விதைகளின் முளைப்புத்திறன் 80 சதத்துக்கு மேல் இருக்க வேண்டும். இதற்குச் சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். பொதுவாக வயலில் அறுவடை செய்த நெல்லைப் பயன்படுத்தினால், 1.2 சத உப்புக் கரைசலில், அதாவது, 3 கிலோ உப்பை 18 லிட்டர் நீரில் கலந்த கலவையில் விதைகளை இட்டு, உப்புக் கரைசலில் மிதக்கும் விதைகளை நீக்கி விட்டு, மூழ்கியுள்ள விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விதை நேர்த்தி
உயிர் எதிர்ப் பூசணக் கொல்லியான சூடோமோனஸ் புளோரோசன்ஸ் பாக்டீரியாவை, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்னுமளவில் நீரில் கலந்து விதைகளை 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டி, இருட்டறையில் 24 மணிநேரம் வைத்திருந்து முளைகட்ட வேண்டும். பிறகு, விதைப்பதற்கு முன், ஒரு பொட்டல அசோஸ்பயிரில்லம், ஒரு பொட்டல பாஸ்போ பாக்டீரியாவுடன் நன்கு கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
நாற்றங்கால் தயாரிப்பு
ஒரு ஏக்கர் நடவுக்கு 8 செண்ட் நாற்றங்கால் தேவைப்படும். பாசன வசதி, வடிகால் வசதியுள்ள, நிழல் படாத நிலமாக இருக்க வேண்டும். நாற்றங்காலுக்கு அருகில் மின் கம்பம் இருக்கக் கூடாது. கடைசி உழவுக்கு முன் 400 கிலோ தொழுவுரத்தை இட வேண்டும். மேலும், 16 கிலோ டிஏபி அல்லது 6.4 கிலோ யூரியா மற்றும் 48 கிலோ சூப்பர் பாஸ்பேட் ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும். பின்பு, 20க்கு 2மீ. அளவில், அதாவது, ஒரு செண்ட் அளவில் மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும். பாத்திகளுக்கு இடையில் சிறு கால்வாய்கள் இருக்க வேண்டும். முளை கட்டிய நெல் விதைகளைப் பாத்திக்கு மூன்று கிலோ வீதம் சீராகத் தூவ வேண்டும். செம்மை நெல் சாகுபடிக்கு 2-5 கிலோ விதைகள் போதும்.
நீர் நிர்வாகம்
விதைத்த 18-24 மணி நேரத்தில், நாற்றங்காலில் நீரே இல்லாத அளவுக்கு வடித்து விட வேண்டும். நீர் தேங்கி நின்றால், விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்கப்படும். அதே சமயத்தில், நாற்றங்காலில் ஈரம் காய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
களை நிர்வாகம்
விதைத்த எட்டாம் நாள் 80 மில்லி பூட்டாகுளோர் அல்லது தயோபென்கார்ப் களைக்கொல்லியை மணலுடன் கலந்து சீராகத் தூவ வேண்டும். அப்போது, நாற்றங்காலில் சிலிர்ப்பு நீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். களைக்கொல்லியை இட்ட பின் 2-3 நாட்களுக்கு நீரை வடிக்கக் கூடாது.
மேலுரம்
நாற்றுகள் செழிப்பாக வளரா விட்டால், 4 கிலோ யூரியா அல்லது 8 கிலோ அம்மோனியம் சல்பேட்டை இடலாம். களிமண் நிலமாக இருந்தால், நாற்றுகளின் வேர்கள் அறுபடும். இதைத் தவிர்க்க, 2 கிலோ ஜிப்சத்தை, நாற்றைப் பறிப்பதற்கு 2-3 நாட்களுக்கு முன் இட வேண்டும். 3-5 இலைகளை உடைய 25 நாள் நாற்றுகளை நட வேண்டும். செம்மை நெல் சாகுபடியில் 14 நாள் நாற்றுகளை நட வேண்டும்.
நாற்றுகளின் வேர்களில் மண் அதிகமாக ஒட்டியிருந்தால் அதைக் கடினமான தரையில் அடிக்கக் கூடாது. நீரில் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். நடும் வரையில் வேர்கள் நீரில் மூழ்கியிருக்க வேண்டும்.
நடவு வயல் தயாரிப்பு
கோடைமழை கிடைத்ததும் நிலத்தை 2-3 தடவை உழுவதால், மண்ணில் நீர்ப்பிடிப்புத் தன்மை கூடும். இதனால், பயிருக்குத் தேவையான நீரைக் குறைத்துப் பாய்ச்சலாம். மேலும், களைகள் கட்டுப்படும்; மண்ணிலுள்ள பூச்சிகளின் கூண்டுப் புழுக்களும் நோய்க் கிருமிகளும் அழிக்கப்படும்.
கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்கு மட்கிய தொழுவுரம் 5 டன் அல்லது 2.5 டன் பசுந்தாள் உரத்தை இட வேண்டும். மேலும், 200 கிலோ ஜிப்சத்தையும் சீராக இட வேண்டும். அடுத்து, 10 கிலோ துத்தநாக சல்பேட் அல்லது 5 கிலோ தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நெல் நுண்ணூட்டக் கலவையை 20 கிலோ மண்லுடன் கலந்து தூவ வேண்டும். அசோஸ்பயிரில்லம் 4 பொட்டலம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை 10 கிலோ தொழுவுரத்துடன் கலந்து சீராகத் தூவ வேண்டும்.
உர நிர்வாகம்
மண்ணாய்வுப்படி உரமிட வேண்டும். இல்லையெனில், பொதுப் பரிந்துரைப்படி, ஏக்கருக்கு 50:20:20 என்னுமளவில், தழை, மணி, சாம்பல் சத்தை இட வேண்டும். அதாவது, 109 கிலோ யூரியா, 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 34 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை இட வேண்டும். மேலுரமாக யூரியாவை, நட்ட 15,30,45 ஆகிய நாட்களில் தலா 27 கிலோ என்னும் கணக்கில் இட வேண்டும். யூரியாவுடன் ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கை 5:4:1 என்னுமளவில் கலந்து இட வேண்டும். இதனால், தழைச்சத்து உடனடியாகக் கிரகிக்கப்பட்டு பூக்கள் மலர்ந்து கருவுற்று அதிக எடையுள்ள நெல்மணிகள் உருவாகி, நல்ல விளைச்சல் கிடைக்கும். கடைசித் தடவையில் யூரியா மட்டும் இடப்பட வேண்டும்.
சூப்பர் பாஸ்பேட் 125 கிலோவையும் அடியுரமாக இட்டுவிட வேண்டும். 17 கிலோ பொட்டாஷை அடியுரமாகவும், 17 கிலோ பொட்டாஷை நட்ட 30 நாள் கழித்து மேலுரமாகவும் இட வேண்டும்.
களை நிர்வாகம்
நடவுக்குப் பிறகு 3ஆம் நாளில், ஏக்கருக்கு ஒரு லிட்டர் பூட்டாகுளோர் அல்லது பிரிட்டிலா குளோர் அல்லது 45 கிரர் ஆக்ஸாடயர்ஜில் அல்லது 4 கிலோ பென்சல்ப்யூரான் மீதைல் + பிரிட்டிலா குளோர் களைக்கொல்லியை 10 கிலோ மணலுடன் கலந்து தூவ வேண்டும். நட்ட 15-20 நாட்களில் 100 மில்லி பிஸ்பைரிபேக் சோடியம் அல்லது 30 கிராம் அசிம்சல்ப்யூரான் அல்லது 600 கிராம் 2,4டி சோடியத்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். களைக்கொல்லியை இடும்போது, வயலில் சிலிர்ப்பு நீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
நீர் நிர்வாகம்
வயலில் நீர் தேங்காமல் காய்ச்சலும் பாய்ச்சலுமாகப் பாசனம் செய்ய வேண்டும். இதனால், 30-40 சதம் அளவுக்கு நீரைச் சேமிக்கலாம். தூர்ப் பிடிக்கும் பருவம், பூக்கும் பருவம், கதிர் உருவாகும் பருவம் மற்றும் பால் பிடிக்கும் பருவத்தில், போதுமான அளவில் பாசனம் இருக்க வேண்டும். அறுவடைக்குப் பத்து நாட்கள் இருக்கும் போது பாசனத்தை நிறுத்தி விட வேண்டும்.
இலைவழி ஊட்டம்
ஏக்கருக்கு 2 கிலோ யூரியா, 4 கிலோ டிஏபி, 2 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை 200 லிட்டர் நீரில் கலந்து, கதிர் உருவாகும்போது ஒருமுறையும், பின்பு 10 நாள் கழித்து ஒருமுறையும் தெளித்தால் மகசூல் அதிகமாகும்.
பூச்சி, நோய்ப் பாதுகாப்பு
பூச்சி மற்றும் நோய்களால் 30% வரை நெல் விளைச்சல் பாதிக்கப்படும். எனவே, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவையாவன:
பூச்சி மற்றும் நோய்களுக்கு எதிர்ப்புத் திறனுள்ள இரகங்களைப் பயிரிட வேண்டும். கோடையில் உழ வேண்டும். அடியுரமாக வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும். வயலில் நீர் தேங்கியிருக்கக் கூடாது. வயலும் வரப்பும் களைகள் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். தழைச்சத்தைப் பிரித்து இட வேண்டும். அல்லது இலைவண்ண அட்டையைப் பயன்படுத்தித் தழைச்சத்தை இட வேண்டும்.
நெருக்கமாக நடக்கூடாது; பட்டம் விட்டு நட வேண்டும். விளக்குப் பொறிகளை வைத்துப் பூச்சிகளின் நடமாட்டத்தை அறிய வேண்டும். பொருளாதாரச் சேதநிலையைத் தாண்டினால் மட்டுமே, பரிந்துரை செய்யப்பட்ட மருந்தைப் பரிந்துரை செய்யப்பட்ட அளவில் மட்டும் தெளிக்க வேண்டும். நோய்த் தாக்குதலுக்கு உள்ளான பயிர்களை வயலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
வேப்பெண்ணெய் 3% கரைசல் அல்லது வேப்பங்கொட்டை 5% கரைசலைப் பயன்படுத்த வேண்டும். 20% சாணக்கரைசலைப் பயன்படுத்தி, பாக்டீரியா இலைக்கருகல் நோயைக் கட்டுப்படுத்தலாம். 10% நொச்சி அல்லது காட்டாமணக்கு இலைச் சாற்றைத் தெளித்து நெல் நிறமாற்ற நோயைக் கட்டுப்படுத்தலாம். 5% வசம்புக் கரைசலைத் தெளித்துக் கதிர்நாவாய்ப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
முனைவர் இராஜா.ரமேஷ்,
உதவிப் பேராசிரியர், தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம்,
வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!