மண் போர்வையும் அதன் தேவையும்!

மண் போர்வை Soil Mulching

செய்தி வெளியான இதழ்: 2017 மே.

யிர் நன்றாக வளர்வதற்கு, பயிரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தகுந்த வேளாண் கழிவுகளை மண் மீது பரப்புவது, மண் போர்வை எனப்படும். இதன் மூலம் பயிர் வளர்ச்சிக்கும், மண் ஈரத்தைக் காக்கவும் ஏற்ற சூழ்நிலை உருவாகும். வேளாண் கழிவுகளான வைக்கோல், இராகித்தாள், வாழைமட்டை, தென்னைநார்க் கழிவு, சோளத்தட்டை போன்றவை, மண் போர்வையாகத் தொன்று தொட்டுப் பயன்பட்டு வருகின்றன.

அண்மைக் காலத்தில், செயற்கை இழைப் பொருள்களால் ஆன நெகிழித்தாள், மண் போர்வையின் பயனை முற்றிலும் மாற்றியுள்ளது. மற்ற பொருள்களை விட நெகிழித்தாளை மண் போர்வையாக இடுவதால், நிலத்தின் மேல்நீர் ஓட்டத்தை முழுமையாகத் தவிர்ப்பதுடன், நீர் ஆவியாதலையும் கட்டுப்படுத்தி, அதன் மூலம் உப்பு மேல்நோக்கி வருவதையும் தடுக்க இயலும். இதனால், நீரிழப்பையும், மண்ணரிப்பையும் தடுக்க முடிகிறது.

மண் போர்வையின் தோற்றமும் வளர்ச்சியும்

முதன் முதலில் காகிதப் போர்வை 1920 ஆம் ஆண்டில் புழக்கத்துக்கு வந்தது. ஆனால், காகிதத்தின் விலை, வேலைப்பளு, இயந்திரமயம் போன்ற காரணங்களால், அதனை வணிக அடிப்படையில், காய்கறிப் பயிர்களில் பயன்படுத்த இயலவில்லை. 1960 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட காகிதப் போர்வையுடன், பாலி எத்திலீன் தாள்களையும் பயன்படுத்தி ஆய்வுகள் நடத்தப்பட்டன. 1960 ஆம் ஆண்டு அறிமுகமான இயந்திரமய மண் போர்வை விவசாயம், குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது.

நெகிழி மண் போர்வையின் நன்மைகள்

நீர் ஊடுருவலை முற்றிலும் தடுக்கிறது. அதனால், மண்ணிலுள்ள நீர் நேரடியாக ஆவியாகி வெளியேறுவது தடுக்கப்பட்டு மண்ணின் ஈரம் காக்கப்படுகிறது. நீராவிப் போக்குக் கட்டுப்படுத்தப் படுவதால், மண்ணிலுள்ள உப்பு மேல்நோக்கி வருவதும் தடுக்கப்படுகிறது. மண்ணில் இடக்கூடிய சத்துப் பொருள்கள் நீருடன் கலந்து, பயிரின் வேருக்குக் கீழ் வெளியேறிச் செல்வது தடுக்கப்படுகிறது. ஒளி ஊடுருவும் தன்மையற்ற தாள், நாட்பட்ட களைகளைக் கட்டுப்படுத்துகிறது.

மண் போர்வைத் தாள்கள், இரவு மற்றும் குளிர் காலத்திலும் மண்ணில் வெப்பத்தைச் சீரான அளவில் நிலை நிறுத்தி, பயிர் நன்கு வளரவும், விதைகள் விரைவாக முளைக்கவும் உதவுகின்றன. நாற்றங்கால்களில் களையைக் கட்டுப்படுத்துவதிலும் நெகிழித் தாள்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்த மண் போர்வையை ஒட்டிய கீழ்ப்பரப்பில் நுண்ணிய தட்பவெப்ப சூழ்நிலை உருவாகிறது. இதனால், நுண்ணுயிர்களின் விளைவால் கரியமில வாயு அதிகமாக உற்பத்தியாகி, தாவரங்களில் அதிகளவில் ஒளிச்சேர்க்கை நடக்கிறது. மண் முழுவதும் மூடப்படுவதால், மழைத் துளிகளின் நேரடித் தாக்குதலும் மண்ணரிப்பும் முற்றிலும் தடுக்கப்படுகின்றன. மண்ணின் கட்டுமானத் தன்மை முழுக்க முழுக்கக் காக்கப்படுகிறது. மற்ற பொருள்களை விட நெகிழி மண்போர்வை நீண்ட நாட்கள் நீடித்து உழைக்கக் கூடியது.

