ஓரிதழ் தாமரை வயல்களில் பரவிக் கிடக்கும் முக்கிய மூலிகை. இதன் பூ, தாமரை இதழைப் போலவும், ஒரே இதழுடன் மட்டுமே இருப்பதால் இம்மூலிகை, ஓரிதழ் தாமரை எனப்படுகிறது.
ஹைபேன்தஸ் ஈனால் பெர்ம்ஸ் என்பது, இதன் தாவரவியல் பெயராகும். ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, பூ, வேர், காய் ஆகிய அனைத்தும் மருத்துவப் பயன் மிக்கவை.
ஓரிதழ் தாமரைப் பொடியைப் பாலில் கலந்து, காலை மாலையில் அருந்தி வந்தால், பல்வேறு காரணங்களால் ஏற்படும் உடல்நலக் குறையைப் போக்கலாம்.
மேலும், இரத்தத்தைப் பெருக்கி, உடலை வலுப்படுத்தலாம். மேக வெட்டை என்னும் சரும நோயாளிகள், ஓரிதழ் தாமரை மற்றும் பச்சைக் கற்பூரத்தை, பசு நெய்யில் கலந்து பூசி வந்தால், இந்நோயில் இருந்து குணமாகலாம். உடலிலுள்ள புண்களையும் ஆற்றலாம்.
இரைப்பு நோய்க்குச் சிறந்த மருந்தாகும். உடல் எடையைக் குறைக்க, ஓரிதழ் தாமரைக் கஷாயம் மிகவும் சிறந்தது.
இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் ஆகியவற்றை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரவில் பாலில் கலந்து குடித்து வந்தால், ஆண்மைத் தன்மை கூடும்.
மேலும், வெப்ப நோய்கள், உள் காய்ச்சல், நீர்க்கடுப்பு, உடற்சூடு ஆகியன குணமாகும்.
நரம்பு நோய்களைக் குணப்படுத்த, நரம்புகள் வலுவடைய ஓரிதழ் தாமரை உதவும். இரத்தத்தை விருத்தி செய்வதுடன்,
இரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏற்படுவதைத் தடுத்து, இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, இதய நோய்கள் வராமல் உடம்பைப் பாதுகாக்கும்.
ஓரிதழ் தாமரை இலைகளை வேக வைத்து, மயிர்க் கால்களில் தடவி வந்தால், முடி வெளுப்பது தாமதமாகும். இது, இளநரையைப் போக்கும்.
இதன் இலைகளையும் வேரையும் பொடியாக்கி, மிளகைச் சேர்த்துக் கஷாயமாகக் குடித்து வந்தால், சிறுநீரகக் குறைகள் சரியாகும்.
இலைச் சாற்றை ஆட்டுப் பாலில் கலந்து குடித்து வந்தால், வயிற்றுச் சிக்கல்கள் சரியாகும்.
இலைச்சாறு உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். ஓரிதழ் தாமரைப் பழம், தேள் கடிக்குச் சிறந்த மருந்து.
முனைவர் மு.சுகந்தி
சந்தேகமா? கேளுங்கள்!