முடக்கத்தான் கீரையின் பயன்கள்!

கீரை mudakattan

க்களுக்கு ஏற்படும் பிணிகளைப் போக்கும் மருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தாமாகவே விளைந்து வருகின்றன.

இவற்றைச் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, அனைத்து உயிர்களுக்கும் இயற்கை கற்றுக் கொடுத்து உள்ளது.

ஆனால், வணிக நோக்கில் இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்.

இன்றைக்கு நீரிழிவுக்கு நிகராக, மனித இனத்தை வாட்டிக் கொண்டுள்ள மற்றொரு நோய், ருமாட்டாயிட் ஆர்த்ரைடீஸ் என்னும் மூட்டுவலி. இதற்கு, அறுவைச் சிகிச்சை வரை ஆலோசனை வழங்குகிறது நவீன மருத்துவம்.

ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இதற்கு மூலிகை மூலம் தீர்வைக் கண்டுள்ளனர் நம் முன்னோர்.

முடக்கத்தான் எனப்படும் மிக அருமையான மூலிகை தான் அது. முடக்கு வலியை அற்றான் என்னும் பொருளில் இப்பெயர் ஏற்பட்டு உள்ளது.

மக்களின் வேதனையைப் போக்க, வேலியெங்கும் இந்தக் கொடியைப் படர விட்டுள்ளது இயற்கை.

தற்போது, நகரம், கிராமம் என்னும் வேற்றுமை இல்லாமல், எல்லா இடங்களிலும் வளர்கிறது முடக்கத்தான்.

சிறிய கொடியாக இருந்தாலும், இதன் தண்டு, கம்பியைப் போல வலிமையானது. முடக்கத்தான் இலை, நீண்ட இலைக் காம்புடன் ஒன்பது கூட்டிலைகளாக அமைந்து இருக்கும்.

பூக்கள் வெள்ளையாக, காய்கள் முப்பட்டை வடிவில் பலூனைப் போல இருக்கும்.

காயினுள் மூன்று அறைகளும், அவற்றில் தலா ஒரு விதையும் இருக்கும். காய்கள் முற்றியதும் வெடிப்பதால் பல இடங்களில் விதைகள் பரவ, இனப்பெருக்கம் நிகழும். இதன் தண்டும், இலையும் மருந்தாகும்.

முதுகுத் தண்டுவடத் தேய்மானம், மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் உள்ளிட்ட, அனைத்து மூட்டு வலிகளிலும் இருந்து மீள முடக்கத்தான் உதவுகிறது.

இந்தக் கீரை துவர்ப்பாக இருக்கும். இதை மாவில் போட்டு அரைத்து, அடை, தோசை செய்து சாப்பிட்டால் கொஞ்சம் வாசம் அடிக்கும்.

இதைப் போக்க, கீரையை மிக்சி என்னும் மின்னம்மியில் அடித்து, மாவில் கலந்து தோசை, அடை செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

கீரையை எண்ணெய்யில் வதக்கி, உப்பும், காய்ந்த மிளகாயும் சேர்த்து அரைத்துத் துவையலாக உண்ணலாம்.

பொடியாக நறுக்கி, மிளகு, சீரகத்துடன் சேர்த்து இரசம் வைக்கலாம். நறுக்கி வேக வைத்து, சின்ன வெங்காயம், எண்ணெய் சேர்த்து, பொரியல் செய்து சாப்பிடலாம். பருப்பைச் சேர்த்துக் கூட்டாகச் செய்யலாம்.

கடுமையான வாதநோய், வாதப்பிடிப்பு, மூட்டுவலி, வீக்கம், சீழ்ப்பிடிப்பு ஆகியன குணமாகும். நரம்புத் தளர்ச்சி, சரும நோய் நீங்கும்.

இலையை எண்ணெய்யில் காய்ச்சி வலிகளுக்குப் பூசலாம். இலைச் சாற்றைக் காதில் விட்டால், காதுவலி, சீழ் வடிதல் நீங்கும்.

வேரைக் குடிநீராகக் காய்ச்சிக் குடித்தால் மூல நோய் குணமாகும். இது, குடிப்பதற்கு ருசியாக இருக்கும். இலைச்சாற்றைக் கட்டிகளில் வைத்துக் கட்டினால் அவை உடைந்து ஆறும்.

கீரையை விளக்கெண்ணெய்யில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முகுகுவலி, உடல்வலி ஆகிய அனைத்தும் அகலும்.

கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உண்டால் கண் நோய்கள் குணமாகும்.


கீரை VEERAMANI P DR

முனைவர் பெ.வீரமணி, முனைவர் சு.நந்தகுமார், முனைவர் அ.கோபிகிருஷ்ணன், வேளாண்மை அறிவியல் நிலையம், விரிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading