தும்பையின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்கள் மிக்கவை. தும்பை இலையிலும், பூவிலும் மருத்துவப் பயன்கள் நிறைய உள்ளன. தும்பைப் பூக்களைத் துணியில் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து, 10-15 துளிகள் மற்றும் 10-15 தேன் துளிகளைச் சேர்த்துக் காலையில் பருகி வந்தால், அதிகமான நாவறட்சி, உடல் அசதி போன்றவை தீரும். தும்பை இலைகளை அரைத்து ஒரு கிராம் அளவுக்கு உட்கொண்டும், உடலில் பூசவும் செய்தால் பூரான்கடி குணமாகும்; அரிப்பும் தடிப்பும் மறையும்.
தும்பைப் பூக்களையும் பெருங்காயத்தையும் அரைத்து நல்லெண்ணெய்யில் காய்ச்சி வடிகட்டிச் சொட்டுச் சொட்டாகக் காதில் விட்டால் சீழ் வடிதல் நிற்கும். உடம்பில் உண்டாகும் சிரங்கு, கொப்புளம், அரிப்பைக் குணமாக்க, தும்பை இலைகளை அரைத்து ஐந்து நாட்களுக்குப் பூசிவர வேண்டும். பத்து மில்லி தும்பையிலைச் சாற்றைத் தொடர்ந்து 15 நாட்களுக்குப் பருகினால், ஒவ்வாமை தீரும்.
குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், விக்கல் ஆகியன தீர, 10 துளித் தும்பைச் சாற்றைக் காலையில் கொடுக்கலாம். தும்பை மற்றும் கீழாநெல்லி இலைகளைச் சமமாக எடுத்து அரைத்து, அதில் சுண்டைக்காய் அளவை ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து இரண்டு வேளை குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரத்துக்குக் குடித்தால், மாதவிலக்கில் உண்டாகும் சிக்கல் மறைந்து, முறையான மாதவிலக்கு ஏற்படும்.
பாம்புக்கடிக்கு மருந்து
ஒரு கைப்பிடி தும்பை இலைகளை நசுக்கி உள்ளுக்குள் கொடுத்து நிறைய நீரைக் குடிக்கச் செய்ய வேண்டும். தும்பை இலைகளை மிளகுடன் சேர்த்து அரைத்தும் உண்ணலாம். இது, பாம்புக்கடிக்கு முதலுதவியாக அமையும். தும்பையிலைச் சாற்றை 2-3 துளிகள் மூக்கில் விடலாம். இப்படிச் செய்வதால், மயக்கம் தெளியவும், விரைவாக விஷமுறிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. நஞ்சு முறிவில் தும்பைக்குத் தனியிடம் உண்டு.
உணவாகும் தும்பை
குப்பைக்கீரை, சிறுகீரை, பண்ணைக்கீரை, வெங்காயம் ஆகியவற்றுடன் தும்பை இலைகளையும் சேர்த்துக் கடைந்து மசியலாக உண்ணலாம். தும்பை இலைகளைப் பருப்புடன் சேர்த்துக் கூட்டுத் தயாரிக்கலாம். இப்படித் தும்பையைப் பல வகைகளில் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தலாம்.
முனைவர் மா.விமலாராணி
சந்தேகமா? கேளுங்கள்!