கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019
நமது உணவில் முக்கியப் பங்கு வகிக்கும் பயறு வகைகளில் இருந்து தான் நமக்குத் தேவையான புரதம் கிடைக்கிறது. குறிப்பாக, சைவ உணவை உண்போருக்குப் பயறு வகைகளே புரத உணவாகும். இவர்கள் உளுந்தை மிகுதியாகப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் 2015-16 ஆண்டில் 3.24 மில்லியன் எக்டரிலிருந்து 1.96 மில்லியன் டன் உளுந்து உற்பத்தி செய்யப்பட்டது. இதன் சராசரி மகசூல் எக்டருக்கு 604 கிலோவாகும். தமிழ்நாட்டில் 3.95 இலட்சம் எக்டரில் இருந்து 2.76 இலட்சம் டன் உளுந்து கிடைத்துள்ளது. இதன் சராசரி மகசூல் 652 கிலோவாகும்.
காவிரிப் பாசனப்பகுதி நெல் தரிசில் உளுந்து அதிகளவில் பயிரிடப்படுகிறது. இம்முறையில் குறைந்த செலவில் அதிக மகசூலைப் பெறலாம். கடந்த ஆண்டுகளில் நெல் தரிசு பயறு உற்பத்திப் பரப்பு 2.56 இலட்சம் எக்டர் வரை இருந்துள்ளது. இதில், உளுந்து சாகுபடிப் பரப்பு 1.50 இலட்சம் எக்டராகும். நெல் தரிசின் உற்பத்தித் திறன், இறவையில் கிடைப்பதை விடக் குறைவாகவே உள்ளது. அதாவது, எக்டருக்கு 400 கிலோ தான் கிடைக்கிறது.
தமிழ்நாட்டின் மொத்தப் பரப்பில் 47 சதவீதமும், உற்பத்தியில் 57 சதவீதமும் டெல்டாவின் பங்காகும். நெல் தரிசில் ஆடுதுறை 3 பல ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வந்தது. நெடுங்காலமாகப் பயிரிடப்படுவது, காலநிலை மாற்றம், பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் ஆகியவற்றால் இதன் மகசூல் குறைந்து வருகிறது. எனவே, இதற்கு மாற்றாக ஆடுதுறை 6 என்னும் உளுந்து இரகம், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
சிறப்புகள்
இந்த இரகம் வம்பன்1 மற்றும் விபிஎன் 04-006 ஆகியவற்றின் கலப்பாகும். இதன் வயது 65-70 நாட்கள். சராசரியாக எக்டருக்கு 741 கிலோ மகசூலைத் தரும். இது, மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோய் மற்றும் அடிச்சாம்பல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறனைக் கொண்டது. உயரமாக வளர்வதால் இயந்திர அறுவடைக்கு ஏற்றது. ஒரு எக்டரில் விதைக்க 30 கிலோ விதை தேவை. இதை, டிசம்பர் மூன்றாம் வாரத்தில் தொடங்கி, ஜனவரி இரண்டாம் வாரம் வரை விதைக்கலாம்.
விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். அடுத்து, 24 மணிநேரம் கழித்து, ஒரு ஏக்கருக்குத் தேவையான விதையுடன், நுண்ணுயிர் உரங்களான ரைசோபியம் 200 கிராம், பாஸ்போபாக்டீரியா 200 கிராம் மற்றும் எதிர் உயிர்க் கொல்லிகளான டிரைக்கோடெர்மா விரிடி 40 கிராம் அல்லது சூடோமோனாஸ் புளூரசன்ஸ் 100 கிராம் எடுத்து, குளிர்ந்த அரிசிக் கஞ்சியில் கலந்து நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். எதிர் உயிர்க் கொல்லிகளைப் பயன்படுத்தினால் கார்பன்டசிம் தேவையில்லை.
விதைத்தல்
சரியான ஈரப்பதத்தில் விதைக்க வேண்டும். நெல் அறுவடைக்கு 7-10 நாட்களுக்கு முன் சரியான ஈரப்பதத்தில், அதாவது, மெழுகு பதத்தில் விதைக்க வேண்டும். நீர் தேங்கிய மற்றும் மேடான பகுதியில் விதைகள் சரிவர முளைக்காது. எனவே, உளுந்தை விதைக்கவுள்ள சம்பா மற்றும் தாளடி வயல்களை, நெல் நடவின் போதே நன்கு சமப்படுத்தி வைக்க வேண்டும். இதனால், தேவையான அளவில் பயிர்களைப் பராமரிக்க முடியும்.
நெல் அறுவடைக்கு முன் விதைக்க முடியா விட்டால், அறுவடைக்குப் பின் நீரைப் பாய்ச்சி சரியான ஈரப்பதத்தில், வரிசைக்கு வரிசை 30×10 செ.மீ. இடைவெளியில் விதைகளைக் கைகளால் ஊன்றலாம்.
களைக்கொல்லி
விதைத்து 15-20 நாட்களில், எக்டருக்கு இமாசெதைபர் 50 கிராமுடன், குயிலோபாப் எத்தில் 50 கிராமைக் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். களைக்கொல்லியைத் தவிர்ப்பது நல்லது.
உரம்
ஒரு லிட்டர் நீருக்கு 40 மி.கி. வீதம் என்.ஏ.ஏ. வளர்ச்சி ஊக்கியை எடுத்து, பூப்பதற்கு முன்னும், அடுத்து 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். எக்டருக்கு 5 கிலோ பயறு அதிசயம் வீதம் எடுத்து, பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும். அல்லது 2% டிஏபி கரைசலை, பூக்கும் போதும், அடுத்து 15 நாட்கள் கழித்தும், கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 100 மி.கி. வீதம் எடுத்து, பூக்கும் போதும், அடுத்து 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.
பாசனம்
பயிரின் பின்பருவ வறட்சியைச் சமாளிக்க, பண்ணைக்குட்டை அல்லது கிணற்று நீரை, தூவுவான் அல்லது தெளிப்பு முறையில் தெளிக்கலாம்.
பயிர்ப் பாதுகாப்பு
காய்த் துளைப்பானைக் கட்டுப்படுத்த, 5% வேப்பங் கொட்டைச்சாறு கரைசல் அல்லது இன்டாக்சோகார்ப் 15.8 எஸ்.சி.யை, எக்டருக்கு 333 மி.லி. வீதம் தெளிக்கலாம். வேரழுகல் மற்றும் வாடல் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பன்டசிம் வீதம் கலந்து தெளிக்கலாம். சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு நனையும் கந்தகம் 1.5 கிலோ, அல்லது புரோபிகோனசோல் 500 மி.லி. வீதம் எடுத்து, நோய் தோன்றும் போதும், அடுத்து 10 நாட்கள் கழித்தும் தெளிக்கலாம்.
அறுவடையும் சேமிப்பும்
முதிர்ந்த நெற்றுகளை மட்டுமோ அல்லது செடிகளை வேரோடு பிடுங்கியோ அல்லது அறுவடை இயந்திரம் மூலமோ அறுவடை செய்யலாம். எக்டருக்கு 741 கிலோ மகசூல் கிடைக்கும். விதைகளை 10% ஈரப்பதத்துக்கு உலர்த்தி, ஊக்குவிக்கப்பட்ட களிமண் அல்லது வேப்ப எண்ணெய்யை 1:100 என்னுமளவில் கலந்து சேமிக்க வேண்டும்.
முனைவர் ப.சாந்தி,
முனைவர் ம.உமாதேவி, முனைவர் கு.சிவசுப்ரமணியம்,
வேளாண்மைக் கல்லூரி, குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!