நெகிழி மண் போர்வையின் தீமைகள்

வேளாண் கழிவுப் பொருள்களை விட நெகிழி மண் போர்வையின் விலை மிக அதிகம். கறுப்புத் தாள்களைப் பயன்படுத்தும் போது, இளஞ்செடிகள் அதிக வெப்பத்தால் வெம்பிப் போகும், கருகிப் போகும் வாய்ப்பு உள்ளது. மேலுரம் இடுவதற்குச் சிரமமாக உள்ளது. சில பகுதிகளில், எலி, நாய் போன்ற பிராணிகளின் தொந்தரவும் அதிகம். இன்னும் வேறுசில பகுதிகளில், பாம்புகளின் தொல்லையும் உள்ளதாக அறியப்பட்டுள்ளது.

நெகிழி மண் போர்வையின் பயன்கள்

மானாவாரி நிலங்களில் மண்ணின் ஈரத்தைக் காத்தல். பாசன நிலங்களில் பாசன நாட்களைக் குறைத்தல். மண்ணின் தட்பவெப்ப நிலையைப் பயிர்களுக்கு ஏற்றவாறு மாற்றுதல். களைகளைக் கட்டுப்படுத்துதல். தரமான விளைச்சலைத் தருதல். மண்ணரிப்பைத் தடுத்தல். மண் மூலம் பரவும் நோய்களை, மண்ணை அதிகப்படியாக வெப்பப்படுத்துதல் மூலம் கட்டுப்படுத்துதல். மகசூலை அதிகரித்தல்.

மண் போர்வையின் வகைகள்

பலவகையான நெகிழித் தாள்கள் 1960ஆம் ஆண்டு முதல் மண் போர்வைக்காக பயன்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை குறைந்த அடர்வுள்ள பாலி எத்திலீன் மற்றும் அதிக அடர்வுள்ள பால எதிலீன் தாள்கள் ஆகும். பாலி எதிலீன், சூரியக் கதிர்களை ஈர்த்து வெப்பமடைந்து அதிக அலை நீளமுள்ள கதிர்களை வெளியேற்றுகிறது. இதனால், மண்ணில் வெப்பம் தங்கி, பயிர் வளர்வதற்கான சூழல் உருவாகிறது. இன்று பெரும்பாலும் குறைந்த அடர்வுள்ள நெகிழித் தாள்களே பயனில் உள்ளன.

மண் போர்வைக்கு இருக்க வேண்டிய குணங்கள்

காற்றுப் புகாத தன்மை. அதாவது, நீராவியாதலின் மூலம் நீர் வெளியேறக் கூடாது. வெப்பத்தைப் பாதுகாக்கும் தன்மை மற்றும் நீராவிப் போக்கைத் தடுக்கும் தன்மை. பயிரின் சாகுபடிக் கால அளவுக்கு உழைக்கும் தன்மை அதாவது தரம். சராசரியான விலை.

நெகிழி மண் போர்வையின் முக்கியத் தன்மைகள்

தடிமன்: நெகிழித் தாளின் எடையைப் பொறுத்து, தாளின் விலை மாறுவதால், மெலிதான தாளையே விவசாயத்தில் பயன்படுத்த வேண்டும். அதே சமயம் அது நன்கு உழைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 60.76 மைக்ரான் (240 300 காஜ்) தடிமனுள்ள தாள்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் விலை மிகவும் அதிகம்.

தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியால், 10 மைக்ரான் அளவுள்ள தாள்களும் கூடத் தயாரிக்கப் படுகின்றன. இதனால் விலை பல மடங்கு குறைகிறது. ஆனால், இவை வெகு எளிதாகக் கிழிந்து விடும். அதனால், பயன்படுத்தும் பொழுது மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.

அகலம்: பயிர்களின் வரிசை இடைவெளியைப் பொறுத்து இது அமையும். சாதாரணமாக ஒன்றிலிருந்து ஒன்றரை மீட்டர் அகலமுள்ள தாள்கள் பயன்படுத்தப் படுகின்றன. அகலம் அதிகம் தேவைப்பட்டால், தாளினைச் சூடாக்குதல் மூலம் தேவையான அளவுக்கு அகலப்படுத்திக் கொள்ள முடியும்.

துளைகள்: சூழ்நிலைக்கு ஏற்ப, துளையுள்ள நெகிழித் தாளை அல்லது துளையற்ற தாளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தாள்களில் நுண்துளை இல்லாமல் இருந்தால், நீர்த் தேங்குதல் குறைவாகவும், உரம் பரவுதல் சீராகவும் இருக்கும். பயிர்களின் வேர்ப்பகுதியில் நீர்த் தேங்குவதால், நுண் துளைகளுள்ள தாள்களே சிறந்தவை. எனவே, மிக அதிகமாக மழை பெய்யும் பகுதிகளில் மட்டும் துளையுள்ள நெகிழித் தாளைப் பயன்படுத்த வேண்டும்.

நிறம்: நெகிழித் தாளின் நிறமானது, மண்ணின் வெப்பநிலை, பயிர்களைச் சுற்றியுள்ள காற்றின் வெப்பநிலை, மண்ணின் உப்புத்தன்மை ஆகியவற்றைப் பெருமளவில் பாதிக்கும். கறுப்புத்தாள், நீரைக் கடத்துவதையும், உப்பு மேல்நோக்கி நகர்வதையும் தடுக்கும். களைக் கட்டுப்பாட்டுக்கும் உகந்தது. தங்கம் அல்லது வெளிர் மஞ்சள் நிறமுள்ள தாள், பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும்.

