குப்பைமேனி (acalypha indica) மூலிகைச் செடியாகும். ஓராண்டுத் தாவரமான இச்செடி, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வளர்கிறது.
இதன் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணங்கள் மிக்கவை. குப்பைமேனிச் செடி எல்லா இடத்திலும் வளரும். இதை யாரும் மெனக்கெட்டு வளர்ப்பதில்லை.
எப்படிப் பார்த்தாலும், இலைகளில் வெய்யில் படுமாறு இச்செடியின் அமைப்பு இருக்கும். அதாவது, ஓர் இலையின் நிழல் கீழே இருக்கும் இலை மீது விழுவதில்லை.
சிறு செடியாக வளரும் இதன் இலைகள், பச்சைப் பசேலென முக்கோண வடிவத்தில், ஓரங்களில் அரும்புகளுடன் இருக்கும். அதாவது, ரம்பத்தின் பற்களைப் போல இருக்கும்.
பூக்கள் வெள்ளையாக, சிறியதாக இருக்கும். காய்கள், முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாக இருக்கும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும்.
மாற்றடுக்கில் பல அளவுகளில் இலைகளை, இலைக்காம்பு இடுக்கில் அமைந்த பூக்களைக் கொண்டிருக்கும். 50 செ.மீ. உயரம் வரை வளரும்.
குனான், ஸ்டீரால்ஸ் மற்றும் சைனோஜெனிக் க்ளைக்கோஸைடு போன்ற மிகவும் விஷம் வாய்ந்த வேதிப் பொருள்களும் இருக்கும். விதை மூலமாக இனப்பெருக்கம் நிகழும்.
குப்பைமேனி இலையைச் சிறிதளவு உப்புடன் அரைத்து, சொறிசிரங்கின் மேல் தடவிக் கழுவி விட்டு, தேங்காய் எண்ணெய்யைத் தடவ வேண்டும்.
இலைச் சாற்றைத் தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி, வெதுவெதுப்பான நிலையில் தடவினால் உடல்வலி குணமாகும்.
குழந்தைகளின் வயிற்றில் இருந்து கொண்டு வேதனைப் படுத்தும் புழுக்கள் வெளியாக, ஒரு தேக்கரண்டி குப்பைமேனி இலைப் பொடியைப் பாலில் கலந்து கொடுக்க வேண்டும்.
இதன் இலையை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி, நாற்பது நாட்கள் தொடர்ந்து, காலையில் சாப்பிட, மூலம், நமைச்சல் மற்றும் பிற தோல் நோய்கள் நீங்குவதுடன் தோல் பளபளப்பாகும்.
மேலும், இது எலிக்கடி, பூரான் கடி விஷத்தை நீக்கும். இதற்கு, கடிவாயில் இலைச் சாற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பைச் சேர்த்துத் தடவ வேண்டும். தேள்கடி விஷத்தை முறித்துக் கடுப்பைக் குறைக்கும்.
நெஞ்சுவலி, நெஞ்செரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவை குணமாக, ஏழு நாட்கள் தொடர்ந்து, அரைத் தேக்கரண்டிப் பொடியைப் பாலில் கலந்து, படுப்பதற்கு அரை மணி நேரம் முன்பு சாப்பிட வேண்டும்.
குப்பைமேனி இலையுடன் மஞ்சளை வைத்து அரைத்துப் பூசினால் எல்லா வகைப் புண்களும் குணமாகும். உடல் மீண்டும் அழகாகும்.
ஆமணக்கு எண்ணெய்யில் இலையை வதக்கி, இளஞ் சூட்டுடன் வைத்துக் கட்டினால், படுக்கைப்புண், மூட்டு வீக்கம், வாதவலி தீரும்.
முனைவர் பெ.வீரமணி, முனைவர் சு.நந்தகுமார், முனைவர் அ.கோபிகிருஷ்ணன், வேளாண்மை அறிவியல் நிலையம், விரிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!