தினசரி வருமானத்துக்குக் கைகொடுக்கும் துளசி சாகுபடி!

thulasi farmer

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2018

மூலிகை சாகுபடியில் விவசாயிகள் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்பில்லாத வகையில் வருமானத்தைத் தருவதாலும், இடுபொருள் செலவுகள் குறைவாக இருப்பதாலும், விவசாயிகள் மூலிகைப் பயிர்களை விரும்பிச் சாகுபடி செய்கின்றனர்.

மருதாணி, செம்பருத்தி, அவுரி, துளசி, கற்றாழை போன்றவை குறைந்த செலவில் வருமானத்தைத் தரும் மூலிகைகள். இதில், துளசியானது வழிபாட்டுப் பொருளாகவும் இருப்பதால், அன்றாடம் பணத்தைக் கொடுக்கும் மூலிகையாக உள்ளது. அதனால், ஓரளவு பாசன வசதியுள்ளவர்கள் துளசியைப் பயிரிடுகின்றனர்.

அழகியல் பொருள்களைத் தயாரிக்கவும், இயற்கை மருத்துவப் பொருள்களைத் தயாரிக்கவும் இந்த மூலிகைப் பொருள்கள் தேவைப்படுகின்றன. மக்களும் மூலிகை சார்ந்த பொருள்களை விரும்பி வாங்குவதால், இவற்றின் தேவை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே உள்ளது.

அதனால், மூலிகைப் பொருள்கள் சாகுபடி நல்ல வருமானத்தைத் தரும் வகையில் அமைந்து வருகிறது.

இவ்வகையில், துளசியைச் சாகுபடி செய்துள்ள திண்டுக்கல் மாவட்டம், தருமத்துப்பட்டி விவசாயி செல்லமுத்துவைச் சந்தித்து அவரது துளசி சாகுபடி அனுபவத்தைக் கேட்கலாம் என அவரது தோட்டத்துக்குச் சென்றோம்.

அப்போது அவரது மனைவி செல்லம்மாள் துளசியை அறுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் நாம் வந்த நோக்கத்தைச் சொன்னதும் அவர் பேசத் தொடங்கினார்.

“நாங்க ஒரு பத்து வருசமா துளசியைச் சாகுபடி செஞ்சிட்டு இருக்கோம். துளசியைச் சாகுபடி செய்யப் போறோம்ன்னா, முதல்ல நிலத்தை நல்லா உழுகணும். அதுல ஆட்டுக்கிடை அல்லது மாட்டுக்கிடை போட்டு உழுகணும்.

அப்புறமா தொழுவுரத்தைப் போட்டுக் கட்டிக் கனப்பில்லாம நல்லா உழுகணும். ஏன்னா நிலம் சத்தானதா இருந்தாத் தான் நமக்கு நல்ல மகசூல் கிடைக்கும்.

அடுத்து, துளசி விதையை வாங்கிட்டு வந்து மேட்டுப்பாத்தி முறையில விதைகளைப் பாவிவிட்டு நாத்துகளை வளர்த்து நடலாம். இல்லேன்னா நாத்துகளா வாங்கிட்டு வந்தும் நடலாம்.

சேலத்துப் பக்கம் துளசி விதை, துளசி நாத்துகள் கிடைக்குது. துளசி நாத்துகள பாத்திக் கணக்குல வளர்த்து விலைக்குக் குடுக்குறாங்க. நமக்குத் தேவையான அளவுல வாங்கிட்டு வந்து நடலாம்.

துளசி நாத்துகள நெருக்கி நடணும். அப்பத்தான் நமக்கு நெறைய இலைகள் கிடைக்கும். துளசிச் செடிகள் வாடாம இருக்குற அளவுல தண்ணி பாய்ச்சணும். துளசிக்குள்ள களை இருக்கக் கூடாது. நட்டு நாற்பது நாள்ல துளசியை அறுக்க ஆரம்பிக்கலாம்.

இருபது நாளைக்கு ஒருமுறை அறுத்துக்கிட்டே இருக்கலாம். ஒரு தடவை சாகுபடி செய்யிற துளசியை இப்பிடி அஞ்சாறு தடவை அறுக்கலாம். அப்புறம் மறுபடியும் துளசியைப் புதுசா நடணும். இருபது நாளைக்கு ஒரு தடவை மொத்தமா அறுத்தா நமக்கு நல்ல விலை கிடைக்காது.

விற்பனை செய்றதும் சிரமம். அதனால, துளசி இருக்குற நிலத்தை இருபது பகுதியா பிரிச்சுக்கிட்டு அறுத்தா நித்தமும் வருமானம் கிடைக்கும்; நல்ல விலையும் கிடைக்கும்.

நாங்க ஒரு குழி நிலத்துல துளசியைப் போட்டுருக்கோம். இதை இருபது பகுதியா பிரிச்சு அறுக்குறோம். அன்றாடம் 20-25 கிலோ வரைக்கும் அறுப்போம். சாயங்காலமா அறுத்து தண்ணியைத் தெளிச்சு பக்குவமா மூடி வச்சிருந்து காலையில ஒரு ஏழு மணிக்குள்ள சந்தைக்குக் கொண்டு போயிருவோம்.

எங்களுக்குத் திண்டுக்கல்லு தான் சந்தை. சில்லறையாவும் குடுப்போம். மொத்தமாவும் வித்துட்டு வந்திருவோம். மருந்து தயாரிக்க துளசி பயன்படுறதுனால கிலோ 25-30 ரூவா வரைக்கும் போகும். சில நேரத்துல நல்ல விலை கிடைக்காமலும் போயிரும்.

சராசரியா அன்றாடம் ஒரு ஐநூறு ரூவா கெடச்சிரும். நிலம் முழுசும் இருக்குற துளசியை ஒருமுறை அறுத்து முடிக்க இருபது நாளாகும். அப்போ இருபது ஐநூன்னா பத்தாயிரம் ரூவா வருமானமா கிடைக்கும்.

இப்பிடி குறஞ்சது அஞ்சு தடவையின்னு வச்சுக்கிட்டாலும் அஞ்சு பத்தாயிரம் சேர்ந்தா ஐம்பதாயிரம் ரூவா மொத்த வருமானமா கிடைக்கும். நித்தமும் அறுக்குறதுனால அன்றாடம் குடும்பச் செலவு, நல்லது கெட்டதுக, போக்குவரத்து, விவசாயச் செலவுக்குன்னு யாருகிட்டயும் கடன் வாங்கவோ கைமாத்து வாங்கவோ தேவையில்ல. குடும்பம் பணத் தட்டுப்பாடு இல்லாம நடந்துக்கிட்டே இருக்கும்.

தினந்தோறும் அறுக்கிறதுனால அறுவடைக்கு ஆளெல்லாம் தேவைப்படாது. 20-25 கிலோ துளசியை நாமளே அறுத்துறலாம். மாட்டுக்கு ஒரு கட்டுப் புல் அறுக்குறது மாதிரி ஒரு ஆளே அறுத்துறலாம். களையெடுக்கும் போது மட்டும் ஆள்கள் தேவைப்படும்.

அதனால துளசி சாகுபடியில கூலின்னு நெறயா செலவாகாது. துளசியை அறுக்குறதுக்கு முன்னால அதுல இருக்குற பூவையெல்லாம் எடுத்துறணும். ஏன்னா துளசியில பூக்கள் இருந்துச்சுன்னா, நல்ல விலை கிடைக்காது.

துளசியில செவட்டையாவும் மஞ்சளாவும் நோய்கள் வரும். இதுக்குத் தகுந்த மருந்தைக் கேட்டு வாங்கித் தெளிக்கணும். இல்லேன்னா இலைகள் எல்லாம் வீணாப் போயிரும். அதனால மகசூலு குறஞ்சு போகும். ஒரு தடவை அறுத்ததும் களையெடுத்து உரம் போடணும்.

அப்பத்தான் செழிப்பான துளசி கிடைக்கும். பருத்தி, நெல்லு, கம்பு, கரும்புன்னு மத்த பயிர்களை விட இது பிரச்சினை இல்லாத வெள்ளாமை தான். கணக்குப் பார்த்தா, அந்தப் பயிர்கள்ல  கிடைக்கிறதை விட துளசியில கிடைக்கிற வருமானம் அதிகமாத்தான் இருக்கும்.

துளசியைத் தென்னந் தோப்புல ஊடுபயிராக் கூடப் போடலாம். தென்னைக்கு விடுற தண்ணியிலயே துளசியும் நல்லா வளர்ந்துரும். இதுக்குக் களையெடுக்குறதுனால தோப்பு சுத்தமா இருக்கும். இதுக்குப் போடுற உரம் தென்னை மரங்களுக்கும் கிடைக்கும்.

அதனால தென்னை வருமானத்தோட துளசி வருமானமும் நமக்கு உதவியா இருக்கும். இன்னொன்னு, மத்த மூலிகைப் பயிர்களை விட துளசியை விற்பனை செய்யிறது சுலபம். கொஞ்சம் கொஞ்சமா அறுக்குறதுனால பூக்கடைகள்ல கூட வித்துட்டுப் போயிறலாம்.

எங்களுக்குப் பொறுத்த வரைக்கும் துளசி எங்களுக்கு உதவி செய்யிற பயிரா இருக்கு. அதனால தான் இடைவிடாம தொடர்ந்து பத்து வருசமா துளசியைப் பயிர் செஞ்சுக்கிட்டே இருக்கோம்’’ என்றார். 


துரை.சந்தோசு

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading