவாரியில் பயிரிடப்படும் சீமை இலந்தை மரங்களுக்குத் தேவையான நீரைத் தேக்குவதற்கு, சாய்வுப் பாத்திகளைப் பெரியதாக அமைக்க வேண்டும். காய்க்கத் தொடங்கிய இலந்தை மரங்களுக்கு நீர்த்தேவை குறைவு. எனினும், காய்ப்பிடிப்பு நேரத்தில் நீர்ப் பாய்ச்சினால், காய்ப்பிடிப்பு அதிகமாகும்.

சொட்டுநீர்ப் பாசன முறையில் நீரைப் பாய்ச்சலாம். ஒரு செடிக்கு வாரத்துக்கு 7 லிட்டர் நீர்த் தேவைப்படும். நிலத்தில் கறுப்பு நெகிழித்தாளை விரித்தால், களைகளைக் கட்டுப்படுத்தி, நில ஈரத்தைக் காத்து, அதிக மகசூலைப் பெறலாம்.

கவாத்து செய்தல்

நடப்புப் பருவக் கிளைகளிலும், இலைக்காம்பு தண்டுகளுடன் சேரும் இடத்திலும் பூக்கள் தோன்றும். எனவே, இம்மரங்களை ஒவ்வொரு ஆண்டும் கவாத்து செய்தால், புதிய கிளைகள் மற்றும் பூக்கள் அதிகமாகத் தோன்றி, கூடுதல் மகசூலைத் தரும்.

பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும். பழங்கள் நன்கு பிடிக்க, நோயுற்று நலிந்த, குறுக்கு நெடுக்காக வளர்ந்த கிளைகளை வெட்டிவிட வேண்டும். நான்கு திசைகளிலும், பக்கக் கிளைகள் தரையிலிருந்து ஒரு மீட்டர் உயரத்துக்கு மேல் தோன்ற வேண்டும். பக்கத் துணையாகக் குச்சிகளை நட்டு, மரங்கள் நேராக வளர்வதற்கு வகை செய்ய வேண்டும்.

ஓராண்டு மரங்களில் நுனியை வெட்டி விட வேண்டும். பிறகு, ஆறு அல்லது எட்டு முதன்மைக் கிளைகள் 15-30 செ.மீ. இடைவெளியில் தோன்ற அனுமதிக்க வேண்டும். பிறகு, முதன்மைக் கிளைகளின் வளர்ச்சியைத் தடுத்து, இரண்டு மற்றும் மூன்றாம் பக்கக் கிளைகள் வளர ஊக்குவிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

பழ ஈ: இந்த ஈயின் புழுக்கள் தாக்கும் பழங்களை உண்ண முடியாது. எனவே, இத்தகைய பழங்களைச் சேகரித்து அழித்து விட வேண்டும். பழ ஈக்களைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. மானோகுரோட்டோபாஸ் அல்லது 2 மி.லி. டைமெத்தோயேட் பூச்சிக்கொல்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

லேக் பூச்சி: இந்தப் பூச்சிகள் தாக்கிய கிளைகள் மற்றும் தண்டுப் பாகத்தைக் கவாத்து செய்யும் போது, வெட்டி எரித்து விட வேண்டும். பின்பு, ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. பாஸ்போமிடான் அல்லது 2 மி.லி. மீத்தைல் டெமட்டான் மருந்து வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைக் கரும்புள்ளி நோய்: இதைக் கட்டுப்படுத்த, நோய் அறிகுறிகள் தோன்றும் போது, ஒரு லிட்டர் நீருக்கு 1 கிராம் கார்பென்டாசிம் அல்லது குளோரோ தலானில் வீதம் கலந்து, 14 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

சாம்பல் நோய்: இலந்தையில் அதிகம் சேதம் விளைவிப்பது சாம்பல் நோயாகும். இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும் போது, மகசூல் சரியாகக் கிடைக்காது. நோயுற்ற பழங்கள் வெடித்து விடும். இந்நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் கந்தகத் தூள் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

இம்மரம், நடவு செய்து ஓராண்டுக் கழித்துக் காய்க்கத் தொடங்கும். செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் தொடங்கி, அக்டோபர் கடைசி வாரம் வரை பூக்கும். பூப்பதும் காய்ப்பதும் அதிகமாக இருக்கும். பூக்கள் பூத்து, 150-175 நாட்களில் காய்கள் பழுக்கும். அறுவடைக்கு முன், எத்திபான் அல்லது 2-குளோரோ இதைல் பாஸ்பாரிக் அமிலம் 750 பி.பி.எம். வீதம் தெளித்தும், காய்களை விரைவாகப் பழுக்கச் செய்யலாம்.

சீமை இலந்தைப் பழங்களை, டிசம்பர், ஜனவரியில் அறுவடை செய்யலாம். மாலை வேளையில் அறுவடை செய்ய வேண்டும். ஒரு வயது மரத்தில் இருந்து 350 முதல் 650 பழங்கள் வரை அறுவடை செய்ய முடியும். ஒரு பழத்தின் எடை 35-55 கிராம் இருக்கும். இவ்வகையில், மரத்துக்கு ஆண்டுக்கு, 70-80 கிலோ மகசூல் கிடைக்கும். மரங்களை நன்கு பராமரித்தால், சுமார் 20 ஆண்டுகள் வரை மகசூலைத் தரும்.

பின்செய் நேர்த்தி

அறுவடை செய்த பழங்களை, பெரிய, நடுத்தர, சிறிய என, மூன்று வகைகளாகத் தரம் பிரிக்க வேண்டும். மிகவும் பழுத்த, பழுக்காத, பூச்சி மற்றும் நோய் தாக்கிய பழங்களைத் தனியாகப் பிரித்து எடுத்து விட வேண்டும். இந்தப் பழங்களை 10 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலைக்கு உட்படுத்தி, அறை வெப்ப நிலையில், கூடுதலாக மூன்று நாட்கள் சேமிக்கலாம். மேலும், 30 டிகிரி வெப்பநிலை மற்றும் 85-90 சதம் ஈரப்பதத்தில், 30 முதல் 40 நாட்கள் வரை சேமிக்கலாம்.

விதை உற்பத்தி

பூக்கள் பூத்ததில் இருந்து 13 வாரங்களில் விதைகள் முதிர்ச்சி அடையும். பழங்கள் மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும் போது அறுவடை செய்யலாம். பிரித்து எடுத்த விதைகளை 22/64 அங்குல இரும்புச் சல்லடையில் தரம் பிரிக்க வேண்டும். எவ்வித விதை நேர்த்தியும் செய்யாமல், விதைகளை 30 மாதங்கள் வரை சேமிக்கலாம்.

மருத்துவப் பயன்கள்

சீமை இலந்தை, பாரம்பரிய மருத்துவத்தில் தூக்கமின்மையைப் போக்கவும், நிம்மதியான தூக்கத்தை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது. இந்தப் பழத்தில் நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து மூலங்கள் உள்ளன. அவை, குடல் இயக்கத்தைச் சீராக்க, செரிக்க, மலத்தை இலக்கி, மலச்சிக்கலைப் போக்க உதவும். பழத்தில் உள்ள பீனாலிக் கூறுகள், ஆக்சினேற்றச் செயல்பாட்டை ஊக்குவித்து, பிரி ரேடிக்கல்களால் ஏற்படும் செல் சேதத்தைத் திறம்பட ஒத்தி வைக்கும்; புற்றுநோய் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கும்.

பழத்தில் உள்ள பொட்டாசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுகள், இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, முக்கிய உறுப்புகளுக்கு ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை வழங்கி, இரத்த ஓட்டத்தைச் சீராக்கும். மனித உடல் எடையைக் குறைப்பதில், இப்பழம் முக்கியப் பங்கு வகிக்கிறது.


ப.ஆர்த்திராணி, அ.சோலைமலை, ப.பாக்கியாத்து சாலிகா, வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி – 628 501. க.அண்ணாசாமி, புஷ்கரம் வேளாண்மைக் கல்லூரி, திருவரங்குளம், புதுக்கோட்டை மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks