ஆரை, செங்குத்தாக வளரும் தண்டில், நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட சிறிய தாவரம். நல்ல நீர்ப்பிடிப்பான குளங்கள், ஓடைகள், வயல் வெளி, வாய்க்காலில் இது காணப்படும். இதில், ஆரை, புளியாரை, வல்லாரை என மூன்று வகைகள் உள்ளன. இந்த மூன்றையுமே கீரையாக, மருந்தாகப் பயன்படுத்தலாம்.
நாலிலை ஆரை
இதற்கு, ஆராக்கீரை, நீராரை, நான்கு தழை என, வேறு பெயர்களும் உண்டு. தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில், நீர்ச் சதுப்பான இடங்களில், அதிக ஆழமற்ற ஓடைகளில் வளரக்கூடிய பருவத் தாவரம். ஒவ்வொரு தண்டிலும் நான்கு இலைகளுடன் வேகமாகப் படரும் கொடியாகும்.
மனிதனுக்குத் தேவையான சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு ஆகிய தாதுப்புகளைக் கொண்ட கீரை. இதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணவாகப் பயன்படுத்தி உள்ளனர். இது, மத்திய மேற்கு ஐரோப்பாவில் காணப்பட்டது. பிறகு, இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் பரவியது.
மருத்துவக் குணங்கள்
இலைகளே மருத்துவப் பயன்களைக் கொண்டவை. ஆரைக் கீரையாகக் கடைகளில் விற்கப்படுகிறது. தினமும் உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரை நோய் கட்டுப்படும்.
இந்த இலைகளைப் பச்சையாக மென்று சாபிட்டால், வாய்ப்புண் குணமாகும். மேலும், நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு மற்றும் தொற்று நோய்களும் குணமாகும். இலைகளை அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால், தலைவலி குணமாகும்.
இந்தக் கீரையை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக் கொண்டு, 10 கிராம் வீதம் எடுத்து, அரை லிட்டர் நீரில் கலந்து அதைப் பாதியாகச் சுண்டக் காய்ச்ச வேண்டும்.
பிறகு, இதில் பனங் கற்கண்டு, 100 மில்லி பால் ஆகியவற்றைச் சேர்த்து இரண்டு வேளை குடித்தால், அதிக தாகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து வருதல் போன்றவை குணமாகும். உடல் வெப்பம் குறையும்; தாகம் தணியும்; நன்கு பசிக்கும்.
புளியாரை
முக்கூட்டு இலைகளைக் கொண்ட சிறு செடியான இது, நிலத்தில் படர்ந்து இருக்கும். நீர்வளமுள்ள இடங்களில் மற்றும் மலைகளில் காணப்படும். இது, புளிப்புச் சுவை மிக்கது. அதனால் தான் இது புளியாரை எனப்படுகிறது.
இச்செடியில் மஞ்சள் நிறப் பூக்கள் பூக்கும். இந்த இலைகளைப் பருப்புடன் கூட்டாகச் சமைத்து அல்லது துவையலாக உண்ணலாம். இம்மூலிகை காய சித்தியை அளிக்க வல்லது என்று, வள்ளலார் இராமலிங்க அடிகள் சிறப்பித்துக் கூறியுள்ளார்.
மருத்துவக் குணங்கள்
இலைகளே மருத்துவப் பயனுடையவை. இதைப் பாசிப் பருப்புடன் சேர்த்துக் கூட்டாக்கிச் சாப்பிட்டால், மூலவாயு, மூலக்கடுப்பு, இரத்தக் கழிச்சல் ஆகியன தீரும். தீராத வயிற்றுப் புண் குணமாகும்.
அதிகமான பித்தம், மயக்கம், சுவையின்மை போன்றவை அகலும். இலைகளைச் சிறிது நீர் விட்டு அரைத்து, வலியுள்ள கட்டிகள் மற்றும் வீக்கத்தின் மீது தடவினால் அவை குணமாகும்.
இலைகளுடன் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து அரைத்து, மரு, பரு மற்றும் பாலுண்ணி மீது, தொடர்ந்து ஒருமாதம் வரையில் பூசி வந்தால், அவை தழும்பே இல்லாமல் மறையும். இலைகளை அரைத்துச் சாறெடுத்து, காலை மாலையில் 10 மில்லி வீதம் பருகி வந்தால், சீதபேதி குணமாகும்.
முனைவர் மா.விமலாராணி, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் நிலையம், கள்ளக்குறிச்சி.
சந்தேகமா? கேளுங்கள்!