நெகிழித் தாளைத் தேர்ந்தெடுத்தல்

பயிர்களின் தேவை மற்றும் பயன்படுத்தும் பருவம், மண் போர்வையைப் பயன்படுத்தும் நோக்கம் ஆகியவற்றைப் பொறுத்து, நெகிழித் தாள்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது, மழைக்காலம் மற்றும் மழை அதிகமாகப் பெய்யும் இடங்களில், நுண் துளைகள் உள்ள தாள். பழப்பயிர்கள் மற்றும் காபி, தேயிலைத் தோட்டங்களில் அதிகத் தடிமனுள்ள தாள்.

நிலத்தைச் சூடாக்கி நூற்புழு போன்றவற்றை, களை விதைகளை, களைகளை அழிக்க, கட்டுப்படுத்தவும், மணற்பாங்கான நிலங்களுக்கும், உப்புநீரைப் பயன்படுத்தும் நிலங்களுக்கும் கறுப்பு நிறத்தாள். பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, மஞ்சள் அல்லது பொன்னிறத் தாள். விதை முளைவிடும் திறனை வேகப்படுத்த மெலிதான தாள். கோடைக்காலப் பயிர்களுக்கு வெள்ளைத் தாள்.

மண் போர்வையை இடும் முறைகள்

காற்று அதிகமாக வீசாத நேரங்களில் தாள்களை நிலத்தின் மீது பரப்ப வேண்டும். தாள் அதிகத் தொய்வாகவோ, சுருக்கங்களாகவோ இல்லாமல் நிலத்தில் ஒட்டியவாறு இட வேண்டும். தாளின் ஓரங்கள் 7-10 செ.மீ. ஆழத்தில், 45 டிகிரி கோணத்தில் இடப்பட்ட சிறு சால்களில் நன்கு பதிக்க வேண்டும். பயிர் நடவுக்கு முன், மண் போர்வையை இடுவதாக இருந்தால், பயிரின் இடைவெளிக்கு ஏற்ப, தாளில் துளையிட்டு, மண்மீது பரப்ப வேண்டும். பிறகு, விதைகளையோ, நாற்றுகளையோ அந்தத் துளைகளில் நட முடியும். நட்ட பிறகு, தாளின் ஓரங்களை நிலத்தில் 10 செ.மீ. ஆழத்தில் புதைத்து விட வேண்டும்.

நெகிழிப் போர்வையை இடும்போது கவனிக்க வேண்டியவை

தாளை நிலத்தில் மிகவும் இறுக்கமாக அமைக்கக் கூடாது. வெப்பத்தால், சாகுபடி முறைகளால் ஏற்படும் சுருக்க, விரிவுகளை ஏற்கும் வகையில், தொய்வாக இட வேண்டும். கறுப்புத் தாளில் தொய்வு அதிகமாக இருக்க வேண்டும். ஏனெனில், இதன் சுருங்கி, விரியும் தன்மை அதிகமாக இருக்கும். அதிக வெப்பம் நிலவும் போது, தாள் விரிந்த நிலையில் இருக்கும். இந்த நேரத்தில் தாளை நிலத்தில் போர்த்தக் கூடாது.

மண் போர்வையை நீக்குதல்

நெகிழிப் போர்வையைப் பயன்படுத்தி சாகுபடி செய்து, அறுவடை செய்த பிறகு, போர்வையை நிலத்திலிருந்து அகற்றுவதில், குறிப்பாக மிக அதிகப் பரப்பில் மண் போர்வையை இடும் போது பெரும் பிரச்சினையாக இருக்கும். வளர்ந்த நாடுகளில் இதைப் பல முறைகளில் கையாளுகின்றனர். போர்வையை நீக்கும் முறை, ஒவ்வொரு நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப அமைதல் வேண்டும்.

ஒருசில இரசாயனப் பொருள்களை மூலப் பொருளான நெகிழியுடன் முறைப்படி கலந்து தாள்களைத் தயாரிப்பதன் மூலம், குறிப்பிட்ட காலத்தில் அதாவது, 60, 90, 120, 150 நாட்களில், சூரிய ஒளியில் இருந்த பிறகு, அவை தானே கிழிந்து, அழிந்து விடக்கூடிய தன்மையை ஏற்படுத்த இயலும். எனினும், மண்ணில் புதைக்கப்பட்ட தாள்களின் ஓரங்கள், அறுவடைக்குப் பிறகு உழும் போது, மேலே வந்து சில பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இன்று இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணப் பலவிதமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


முனைவர் ம.இராஜசேகர், க.கோவிந்தன், சா.வி.கோட்டீஸ்வரன், துல்லியப் பண்ணைய மேம்பாட்டு மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 641 003.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading