My page - topic 1, topic 2, topic 3

ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் காய்கறி உற்பத்தி!

Farm

ருங்கிணைந்த பண்ணைய அணுகுமுறை என்பது, சிறு மற்றும் குறு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முழுமையான செயல் திட்டமாகும். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குப் போதிய வருமானம் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குதல் மற்றும் அதன் மூலம் வாழ்வாதாரம் மேம்படுவதை நோக்கமாகக் கொண்டது. இவ்வகையில், பண்ணைக்குள் பயிர் உற்பத்தி, தோட்டக்கலைப் பயிர்கள், கோழி மற்றும் மீன்வளம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த பண்ணையத்தில், வேளாண்மையுடன், ஆடு மாடுகள், நாட்டுக்கோழி, வாத்து, வான்கோழி ஆகியவற்றுடன் பழ மரங்கள் மற்றும் காய்கறிப் பயிர்களை உள்ளடக்கிய சத்துத் தோட்டம், ஒருங்கிணைந்த முறையில், நன்செய் சுற்றுச்சூழல் அமைப்பில் மதிப்பீடு செய்யப்பட்டது. பாரம்பரிய முறையில் பண்ணைக்குட்டை மேலாண்மை தொடர்பாக, மீன் வளர்ப்புக் குளக்கரையில், காய்கறி உற்பத்தி ஆண்டு முழுவதும் மதிப்பிடப்பட்டது. ஊட்டச்சத்து, வருமானம் மற்றும் வேலை வாய்ப்பைப் பெருக்குவதன் மூலம், வாழ்வாதாரப் பாதுகாப்பு மேம்படுவதை இந்த ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.

மீன் குளத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை, வேளாண் பயிர்கள், பழ மரங்கள், காய்கறிப் பயிர்கள் மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு விடுவதன் மூலம், இருக்கும் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி அதிக வருவாய் ஈட்டலாம்.

செயல்முறை

பொதுவாக, மீன் வளர்ப்புக் குளக்கரை நீரையும், சத்துகள் நிறைந்த குளத்தின் நீரையும் சரியாகப் பயன்படுத்துவது இல்லை. ஆனால், இந்த வளங்கள், குளக்கரைப் பழமரங்கள் மற்றும் காய்கறிகளைப் பயிரிடப் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக, சிறு குறு விவசாயிகளின் சத்துத் தேவைகளைச் சரி செய்ய, ஆண்டு முழுவதும் குளக்கரையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

சிறு குறு விவசாயிகளுக்கு, சத்துமிக்க காய்கறிகள் ஆண்டு முழுவதும் கிடைப்பதில்லை. ஆனால், இந்த ஒருங்கிணைந்த குள நிர்வாகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள், அந்தந்த வீடுகளில் உள்ளோருக்கு ஆண்டு முழுவதும் கிடைப்பது அதிகரித்தது.

மேலும், கூடுதல் காய்கறிகள் விற்பனை மூலம் கிடைத்த பணம், அந்தக் குடும்பங்களின் மொத்த வருமானம் அதிகரிக்க உதவியது. எனவே, காய்கறி உற்பத்திக்கான இந்த அணுகுமுறை, சிறு குறு விவசாயிகளுக்கான வருமானம் மற்றும் குடும்பச் சத்துக்கான தாக்கத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியது.

பண்ணை வீட்டுக்கு அருகில் 200 சதுர மீட்டர் பரப்பில், காய்கறிகள், கொய்யா, பப்பாளி, வாழை மரங்கள் மற்றும் கீரைகள் அடங்கிய தோட்டம், குடும்ப உணவுத் தேவையைச் சரி செய்யும். உபரி விளைபொருள்களை விற்கவும் முடியும். மேலும், இது, விதைச்செலவு மற்றும் பயிர்ப் பாதுகாப்புச் செலவுகளை ஈடு செய்ய வருமானத்தை அளிக்கும்.

மீன் குளத்தின் வண்டல் மற்றும் மண்புழு உரத்தை இடுவதன் மூலம், தோட்டத்துச் சத்துத் தேவையை முழுமையாகச் சரி செய்ய முடியும். குளத்தைச் சுற்றியுள்ள பயிர்களுக்கும், வயலிலுள்ள பயிர்களுக்கும், சத்தான குளத்து நீர், பாசன ஆதாரமாக இருக்கும்.

ஆராய்ச்சி முடிவுகள்

சத்துத் தோட்டத்தில், 87 மற்றும் 72 கிலோ முள்ளங்கி, 72 மற்றும் 64.5 கிலோ பீர்க்கங்காய், 59 மற்றும் 52.9 கிலோ பாகற்காய், 41 மற்றும் 36 கிலோ புடலங்காய், 187 மற்றும் 267 கிலோ வாழைப்பழம், 194 மற்றும் 178.9 கிலோ அமராந்தஸ் கீரை, 160 சதுர மீட்டர் பரப்பில் 156 மற்றும் 132 கிலோ கொத்தமல்லித் தழை, 33 மற்றும் 26 கிலோ புதினா, 17 மற்றும் 11 கிலோ சிவப்பு அமராந்தஸ் கீரை, 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டன.

இதன் மூலம், அந்தந்த வீடுகளின் உறுப்பினர்களுக்கு ஆண்டு முழுவதும் காய்கறிகள் கிடைப்பது அதிகரித்தது. மேலும், உபரிக் கீரைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனையில் கிடைத்த பணம், வீடுகளின் மொத்த வருமானம் அதிகரிக்க உதவியது.

இதன் மூலம், 2021-22 மற்றும் 2022-23 ஆண்டில் முறையே, 160 சதுர மீட்டர் பரப்புள்ள குளக்கரையில் விளைந்த கீரைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம், ரூ.9,918 மற்றும் ரூ.10,401 பெறப்பட்டது. 2015-16 மற்றும் 2016-17 ஆம் ஆண்டில் முறையே, 63 மற்றும் 57 மனித நாட்கள் சத்துத் தோட்டத்தால் உருவாக்கப்பட்டன. பண்ணையில் கரிம எச்ச உரத் தயாரிப்பின் மூலம், பண்ணைக் கழிவுகள் திறம்பட மறுசுழற்சி செய்யப்பட்டன.

முடிவுரை

ஒருங்கிணைந்த பண்ணைய ஆராய்ச்சி என்பது, சிறு குறு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பல்வகைப்பட்ட முழுமையான அணுகுமுறை ஆகும். இந்திய விவசாயப் பொருளாதார மையமாக உள்ள மொத்த விவசாய சமூகத்தில், சிறு குறு விவசாயிகள் 80 சதம் உள்ளனர். ஆனால், மொத்த விளை நிலங்களில் 36 சதம் மட்டுமே உள்ளது.

ஒருங்கிணைந்த விவசாய முறையில் உள்ள சிறியளவிலான சத்துத் தோட்டம், பன்முக உணவுப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்கியது. இதன் விளைவாக, சிறு குறு விவசாயக் குடும்பங்களுக்கு, சத்துப் பாதுகாப்புக் கிடைத்தது. மேலும், அவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, கூடுதல் வருமானம் மற்றும் வேலை வாய்ப்புக் கிடைத்தது.

உரமாகத் தயாரிக்கப்பட்ட பண்ணைக் கழிவுகள், மறுசுழற்சி செய்யப்பட்டதுடன் சத்துத் தோட்டப் பயிர்களின் உரத்தேவையையும் சரி செய்தன. இதனால், வெளிப்புற இடுபொருள்களின் சார்பு குறைந்தது. தனிநபர் குடும்பத்தின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்த, சிறு குறு விவசாயிகள் நிறைந்த பகுதிகளில், இத்தகைய மாதிரிகளை உருவாக்க முடியும்.

சான்றுகள்

ஆலம் மற்றும் இஸ்லாம். 2009. நிலையான உற்பத்தி மற்றும் வருமானத்தை உருவாக்கும் குளம் சார்ந்த விவசாய முறைகளின் ஒருங்கிணைந்த அணுகுமுறை. பங்களாதேஸ் ஜே.அக்ரில். 34 (4) 577-584. சுவர்னம் மற்றும் பிரியங்கா. 2014. இந்தியாவின் நிக்கோபார் தீவின் பழங்குடியின பகுதிகளில் நிலையான வாழ்வாதாரத்திற்கான ஒருங்கிணைந்த விவசாய முறை. அந்தமான் அறிவியல் சங்கத்தின் ஜேர்னல். 19 (1) 19-22.


S.R.Rangasamy rotated e1738130939499

முனைவர் சி.ரா.ஸ்ரீரங்கசாமி, தீவனப் பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர். முனைவர் வே.இராஜன்பாபு, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!