எல்லா வீடுகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய சில மூலிகைகளை இங்கே பார்க்கலாம்.
துளசி
துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேப்பம் பட்டையைச் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்தால் காய்ச்சல் குணமாகும்.
துளசி இலைகளைப் புட்டைப் போல அவித்து, இடித்துப் பிழிந்து சாறெடுத்து, தேனுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால், சளி குணமாகும்.
துளசி இலைகளை மென்று தின்றால், செரிக்கும் சக்தியும் பசியும் அதிகமாகும்.
தூதுவளை
தூதுவளையில் மிளகைச் சேர்த்துக் காய்ச்சிக் குடித்தால் வறட்டு இருமல் குறையும்.
தூதுவளைப் பழங்களைக் காய வைத்து வதக்கிச் சாப்பிட்டால் கண் குறைகள் நீங்கும்.
தூதுவளையில் கால்சியம் அதிகமாக இருப்பதால், எலும்பும் பற்களும் பலப்படும்.
அதனால், இந்தக் கீரையுடன், பருப்பு, நெய் சேர்த்து, 48 நாட்கள் சாப்பிட வேண்டும்.
தூதுவளைத் தண்டு, இலை மற்றும் வேரை, நிழலில் 5 நாட்கள் காய வைத்துப் பொடியாக்கி, தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குறையும்.
காது மந்தம், நமைச்சல், பெருவயிறு மந்தம், மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர்ச்சுரப்பு, பல்லீறுகளில் நீர்ச்சுரப்பு மற்றும் சூலைக்கும் இக்கீரை சிறந்த மருந்து.
சோற்றுக் கற்றாழை
இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணமாக்கும்.
இதன் மேலுள்ள பச்சைத் தோலை நீக்கி விட்டு, 7-8 முறை நன்கு கழுவ வேண்டும்.
பிறகு, ஒரு கிலோ கற்றாழைக்கு, ஒரு கிலோ கருப்பட்டி வீதம் தட்டிப் போட்டு, நன்கு கிளற வேண்டும்.
கருப்பட்டித் தூள் கரைந்து பாகு பதத்துக்கு வந்ததும், அதனுடன் தோல் நீக்கிய கால் கிலோ பூண்டைப் போட்டு மீண்டும் கிளற வேண்டும்.
பூண்டு நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, தயிர் மத்தினால் கடைய வேண்டும்.
அல்வா பதத்துக்கு வந்ததும் எடுத்து, பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இதைக் காலை, பகல், இரவு என, உணவுக்குப் பின் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல்,
நீர்க்கட்டி, நீர் எரிச்சல், மாதவிடாய்ச் சிக்கல், மலட்டுத் தன்மை ஆகியன உடனே சரியாகும். ஆண்கள் சாப்பிட்டால் சூடு தணிந்து உடல் வலுவாகும்.
நிலவேம்பு
நிலவேம்புக்குச் சிறியாநங்கை என்னும் பெயருமுண்டு. கைப்பிடி சிறியா நங்கை இலைகளுடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட்டால், விஷக்கடி இறங்கும்.
இந்த இலைகளை நிழலில் உலர்த்திக் காய வைத்துப் பொடியாக்க வேண்டும்.
இதில், 30 கிராம் பொடியுடன் ஒரு லிட்டர் நீரைச் சேர்த்து, கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால், தீராத காய்ச்சலும் தீரும்.
ஒவ்வொரு ஞாயிறன்றும் மாலையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் இதைக் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக் கிழமை கஷாயம் என்னும் பெயரே உண்டு.
ஓமவள்ளி
இதற்குக் கற்பூரவள்ளி என்னும் பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச் சாற்றை, காலை, மாலையில் குடித்து வந்தால், தொண்டைச் சதை வளர்ச்சிக் குணமாகும்.
தடித்த இலைகளைப் பறித்து பஜ்ஜியாகச் சுட்டுக் குழந்தைகளுக்குத் தரலாம்.
அறுகம்புல்
அறுகம்புல், வெற்றிலை மற்றும் மிளகைச் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தழுத்தம் கட்டுக்குள் வந்து, இரத்த ஓட்டம் சீராகும். தோல் நோய்களும் குணமாகும்.
முனைவர் கோ.கலைச்செல்வி, உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்.
சந்தேகமா? கேளுங்கள்!