கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2021
நாம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தாவர இனங்களை உணவு மற்றும் பிற தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகிறோம். இளவரசனின் இறகு எனப்படும் தானியக்கீரையை நம் முன்னோர்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இப்போது பயனில் இல்லாத இதை எதிர்காலத்தில் மீண்டும் பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஏனெனில் இக்கீரை விதையில் அவ்வளவு சத்துகள் உள்ளன. இக்கீரையில் 12-17% புரதமும், 5-8% அமினோ அமிலங்களும் உள்ளன. இதிலுள்ள லைசின் என்னும் அமினோ அமிலத்தின் அளவு சரிவிகித உணவாக, பாலின் அளவை ஒத்துள்ளது. அதாவது, கோதுமையைப் போல இரண்டு மடங்கும், அரிசி, மக்காச்சோளத்தைப் போல மூன்று மடங்கும் அதிகமாக உள்ளது. இக்கீரையில் உள்ள புரதம், விலங்குகளில் உள்ள புரதத்துக்கு ஒப்பானது.
சாகுபடி இடங்கள்
மெக்சிகோ, குவேட்டிமாலா, பெரு, ஈகுவேட்டர், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, கோஸ்டேரிக்கா, சீனம், மங்கோலியா, இலங்கை, நைஜீரியா, கென்யா, எகிப்து போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இக்கீரை, இந்தியாவில் முதன் முதலில் இமயமலைப் பகுதியில் பயிரிடப்பட்டது. குஜராத்தில் அதிகளவில் விளைகிறது. தமிழ்நாட்டிலும் நன்கு வளரும். நீலகிரி மற்றும் ஆனைமலைப் பகுதிகளில் வாழும் ஆதிவாசிகள் இதை முக்கிய உணவாகக் கொள்கின்றனர்.
இரகங்கள்
புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், அன்னபூர்ணா, சுவர்ணா, ஜிஏ1, ஜிஏ2 ஆகிய நான்கு வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. ஒவ்வொரு வகையும் எக்டருக்கு 20 குவிண்டால் மகசூலைத் தரும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் கோ.2 என்னும் இரகத்தை வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பை மக்களிடம் பரப்பினால் உற்பத்தியைக் கூட்டலாம்.
மண் மற்றும் தட்பவெப்பம்
தானியக்கீரை வெப்ப மண்டல, மித வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகமாக உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3000 மீட்டர் உயரத்திலும் வளரும். தென்னிந்தியாவில் கோடையில் 85-90 நாள் பயிராகவும், வடஇந்தியாவில் குளிர் காலத்தில் 110-120 நாள் பயிராகவும் விளைகிறது. இது, வெப்பத்தைத் தாங்குவதைப் போலக் குளிரைத் தாங்காது. 16-35 சென்டிகிரேடு வெப்ப நிலையில் முளைக்கும் இப்பயிர், 21 சென்டிகிரேடு வெப்பநிலையில் நன்கு வளரும். ஆண்டுக்கு 200-300 மில்லி மீட்டர் மழையுள்ள மானாவாரியிலும் நன்கு வளரும். வறட்சியில் வேகமாக வளரும். அமிலத்தன்மை மிக்க தாழ்வான வெப்ப மண்டலப் பகுதிகளிலும் நன்கு வளரும்.
சாகுபடி முறை
கடைசி உழவுக்கு முன் தொழுவுரத்தை அடியுரமாக இட்டால் இதன் விதைகளில் புரதம் அதிகமாகும். அதனால், வெப்பப் பகுதியில் எக்டருக்கு 5 டன் தொழுவுரத்தை இட வேண்டும். மேலும், 12:24:12 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துகளும் தேவை. குளிரும் பகுதிகளில் 20:30:20 கிலோ அளவில், தழை, மணி, சாம்பல் சத்துகளை இட வேண்டும்.
விதைப்புக்கு எக்டருக்கு 1-2 கிலோ விதை தேவை. மிகவும் சிறிய இவ்விதைகளை மணலுடன் கலந்து 2 செ.மீ. ஆழத்தில் விதைக்கலாம். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் வீதம் பெவிஸ்டினைக் கலந்து விதைத்தால், நாற்றுகளை வேரழுகல் நோய் தாக்காது. விதைகள் 4-5 நாட்களில் முளைக்கும். 3-4 வாரத்தில் இலைகளைப் பறித்துக் கீரையாக உண்ணலாம். 2 சதுர மீட்டரில் 2 கிலோ கீரை கிடைக்கும்.
அடுத்து, விதை உற்பத்திக்கு 45×15 செ.மீ. இடைவெளி இருக்கும்படி செடிகளைக் கலைத்து விட வேண்டும். விதைப்பு முதல் 30 நாள் வரையில் களையின்றி இருக்க வேண்டும். 15-20 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் தேவை. 125-180 செ.மீ. உயரம் வளரும் இக்கீரை, விதைத்த 45-55 நாட்களில் பூக்கத் தொடங்கும். இப்பருவத்தில் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
அறுவடை
இதன் விதைகள் வெளிர் மஞ்சள் நிறத்திலிருந்து பொன்னிறமாக மாறுவது, அதாவது, விதைத்து 85-100 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும். விதைகள் காய்ந்து நிலத்தில் உதிரும் முன்பே அறுவடை செய்துவிட வேண்டும். அறுவடை செய்த கதிர்களை ஆறேழு நாட்கள் வரை வெய்யிலில் காய வைத்து, வளையும் மூங்கில் குச்சியால் அடித்து விதைகளைப் பிரிக்க வேண்டும். இந்த விதைகள் மூன்று ஆண்டுகள் வரையில் முளைப்புத் திறனுடன் இருக்கும்.
நன்கு பராமரித்தால் ஒரு செடியில் இருந்து 50-200 கிராம் விதையும், எக்டருக்கு 20-50 குவிண்டால் விதையும் கிடைக்கும். தட்பவெப்பம் மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப மகசூல் வேறுபடும். ஒரு கிலோ விதையின் விலை 12-15 ரூபாய். ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய 3,000-5,000 ரூபாய் செலவாகும். எனவே, 7,000-10,000 ரூபாய் இலாபமாகக் கிடைக்கும்.
பயன்கள்
வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் நிறைந்துள்ள இச்செடியின் இலைகள், விதைத்த 30 நாட்கள் வரை கீரையாகப் பயன்படும். இக்கீரை சூப் தயாரிக்கவும், நிறமியாகவும், மலமிலக்கியாகவும் பயன்படும். இதன் பச்சைத் தண்டு உணவாகவும், காய்ந்த தண்டு விறகாகவும் பயன்படும். பச்சைத் தண்டு கால்நடைத் தீவனமாகவும் பயன்படும். தானியத்தை வறுத்து இனிப்பு உருண்டைகளைச் செய்யலாம். இந்த விதைகளில் அல்புமின், குளோபுலின், புரோலமைன், திரியோனையின், ஐசோலுசைன், வேலைன், லைசின் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், இதைக் குழந்தைகளுக்குச் சத்துமாவாகக் கொடுக்கலாம்.
ரொட்டி, பிஸ்கெட், ஐஸ்கிரீம் போன்ற பொருள்கள் தயாரிப்பிலும் இத்தானியம் பயன்படுகிறது. கறுப்பு விதைகளில் 60%, சாம்பல் விதைகளில் 8% நார்ச்சத்து உள்ளது. எனவே, இதிலிருந்து தயாராகும் உணவுகளை நோயாளிகளுக்கும் கொடுக்கலாம். 60% கார்போஹைட்ரேட்டைக் கொண்ட இக்கீரை மருந்துத் தயாரிப்பில் பயன்படுகிறது. சீனத்தில் இது மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது. விதையில் 20% எண்ணெய் உள்ளது.
குஜராத்தில் விளையும் இக்கீரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. மராட்டியம், மத்தியப்பிரதேசம், உத்தராஞ்சல் மாநிலங்களில் நவராத்திரி விரத உணவாக விளங்குகிறது. பொதுவாக, கிலோ 15-20 ரூபாய் விலையுள்ள தானியக்கீரை விதை, நவராத்திரியின் போது 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
பயிர் விரிவாக்கம்
இக்கீரையால் நன்மைகள் பல இருந்தாலும், போதிய வணிக வாய்ப்புகள் மற்றும் உயர் விளைச்சல் இரகங்கள் இல்லாமையால், குறைந்தளவில் தான் பயிரிடப்படுகிறது. இப்போது தமிழ்நாட்டில் தானியக் கீரையை உழவர்களிடம் அறிமுகப்படுத்திச் சாகுபடியைப் பரப்பும் நோக்கில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வனக்கல்லூரி, சென்னையில் இப்பொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. எனவே, சத்துள்ள தானியக் கீரையை உழவர்கள் அனைவரும் பயிரிட்டுப் பயனடைய வேண்டுகிறோம்.
பி.எஸ்.தேவானந்த்,
ம.உமாதேவி, ப.சாந்தி, க.குமரன், வனக்கல்லூரி,
மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!